இது இந்த வலைப்பக்கத்தின் நூறாவது பதிவு. – நூறு சகோதரர்களான கெளரவர்களின் முடிவுக்காலத்தின் நிகழ்வு ஒன்று நமது நூறாவது பதிவாக மலர்கிறது. பீமனுக்கும் துரியோதனுக்கும் இடையே நடக்கும் துவந்த யுத்தம்.
நூறு பதிவுகள் அதுவும் ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள் இட முடிந்ததற்கு காரணம் நண்பர்களும், நல் அறிஞர்களும் வழிகாட்டி ஊக்கப்படுத்தியதால்தான். சில நல்ல உள்ளங்கள் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க ஊக்குவித்து கலங்கரை விளக்கமாய் இருந்து வழிகாட்டியும் வருகிறார்கள். அந்த கலங்கரை விளக்கங்களில் ஒருவர், என்னை மட்டுமல்ல சாமானியர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், சங்க கால ஆர்வலர்களையும், சம கால ஆர்வலர்களையும் தன்னுடைய வசீகர எழுத்தால் கவர்ந்திழுப்பவரைத்தான் இன்று அறிமுகம் செய்யப் போகிறேன். இவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். ஒரு நிமிடம்! இவருக்கு அறிமுகம் தேவையா! அப்பேர்பட்டவர் யார்: அவர்தான் Dr. S. ஜெயபாரதி, இவருடைய வரலாற்று படைப்புகளும், கலாச்சார, பண்பாடு பற்றிய படைப்புகளும் இவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்களையும், ஆர்வளர்களையும் உருவாக்கியுள்ளது. இவரது மேலாண்மை திறம் வியக்கத்தக்கது, ஒருவரின் மனதை எளிதாக அறிந்துகொள்பவர். இவர் பங்குபெறும் மின் குழுமங்களில் யாரேனும் ஒரு சுவாரசியமான தகவலைத் தெரிவித்தாலோ அல்லது சந்தேகங்களை தெரிவித்தாலே, அதை நிவர்த்தி செய்ய முன் நிற்பவர், தவறிருந்தால் சுட்டிக் காட்டுவதோடு சரியான பாதையில் செல்ல வழிகாட்டுபவர். இவரது துணையிருந்தாலே போதும் இலக்கை நோக்கி பாதி தூரம் சென்ற நிம்மதி கிடைக்கும் நமக்கு. நம் மண்ணின் பெருமையை அறிந்து கொள்ளும் தேடலில் ஒவ்வொருவரையும் ஈடுபடுத்துவதில் இவருக்கு அலாதிப் பிரியம்.
( இன்றைய அரிய மனிதர்களில் ஒருவரான் இவரை அறியாதவர் யாரேனும் இருந்தால் உடனே பார்க்கவும் டாக்டர் சி. ஜெயபாரதி)
நாம் பார்க்கப் போகும் இன்றைய பதிவு அவருடைய வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டதுதான். துவந்த யுத்தம்
நாம் ஏற்கனவே இந்த சிற்பத்தை ஒத்த அதே வகை சிற்ப பதிவுகள் பலவற்றை பார்த்திருக்கிறோம். அதனால் இந்த சிற்பத்தை நான் விளக்குவதை விட Dr. ஜெ. பி. யின் விளக்கம் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவரை அணுகினேன். நூறாவது பதிவு வேறு. உடனே அனுமதித்த அவரது கருணையை என்னவென்று சொல்வது. என்னைப் போன்ற பல பேரை அவர் உருவாக்க அவர் பல காலம் வாழவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம். கரும்பு தின்ன கூலியா
அற்புதமான இந்த சிறப்புப் பதிவை வழங்கும் டாக்டர். ஜே.பி ஐயாவுக்கு நன்றி.
உலகத்தின் தலை சிறந்த சிற்பங்களின் புகலிடங்களில் ஒன்றான பண்டே ச்ரெய் ஆலயங்கள் ஒன்றில் உள்ள சிற்பத்தை இன்று காண்போம். “அன்கோர் வாட்”டில் இருந்து வடகிழக்காக 15 மைல்கள் தொலைவில் உள்ளது இந்த பண்டே ச்ரெய்.
[“The lacy setting is superbly executed and the balanced rhythm and harmony
of the scene itself cannot be surpassed in any work of man” – Reginald le May.
துல்லியமான அபிநயத்தோடு துவந்த யுத்தத்தை, பழங்கதையை எடுத்துக்காட்டும் இந்த சிற்பங்களை விஞ்சிய எதுவும் இருப்பது அரிதே!]
இன்றைய சிற்பத்தில் உள்ள காட்சி பாரதப் போரின் கடைசி கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு.
பாரதப்போர் முடியும் தருவாயில் அனைவரையும் இழந்து, படுகாயப்பட்டு களைப்படைந்த துரியோதனன் மறைந்திருக்கிறான். அந்த சமயம் பார்த்து பாரதப்போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அவனை தேடிவரும் பாண்டவர்களின் கண்ணில் படுகிறான். பாண்டவர்கள் ஐவர் ஆனால் அவனோ ஒருவன் ஆகவே பாண்டவர்களில் யாரேனும் ஒருவரோடு யுத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாண்டவர்களில் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனனுக்கு இணை பீமன் மட்டும் தான். காயம்பட்டு களைப்படந்திருந்தாலும் கதாயுதத்தை கையாளும் திறமையால் பீமனுடன் போர் புரிய சம்மதிக்கிறான் துரியோதனன். பீமனும் கதாயுத்தை கையாள்வதில் வல்லவனே.
கதை என்பது நீண்ட பிடியும் உருண்ட தலைப் பகுதியும் உடைய ஆயுதம். இதை பயன்படுத்தியே இரதங்களை உடைத்தும், யானைகளை கொன்றும், கவசங்களை உடைத்தும் எதிராளியை நிலை குலையச் செய்வர்.
கிருஷ்ணரும், பாண்டவர்களும் வேடிக்கைப் பார்க்க, துரியோதனனுக்கும், பீமனுக்கும் கதாயுத பயிற்சி அளித்த பலராமரை நடுவராக கொண்ட துவந்த யுத்தம் துவங்குகிறது. துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடைபெறும் சண்டை. அது இறுதிவரைக்கும் நடைபெறுவதாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு உத்தியின் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம்.
யுத்தம் நடைபெறுகிறது ஒரு காலகட்டத்தில் பீமன் களைப்படைகிறான், ஆனால் பத்தாயிரம் யானை பலம் கொண்ட துரியோதனோ மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் போர் புரிகிறான். பீமன் சற்று அயர்ந்த நேரம் தரையிலிருந்து எழும்பிய துரியோதனன் தன் கதையை பீமனின் தலையை நோக்கி தாக்க முற்படும் நேரத்தில் துரியோதனின் பலவீனமான இடது தொடையை தாக்குமாறு கிருஷ்ணன் பீமனுக்கு ஆலோசனை கூறுகிறான். துரியோதனன் எழும்பியதால் அவன் தொடை பீமனுக்கு எளிய இலக்காக அமைய, பீமனின் அடி மரண அடியாக துரியோதனின் தொடையில் விழ, தொடை பிளந்து குற்றுயிரும் கொலையுயிருமாய் வீழ்கிறான் துரியோதனன். யுத்த விதிகளை மீறியதால் தன் கலப்பாயுதத்தால் பீமனை தாக்க முயலும் பலராமனை தடுக்கிறார் மாயக் கண்ணன்.
இந்த யுத்தக் காட்சியை அற்புதமாக எடுத்துக்காட்டும் சிற்பத்தை பார்க்கலாம் இப்பொழுது.
வலதுபக்கம் அமர்ந்து கொண்டு யுத்தத்தை பார்த்து ஆரவாரம் செய்யும் பாண்டவர்களில் நால்வர்.
நடுவில் போரிடும் பீமன், அந்தரத்தில் பறந்து பீமனின் தலையை சரியாக குறிவைக்கும் துரியோதனன்.
இடது பக்கம் நான்கு கைகளோடு பலராமரின் ஆயுதத்தை தடுத்து நிறுத்தும் கிருஷ்ணர்.
துவந்த யுத்தத்தை அற்புதமாக விளக்கும் சிற்பம். எங்கேயோ கம்போடியாவில் பாரதப்போரை விளக்கும் சிற்பம் பாரதம் என்றழைக்கப்படும் இந்தியாவில் இல்லை!
(அருமையான தமிழில் மொழி பெயர்த்து உதவிய சதீஷுக்கு நன்றி )