ஒரு நாரை கண்ணனை விழுங்கியது !

இன்று நாம் காணப் போவது, கண்ணனின் மாய லீலையை விவரிக்கும் மற்றுமொரு சிற்பம் திருமால்புரத்திலிருந்து. நாரை உருவில் வந்த பகாசுரனை மாய்த்தக் காட்சியை விளக்கும் கவின்மிகு சிற்பம்.

வழக்கம்போல், முதலில் கதையைக் கேட்போம், பிறகு சிற்பத்தைக் அருகில் சென்று காண்போம்.

ஆயர் குலச் சிறுவர்களெல்லாம் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு நாள் அவ்வாறு கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடிக்கும்போது சிறுவர்களும் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே மலைபோன்ற பெரிய வடிவம் கொண்ட ஒரு நாரையினை கண்டனர். அந்த நாரை உண்மையில் கம்ஸன் ஏவிய பகாசுரன் எனும் அரக்கனாவான். அதனைக் கண்ட மாத்திரத்தில் அறிந்து கொண்டான் கண்ணன். வெண் நிறத்தில், நீண்ட அலகுகள் கொண்டதாய், கூர்மையான நகங்கள் கொண்டு, ஆக்ரோஷம் கொண்டு நாரை வடிவு கொண்ட அரக்கன் சட்டென்று நெருங்கி வந்து அவசரமாய் கண்ணனை விழுங்கினான். இதைக் கண்ட பலராமனும் மற்ற ஆயர் குலச் சிறுவர்களும் நடுநடுங்கி மூர்ச்சையடைந்தனர்.

உள்ளே சென்ற கண்ணனோ பெரும் ஜோதிப் பிழம்பாகி எரிக்கலானான். பகாசுரனின் தொண்டையில் அக்னி பிழம்பினால் மிகுந்த எரிச்சல் உண்டாயிற்று. பொறுக்கமாட்டாது அவன் கண்ணனை வெளியில் எறிந்துவிட்டு தன் கூரிய அலகுகளால் குத்திக் கொல்ல முயன்றான். கண்ணன் உடனே பாய்ந்து, ஒரு குழந்தை எவ்வாறு ஒரு புல்லை எளிதாக பிளக்குமோ அவ்வாறே அவ்வரக்கனின் வாயை பிளந்தார். மாபெரும் அலறலுடன் பகாசுரன் மோட்ச கதியடைந்தான்.

இப்போது இந்தக் காட்சியை பாருங்கள்.

பள்ளத்தில் மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்துகுழல்வாராய் அக்காக்காய்.
பேய்முலையுண்டான் குழல்வாராய் அக்காக்காய்

(பெரியாழ்வார் திருமொழி – ஐந்தாம் திருமொழி)

காக்கையே! நீர்த்தாழ்வுகளிலே இரையெடுத்துத் திரிகின்ற நாரையின் ரூபத்தை ஏறிட்டுக் கொண்டு வருபவனாகிய வஞ்சனை பொருந்திய பகாசுரனை கண்டு, இது பட்சியேயென்று சாமான்னியமாக நினைத்து விரைவாக அந்த அசுரனின் வாயை கிழித்துப் போட்ட கண்ணனின் குழல் வார விரைவில் வாராய் காக்கையே! பூதனையின் நச்சுக் கலந்த பாலைக் குடித்த கோபாலனின் குழல் வார விரைவில் வாராய் காக்கையே!


ஒரு கைபேசியின் அளவேயுள்ள சின்னஞ்சிறிய சிற்பம். நாரையின் வடிவம் கொண்ட பகாசுரனின் வாயை தன் சின்னஞ்சிறு கரங்களால் பிளக்கும் காட்சி! எத்துணை அழகு! காணக் காணக் கோடி இன்பம்!!!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கதை சொல்லும் இந்த கற்கள் இன்றும் தங்கள் கதையை சொல்வது அருமை. இன்றும் இந்த கதைகள் நம் சிறுவர்களை நெகிழவைப்பதை நாம் காண்கிறோம்.


( photo courtesy: http://www.annecy.org/annecy-2011/festival:en/official-selection)

இத்துடன் பதவு முடியவேண்டும், எனினும் நமது நேயர் காத்தி பூத கணங்களுடன் நமது காதலை அறிந்து சில சிற்பங்க​ளை அனுப்பி அதில் இருக்கும் அருமையான நகைச்சுவை உணர்வு எப்படி வெளிப்படுகிறது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அவற்றை நீங்களும் கண்டு மகிழுங்கள்.

தமிழாக்க உதவி நன்றி: வர்தினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *