எனது வழிகாட்டியாக விளங்கியவர்கள் பலர் – அவர்களுள் மிகவும் முக்கியமானவர் திரு திவாகர் – அவர் வம்சதாரா, திருமலை திருடன் , விசித்ர சித்தன் என்று மூன்று அழகிய சரித்திர புதினங்களின் வெற்றி ஆசிரியர்.Vamsadhara.blogspot.com
183818361840
என்னை தினம்தோறும் ஊக்குவிக்கும் ஒரு நல்ல மனிதர். அவருடைய பார்வையில் சிற்பம் …..
விஜய் அவர்களின் இந்த வலைப் பகுதி சிற்ப வரலாற்றின் அழிந்து போன அந்த காலகட்டத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு கல்லையும் சிற்றுளியையும் மட்டுமே வைத்துக் கொண்டு எத்தனை வகை சிற்பங்கள் வடித்துள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அந்தக் கலைஞர்கள் மீதும், அவர்கள் கொண்ட அந்தக் கலைக்காதல் மீதும் ஆச்சரியம் நமக்கு உண்டாவது இயற்கைதான்.
தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கற்சிலைக் கலை 15 ஆம் நூற்றாண்டு வரை செழித்து எத்தனையோ ஆயிரக்கணக்கான வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. ‘உளியின் இனிய ஓசை’ ஊரெங்கும் கேட்டுக் கொண்டே இருந்திருக்கவேண்டும். இப்போதும் இந்தக் கலை நசியவில்லை என்பது ஆங்காங்கே கட்டப்பட்டுவரும் புதிய கோயில்கோபுரங்களில் தெரிகின்றது என்றாலும் தற்சமயத்து சிலைகளுக்கும் ஐந்நூறு வருடங்களுக்கு முன்வரை செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கும் ஒரு முக்கிய வேற்றுமை உண்டு. புராணக் கதைகளில் வரும் நீதிக்கதைகளை முன்வைத்து அந்தக் கதைக்கேற்றவாறு சிற்பங்கள் வடிப்பார்கள். ஒரு நல்ல கதையை வைத்து தற்காலங்களில் எடுக்கப்படும் திரைப்படம் போல அந்தச் சிற்பங்கள் உடனடியாக நம் மனதில் பதிந்துவிடும். இந்த சிற்பங்கள் நல்ல வகைக் கல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செதுக்கப்படுவதால் காலாகாலத்திற்கும் நிலைத்து நின்றது.. நிற்கிறது.. இன்னமும் கூட (மனிதன் தலையிட்டு பாழ்படுத்தாமல் இருந்தால்) நிற்கும். ஆனால் தற்போது செதுக்கப்பட்டு வரும் சிற்பங்கள் ஒரு தனிப்பட்ட வகையிலேயே செதுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்க நாட்டு அட்லாண்டா வில் புதிதாகக் கட்டப்பட்ட சுவாமிநாராயண் கோயில் தூண் ஒன்றின் சிற்பம் பார்வைக்கு வந்தது. மிக மிக அழகாக இருக்கிறது. ஆனால் உயிரோட்டம்?… இந்த உயிரோட்டம் அந்தக் காலத்துச் சிற்பங்களில், அந்தச் சிற்பம் சொன்ன கதைகளில் இருந்ததே..
1842
அந்தக் காலத்து சிற்பிகள் ஒரு கைவேலைக்காரர் மட்டும் அல்ல. நம் பழைமையான கலாசாரத்தையும், பண்பாட்டையும் நன்கு புரிந்துகொண்ட சான்றோர்கள் என்றே சொல்லவேண்டும். தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள். புராணங்கள், பாகவதம், இராமாயணம் மற்றும் மகாபாரதம் நூல்களில் நல்ல பரிச்சயம் இருந்திருக்கிறது. இந்த நூல்களின் மீது மிக நுண்ணியமான தெளிவு பெற்றிருந்தார்கள் இந்தச் சிற்பிகள். ‘கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ என்ற சொல்லுக்கேற்ப இந்த சிற்ப சாத்திரத்தை அறிஞர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கற்றார்களோ என்ற அளவில் ஏராளமான சிற்பச் செல்வங்களை எதிர்காலத் தலைமுறையினர்க்காக அள்ளித் தந்தனர்.
இப்படிப்பட்ட அருமையான சிற்பச் செல்வங்களை தன் வசம் கொண்ட இந்த அழகான வலைப் பூவில் விஜய் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக ஒரு புராணக் கதையை நான் எழுத விஜய் சேகரித்த சிற்பங்களோடு… .
பிட்சாண்டவன்.
18311823
சிவம் என்றால் அன்பு, சிவம் என்றால் பழைமை, செம்பொருள் என்று எத்தனையோ பொருள்களை அகராதியில் காணலாம். சிவம் என்றால் இயற்கை கூட.. பூவுலகையே வெள்ளக்காடாக்கி அழிப்பது போல சீறிப் பாய்ந்த கங்கையை தன் விரிசடையில் தாங்கி அவளை மெல்லிய நீரோடையாக தவழவிட்டு இந்த உலகைக் காத்தவன் ஆயிற்றே.. இந்தப் பூமியை விட சற்றே சிறிய கிரகமான சந்திரனுக்கும் தன் தலையில் இடம் அளித்தவனுக்கு இந்த மான், மழு, பாம்பு, கையில் நெருப்பு, புலித்தோல் என்று எல்லாமே இயற்கை சம்பந்தப்பட்டவைகளை அணிகலன்களாகக் கொண்டவன், ஏன் அரக்கனான முயலகனையும் பாதத்துக்கடியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்?.. ஒருவேளை அரக்ககுணம் கூட இயற்கையோ என்று எண்ணவும் தோன்றுகிறதல்லவா.. கங்கையும் நிலவும் அவன் செஞ்சடையில் குடிகொண்ட கதை அறிவோம்.. ஏனைய இயற்கை அணிகலன்கள் எப்படி அவனிடத்தே சேர்ந்தன?..
பொதுவாக புராணக்கதைகள் என்றாலே சற்று பயம்தான்.. பயத்துக்குக் காரணம் ஏராளமான கற்பனைக் கதைகள் கண்டபடி மலிந்திருக்கும். பல கதைகள் இப்படித்தான் என்றாலும் சில கதைகள் நம்முடைய சிந்தனைக்கு மருந்தாகவும் விருந்தாகவும் அதே சமயம் நம் முன்னோர்கள் காலம் எப்படிபட்டதாக இருந்தது என்பதையும் நமக்கு விளங்கவைக்கும். அதுவும் இக் கதைகளைப் பற்றி சமயக் குரவர் நால்வர் தம் தேவாரம் – திருவாசகம் மூலம் பாடி இருந்தால் கேட்கவே வேண்டாம். அந்தப் புனிதமான தெய்வப் பெரியவர்கள் வாக்கு சத்திய வாக்காயிற்றே. இப்படித்தான் தாருகாவன முனிவர்களின் கர்வ பங்க கதையும். இவர்களால்தானே சிவனுக்கு இத்தனை இயற்கை அணிகலன்கள் கிடைத்தன!..
181618201833
நம் பாரதம் புராதனச் செல்வத்தில் சிறப்பு வாய்ந்தது. சனாதன தர்மம் என்ற பொதுப்பெயர் கொண்டு ஆதிகாலம் தொட்டு சமய வேற்றுமையில்லாமல் தர்மம் என்ற பொது விதியின் கீழ் நம் மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்கள் முனிவர் பெருமக்கள். கானகங்களில் வாழ்ந்து தங்கள் வாழ்க்கை முறையை மிக எளிமையாக்கிக் கொண்டு அதே சமயம் கானகத்துக்கு வெளியே நாகரீகமாகவும், தர்மமுறை சிதறாமலும் உலகம் உய்ய பெரு வழிவகைகளை மனித குலத்துக்கு அள்ளித் தந்தவர்கள் அந்த முனிவர்கள். நம் முன்னோர்கள் என்றால் இவர்கள்தான். வேத நெறி வாழ்க்கையும் ஆண்டவன் மீது பக்தியும் இவர்கள் மூலம்தான் நாம் கற்றுக் கொண்டோம். சுயநலமற்ற அவர்கள் எளிமையும் ஆண்டவன் மீது கொண்ட தூய பக்தியும் ஆண்டவனையே எப்போதும் அவர்கள் அருகிலேயே இருக்கவைத்தது.
பொதுவாகவே முனிவர்களைப் பற்றி நாம் பெருமையாக சொல்லிக்கொண்டே போகலாம்தான். ஆனால் எங்கும் எதிலும் சில நெருடல்கள் உண்டுதானே.. தாருகாவனத்து முனிவர்களின் நெருடல் கூட இந்த வகைதான்.
தாருகாவனத்து முனிவர்கள் ஏனைய முனிவர்களை விட சற்று வேறுவிதமாக சிந்தித்தார்களோ என்னவோ.. எதையும் எப்போதும் அள்ளிக் கொடுக்க வேதமும் ஆகம முறைகளும் ஏராளமாக இருக்க, அதற்குத் தகுந்தாற்போல கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர தேவர்களும் காத்திருந்து இவர்கள் வேண்டியதை யாக குண்டத்திலிருந்தே வரவழைத்துத் தர, இனிமேல் அங்கு ஆண்டவனுக்கு என்ன வேலை என நினைத்தார்களோ என்னவோ.. சிவனும் கேசவனும் தெய்வ ஆராதனைக்கு உரியவர்களா.. அவர்களால் தமக்கு உதவாத பட்சத்தில் அவர்கள் கூட மனித ஆன்மாக்களில் ஒன்றுதான்.. இவர்களை நாளும் நினைப்பதால் அப்படி என்ன பெரிய பலன் கிடைக்கப் போகிறது.. என்ன பெரிய பக்தி வேண்டிக்கிடக்கிறது இவர்களிடத்தில்..
(இப்படிப்பட்ட ஒரு கருத்தினை மீமாம்சை என்று சொல்வார்கள். வேதம் போதித்த மந்திரங்களும், அதற்கான பலன்களும் இருக்கையில் கடவுள் என்று ஒருவன் தேவை இல்லை என்று சொல்கிறது மீமாம்சை நூல். மீமாம்சை என்பது வேதத்தின் கர்ம காண்டத்தை ஆய்வு செய்து சைமினி எனும் முனிவர் முதன் முதலில் நூலாக எழுதினார். இந்தக் கருத்தின்படி செல்லுமாறு தன் சீடர்களைப் பழக்கினார். சரபமுனிவர் இந்த மீமாம்சை நூலுக்கு உரை விளக்கம் செய்தார். பின்னர் மேலும் அதில் சிற்சில மாறுதல்கள் பாட்டாச்சாரியர் மற்றும் பிராபகர முனிவர்களால் அந்த மீமாம்சையில் செய்யப்பட்டது. எது எப்படியிருந்தாலும் கடவுள் என்ற ஒருவனின் தேவை கிடையாது என்பதில் மட்டும் முடிவாக இருந்தனர்.)
ஆண்கள் தவறு செய்தால் பெண் அதைத் தடுத்து அந்தத் தவறில் இருந்து திருத்த வேண்டும் என்பது கூட தர்மத்தின் வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் தாருகாவனத்து முனிபத்தினிகள் தங்கள் கணவன்மார் கருத்தை ஆதரித்தார்கள்., அவர்களுக்கு தங்கள் முனிவர்களின் ஆற்றல், அந்த ஆற்றல் மூலம் கிடைத்த பலன்கள் அதுவும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் சுகம் கிடைக்கும் வழிவகைகள் அனைத்தும் பிடித்துப் போய்விட்டன.
கற்பில் சிறந்தவர்கள் தாங்கள்தான்.. அந்தக் கற்பின் பலனாகவே தங்கள் கணவர்களுக்கு அத்தனை ஞானங்களும் கிடைக்கின்றன என்ற சிந்தனை அவர்கள் மனதில் வேகமாகப் பதிந்தது. அந்த கற்புக்கு கணவர்களான முனிவர்களே பயப்படும்போது, அந்த சிவனும் கேசவனும், அப்படி என யாராவது இருந்தால் கூட, பயப்படத்தான் வேண்டும்.. இந்த ஒரு நினைப்பு அவர்கள் கர்வத்தை மேலும் அதிகம் ஆக்கியது.
இறைவன் இந்தத் தாருகாவனத்து முனிவர்களுக்கும் முனி பத்தினிகளுக்கும் பாடம் புகட்ட முடிவு செய்தான். சிவன் அழகான ஆண் உருவெடுத்து, உடையில்லாமல், கையில் ஓடேந்தி ‘பிச்சை போடு பெண்ணே’ என்று அந்த முனிபத்தினிகளிடம் கேட்டுக் கொண்டே ‘பிட்சாண்டவனாய்’ அந்த வனத்தே நடை போட்டுச் செல்ல, சொக்கத் தங்கமாக மின்னிய அவன் உடல் வனப்பிலும், இளமையின் அழகிலும் மயங்கிய அந்த பத்தினிப்பெண்கள், தாங்கள் கற்புடைய பெண்டிர் என்ற நினைப்பையே இழந்து அவன் பின்னேயே சென்றார்கள்.
18281825
அதே போல மயக்கும் மோகினி உருவம் கொண்ட விஷ்ணு ஒய்யாரமாக முனிவர்கள் முன்னே வந்து அன்ன நடை போட்டு அசைந்தாடி செல்ல, அந்த அழகு மோகினியின் பின்னேயே முனிவர் கூட்டமும் தங்கள் மனங்களை சிதறவிட்டுக் கொண்டே சென்றது.. இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தபோது உண்மை வெட்டவெளிச்சமாகியது. முனிபத்தினிகள் உண்மை நிலையறிந்து வெட்கத்தால் தலை குனிய ஆண்மக்களான முனிவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தில் ஆத்திரம்தான் வந்தது. உடனே ஒரு யக்ஞம் ஆரம்பித்து எரியும் தீயிலிருந்து கொடும் புலியை வரவழைத்து சிவன் மீது ஏவினர் (இந்த வேள்விக்குப் பெயர் அவிசார வேள்வி என்று சொல்வார்கள் – இது மிக மிகக் கொடிய முறையான வேள்வி, இதையே ராமாயண போரின்போது தன் கடைசிப் பிரயத்தனமாக இந்திரசித்து செய்யமுயன்ற போது, இந்த யாகத்தை எப்படியும் அழித்தே தீரவேண்டுமென்றும் இல்லையேல் அகில உலகத்துக்கும் ஆபத்து என்று எல்லாம் அறிந்த வீடணன் வேண்ட, அந்த யாகத்தையே அம்பு கொண்டு இராமன் அழித்தான் – யுத்தகாண்டம்)
இப்படிப்பட்ட கொடிய அவிசார யாகத்தீயிலிருந்து வெளிப்பட்டு முதலில் வந்த புலியைக் கொன்று அதன் தோலை இறைவன் தன் பொன்னார் மேனிக்கு ஆடையாகப் போட்டுக் கொண்டான். முனிவர்கள் விஷக்கொம்பு கொண்ட மானையும் கூரான மழுவையும் வேள்வித்தீயிலிருந்து அனுப்பினார்கள். அவைகளை அவன் அநாயாசமாகப் பிடித்து தன் கையில் வைத்துக் கொண்டான். விஷப்பாம்புகளை ஏவினர்.. உடல் முழுதும் சுற்றிக் கொண்டு நாகாபரணன் ஆனான். எதையும் செய்யத் தயங்காத முனிவர்கள், ஆத்திரத்தில் தாம் என்ன செய்கிறோம் என்பதையே உணராத முனிவர்கள், தாங்கள் செய்த வேள்வித்தீயையே அவன் மீது ஏவினர். அதையும் அவன் திருவோட்டில் பிடித்துக் கொண்டான். முனிவர்கள் கதறினர். காலில் விழுந்தனர்.
இந்த மான், மழு, தீயேந்தியதைப் பற்றி தேவாரத்திலும் சரி, திருவாசகத்திலும் சரி, நிறைய இடங்களில் சின்னச் சின்ன வரிகளாக வரும். ஒரு சில வரிகளை மட்டும் எடுத்துக் காட்டுகளாக:
‘மானை இடத்ததோர் கையன்’ (அப்பர் தேவாரம்); ‘பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கசைத்து’ (சுந்தரர் தேவாரம்) தம்பிரான் ஆவானும் தழல் ஏந்தும் கையானும்’,; மழுவாள்வலனொன்றேந்தி (திருஞானசம்பந்தர்) முன்னோன் காண்க, முழுதோன் காண்க, கானப்புலியுரி அரையோன் காண்க (மாணிக்கவாசகர்).
முனிவர்கள் இந்த மானிடம் தழைக்க வந்த மகாத்மாக்கள் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட முனிவர்களே தவறு செய்கிறபோது இறைவன் அவர்களைத் தண்டிக்காமல் பாடம் மட்டுமே புகட்டுகிறான். இந்தக் கருணை முனிவர்களுக்காகவோ அவர்களின் ஆற்றலுக்காகவோ அல்ல. மனிதர்களுக்காகவே, அவர்களின் முன்னோர்களான முனிவர்களின் மீது அவன் கருணை கொண்டு திருத்துகிறான் என்று கொள்ளவேண்டும். பக்தி அதுவும் இறைவன் மீது உள்ள பக்திதான் ஆதாரமானது. கதிரவனின் ஒளி போல, தீயின் சுடர் போல, மலரின் மணம் போல. பக்தியைப் பற்றி சொல்வார்கள். ஒளியில்லாமல் கதிரவன் தேவைப்படமாட்டான். சுடரும் சூடும் இல்லாவிட்டால் தீயேது? மணமில்லாத மலர் யாருக்கும் பயன் தராது. பக்திதான் அனைத்துக்கும் ஆதாரம். அந்த பக்தி கொண்டு பிட்சாண்டவரைப் பாருங்கள்.. அவன் மகத்துவம் தெரியும்.
திவாகர்
Vamsadhara.blogspot.com!