உலக கலை வரலாற்றில் சில பெயர்களை ஒரு தனி மரியாதையுடன் கையாள வேண்டும் – மைகேலன்ஜெலோ டி லோடோவிகோ போனர்ரொட்டி சிமோனி என்ற பெயர் அதில் முதன்மை. அதிஷ்டவசமாக அவரை பற்றிய ஒரு நூல் வாசிக்க நேர்ந்தது The Agony and Ecstasy .ஒரு வாரம் பாண்டிய நாட்டில் கழித்து விட்டு நண்பர் அரவிந்தும் நானும் அன்று திரும்புகிறோம் – அவரை நெல்லை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றேன். பேருந்து புறப்பட இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது, நேரத்தை கழிக்க ரோட்டில் இருந்த ஒரு பழைய புத்தகக் கடைக்கு சென்றேன். நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் விட்டு ஓடிய பள்ளி மற்றும் காலேஜ் நூலகளுக்கு அடியில் ஒரே ஒரு ஆங்கிலப் புதினம் கிடைத்தது. அட்டை கிழிந்து இருந்த நிலையில் எனக்கு அவர் அதை இலவசமாகவே கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். எனினும் நூலில் மைகேலன்ஜெலோ பற்றிய தகல்வல்களை திரிந்துக்கொள்ள மளமள வென படிக்கத் துவங்கினேன்.
அன்றைக்கு அரை நாள் தென்னிந்திய கலையில் பலரும் பெருமையாக பேசும் நெல்லையப்பர் கோயில் சிற்பங்களை ( முந்தியா நாள் கிருஷ்ணபுரமும் முடிந்தது !) முறையே படம் எடுத்துவிட்டு, பாண்டி யாத்திரை பல முக்கிய இடங்களையும் கண்ட சந்தோஷத்துடன் , இருட்டு கடை அல்வா வாசம் மணக்க மணக்க பேருந்தில் ஏறினேன். நூலை படிக்க படிக்க மைகேலன்ஜெலோ பளிங்க்கு கல்லைக் குடைவதில் தான் முழு நாட்டத்துடன் இருந்தார் என்றும் ஓவியத்தில் அவருக்கு அவ்வளவு நாட்டம் இல்லை என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். லியோநார்டோ டா வின்சி யுடன் அவருக்கு இருந்த போட்டி , பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக புரிய வந்தது. இரண்டு மாபெரும் கலைஞர்கள் , சம காலத்தில் அதுவும் ஒரே பகுதியில் இருப்பதும், ஒரே பணிக்கு போட்டி போடுவதும், சுற்றி இருப்போர் இருவரின் கலையையும் ஒப்பிடுவதும், அதற்காக ஒருவருக்கு ஒருவர் எப்படி போட்டி போட்டு வேலை பார்த்தனர் என்றும் விளங்கியது.
டேவிட் என்ற சிற்பம் உருவான கதையை படிக்க படிக்க வியக்க வைத்தது. மைகேலன்ஜெலோவின் டேவிட் என்று உலகம் போற்றும் இந்த பளிங்கு சிலை – அபுஆன் ஆல்ப்ஸ் மலை தொடரில் உலகிலேயே வெள்ளை பளிங்கு கற்களுக்கு பெயர் போன கறார என்ற இடத்தில இருந்து வெட்டப்பட்டது. ஆனால் அது மைகேலன்ஜெலோவின் கையில் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே – சிற்பக்கலையில் அன்றைய சிகரம் டோனடேல்லோ மற்றும் அவரது மாணவன் அகஸ்டினோ முயற்சி செய்த பாறை – 1464 CE. டோனடேல்லோ மறைந்தவுடன் 1466 ஆம் ஆண்டு இந்த வேலை ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டது. பிறகு பத்து ஆடுகளுக்கு பின்னர் ரோசாலினோ இதை உயிர்ப்பிக்க முயற்சி செய்தார். அப்போது பளிங்கு பாறையை சில இடங்களில் அவரும் வெட்டி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எனினும் அந்த வேலையும் பாதியிலேயே கைவிடப்பட்டது. பின்னர் அந்த பாறை வெட்ட வெளியில் இருபத்தைந்து வருடம் கேட்பார் அற்று கிடந்தது. அப்போது கிடைத்து குறிப்புகளில் இந்த பாறை சில இடங்களில் மோசமாக வெட்டப்பட்டு இருந்ததை குறிபிடுகின்றன
மீண்டும் இந்த வேலை துவங்க முயற்சிகள் நடந்த பொது லியோநார்டோ கூட தயங்கிய பொது இந்த வேலையை மைகேலன்ஜெலோ எடுத்துக்கொள்கிறார். இதனை அவர் செய்து முடித்தால் கண்டிப்பாக உலகத்தின் பார்வை இவர்மீது இருக்கும் – அது வரை சிற்பக்கலைக்கு முடிசூடா மன்னனாக இருந்த அவருக்கு இது ஒரு மணிமகுடம் என கருதப்படும்.
ஏற்கனவே மிகவும் கடினமான இந்த பணியை – அதுவரை நடைமுறையில் இருந்த டேவிட் வடிவங்கள் – டோனடேல்லோவின் டேவிட் உட்பட – போல இல்லாமல் முற்றிலும் புதிய பாணியில் வடிக்க மயற்சி செய்கிறார்.
செதுக்கும் முன்னர் அவரது சிந்தனைகளைத் தீட்டி பார்க்கிறார். நமக்கு அதில் சில கிடைத்துள்ளன.
கதை பலருக்கும் தெரிந்ததே. டேவிட் சாமானிய சிறுவன் , கோலியாத் நமது கும்பகர்ணனை போன்ற ராட்சஸ உருவம். அவர் வரைந்த முதல் ஓவியங்களில் முந்தைய டேவிட் வடிவங்களை போலவே இந்த சிலையிலும் டேவிட் கோலியாத்தை வீழ்த்தியவுடன், கொய்த தலையை காலின் அடியில் காட்டும் வண்ணமே வரைந்துள்ளார். ஆனால் பிறகு அவர் செய்தது தான் இந்த சிலையின் அழியாப் புகழுக்கு காரணம். சிறுவன் டேவிட் கோலியாத்தை எதிர்கொள்ளும் அந்த ஒரு தருணத்தை கல்லில் பிடித்துள்ளார்.
முதலில் இந்த சிலையின் அளவு – முடிவுபெற்ற நிலையில் இன்று 17 அடி, உயர்ந்து நிற்கும் இந்த சிற்பம், பளிங்கு பாறை இன்னும் பல அடி இருந்திருக்க வேண்டும்.
மூன்றே ஆண்டுகளில் 1501 முதல் 1504 வரை ஒரே மூச்சில் அந்த மகா சிற்பி இதனை முடித்துள்ளார். அருகில் சென்று அவரது உன்னத கலையை ரசிப்போம்.
அனைத்து டேவிட் படங்களும் இணையத்தில் இருந்து எடுத்தவை – விக்கிபீடியாவிற்கு நன்றி
உயர்ந்து நிற்கும் இந்த சிற்பம் தனியாக எந்த துணையும் இல்லாமல் நிற்கிறது. இதனை வடிக்கும் பொது மேலிருந்து கீழே வடிக்க வேண்டும். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக மேலே இருக்கும் கல்லை குறைக்க வேண்டும். இல்லை என்றால் பாரம் தாங்காமல் கால்கள் உடைந்து விடும். அப்படி கல்லை மெதுவாக குடிக்கும் போதே பளிங்கு எவ்வளவு பாரம் தாங்கும், அதனை ஈடு செய்ய கீழி எவ்வளவு கல்லை வைக்க வேண்டும், முடிந்த சிலையில் அந்த கல் எப்படி காலாக மாற வேண்டும் என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.
பின்னர், அந்த கால் , கை, வயிறு, தோள்பட்டை, எலும்பு – அதன் மேலே தசை, அதற்கு மேலே ஓடும் நரம்பு, அதற்கு மேல் படரும் தோல் என்று மனித உறுப்புகளின் அசைவு, வளைவு அனைத்தையும் கல்லில் கொண்டு வர வேண்டும்.
பின்னர் எதிரியை, அதுவும் தன்னை விட பல மடங்கு பலசாலியான எதிரியை எதிர்நோக்கும் அந்த தருணம், அவனது சிந்தனை எப்படி இருந்திருக்கும், மன ஓட்டம் என்னவாக இருக்கும், வாழ்வா சாவா என்ற போராட்டம் கண்களில் வெளிக்கொணரும் அந்த ஒரு பயம்.வலது கையில் ஒரு கல் , இடது கையில் அதை வீசும் பட்டை, வீச தயாராகும் அந்த அசைவு. அப்பப்பா, என்ன ஒரு சிலை.
இதனை பார்க்கும் போதே அன்று நெல்லையப்பர் கோயிலில் இதே போல ஒரு போர் காட்சி நினைவிற்கு வந்தது. கொடை வள்ளல் கர்ணனின் அரிய சிலை. குந்தியின் மூத்த மகன், பஞ்ச பாண்டவர்களின் அண்ணன், விதியின் சதியால் எதிரியின் கூடாரத்தில் சென்றடைந்த மாவீரன், செஞ்சோற்றுக்கடனுக்காக நட்பை மானமென காத்த உத்தமன், வந்தது இந்திரன் என்று தெரிந்தும் தன உயிர் காக்க ஒட்டிப்பிறந்த கவச குண்டலங்களை தானமாக கொடுத்த கொடை வள்ளல். வில்லுக்கு ஒரு விஜயன் என்ற கூற்றை பொய்யாக்க திறன் பாடிய ஒரே வீரன்.
அர்ஜுனனை வீழ்த்த தன்னிடத்தில் இருந்த பெரிய சக்தி – நாகாஸ்திரம் – அவசெணன் என்ற நாக இளவரசன் தான் அந்த அஸ்திரம் – தனது நாட்டையே தீயாக்கிய காண்டவ தகனம் போரில் அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் தன தாயையும் இழந்த வீரன் அவன். அந்த பானத்திற்கு அர்ஜுனனிடத்தில் எந்த எதிர் பாணமும் கிடையாது.
தூண் சிற்பம் – சுமார் 12 அடி உயரம் , கருங்கல்லில் முன்னும் பின்னும் இன்னும் பல சிற்பங்கள், பின்புறம் மேல்கூரையை தாங்கும் தூண்
சிற்பத்தின் காலம் சுமார் 16 17 CE – நாயக்கர் காலம்.
இங்கும் அந்த சிலையை வைத்த சிற்பி – போரின் ஒரு முக்கிய தருணத்தில் காட்சியை அமைக்கின்றான். அவசெணன் தந்தது பாம்பு வடிவில் கர்ணனின் கையில். கர்ணனின் முகத்தில் ஒரு பெருமித சிறப்பு, தனது திறனிலும் நாகாஸ்திரத்தின் தன்மையிலும் அசாத்திய நம்பிக்கை, வில் வித்தையில் தன்னை பல முறை பலரும் அர்ஜுனனுக்கு குறைவாகப் பேசிய அனைவரின் வாயை மூடப் போகும் தருணம்.
வலது கால் சற்றே தூக்கி பின்னால் நகர்ந்து வருகிறது, நாணைப் பூட்டி வில்லை வளைக்கும் பொது வலது கால் சற்று பின்புறம் இருந்தால் தானே பலம் வரும் ! இடது கையில் அந்த வில்லை பிடித்திருக்கும் அழகு, எதோ காதலியின் வாழை தண்டு கரங்களை தொட்டும் தொடாமலும் விளையாடும் விரல்கள் போல – விரல்களின் வலிமை , அந்த நகங்கள் கூட ! மடிந்த கை முட்டியின் ஒரு பக்கத்தில் சற்றே புடைக்கும் தசை !
முன்னங்கால் மடியும் பொது புடைக்கும் மூட்டு , பின்புறம் தொடையில் தெரியும் நரம்பு
வில்லை வளைக்கும் முன்னர் ஒரு பெருமித மூச்சை உள் வாங்குகிறான் கர்ணன், அதில் அவனது பரந்த மார்பு விரிகிறது – அப்போது அவனது விலாவெலும்பு.வில்லில் தெரிகிறது . அதனை எதிர்கொள்ளும் அர்ஜுனின் வடிவம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
இரு அற்புத வடிவங்கள். இவற்றில் ஒன்றை உயர்த்தியோ தாழ்த்தியோ காட்டுவது இந்த பதிவின் நோக்கம் அல்ல -ஏன் இரண்டையும் ஒப்பு நோக்குவதும் அல்ல. ஒரு வடிவம் உலகப் புகழ் பெற்றுக் கொண்டாடப் படுகிறது. மற்றொன்று எவருமே ஒரு நிமிடம் கூட நின்று பார்க்காமல் இப்படிக் கிடக்கிறதே என்ற ஏக்கம் தான். நியாயமான ஏக்கம்தானெ!!