முதலை வாயில் போனது மீண்டும் வெளி வருமா ?

இந்த தூணில் இருக்கும் அரிய சிற்பம் ( ஸ்ரீரங்கம் கோயில் தூண் ) நான் இதுவரை வேறு எங்கும் கண்டதில்லை – இதை விளக்க நாம் ராமயாணதினுள் செல்ல வேண்டும்.

இராவணனின் மகனான மாயை அனைத்தும் அறிந்த இந்த்ரஜித் ஏவிய பானத்தில் வீழ்ந்த இலக்குமணன் உயிர் பிழைக்க சஞ்சிவினி தேவை என்று மருத்துவர் கூற – ஹனுமான் சென்று பர்வதத்தை பெயர்த்து கொணர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவன் அங்கு செல்லும் காரியம் நிறைவேறாமல் இருக்க ராவணன் தனது மாமன் காலமேணி என்கிற அசுரனை அங்கு அனுப்புகிறான். அவன் அங்கு ஒரு ரிஷி வேடம் பூண்டு, ஹனுமான் வரும் போது அவனை ஆசி புரியும் பாணியில் அருகில் இருக்கும் குளத்தில் நீறாடி விட்டு வருமாறு கூற, அனுமனும் அவ்வாறே அங்கு செல்கிறான் – குளத்தில் கால் வைத்துமே ஒரு பெரிய முதலை அவனை விழுங்கியது – ஹனுமான் அதன் வயிற்றை கிழித்து வெளி வந்தான். அப்போது முதலை மடிந்து ஒரு தேவதை உரு பெற்றது – தக்ஷன் சாபத்தினால் தான் முதலை வடிவம் பெற்றதாகவும் – தன் இயற் பெயர் தண்யமாலி என்றும் – விமோசனம் தந்த ஹனுமனை வணங்கி ஆசிபெற்றால் – உள்ளே இருப்பது ரிஷி அல்ல அசுரன் என்ற உண்மையை அறிந்த ஹனுமான், தன் தலையாய பணி தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்து , அசுரனின் காலை பிடித்து தலைக்கு மேல் சுற்றி விசினான் – அசுரன் அங்கிருந்த இலங்கை ராவணனின் சபையில் வந்து விழுந்து மாண்டான்.

இந்த கதையை தான் இந்த தூண் சிற்பம் விளக்குகிறது – உற்று கவனியுங்கள் – படத்தின் வலது புறம் மேல் பாதி – முனிவர் வேடத்தில் அசுரன் விரல் நீட்டி குளத்தை காட்டும் காட்சி, இடது புறத்தில் ஹனுமான் முதலை வயிற்றை கிழித்து வெளி வரும் காட்சி, அதே காட்சியில் தேவதை ரூபம், வலது புறம் கீழே – பொலி சாமியாரை உதைக்கும் ஹனுமான்..என்ன அருமையான வேலைப்பாடு, முதலையின் உடம்பின் அமைப்பு, அதில் இருந்து வெளிவரும் அனுமனின் கம்பீர தோரணை – இவை நாம் முன்னர் ஸ்ரீரங்கம் அலசிய குதிரை சவாரி தூண்களில் பின்புறம் என்பதை மனதில் கொண்டு பாருங்கள் (குதிரையின் பின்னங்கால் தெரிகிறது )

இதே போல முதலை வாயில் இருந்த மீண்ட இன்னும் ஒரு கதை உண்டு – அதற்கும் சிற்பம் இருக்கிறது, அவற்றை வரும் மடல்களில் பார்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *