நமது பாரம்பரியத்தின் இன்னொரு முகம். பழைய நாணயவியல் ஒரு முதல் பார்வை – மின் அரட்டை

நண்பர்களே, இன்று நாம் ஒரு புதிய கோணத்தில் இருந்து இந்த அற்புதக் கலையை பார்க்கப்போகிறோம். சிலை , சிற்பம் என்று இது வரை நம் பாரம்பரியத்தை பார்த்துவந்த எனக்கு திரு ராமன் சங்கரன் அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது. அவர் நாணயவியல் நிபுணர், நம்முடன் அவரது அனுபவங்களை பகிர்கிறார். இதை அப்படியே ஒரு கேள்வி பதில் பேட்டியாக அமைத்துள்ளேன். முதல் பாகம் – அறிமுகம் இதோ.

Me : சார், காலை வணக்கம். எங்களை இந்த பயணத்தில் எடுத்துச் செல்ல எண்ணும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு எங்கள் முதல் நன்றி. முதல் கேள்வி, எல்லோரும் கேட்பது போலவே தொடங்குகிறேன். உங்களுக்கு் இந்த நாணயங்கள் சேகரிக்கும் ஆசை எப்போது துவங்கியது.

RAMAN: நான் பள்ளியில் படிக்கும் போதே பிரிட்டிஷ் இந்தியா காசுகளை சேர்க்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது கூட நினைவில் உள்ளது ஒரு ரூபாய் கொடுத்து ஒரு அரையணா காசை வாங்கினேன் 1835 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயம் அது. நான் வாங்கியது 1980’s

Me : அப்படியா. அந்த நாணயம் தங்களுக்கு எப்படி கிடைத்தது.

Me: சார், இருக்கீங்களா ?

RAMAN: சாரி, கரண்ட் கட்

Me : பரவாயில்லை சார்.

RAMAN: நான் சென்னையில் வசிக்கிறேன் 🙁

Me: ஹஹஅஹஹா . நீங்கள் உங்கள் முதல் 1835 காசை பற்றி சொன்னீர்கள். அந்த காசு எப்படி உங்களுக்கு கிடைத்தது.

RAMAN: நான் அதை ஒரு பழைய சாமான்களை விற்கும் கடையில் இருந்து வாங்கினேன். நண்பர்கள் அனைவரிடத்திலும் பெருமையாக அதை காட்டினேன். 145 ஆண்டு பழமையான நாணயம் என்று.

Me : அருமை. அடுத்த கேள்வி அதில் இருந்தே தொடர்கிறது. புதிதாக என்னை போல ஆரம்பிப்பவர்கள் பழைய நாணயங்கள் தேடி யாரிடத்தில் செல்வது. நீங்கள் யாரை தொடர்புக் கொள்வீர்கள். அப்படியே நீங்கள் தெனிந்திய நாணயங்களை மட்டுமே சேகரிக்கிறீர்களா இல்லை பொதுவாக ஏனைய பழம் பொருட்களில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா.

RAMAN: புதிதாக வரு்வோருக்கு ஒரு நல்ல டீலர் அறிமுகம் இருப்பது நல்லது. மற்றும் இப்போது எல்லா ஜில்லாக்களிலும் நாணய ஆர்வலர் கிளப்ஸ் ( சங்கங்கள் ?) உள்ளன.

Me : புரிகிறது, இந்த துறையில் பல நகல்களும் புழக்கத்தில் இருப்பதால் நல்ல தேர்ச்சி பெற்ற நண்பர்களின் அறிமுகம் மற்றும் அறிவுரை தேவை . சென்னையில் இது போன்ற கிளப் ( சங்கங்கள்) உண்டா

RAMAN: திருநெல்வேலி , நாகர்கோவில் , தஞ்சாவூர் . திருச்சி , சேலம் சென்னை …. என்று எங்கும் நிறைய கிளப்ஸ் உள்ளன. மேலும் சென்னையில் மட்டுமே 25 டீலேர்ஸ், 5 கடைகள், 4 கிளப்ஸ் உள்ளன.

Me : சார், நீங்கள் நாணயங்கள் மட்டுமே சேகரித்து வருகிறீர்களா. இல்லை மற்ற பொருள்களிலும் ஆர்வம் உண்டா?

RAMAN: கடந்த 25 ஆண்டுகளாக நான் நாணயங்கள் சேகரித்து வருகிறேன். சங்க காலத்து நாணயங்கள் பல வைத்துள்ளேன். சோழ, பாண்டிய, சேர, பல்லவ, விஜயநகர, நாயக்கர் காலத்து நாணயங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. 2004 முதல் மோதிரங்கள் மற்றும் இலச்சினை (சீல்ஸ்) மீதும் கவனம் செலுத்தி வருகிறேன்.

Me: முதல் முதலில் இந்தியாவில் கிடைத்துள்ள நாணயங்கள் யாருடையது, எந்த காலம்

RAMAN: முதல் முதல் கிடைத்துள்ள காசு வெள்ளியில் வந்த முத்திரை காசு.ஒரு பக்கம் ஐந்து சிறு முத்திரையும், மற்ற பக்கம் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளுடன் இருக்கும். தமிழ் நாட்டில் தொன்மையான காசு ஒரு பாண்டிய முத்திரை காசு.

Me: சரி, தமிழ் நாட்டில் என்ன உலோங்கங்களில் நாணயங்கள் கிடைக்கின்றன.

RAMAN: தங்கம், வெள்ளி, தாமிரம் , செப்பு என்று பல காசுகள் கிடைக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஈயம் மற்றும் பலஉலோகங்களுடன் பித்தளை கலந்த கலவையிலும் கிடைகின்றன.

Me: அப்படியா. இதில் பரவலாக கிடைப்பது எது. தங்கமே மிகவும் அரியதா ?

RAMAN: சங்க காலத்து தங்க நாணயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அப்போது ரோமானியர்களின் நாணயங்களே நாம் உபயோகித்தோம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து. தமிழ் நாட்டில் முதல் முதலில் கிடைக்கும் தங்க நாணயம் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் காசு தான்.

Me: ஆஹா, எங்கள் ராஜராஜர் புகழ் பாடாமல் பதிவுகள் நகராது போல உள்ளது. அந்த நாணயத்தை நாம் முதலில் பார்த்துவிடுவோமா.

RAMAN: பார்த்தீர்களா அதில் ஸ்ரீ ராஜராஜ என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

Me: அருமை. பொதுவாக பழைய நாணயங்கள் சதுர வடிவில் இருப்பதை பார்க்கின்றோம். எப்போது இவை வட்ட வடிவம் பெறுகின்றன.

RAMAN: பொதுவாக சங்க காலத்து முத்திரை நாணயங்கள் சதுர வடிவத்தில் உள்ளன. பிறகு ரோமானியரின் தாக்கத்தால் வட்ட வடிவமாக மாறி இருக்கலாம். இப்போது இந்த 2ஆம் கி மு சேரர் நாணயத்தை பாருங்கள். .

முன் பக்கம் கம்பீர யானை, எதிரில் ஒரு மரம், அதன் பின்னால் நான்கு மீன்கள், யானையின் அடியில் பக்க வாட்டில் ஒரு பனை மரம் உள்ளது. பின்புறம் சேரர் வில் அம்பு இலட்சினை உள்ளது. அதனுடன் யானையை அடக்கும் அங்குசமும் உள்ளது.

Me: அருமை அருமை. சார், அடுத்து சங்க காலத்து பாண்டியர் நாணயம் பார்க்க கிடைக்குமா.

RAMAN: இருக்கே, இதோ இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு.


முன்பக்கம் கம்பீர ஆண் யானை. பின்பக்கம் கரையை நோக்கி நீந்தும் மீன் சின்னம்.

Me. மீன் தெரிகிறது, அது கரையை நோக்கி நீந்துவது ?

RAMAN: நீரில் அலை போல ஒரு குறி இருக்கிறது. வரைந்து காட்டுகிறேன்.

Me: இப்போது புரிகிறது. ரோமானிய நாணயம் பற்றி கூறினீர்கள். இதே காலத்து ரோமானிய நாணயம் எப்படி இருந்தது. நமது நாணயங்களை விட தொழில் நுட்பம் , கலை அம்சம் என்று ரோமானியர் நாணயங்கள் மிகை யா. ரோமானியர் தாக்கம் நமது நாணயங்களில் உள்ளதா?

RAMAN: இருக்கிறது. சோழர் சேரர் வட்ட வடிவ நாணயங்கள் முதலில் பார்ப்போம். .

Me: சங்க காலத்து சோழர் நாணயமா. பார்க்க ஆவலாக உள்ளது.

RAMAN: இதோ


Me: அற்புதமாக உள்ளது. இதன் காலம் என்ன, அதில் என்ன சித்தரிக்கப்பட்டுள்ளது.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு காலம். முன் பக்கம் யானை, அதற்க்கு முன்னர் வெளியே இருக்கும் மரம், யானைக்கு மேல் வெண் கொற்றக் குடை உள்ளது. பின்புறம் சோழர்களி்ன் வேங்கை ஒரு கால் தூக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வாலும அழகு.

Me: அருமை, வட்டமான சேரர் காசு?

RAMAN: இதோ.

RAMAN: முன்பக்கம் அமர்ந்திருக்கும் சிங்கம் , பக்கத்தில் ஒரு கம்பத்தின் மேல் சக்கரம். பின் பக்கம் சேரர் ’வில் அம்பு’.

Me: சிங்கம் சிங்கம் போல இல்லையே. !!

RAMAN: ஹஹஅஹா , இன்னும் ஒரு காரணம் (- தங்க நாணயம் சங்க காலத்தில் இல்லாமைக்கு ) அந்த காலத்தில் தங்கச் சுரங்கமோ , உலையோ தென் இந்தியாவில் இல்லை. ரோமானிய நாணயங்கள் தமிழ் நாட்டில் எங்கும் கிடைக்கின்றன. சென்னை அருங்காட்சியகம் 5000 க்கும் மேற்பட்ட ரோமானிய தங்கம் மற்றும் செப்புக் காசுகள் உள்ளன. சுமார் கி மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாட்டில் ரோமானியர் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: அப்பாடி , அந்த காசு ஒன்றை பார்க்கலாமா ?

Me: தமிழ் காசுகளில் ரோமானியர் தாக்கம் என்ன. ரோமானியர் காசை போல அரசர் தலை பொறிக்கப் பட்டுள்ள காசுகள் உண்டா ?

RAMAN: உண்டு. சங்க கால அரசர்கள் பெயர் பொறித்த காசுகள் சில கிடைத்துள்ளன. மாக்கோதை , பெருவழுதி ,குட்டுவன் கோதை, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை – என்று பிராமி
எழுத்தில் பொறிக்கப்பட்ட காசுகள் பல கிடைத்துள்ளன.

Me: ஆஹா. நிறைய நாம் கற்க வேண்டும். முதலில் மூவேந்தர் தவிர – அதாவது சேர, சோழ, பாண்டியர் – வில் அம்பு, வேங்கை மற்றும் கயல் சின்னங்கள் தவிர சிற்றரசர் நாணயங்கள் உள்ளனவா?. அவற்றின் குறிப்பிடத்தக்க சின்னங்கள் / இலச்சினைகள் என்ன?.

RAMAN: தமிழ் நாட்டில் வணிக ரீதியாக கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன. அதே போல சங்க காலத்து மலையமான் சிற்றரசனுடைய நாணயங்களும் கிடைத்துள்ளன. திருக்கோயிலூர் அருகில் மட்டுமே மலையமான் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: திருக்கோயிலூர் அருகில் தான் எங்கள் பூர்வீகம். மலையமான் நாணயம் பார்க்க கிடைக்குமா ?

RAMAN: சங்க காலத்து நாணயங்கள் பொதுவாக நதிக் கரைகளில் கிடைக்கின்றன. மதுரை, கரூர், திருக்கோயிலூர், மற்றும் திருநெல்வேலி அருகில் – ஆனால் மிகவும் அதிகம் கிடைப்பது கரூர் அமராவதி ஆற்றில் தான். இதோ மலையமான் காசு.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு. திருக்கோயிலூர் அருகில் கிடைத்தது. முன் பக்கம் வலது புறம் நோக்கி நிற்கும் குதிரை, அதற்கு எதிரில் வேலியில்லாத மரம், குதிரைக்கு மேலே ஆயுதம், அதற்கு மேல் கொட்டுரிவில் எருது தலை சின்னம் ( டாரின் – Taurine ). பின்புறம் ஆற்றின் கரை கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. நேராக ஒரு வேலும், படுக்க வாட்டில் ஒரு வேலும் உள்ளன.

Me: ஆஹா , மிக அருமை. நாங்கள் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உள்ளது, இந்த சின்னங்கள் ( டாரின் போன்று). இந்தத் துறையில் எங்களை போன்று ஆரம்ப நிலை ஆர்வலர்கள் படிக்க நல்ல நூல்கள் உள்ளனவா ? நாங்கள் எங்கே துவங்க வேண்டும்.

RAMAN: முதலில் எந்த நாணயங்கள் சேகரிக்க போகிறீர்கள் என்று முடிவெடுங்கள்.

Me: எங்கள் உடல் மண்ணுக்கு , உயிர் சோழர் தான் ! உடையார் ராஜ ராஜா சோழர் காலத்து காசை கையால் தொட்டால் புளகாங்கிதம் அடைந்து விடுவோம். அவரது காசுகள் இன்றும் கிடைகின்றனவா ?

RAMAN: சோழர் காசு சரியான தேர்வு. தமிழகம் எங்கும் பரவலாக கிடைக்கும். ஒரு செப்புக் காசை நானே அன்பளிப்பாக தருகிறேன்.

Me: ஆஹா

RAMAN: சும்மா சொல்ல வில்லை, கண்டிப்பாக தருவேன்.

Me: அப்படி என்றால் விரைவில் வந்து வாங்கிக் கொள்கிறேன். பொதுவாக இந்த அளவிற்கு தேர்ச்சி வருவதற்கு அறிஞர்கள் துணை தேவை. அப்படி உங்கள் துணை நின்று உதவிய குரு என்று யாராவது உண்டா ?.

RAMAN: எனது முதல் குரு தஞ்சை திரு சீதாராமன் அவர்கள். பிரம்மி எழுத்து பொறித்த நாணயங்கள் மற்றும் மோதிரங்கள், முத்திரைகளுக்கு திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

Me: ஆஹா. ஜாம்பவான்கள்.

RAMAN: எனது அறிவுரை, முதலில் பிடித்த நாணயம் தேர்ந்தெடுத்து , அதை பற்றி படியுங்கள். திரு சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள புத்தங்களை வாங்கி படியுங்கள்.

Me: பதிப்பகம் எது, எங்கே கிடைக்கும்


RAMAN: அவரது முகவரி இதோ. .

தனலட்சுமி பதிப்பகம்
12, ராஜராஜன் நகர் ,
மானோஜிப்பட்டி ( தெற்கு )
தஞ்சை – 613004

புத்தகத்தின் விலை ரூபாய் 150

Me: நன்றி சார். மிகவும் எளிமையான நடையில் பல தகவல் தெரிந்துக் கொண்டோம். அடுத்து பகுதியில் மூவேந்தரில் ஒருவரையோ அல்லது பல்லவர் நாணயங்களை எடுத்துக்கொண்டு அரட்டை (சாட்) அடிப்போம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *