எளிபாண்டா குடவரை புத்த மதம் சார்புடையது, சிவனாக இருந்தால் கழுத்தில் தொங்கும் பாம்பு எங்கே !

இணையத்தின் வளர்ச்சி , கூகிள் , விக்கி போன்ற வசதிகள் நம் படைப்புகளுக்கு மிகுந்த பலத்தை தருகின்றன. எனினும் நாம் அவற்றை உபயோகிக்கும் முறை சரியா , அவற்றை கொண்டு நாம் படைக்கும் படைப்புகள் நம்பகத்தன்மை உடையனவா என்ற எச்சரிக்கை கலந்த பொறுப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் அவையும் ஆவணங்களாக மாறுகின்றன. என்ன இது திடீரென இப்படி ஒரு கருத்து என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இணையத்தில் எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவற்றில் சாதி, மதம் என்று பல இறுக்கமான விஷயங்கள் , இதமாக மருந்திட்டு ஆறவிடாமல் , சிலர் கார சாரமாக எழுதி வாசகர் எண்ணிக்கை கூட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் ஆரா புண்ணாய் எரிய விடுகின்றனர்..

சில வருடங்களுக்கு முன்னர், சிலைகளை பற்றி நடந்த உரையாடல் ஒன்றில், நண்பர் ஒருவர், எளிபாண்டா குடவரை திருமூர்த்தி சிலையின் படத்தை போட்டார். இணையத்தில் அரை குறையாக அங்கு புத்த மத குடைவரைகளும் உள்ளன என்று படித்துவிட்டு, அவர் இதுவும் ஒரு புத்தர் சிலை. சைவர்கள் அணைத்து குடைவரைகளையும் வன்முறையால் எடுத்து, அங்கு உள்ள புத்த வடிவங்களை மாற்றி விட்டனர் என்றும், அத்தாட்சி படத்தில் இருக்கும் சிலையின் நீண்ட காதுகளை பாருங்கள் என்றார். மேலும் “இந்த படத்தை உற்று நோக்குங்கள் பாலமுகம், கம்பீரமுகம் நம்மை பார்ப்பது , தளர்ந்த முகம் சோத்தாங்கை பக்கம்,இது மத சின்னங்களான பட்டை, நாமம், எல்லாம் எங்கே, சங்கு எங்கே சக்கரம் எங்கே கழுத்தில் தொங்கும் பாம்பு எங்கே ?” என்றும் எழுதினார்.

இந்த படத்தை தான் அவர் அங்கு இட்டார். கீழே இருக்கும் தலத்தில் இருந்து எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

Temple net தளம்

இதை முதல் பார்வையில் பார்க்கும் வாசகர்கள் அவர் சொல்வது சரிதானோ என்ற ஐயம் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதனால் விடை அளிக்க நாம் முயற்சி செய்வோம்.

முதலில் அவர் இட்ட படமே தவறு. உற்று பாருங்கள், அவர் சொல்லும் சோத்தாங்கை பக்கம் ( உங்களுக்கு) மீசையுடன் இருக்கும் சிலை அப்படி இருக்காது. ஏன் ? யாரோ செய்த குற்றம், படம் மாறி வலையில் ஏற்றி உள்ளார். சரியான படம் இதோ.

எங்கே பாம்பு என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் மிகவும் சுலபம். அதை பார்க்கும் போதே இந்த நபர் தான் சொல்லும் இடத்திற்கு சென்றதே இல்லை என்பதும் தெளிவாகிறது. இந்த பதிவில் வரும் படத்தை பாருங்கள்.

பதிவு

அருகில் சென்று பாருங்கள். கையில் பிடித்திருப்பது என்ன ?

இந்த தலத்தில் 12வது படத்தை பாருங்கள் ( ASI இணைய தளம்)

ASI இணைய தளம்

திரு ஜார்ஜ் மீச்சேல் அவர்களது ஆங்கில நூல் “ELEPHANTA” , அதில் அவர் மிக அழகாக அருமையான படங்களுடன் முழு குடவரையையும் விளக்குகிறார். அவரது நூலில் இருந்து சில படங்கள் ( இன்னும் ஒரு பாம்பு உள்ளது )

பாம்பு பற்றிய கேள்விக்கு பதில் சொல்லியாயிற்று . அடுத்து நீண்ட காதுகள். ஆகமம், சிற்ப சாஸ்திரம் என்று முழுவதுமாக விவரிக்காமல் , மேலோட்டமாக பார்ப்போம். ( மேலே படிக்க வேண்டும் என்றால் திரு கோபிநாத் ராவ் அவர்களது Elements of Hindu Iconography நூலை படிக்கவும் – ஒரே ஒரு பக்கம் மட்டும் இணைக்கிறேன் ),சிற்ப சாஸ்திரங்கள் சமண, பௌத்த , இந்து சிற்பங்கள் என்று தனித்தனியாக பிரிப்பதில்லை. எல்லா சிலைகளுக்கும் ஒரே அளவுகள் தான்.

உதாரனத்திற்க்கு, அவர் காதை பற்றி கேள்வி எழுப்பியதால், சிற்ப சாஸ்திர முறை படி வரைந்த ஒரு காதை ( அதே நூலில் இருந்து ) பாருங்கள்.

இந்தக் காது, நமது திருமூர்த்தி உருவத்தின் காதின் அளவுகளுடன் ஒத்து போகுமா ? முழு ஆராய்ச்சி போல அகல நீளம் அளக்க வில்லை – நம் பார்வைக்கு எப்படி தெரிகிறது என்று மட்டும் இப்போதைக்கு பார்ப்போம்.


சுவாரசியமாக இருக்கிறது அல்லவா. சரி, இதே காது , ஒரு சிவன் சிலைக்கு பொருந்துமா. எதோ ஒரு சிவன் சிலை இல்லை, சோழர் கால செப்புத் திருமேனி, அதுவும் புகழ் பெற்ற ரிஷபாந்தகர் சிலை ( நாம் சில தினங்களுக்கு முன்னர் பார்த்த வடிவம் தான் )

அவரது காது இப்போது நமக்கு தேவை. இதோ

இரண்டு காதுகளையும் ஒன்றாய் சேர்த்து பார்ப்போமா ?

7832
7858

எப்படி இருக்கிறது பொருத்தம் ?

நண்பர், மேலும் குடவரையில் இருந்த அணைத்து பெளத்த சிலைகளையும் சைவ சிலைகளாக மாற்றிவிட்டனர் என்றும் கூறினார். நண்பர் நன்றாக தேடி படித்து பார்த்திருந்தால் , குடவரைக் கோயில் – ஒரே கல்லால் ஆனா சிலைகள் இவர். அதுவும் ஒன்றோ இரண்டோ சிற்ப்பங்கள் இல்லை, மொத்தம் பதினாறு புடைப்புச் சிற்ப்பங்கள், வாயிர்க் காப்போன், பூத கணம் என்று ஒரு பெரும் படையே உள்ளே இருக்கு என்று நண்பருக்கு தெரிந்திருக்கும்.

விக்கி தலத்தில், குடைவரையின் அமைப்பு , அதில் இருக்கும் சிற்ப்பங்கள் என்று முழு விவரமும் இருக்கின்றனவே!!

Wiki layout of Elephanta

நடு மண்டபம்

1. ராவணன் கைலாய மலையை அசைக்கும் காட்சி
2. ஈசனும், உமையும் கைலாயத்தில்
3. உமையொருபாகர்
4. திருமூர்த்தி
5. கங்காதர வடிவம்
6. பார்வதி கல்யாணம்
7. அந்தகாசுரன் வதம்
8. நடராஜர்
9. யோகிஷ்வர
16. லிங்கம்

கிழக்கு பக்கம் இருக்கும் சிற்ப்பங்கள்

10. கார்த்திகேயன்
11. மாத்ரிகா
12. பிள்ளையார்
13. வாயிர்க் காப்போன்

மேற்கு பக்கம் இருக்கும் சிற்ப்பங்கள்

14. யோகிஷ்வர
15. நடராஜர்

ஒவ்வொரு சிற்பமும் அருமையான படைப்புகள். ஆனால் எங்கும் ஒரு கல்வெட்டு கூட இல்லை, இதன் காலம், கட்டிய மன்னர் யார் – எதுவும் தெரியவில்லை. சுமார் கி பி 8th நூற்றாண்டு படைப்பாக இருக்கலாம் என்றும் குப்தர் இல்லை சாளுக்யர் கலை தாக்கம் இருக்கிறது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். .

உண்மை ..அறிவு …ஆனந்தம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு மோதிரத்தை தேடி

மோதிரங்கள் நமது வரலாற்றுடன் பின்னிப் பயணிக்கும் ஒரு அணிகலன். அதை அணிய வேண்டும் என்றால் உடலை வருத்தி ( குத்தி )ஓட்டை போடத் தேவை இல்லை ) – மேலும் , கால் விரல்களை சேர்த்தல் இருபது மோதிரங்களைக் கூட எளிதாக அணியலாம், ஒரே விரலில் ஒன்றுக்கு மேல் போட்டுகொண்டால் – எண்ணிக்கை மேலும் பெருகும். உலக வரலாற்றில் ( விக்கி ) குறிப்புப்படி சுமார் 4800 ஆண்டு காலாசாரம் இது. எனினும் நமது பரத கண்டத்தில் ( நமது புராணங்களின் காலத்தை நிர்ணயிக்கும் சர்ச்சை இங்கு வேண்டாம் !!) முத்திரை மோதிரங்கள் பல இடங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அசோகா வனத்தில் சீதை அனுமனை ஸ்ரீ ராமனின் கணையாழி கொண்டு அடையாளம் கண்டு்கொண்டது, மனையாளை மறந்த துஷ்யந்தன் முனி சாபத்தால் நினைவு திருந்தாமல், பின்னர் மீன் வாயில் சிக்கிய தன முத்திரை மோதிரம் கண்டு சகுந்தலையை நினைவு கூர்வதும், தன சொந்த மகனான பரதனைக் கண்டு கொண்டதும் , என்று இந்த சிறு அணிகலன் ஆற்றும் பணி மிக முக்கியம்.

இன்று நாம் ஒரு மோதிரத்தைத் தேடிச் செல்கிறோம், இந்த பயணத்தின் மூலம் இரு வரலாற்றுச் சின்னங்களை ஒன்று சேர்த்து ஆய்வு செய்ய எத்தனிக்கிறோம். அணிகலன்கள் மற்றும் செப்புத் திருமேனிகள். ஒன்றுக் கொன்று, தங்கள் காலத்தை துல்லியமாக நிர்ணயிக்கும் பணிக்கு, எவ்வாறு உதவி செய்கின்றன ? இதன் மூலம் நம் வாசகர்களுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை. உலகெங்கும் இருக்கு அருங்காட்சியகங்களில் இருக்கும் சிலைகளை பல கோணங்களில் படம் எடுப்பதன் முக்கியத்துவம் விளங்கும் என்று நம்புகிறோம்.

இந்தப் பதிவு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நடந்த விழா , மற்றும் விழாவை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தில் தொடங்குகிறது. திரு ராமன் அவர்கள் அருமையாக விழாவை படம் பிடித்து வந்தார். அதில் ஒன்று கண்ணைப் பறித்தது. சோழர் காலத்து அணிகலன்கள் – இதுவரை கண்டிராத ஒன்று, அதை பற்றி நூல்களிலும் வந்த மாதிரி தெரியவில்லை.

ஆர்வலர்கள், நாங்கள் இருவரும் அதை இன்னும் விரிவாக ஆராய்ந்தோம்.

திரு ராமன் அருங்காட்சியகத்தில் இருந்த பல செப்புத் திருமேனிகளை படம் பிடித்ததும், நான் சென்ற டிசம்பர் மாதம் சென்னை அருங்காட்சியக சிலைகளை படம் பிடித்ததும் மிகவும் உதவின. அதிலும் தஞ்சையில் சிலைகளின் மிக அரு்கில் சென்று அவரால் படம் எடுக்க முடிந்தது. ( சென்னையில் கண்ணாடி போட்டு சிரமமப் படுத்துவார்கள் )

தனியாக பார்க்கும் மோதிரத்தை சிலையில் தேடும் பணியில் ஈடுபட்டோம்.

அதற்கு முதலில் மோதிரத்தின் நல்ல படங்கள் – இதோ

என்ன ஒரு அருமையான மோதிரம்.

முதலில் , CE 10th நூற்றாண்டு, உமையம்மையின் சிலை, கொடிக்காடு , வேதாரண்யம் தாலுகா, நாகை

அருமையான சிலை – எனினும் நேராக மோதிரங்களுக்கு போவோம்.

கையில் இருக்கும் மோதிரங்கள், பொதுவாக எளிமையாகவே உள்ளன. தடிமனான கம்பி போலவும் , அதில் சிறு வேலைப்பாடும் தெரிகிறது.

அடுத்து ஒரு நூறு ஆண்டுகள் அடுத்து , CE 11th நூற்றாண்டு உமையம்மை தம் தோழியுடன் , திருவேங்கிமலை , திருச்சி

இன்னும் அருகில் சென்று, இடைப்பட்ட காலத்தில் அணிகளின் வடிப்பதிலும் அணிவதிலும் மாறுதல் தெரிகிறதா என்று பார்ப்போம்.

நல்ல மாற்றம் தெரிகிறது. நடுவில் கல் பதித்து, அதை சுற்றி சிறு மலர் இதழ்கள் விரிவது போல இருப்பது நன்றாக தெரிகிறது.

அதே நூற்றாண்டை சேர்ந்த உமையொரு பாகர், 11th C CE, திருவெண்காடு , மயிலாடுதுறை .

உமை பாகத்தில் உள்ள கையில் இருக்கும் மோதிரத்தை அருகில் சென்று பார்ப்போம்.

சென்ற சிலையை விட சற்று எளிமையாக உள்ளன மோதிரங்கள். இந்த சிலை 11th நூற்றாண்டின் முதல் பாதியில் வடித்ததாக கொள்ளலாமோ?. மோதிரம் சற்று தட்டையாகவும், நடு பகுதி சற்று விரிவு பெற்று தெரிகிறது.

இன்னும், 12th மற்றும் 13th நூற்றாண்டு சிலைகளை தேடி, அவற்றில் இருக்கும் மோதிரங்களை ஆய்வு செய்யவேண்டும், எனினும் அடுத்து நாம் பார்க்கும் சிலையில், நம் தேடல் வெற்றி பெற்றது. உமை, தேவர்கண்டனல்லூர் , திருவாரூர்.

இந்த சிலையின் காலம் தெளிவாக இல்லை. சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் பொது 14th C CE என்றும், தஞ்சையில் 15th நூற்றாண்டு என்றும் பலகைகள் உள்ளன. ( அருங்காட்சி அட்டவணை நூலில் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் )

எனினும், உமையின் வலது கையில் நம் தேடலின் நிறைவு …

அருகில் சென்று பாருங்கள், நாம் தேடிய மோதிரம் – இதோ இந்த செப்புத்திருமேனியில்

இப்போது கடினமான கேள்வி – இந்த மோதிரத்தின் காலம் என்ன ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நமது பாரம்பரியத்தின் இன்னொரு முகம். பழைய நாணயவியல் ஒரு முதல் பார்வை – மின் அரட்டை

நண்பர்களே, இன்று நாம் ஒரு புதிய கோணத்தில் இருந்து இந்த அற்புதக் கலையை பார்க்கப்போகிறோம். சிலை , சிற்பம் என்று இது வரை நம் பாரம்பரியத்தை பார்த்துவந்த எனக்கு திரு ராமன் சங்கரன் அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது. அவர் நாணயவியல் நிபுணர், நம்முடன் அவரது அனுபவங்களை பகிர்கிறார். இதை அப்படியே ஒரு கேள்வி பதில் பேட்டியாக அமைத்துள்ளேன். முதல் பாகம் – அறிமுகம் இதோ.

Me : சார், காலை வணக்கம். எங்களை இந்த பயணத்தில் எடுத்துச் செல்ல எண்ணும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு எங்கள் முதல் நன்றி. முதல் கேள்வி, எல்லோரும் கேட்பது போலவே தொடங்குகிறேன். உங்களுக்கு் இந்த நாணயங்கள் சேகரிக்கும் ஆசை எப்போது துவங்கியது.

RAMAN: நான் பள்ளியில் படிக்கும் போதே பிரிட்டிஷ் இந்தியா காசுகளை சேர்க்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது கூட நினைவில் உள்ளது ஒரு ரூபாய் கொடுத்து ஒரு அரையணா காசை வாங்கினேன் 1835 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயம் அது. நான் வாங்கியது 1980’s

Me : அப்படியா. அந்த நாணயம் தங்களுக்கு எப்படி கிடைத்தது.

Me: சார், இருக்கீங்களா ?

RAMAN: சாரி, கரண்ட் கட்

Me : பரவாயில்லை சார்.

RAMAN: நான் சென்னையில் வசிக்கிறேன் 🙁

Me: ஹஹஅஹஹா . நீங்கள் உங்கள் முதல் 1835 காசை பற்றி சொன்னீர்கள். அந்த காசு எப்படி உங்களுக்கு கிடைத்தது.

RAMAN: நான் அதை ஒரு பழைய சாமான்களை விற்கும் கடையில் இருந்து வாங்கினேன். நண்பர்கள் அனைவரிடத்திலும் பெருமையாக அதை காட்டினேன். 145 ஆண்டு பழமையான நாணயம் என்று.

Me : அருமை. அடுத்த கேள்வி அதில் இருந்தே தொடர்கிறது. புதிதாக என்னை போல ஆரம்பிப்பவர்கள் பழைய நாணயங்கள் தேடி யாரிடத்தில் செல்வது. நீங்கள் யாரை தொடர்புக் கொள்வீர்கள். அப்படியே நீங்கள் தெனிந்திய நாணயங்களை மட்டுமே சேகரிக்கிறீர்களா இல்லை பொதுவாக ஏனைய பழம் பொருட்களில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா.

RAMAN: புதிதாக வரு்வோருக்கு ஒரு நல்ல டீலர் அறிமுகம் இருப்பது நல்லது. மற்றும் இப்போது எல்லா ஜில்லாக்களிலும் நாணய ஆர்வலர் கிளப்ஸ் ( சங்கங்கள் ?) உள்ளன.

Me : புரிகிறது, இந்த துறையில் பல நகல்களும் புழக்கத்தில் இருப்பதால் நல்ல தேர்ச்சி பெற்ற நண்பர்களின் அறிமுகம் மற்றும் அறிவுரை தேவை . சென்னையில் இது போன்ற கிளப் ( சங்கங்கள்) உண்டா

RAMAN: திருநெல்வேலி , நாகர்கோவில் , தஞ்சாவூர் . திருச்சி , சேலம் சென்னை …. என்று எங்கும் நிறைய கிளப்ஸ் உள்ளன. மேலும் சென்னையில் மட்டுமே 25 டீலேர்ஸ், 5 கடைகள், 4 கிளப்ஸ் உள்ளன.

Me : சார், நீங்கள் நாணயங்கள் மட்டுமே சேகரித்து வருகிறீர்களா. இல்லை மற்ற பொருள்களிலும் ஆர்வம் உண்டா?

RAMAN: கடந்த 25 ஆண்டுகளாக நான் நாணயங்கள் சேகரித்து வருகிறேன். சங்க காலத்து நாணயங்கள் பல வைத்துள்ளேன். சோழ, பாண்டிய, சேர, பல்லவ, விஜயநகர, நாயக்கர் காலத்து நாணயங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. 2004 முதல் மோதிரங்கள் மற்றும் இலச்சினை (சீல்ஸ்) மீதும் கவனம் செலுத்தி வருகிறேன்.

Me: முதல் முதலில் இந்தியாவில் கிடைத்துள்ள நாணயங்கள் யாருடையது, எந்த காலம்

RAMAN: முதல் முதல் கிடைத்துள்ள காசு வெள்ளியில் வந்த முத்திரை காசு.ஒரு பக்கம் ஐந்து சிறு முத்திரையும், மற்ற பக்கம் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளுடன் இருக்கும். தமிழ் நாட்டில் தொன்மையான காசு ஒரு பாண்டிய முத்திரை காசு.

Me: சரி, தமிழ் நாட்டில் என்ன உலோங்கங்களில் நாணயங்கள் கிடைக்கின்றன.

RAMAN: தங்கம், வெள்ளி, தாமிரம் , செப்பு என்று பல காசுகள் கிடைக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஈயம் மற்றும் பலஉலோகங்களுடன் பித்தளை கலந்த கலவையிலும் கிடைகின்றன.

Me: அப்படியா. இதில் பரவலாக கிடைப்பது எது. தங்கமே மிகவும் அரியதா ?

RAMAN: சங்க காலத்து தங்க நாணயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அப்போது ரோமானியர்களின் நாணயங்களே நாம் உபயோகித்தோம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து. தமிழ் நாட்டில் முதல் முதலில் கிடைக்கும் தங்க நாணயம் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் காசு தான்.

Me: ஆஹா, எங்கள் ராஜராஜர் புகழ் பாடாமல் பதிவுகள் நகராது போல உள்ளது. அந்த நாணயத்தை நாம் முதலில் பார்த்துவிடுவோமா.

RAMAN: பார்த்தீர்களா அதில் ஸ்ரீ ராஜராஜ என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

Me: அருமை. பொதுவாக பழைய நாணயங்கள் சதுர வடிவில் இருப்பதை பார்க்கின்றோம். எப்போது இவை வட்ட வடிவம் பெறுகின்றன.

RAMAN: பொதுவாக சங்க காலத்து முத்திரை நாணயங்கள் சதுர வடிவத்தில் உள்ளன. பிறகு ரோமானியரின் தாக்கத்தால் வட்ட வடிவமாக மாறி இருக்கலாம். இப்போது இந்த 2ஆம் கி மு சேரர் நாணயத்தை பாருங்கள். .

முன் பக்கம் கம்பீர யானை, எதிரில் ஒரு மரம், அதன் பின்னால் நான்கு மீன்கள், யானையின் அடியில் பக்க வாட்டில் ஒரு பனை மரம் உள்ளது. பின்புறம் சேரர் வில் அம்பு இலட்சினை உள்ளது. அதனுடன் யானையை அடக்கும் அங்குசமும் உள்ளது.

Me: அருமை அருமை. சார், அடுத்து சங்க காலத்து பாண்டியர் நாணயம் பார்க்க கிடைக்குமா.

RAMAN: இருக்கே, இதோ இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு.


முன்பக்கம் கம்பீர ஆண் யானை. பின்பக்கம் கரையை நோக்கி நீந்தும் மீன் சின்னம்.

Me. மீன் தெரிகிறது, அது கரையை நோக்கி நீந்துவது ?

RAMAN: நீரில் அலை போல ஒரு குறி இருக்கிறது. வரைந்து காட்டுகிறேன்.

Me: இப்போது புரிகிறது. ரோமானிய நாணயம் பற்றி கூறினீர்கள். இதே காலத்து ரோமானிய நாணயம் எப்படி இருந்தது. நமது நாணயங்களை விட தொழில் நுட்பம் , கலை அம்சம் என்று ரோமானியர் நாணயங்கள் மிகை யா. ரோமானியர் தாக்கம் நமது நாணயங்களில் உள்ளதா?

RAMAN: இருக்கிறது. சோழர் சேரர் வட்ட வடிவ நாணயங்கள் முதலில் பார்ப்போம். .

Me: சங்க காலத்து சோழர் நாணயமா. பார்க்க ஆவலாக உள்ளது.

RAMAN: இதோ


Me: அற்புதமாக உள்ளது. இதன் காலம் என்ன, அதில் என்ன சித்தரிக்கப்பட்டுள்ளது.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு காலம். முன் பக்கம் யானை, அதற்க்கு முன்னர் வெளியே இருக்கும் மரம், யானைக்கு மேல் வெண் கொற்றக் குடை உள்ளது. பின்புறம் சோழர்களி்ன் வேங்கை ஒரு கால் தூக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வாலும அழகு.

Me: அருமை, வட்டமான சேரர் காசு?

RAMAN: இதோ.

RAMAN: முன்பக்கம் அமர்ந்திருக்கும் சிங்கம் , பக்கத்தில் ஒரு கம்பத்தின் மேல் சக்கரம். பின் பக்கம் சேரர் ’வில் அம்பு’.

Me: சிங்கம் சிங்கம் போல இல்லையே. !!

RAMAN: ஹஹஅஹா , இன்னும் ஒரு காரணம் (- தங்க நாணயம் சங்க காலத்தில் இல்லாமைக்கு ) அந்த காலத்தில் தங்கச் சுரங்கமோ , உலையோ தென் இந்தியாவில் இல்லை. ரோமானிய நாணயங்கள் தமிழ் நாட்டில் எங்கும் கிடைக்கின்றன. சென்னை அருங்காட்சியகம் 5000 க்கும் மேற்பட்ட ரோமானிய தங்கம் மற்றும் செப்புக் காசுகள் உள்ளன. சுமார் கி மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாட்டில் ரோமானியர் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: அப்பாடி , அந்த காசு ஒன்றை பார்க்கலாமா ?

Me: தமிழ் காசுகளில் ரோமானியர் தாக்கம் என்ன. ரோமானியர் காசை போல அரசர் தலை பொறிக்கப் பட்டுள்ள காசுகள் உண்டா ?

RAMAN: உண்டு. சங்க கால அரசர்கள் பெயர் பொறித்த காசுகள் சில கிடைத்துள்ளன. மாக்கோதை , பெருவழுதி ,குட்டுவன் கோதை, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை – என்று பிராமி
எழுத்தில் பொறிக்கப்பட்ட காசுகள் பல கிடைத்துள்ளன.

Me: ஆஹா. நிறைய நாம் கற்க வேண்டும். முதலில் மூவேந்தர் தவிர – அதாவது சேர, சோழ, பாண்டியர் – வில் அம்பு, வேங்கை மற்றும் கயல் சின்னங்கள் தவிர சிற்றரசர் நாணயங்கள் உள்ளனவா?. அவற்றின் குறிப்பிடத்தக்க சின்னங்கள் / இலச்சினைகள் என்ன?.

RAMAN: தமிழ் நாட்டில் வணிக ரீதியாக கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன. அதே போல சங்க காலத்து மலையமான் சிற்றரசனுடைய நாணயங்களும் கிடைத்துள்ளன. திருக்கோயிலூர் அருகில் மட்டுமே மலையமான் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: திருக்கோயிலூர் அருகில் தான் எங்கள் பூர்வீகம். மலையமான் நாணயம் பார்க்க கிடைக்குமா ?

RAMAN: சங்க காலத்து நாணயங்கள் பொதுவாக நதிக் கரைகளில் கிடைக்கின்றன. மதுரை, கரூர், திருக்கோயிலூர், மற்றும் திருநெல்வேலி அருகில் – ஆனால் மிகவும் அதிகம் கிடைப்பது கரூர் அமராவதி ஆற்றில் தான். இதோ மலையமான் காசு.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு. திருக்கோயிலூர் அருகில் கிடைத்தது. முன் பக்கம் வலது புறம் நோக்கி நிற்கும் குதிரை, அதற்கு எதிரில் வேலியில்லாத மரம், குதிரைக்கு மேலே ஆயுதம், அதற்கு மேல் கொட்டுரிவில் எருது தலை சின்னம் ( டாரின் – Taurine ). பின்புறம் ஆற்றின் கரை கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. நேராக ஒரு வேலும், படுக்க வாட்டில் ஒரு வேலும் உள்ளன.

Me: ஆஹா , மிக அருமை. நாங்கள் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உள்ளது, இந்த சின்னங்கள் ( டாரின் போன்று). இந்தத் துறையில் எங்களை போன்று ஆரம்ப நிலை ஆர்வலர்கள் படிக்க நல்ல நூல்கள் உள்ளனவா ? நாங்கள் எங்கே துவங்க வேண்டும்.

RAMAN: முதலில் எந்த நாணயங்கள் சேகரிக்க போகிறீர்கள் என்று முடிவெடுங்கள்.

Me: எங்கள் உடல் மண்ணுக்கு , உயிர் சோழர் தான் ! உடையார் ராஜ ராஜா சோழர் காலத்து காசை கையால் தொட்டால் புளகாங்கிதம் அடைந்து விடுவோம். அவரது காசுகள் இன்றும் கிடைகின்றனவா ?

RAMAN: சோழர் காசு சரியான தேர்வு. தமிழகம் எங்கும் பரவலாக கிடைக்கும். ஒரு செப்புக் காசை நானே அன்பளிப்பாக தருகிறேன்.

Me: ஆஹா

RAMAN: சும்மா சொல்ல வில்லை, கண்டிப்பாக தருவேன்.

Me: அப்படி என்றால் விரைவில் வந்து வாங்கிக் கொள்கிறேன். பொதுவாக இந்த அளவிற்கு தேர்ச்சி வருவதற்கு அறிஞர்கள் துணை தேவை. அப்படி உங்கள் துணை நின்று உதவிய குரு என்று யாராவது உண்டா ?.

RAMAN: எனது முதல் குரு தஞ்சை திரு சீதாராமன் அவர்கள். பிரம்மி எழுத்து பொறித்த நாணயங்கள் மற்றும் மோதிரங்கள், முத்திரைகளுக்கு திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

Me: ஆஹா. ஜாம்பவான்கள்.

RAMAN: எனது அறிவுரை, முதலில் பிடித்த நாணயம் தேர்ந்தெடுத்து , அதை பற்றி படியுங்கள். திரு சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள புத்தங்களை வாங்கி படியுங்கள்.

Me: பதிப்பகம் எது, எங்கே கிடைக்கும்


RAMAN: அவரது முகவரி இதோ. .

தனலட்சுமி பதிப்பகம்
12, ராஜராஜன் நகர் ,
மானோஜிப்பட்டி ( தெற்கு )
தஞ்சை – 613004

புத்தகத்தின் விலை ரூபாய் 150

Me: நன்றி சார். மிகவும் எளிமையான நடையில் பல தகவல் தெரிந்துக் கொண்டோம். அடுத்து பகுதியில் மூவேந்தரில் ஒருவரையோ அல்லது பல்லவர் நாணயங்களை எடுத்துக்கொண்டு அரட்டை (சாட்) அடிப்போம் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment