இன்றைக்கு நாம் மீண்டும் மல்லை பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத வடிவம் – திருவிக்ரம அவதாரம். மல்லையின் பெயரோடு கலந்த மாவலி – மஹாபலி சக்கரவர்த்தியையும் பார்க்க போகிறோம்.
மல்லை சிற்பியின் ஆய்ந்த சிந்தனை , அறிவு , பக்தி , கலை திறன் அனைத்தையும் கலந்து செய்த சிற்பம் இது. இதன் அழகை பல கோணங்களில் பார்க்க நண்பர் பலரின் உதவியோடு முயற்சிக்கிறேன். குறிப்பாக பாசுர வரிகளை வாரி தந்த நண்பர் வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி.
படங்கள் : பொன்னியின் செல்வன் குழுமத்தின் மல்லை பயணத்தின் பொது திரு வெங்கடேஷ் அவர்கள் எடுத்த படங்கள், மற்றும் எனது சமீபத்திய படங்கள்.
முதலில் முழு சிற்பத்தையும் பார்ப்போம்.
சிறிது, வாமன அவதாரக் கதையைப் பார்ப்போம் (நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது…….???????)
மாவலி, இந்திரப் பதவியை அடைய யாகம் ஒன்று செய்கிறான். அந்த யாகம் முடிவடைந்தால், அவனுக்கு இந்திரப் பதவி கிடைப்பது நிச்சயம். முடியும் தருவாயும் வந்துவிட்டது. பதற்றமும் வந்து விட்டது, இந்திரனுக்கு. ஓடுகிறான் நாராயணனிடம். “நாராயணா! நீ தானே சொன்னாய், இந்த மன்வந்தரம் முடியும் வரையில் நான் தான் இந்திரப் பதவியை அடைவேன் என்று. இப்பொழுது பார், மாவலி அதை அபகரிக்க நினைத்து யாகம் செய்கிறான். வெற்றியும் பெற்றுவிடுவான் போலிருக்கிறது. அவனை உடனே கொன்று என் பதவியைக் காத்தருளவேண்டும்” என்று வேண்டுகிறான். அவன் கள்வன் அல்லவா, ஒரு கள்ள்ச் சிரிப்புடன் (இச்சிரிப்பிற்கு அர்த்தம் வேறு) இந்திரனைப் பார்த்து ” இந்திரா! மாவலி என்னுடைய தீவர பக்தன். அவன் நீதி நெறி வழுவாது ஆண்டுவருகிறான். தர்மம் மேலோங்கி நிற்கிறது. பிறகு எக்காரணம் கொண்டு நான் அவனைக் கொல்வது?” என்று வினவ, இந்திரனும் “நாராயணா! அவனைக் கொல்வதும் கொல்லாததும் உன் விருப்பம். ஆனால் என் பதவியைக் காத்தருள்வதாக நீதான் முன்னர் வாக்குக் கொடுத்திருக்கிறாய். ஆக என் பதவியைக் காத்தருளவேண்டியது உன் கடமை” என்கிறான். இதற்கும் ஒரு சிரிப்பு அவன் திருப்பவளச்செவ்வாயில். அவனுடைய நினைப்பு, அதனால் உண்டான சிரிப்பு இவ்வற்றிற்கான காரணம் தான் அவனுக்குக் “கள்வன்” என்ற பெயர் வரக்காரணமாயிற்று.
இந்த கள்ளத்தனத்தை எவ்வளவு அழகாக பல்லவச் சிற்பி வடித்திருக்கிறான் என்று பாருங்கள்………..
முதலில் அந்த “கள்வம்” தான் என்ன? கதையை மேலே தொடர்வோம். நாரணனும், குறளுருவாய், மாவலியின் வேள்விக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் வேண்டும் என்று யாசிக்க, மாவலியும் அதை தாரைவார்த்துக் கொடுக்கிறான். அப்பொழுது அங்கிருக்கும் அசுர குருவான சுக்கிராச்சார்யர், “மால்”-ஆகிய நாரணன் “குறள்”-ஆகி வந்திருப்பதை அறிந்துகொண்டு, மாவலி தானம் செய்வதை தடுக்க முயலுகிறார். மாவலியோ, வந்திருப்பது திருமாலாகவே இருந்தாலும், என்னிடம் யாசித்துவிட்டான், இல்லை என்று சொல்வதற்கில்லை என்று தன் குருவின் வார்த்தைகளை மறுத்து தானம் செய்யப் புகும் பொழுது, சுக்கிராச்சார்யாரும், ஒரு வண்டு உருவெடுத்து, தண்ணீர் வரும் கமண்டலத்தின் துளையில் அடைத்துக்கொள்ள, வாமனனும் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அத்துளையில் உள்ள அடைப்பை நீக்கத் துழாவுகிறார். அது சுக்கிராச்சார்யாரின் ஒரு கண்ணை அழித்துவிட, அவரும் வலி தாளாமல், வெளியே வந்து விடுகிறார். இதைப் பெரியாழ்வாரும்……
மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்*
தக்க திதன்றென்று தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய*
சக்கரக் கையனே!அச்சோவச்சோ சங்க மிடத்தானே! அச்சோவச்சோ. என்று பாடுகிறார்.
உடன் மாவலி தானத்தை செய்து முடிக்க, குறளனும், நெடு நெடுவென்று மாலாகி வளர்ந்து, ஒரு பாதத்தால் இப்பூவலகம் முழுவதையும் அளந்துவிடுகிறார். மற்றொரு பாதத்தால், விண்ணுலகம் முழுவதையும் (எல்லையான தன் இருப்பிடமான வைகுந்தத்தளவும்) அளந்துவிட்டு, மூன்றாம் அடி எங்கே என்றுகேட்கிறார். பிறகு மூன்றாவது அடியாக மாவலியின் தலையில் திருவடிகளை வைத்து அவனை பாதாள உலகிற்கு அனுப்பி, அவன் மாளிகையைக் காவல் காக்கிறான் மால் என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர். இதைக் காட்டும் பெரியாழ்வார் பாசுரம் இதோ
“குறட் பிரமசாரியாய், மாவலியை குறும்பதக்கி அரசுவாங்கி இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை, கொடுத்துகந்த எம்மான்”
மேலே கலவிருக்கை என்றதில், தன்னுடன் கலந்து இருக்கை என்று பொருள்.
இங்குதான் அவன் கள்வம் வெளிப்படுகிறது. “அனைத்துலகும் அவனுக்குச் சொந்தமாய் இருக்க, அவன் மாவலியிடம் மூவடி மண் கேட்டு யாசிக்க, மாவலியோ, அவனுடைய (நாராயணனின்) சொத்திலிருந்து மூன்றடியை ஏதோ தன் சொத்து என்ற நினைப்பில், அவனுக்கு அளிக்க முன் வர, அதையும் தன் பரத்வ ஸ்வரூபத்தைத் தாழ்த்திக்கொண்டு யாசகமாய் பெறுகிறான் “உலகளந்த மால்”. இந்த ஒளித்துக் கொண்டதையே “கள்வம்” என்கின்றனர். அதனால் அவன் கள்வனாகிறான்.
இவ்வாறு குறளுருவாய் (குறள் – சின்ன, குறுகிய) வந்து, மாலுருவாய் வளர்ந்து (மால் – பெரியது) மாவலியிடம் யாசகம் பெற்றதைப் பார்த்த மாவலியின் மகனான நமுசி, திரிவிக்ரமனின் திருவடிகளை, மேலும் அளக்க முடியாதவாறு பிடித்துக் கொள்ள, அவனை தன் திருவடிகளால், வானில் சுழற்றி அடிக்கிறார். இதைப் பெரியாழ்வாரும்……
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே கொண்டு அளவா யென்ன*
மன்னு நமுசியை வானில் சுழற்றிய*
மின்னு முடியனே! அச்சோவச்சோ வேங்கட வாணனே! அச்சோவச்சோ……… என்று பாடுகிறார்.
பல்லவ சிற்பி இக்கருத்தையே இந்த சிற்பத்தில் காட்டுகிறான். கதையில் மல்லை சிற்பி எடுத்த காட்சி – இரண்டாம் அடி எடுத்து வைக்கும் பொது நடந்து நிகழ்வுகள். கீழ் இருந்து மேலே செல்வோம்.
முதலில் காலடியில் இருக்கம் நால்வர்.
அவனுடைய வலது திருவடியில் மாவலியும், திரிவிக்ரமனின் இடது கோடியில், சுக்கிராச்சார்யரும் உள்ளனர். சுக்கிராச்சார்யர் துணியால் செய்யப்பட்ட பூணுலை அணிந்திருக்கிறார். பழங்காலத்தில், துணியாலேயே பூணுல் அணிந்திருந்தனர். ஒன்று, பல்லவர் காலத்திலும் இவ்வழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது பல்லவ சிற்பி, அவனுக்கும் முந்தைய காலத்தில் இருந்த வழக்கத்தை அதன் பழமையை விளக்க அவ்வாறு சித்தரித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், அவன் கைத்திறனும் அறிவும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
மீதமுள்ள இருவர், மாவலியின் கூட்டாளிகள் போலும். சிற்பியன் கற்பனை பாருங்கள்.அருகில் உள்ள இருவரின் பார்வையும் மாலின் கால் முட்டிக்கு அடியில் தான் உள்ளது. வெளிப்புறம் இருக்கும் இருவரும் சற்று மேலே பார்ப்பதற்கு தலையை தூக்குவது போல உள்ளது. திடீரன எவெரும் எதிர்பாரா வண்ணம் வாமன உருவில் இருந்து பிரபஞ்ச விஸ்வரூப அளவிற்கு அவர் மாறுவதை எவ்வளவு அழகாக காட்டி உள்ளான் சிற்பி. அதிலும் ஒரு படி தாண்டி, வெளியில் இருக்கும் அவர்கள், திடுக்கிட்டு பயந்து ஓட விழைகுமாரு செதுக்கிய வண்ணம் அபாரம்.
சற்றே மேலே பார்கையில், இடது புற இடுப்பிற்கு அருகில் ஒரு உருவம், வலது புறம் இன்னும் கொஞ்சம் மேலே இன்னொரு உருவம் – இருவரும் பறப்பது போல உள்ளது. . யார் இவர்கள். இருவரையும் சுற்றி ஒரு வட்டம் உள்ளது பார்த்தீர்களா ?
வளரும் பெருமாள் சந்திர சூரியரையும் தாண்டி செல்லும் காட்சி இது – இடது புறம் இருப்பது சந்திரன்.வலது புறத்தில் அவரை விட சற்று உயரத்தில் சூரியன் ( ஆஹா, இதில் எந்த பக்கத்தில் சூரியன், எந்தப் பக்கத்தில் சந்திரன் என்ற குழப்பம் வராமல் இருக்க, வலது புறத்தில் சூரியனைச் சற்று மேலேயும், இடது புறத்தில் சந்திரனை, சற்றுத் தாழ்த்தியும் – நிலவை சற்று சிரியாதாகவும் சித்தரித்துள்ளான்.). அதாவது அவ்விரு மண்டலங்களையும் தாண்டி அளந்தான் என்று குறிக்க இந்த உக்தியை கையாண்டுள்ளான் இந்த அற்புதச் சிற்பி.
இடது புறம் ஒரு மனிதர் வினோதமான முறையில் சித்தரிக்க பட்டுள்ளார். யார் இவர்.
சிலர் இவரை திரிசங்கு ( வானுக்கும் மண்ணுக்கும் நடுவில் விஸ்வாமித்ரரால் சொர்க்கம் அமைக்கப்பட்டு இருப்பவர் – ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியவில்லை ) யாரோ எட்டி உதைத்தால் எப்படி விழுவாரோ – அதுபோல உள்ளார். ஆஹா இவன் தான் மாவலியின் மைந்தனான நமுசி. இவனைப்பற்றிய ஆழ்வாரின் குறிப்பை மேலே பார்த்தோம். மன்னு நமுசியை வானில் சுழற்றிய தனது தந்தைக்காக இடையே வந்த அவனை இவ்வாறு உதைத்ததாகவும் அதனால் அவன் விண்வெளியில் ஏவப்பட்டதாகவும் இன்றும் அவன் ஒரு கொளாக ( செயற்கைகொள் ?) சுற்றுகிறான் !
சரி இன்னும் மேலே போவோம்……..
இதோ விண்ணளந்த அவன் இடது திருவடியைப் ப்ரம்மா பாதபூஜை செய்கிறார் பாருங்கள். ப்ரம்மனின் மற்றொரு கை பரமனின் விண்ணைச் சுட்டும் விரலைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள். என்ன ஒரு நேர்த்தி அச்சிற்பியின் கைவண்ணத்தில்.
ப்ரம்மாவுக்கும் நாரணனுக்கும் நடுவில் மிருதங்கத்தோடு இருப்பவர் தும்புரு. இது ஒரு அழகான குறிப்பு. தும்புரு என்பவர், வைகுந்த்தில் நாரணனின் பக்கத்திலேயே இருக்கும் நித்யசூரிகளில் ஒருத்தர். அவரை இங்குக் காட்டியதால், அவன் (எல்லையான) தன்னுலகையும் அளந்துவிட்டான் என்பதைக் குறிக்கிறான் சிற்பி.
திருமங்கை ஆழ்வாரின் அற்புத வரிகள் இதை எப்படி வர்ணிக்கின்றன
ஒண்மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப
ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து அண்ட மீது போகி
இருவிசும்பின் ஊடு போய் எழுந்து, மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித
தாரகையின் பறம் தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே
ப்ரம்மனுக்கு நேரே திரிவிக்ரமனின் வலது புறத்தில் பரமசிவனாரையும் வடித்து, அண்டம் முழுதும் அளந்த அவனுடைய பரிமாணத்தைக் விளக்கியிருக்கிறான் சிற்பி.
சரி, இப்பொழுது, இக்குடவரையின் நாயகனான திரிவிக்ரமனை கவனிப்போம். சிற்பியின் கைவண்ணத்தை என்னென்பது?
ஒருகாலில் அவன் நிற்கும் வடிவின் அழகை செதுக்கிய அழகுதான் என்னே! ஒரு நேர் கோட்டில் திருமுகத்துடன் திருவடியை செதுக்கிய அற்புதம்தான் என்னே.
வலது கரத்தில் ப்ரயோகச் சக்கரமும்,
அதன் கீழ்க் கரத்தில் குறுவாளும்,
அதற்கும் கீழ்க்கரத்தில் பெருவாளும்,
இடது கரத்தில் சங்கும்,
அதன் கீழ்க்கரத்தில் கேடயமும்,
மற்றொரு கரத்தால், சார்ங்கம் என்ற வில்லையும்
பிடித்துக் கொண்டிருக்கும் அழகைப் பாருங்கள். மேலும்…. பல்லவ சிற்பியின் கை மற்றும் கலைத்திறனுக்கு முத்தாய்ப்பாக, அவன் திரிவிக்ரமனின் விண்ணளக்கும் திருவடியை, அதை சுட்டும் கரத்தின் பின் மூன்றாம் பரிமாணத்தில் காட்டியிருக்கும் அழகைப்பாருங்கள்.
பல்லவ சிற்பிகளின் தனித்தன்மைகளில் ஒன்று இந்த மூன்றாவது பரிமாணத்தின் நேர்த்தி. ஒரு சிறிய படத்தின் மூலம் அதனை காண்கிறோம் .
மாலின் நாபி- அற்புதம். ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு சிறு உளியின் தாக்கம் நம்மை மயக்கும் பாவம்.
சரி இதற்கு மேல் அளக்க ஏதுமில்லை ஆதலால் மூன்றாவது அடி எங்கே என்று கேட்க்கும் வகையில் திரிவிக்ரமனின் வலது கையை அமைத்துள்ளான். ஸ்ரீ வைகுந்தத்தின் எல்லையைக் குறிக்கும் விதமாக, குடவ்ரையின் மேல் சுவரை குறிக்கிறான் அச்சிற்பி ( ஒரு காலை மேலே வீசி நிற்கும் அவர் மிக எதார்த்தமாக மேல் சுவரை பிடிப்பது போலும் ) ஆஹா….. அவன் கைவண்ணம்தான் அழகோ அழகு.