இந்து மதம் என்பது இந்து மகா சமுத்திரத்தை விட மிகவும் ஆழமானது. அதனாலேயே பலரும் அதனை புரிந்துக்கொள்ள எத்தனிப்பதில்லை. அப்படியே முயற்சிக்கும் பலரும் அதன் தோற்றம் எழுத்து வரலாறு ஏன் கேள்வி வழி வரலாற்றையும் கடந்து நீடிப்பதால் தோல்வியுற்றே திரும்புகின்றனர். அப்படி இருக்கையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மேலை நாடுகளின் கலை வல்லுனர்கள் இந்திய இந்து மதக் கலைசின்னங்களைப் பற்றி சற்று தாழ்வாகவே பார்த்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதன் பின்னர் மெதுவாக நமது கலையை பற்றி புரிதல் வளர்ந்து இன்று ஒரு நல்ல மதிப்பை பெற்று இருந்தாலும், பொதுவாக அவர்கள் மனதில் அவற்றைப் பற்றிய கேள்விகளே அதிகம். அதை நாம் குற்றம் சொல்லக் கூடாது. இந்தியக் கலையானது அதை ஒட்டிய கதைகளை பிரதிபலித்தது. அதை புரிந்துக்கொள்ள அந்த கதைகளை மட்டும் அல்லாமல் அவற்றை சார்ந்து ஓடிய தத்துவங்களின் புரிதலும் தேவை படுகிறது. அப்படி இல்லாமால் வெறுமனே வந்து கோரை பற்களுடன், கொய்த தலைகளை ஏந்திய கைகளையும், மண்டையோட்டு மாலைகளையும், பூத கணங்கள் சூழ , பத்து கரங்களில் கொடிய ஆயுதங்கள் கொண்ட உருவங்களையெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம் தவறாக இருந்ததில் தப்பில்லைதானே !
அதே மண்ணில் பிறந்து வளர்ந்த நமக்கே, முத்தொழில்களில் அழிக்கும் கடவுள் என்று சிவனை பார்க்கும்போது, இடுகாட்டில் , உடல் முழுவதும் சாம்பலை பூசி, பேய்களுடன் ஆடும் அவனது கோலத்தை ரசிப்பது சற்று கடினமே. அவனது லிங்க ரூபம் அதனை ஒட்டிய கருத்துக்கள் பக்கம் போகவே தேவையில்லை. அதுவும் இந்த காளாமுகர், காபாலிகர் , பாசுபதர், பைரவர் வழிபாடு என்று இப்படிஅடுக்கிக் கொண்டே போகலாம்.
எனினும் எப்படி இருந்திருக்கலாம் என்ற கேள்வி கிளம்புவதை ஆதரிக்கும் இந்த மதத்தின் தத்துவார்த்த பின்புலம் அழகு.
சிற்பக்கலையில் ஒரு சில இடங்களில் பழைய கோட்பாடுகள் அங்காங்கே தென்படுகின்றன. திரு கணபதி ஸ்தபதி அவர்களின் அருமையான நூலை கொண்டு சிலவற்றை ஆராயாலாம் Indian Sculpture and Iconography .
ஹளபேடு கோயிலில் எங்கும் சிற்பம் தான். அதில் ஒரு சிவ பைரவர் ரூபம் நமது ஆராய்ச்சிக்கு இன்று உதவுகிறது.

ஹோய்சலர்களின் கலை – ஒரு சிறு இடம் கூட விடாமல் எங்கு பார்த்தாலும் ஏதாவது இருக்கும். அரக்க பரக்க வரும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று பார்க்க கூட நேரம் இல்லாமல் வெளியே ஆம்னி பஸ் ஹார்ன் சத்தம் கேட்டு ஓடி ஓடிப் பார்ப்பதே அதிகம். அப்படி இருக்கையில் இந்த சிலையை நின்று பார்ப்பவர் சற்று அதிர்ச்சி அடைவது சிவனின் இடது கையில் இருக்கும் ஆயுதத்தை கண்டு.

என்ன இது என்று யோசித்துக்கொண்டே , இதெல்லாம் இந்த நூலில் இருக்குமா என்ற சந்தேகத்துடனேயே புரட்டினேன்.
அங்கே
” கட்வங்கம் : இந்த தடி கால் துடை எலும்பினால் செய்யப்பட்டது. அதன் மேலே ஒரு மண்டையோடு பொருத்தப்பட்டு இருக்கும். தடியை சுற்றி ஒரு பாம்பு மண்டையோட்டின் கண் துவாரத்தின் வழி வெளியே வந்து படம் எடுத்து ஆடும். சில இடங்களில் தடி மரத்தால் ஆனதாகவும் இருக்கலாம். பொதுவாக காபாலிக வடிவங்களில் இதனை காணாலாம். இது சிவனின் ஆயுதம். இது சில யோகிகள் மற்றும் ரிஷிகள் கையிலும் இருக்கும். தடி இரண்டு முக தூரமும், இரண்டு விரல் தடிமனும், மண்டையோடு ஐந்து விரல் அகலமும் ஏழு விரல் நீளமும் இருக்க வேண்டும் “
அது மட்டும் இல்லை கூடவே படமும் அப்படியே அச்சில் எடுத்தவாறு இருந்தது. நண்பர் ஓவியர் திரு ராகவேந்திர பிரசாத் அவர்கள் உதவியுடன் இதோ நமக்கு இன்னும் தெளிவான படம்.
இந்தி பற்றி விவாதிக்கும் பொது நண்பர் திரு சுவாமிநாதன் அவர்கள் சோமநாதபுரம் நான்முகன் சிற்பம் ஒன்றைக் கொடுத்து உதவினார். அங்கே இன்னும் ஒரு அபூர்வ வகை ஆயுதம்.

பிரம்மாவின் வலது கையில் உள்ள கருவியை உற்று பாருங்கள்.

மீண்டும் பிரசாத் உதவியுடன்
படைக்கும் கடவுளின் கையில் இருக்கும் இது என்ன என்பதே அவரது கேள்வி.
மீண்டும் நூலைப் புரட்டினேன்.
“சிறுக்’ , ’சுருவம்’ : இவை கரண்டிகள். பிரம்மனின் கருவிகள். யாக சாலையில் யாக குண்டத்தில் தீக்கு நெய்யை உற்ற உதவும் கருவிகள் இவை. யாகம் முடியும் கடை நாளில் பூர்ணஹுதி என்னும் வழக்கில் பல்வேறு காணிக்கைகளை யாக குண்டத்தில் போட இந்தக் கருவிகள் உதவும். ’சிறுக்’ என்பது கட்டையால் ஆன கரண்டியாகும். சுருவம் சற்று வேறுபடும். சதுர வடிவில் இருக்கும் இதன் தலையில் பசு , யானை மற்றும் இதர பிராணிகளின் தலைகளின் வடிவங்கள் அலங்கரிக்கும். இவற்றின் அளவு ஒரு முழமாக இருக்கும். ”
மிகவும் அருமையான வடிவம். அது எழுப்பும் கேள்விகளும் அதிகம். எனினும் தற்போது எனது தேடல் யானை தலையுடன் இருக்கும் ஒரு சுருவம்!!