சிறு வயதில் இருந்தே எனக்கு கோயில்களில் உள்ள வாயிற் காப்போன்கள் மீது ஒரு கண். அதனால் அவர்களை பற்றி ஒரு தொடரை இங்கே எழுதவேண்டும் என்று நினைத்தேன். நாம் முன்னரே தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாங்காடப்பத்து வாயிற் காப்போங்களை பற்றி பார்த்தோம். பொதுவாக எல்லா கோயில்களிலும் இருக்கும் இவர்களின் சிற்பங்களை இப்போதெல்லாம் எவரும் பார்ப்பது கூட இல்லை. அருமையான அதிகார தோரணையில், கம்பீரமாக தங்கள் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தி இருக்கும் இவர்களை அடுத்தமுறை செல்லும் போது கண்டிப்பாக பாருங்கள்.
இந்த தொடரை துவக்க ஒரு அற்புத சிற்பம். எனக்கு மிகவும் பிடித்து சிற்பம். அதனாலேயே நம் தளத்தின் முத்திரையில் இவரை காணலாம். மும்பையில் அண்மைய தீவிரவாத செயல்கள் நடை பெற்ற பகுதிக்கு மிக அருகில் இருக்கும்….
எலிபண்டா குடவரை வாயிற் காப்போன்.
ஏன் இந்த சிற்பத்தை இத்தளத்தின் முத்திரையாக தேர்ந்தெடுத்தேன் ? இந்த கல் சிற்பம் சொல்லாமல் சொல்லும் கருத்து – அது தான் காரணம் . ஆயிரம் ஆண்டு நின்று தன் எஜமானான ஈசனின் கர்பக்ருஹம் பாதுகாத்து வந்த சிலை – பதினேழாம் நூற்றாண்டில் வந்த போர்த்துகீசியரிடத்தில் தோற்ற சிலை. என்னதான் கொடூரமான மனிதன் என்றாலும், அந்த நாட்டின் கலை, மொழி, நெறி , மதம், புரியவில்லை என்றாலும் குறி பார்த்து சுடும் பயிற்சிக்காக யாராவது இந்த அருமையான சிற்பத்தை தேர்ந்தெடுப்பார்களா? ஆனால் போர்த்துகீசியர் தேர்ந்தெடுத்தார்களே!! சிதைத்துவிட்ட மாபாவிகள். கலை அம்சம் சொட்டும் இந்த சிலையை சிதைக்க எப்படி மனம் வந்ததோ அவர்களுக்கு.
வாயிற் காப்போன் -. பல ஆண்டுகள் கற்ற அறிவை உளி கொண்டு கல்லில் உயிர்ச் சிற்பமாய் வெளிக் கொண்டு வந்த சிற்பி, வரும் பக்தர்களின் மனதை கட்டுப்படுத்தி, அவர்களை இறைவனை ஒரு மனதாக த்யானிக்க உதவவே இந்த உருவங்களை உருவாக்கினான் – இவை அலை பாயும் மனதை ஒழுங்கு படுத்த, துப்பாக்கி,தோட்டாக்களை எதிர்க்க அல்ல. தன் பணியில் தோற்றதால் தன் கை கால்களை இழந்து அவல நிலையில் நிற்கும் சிலையா இது? நன்றாக பாருங்கள்
இல்லை , அவன் பொறுமை ததும்பும் அன்பு முகத்தின் புன்னகை போதுமே ! அவனுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் அவனை இன்னும் அழகாக பிரதிபலிக்கின்றன – கலை ரசிப்பு – ஒரு உணர்வு , ஒரு உன்னத கலை – அதற்கு அழிவு என்பது கிடையாது என்று நின்று சிரிக்கும் சிற்பம். இவனே நம் தளத்தின் நோக்கத்தை முழுவதுமாக வெளி காட்டும் திறன் கொண்டவன்.
மேலும் சில படங்கள் – சிற்பம் இருக்கும் இடம், மற்றும் அதன் அளவு (பக்கத்து சுவரில் உள்ள சிற்பம் – ஒரே அளவு )
{வாயிற்காப்போன்களை த்வாரபாலகர்கள் என்று சொல்லுவார்கள், இவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே இறைவனை வணங்கவேண்டும் என்பது ஐதீகம் }
290929132915