“ஏதாவது செய்யணும் விஜய் !” நான்கு மாதங்களுக்கு முன்னர் அர்விந்த் மற்றும் சங்கருடன் நடந்த தொலைபேசி உரையாடல் இன்னும் காதில் ஒலிக்கின்றது.
காமரசவல்லி ஆலயத்தின் நிலையை கண்டு மனம் உடைந்த அவரது குரல் தான் அது. நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் சாஸ்வத் காமரசவல்லி செல்கிறோம் என்றதும் உடனே அங்கு இருக்கும் நிலையை விளக்கும் ஒரு பதிவு நீங்களே எழுதிக் கொடுங்கள் என்று சொன்னேன். ’என்றும் பதினாறு’ என்று வரம் அளித்து காத்த கதை சொல்லும் சிற்பம் இருக்கும் ஆலயத்தின் அவல நிலையை தரும் இதோ அந்த பதிவு.
நாம் முன்னரே பலமுறை பார்த்த கதை. மரண பயம் அனைவருக்கும் வரும் பயம். அதை வென்று அழியாப் புகழ் பெற்ற பாலகனின் கதை தான் இன்று நாம் பார்ப்பது. மிருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்வதியும் மகப்பேறு ஒன்றும் இல்லாமல் துயரத்தில் இருந்தனர். முடிவில் அவர்கள் வணங்கும் சிவனாரிடமிருந்து துயர் துடைக்கும் வரம் கிடைக்கிறது. ஆனால் அதில் ஒரு முடிச்சு – அனைவரும் புகழும் புத்திக் கூர்மை உடைய ஆனால் சிறு வயதிலேயே அவர்களைப் பிரிந்து மடியும் மகன் வேண்டுமா அல்லது பல வருடங்கள் அவர்களுடனே இருக்கும் முட்டாள் மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த முடிச்சு.
’குறைவாக இருந்தாலும் அறிவும் பக்தியும் நிறைந்துள்ள புத்திசாலி மகனே வேண்டும்’ என்று இருவரும் கேட்க அப்படியே பிறக்கிறான் மார்க்கண்டேயன். அனைவரும் வியக்கும் வண்ணம் சிவ பக்தனாக விளங்குகிறான். ஆனால் அந்த பாலகனின் பதினாறு அகவை முடிந்த நிலையில் தவணை முடிந்த வாகனத்தை பறிக்கும் சர்வ வல்லமை படைத்த கடனாளி வங்கி காவலன் போல வருகிறான் காலன். பயம் கொண்டு சிவலிங்கத்தை கட்டிக்கொண்டு நிற்கும் சிறுவனைக் கண்டு தனது பாசக் கயிற்றை வீசுகிறான் எமன். அப்போது தன்னிடத்தில் சரணடைந்த பக்தனின் குரல் கேட்டு சீறி எழும் மகேசன் காலனை உதைத்துத் தள்ளிவிட்டு, தன் பக்தனான மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக இருக்க வரம் அளித்து விடுகிறார்.
இந்தக் காட்சியைத்தான் சிற்பி காமரசவல்லி சிற்பத்தில் எடுத்துக்கொள்கிறான். கொள்ளிடத்தின் வடக்கே , நெடுஞ்சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது இந்த ஆலயம். அதன் வடக்கு பக்கம் உள்ள சுவரில் காணும் காட்சி.
பிள்ளையார் சிற்பத்தின் அடியில் காணும் சிறு சிற்பம் தெரிகிறதா. ?
இதோ அந்த காட்சி.
கையளவு கல்லில் கதை சொல்லும் கலை. லிங்கத்தை கட்டி அணைத்து இருக்கும் மார்க்கண்டேயன். பின்னால் திரும்பி தன்னை நெருங்கும் ஆபத்தை கண்டு அஞ்சி நடுங்கும் வண்ணம்…அவனை அடுத்து எமன். ஐயனின் காலில் புத்தி படும் வண்ணம் இருந்தாலும், எட்டி தன் இரையை பிடிக்க முயலும் எமன். அவன் மீது ஆக்ரோஷமாக ஆடும் மகேசன் – காலசம்ஹார வடிவத்தில் – நான்கு கைகள், ஒரு பக்கம் அனல் பறக்கும் கோபம் அதே உருவத்தில் பக்தனை ஆட்கொள்ளும் கருணை உருவம். அனைத்து காட்சிகளின் உணர்வையும் அப்படியே படம் பிடித்துக் கட்டும் அற்புதச் சிற்பம்.
இதே வடிவம் பல இடங்களில் இருந்தாலும் இந்த அளவிற்கு சிறிய சிற்பத்தில் இத்தனை உணர்வுகளை கொண்டு வருவது மிக மிகக் கடினம். உதாரணத்திற்கு தஞ்சை பெரிய கோயிலில் உள்ளே இதே வடிவத்தை ஒப்பிட்டு பார்ப்போம். என் பார்வையில் பிரம்மாண்ட அளவில் உள்ள இந்த சிற்பத்தை விட காமரசவல்லி சிற்பத்தில் உணர்ச்சிகளின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதே போல இரு மார்க்கண்டேய வடிவங்கள்.
ஒரு இடத்தில மண்டியிட்டு நிற்கும் வண்ணம் இருந்தாலும், பெரிய கோயில் இந்த கதையில் உள்ள மூன்று பேரையும் பிரித்து தனித் தனியே காட்டுகிறது
மிகச் சிறிய சிற்பம் என்பதால் முகபாவங்களில் காட்ட முடியாத உணர்ச்சிகளை உடல் தோற்றங்களின் சிறு நெளிவுகளில் காட்டி நமது மனதை கொள்ளை கொள்கிறான் காமரசவல்லி சிற்பி.
இப்படி ஆலயத்தில் எங்கும் நுண்ணிய சிற்ப்பங்கள் – குறைந்தது இருபத்து ஐந்து இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். இங்கும் அங்கும் இரைந்து கிடக்கும் உடைந்த தூண்கள் மனதை நெருடுகின்றன. புனரமைப்பு என்னும் பெயரில் விமானத்தில் வேலை துவங்கி நடுவிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளை பார்க்கும் முன்னர் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
ஏதாவது செய்ய வேண்டுமே விஜய் !!!!