நண்பர் திரு தேவ் அவர்களுடன் சென்ற மடலைப் பற்றி தற்செயலாக நடந்த உரையாடலில் வந்த கேள்விகளை ஆராயும்போது கிடைத்த விடைகளை விரிவுபடுத்தி ஒரு பதிவாக இங்கு இடுகிறேன். சிற்பங்கள் வெகுவாக சிதைந்து இருப்பதால் அவற்றை கொட்டோவியங்களாகவும் உங்கள் பார்வைக்கு இடுகிறேன். ( வரைந்தவை அல்ல – ஒற்றி எடுத்தவை – திரேசிங்)
முதலில் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவின் குறிக்கோள் அர்த்தனாரி வடிவத்தின் இரு பாகங்களின் வேற்றுமைகளை எடுத்துக்காட்டுவதல்ல, அந்த வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதை விளக்க ஒரு முயற்சி. அதுவும் ஒரு சிற்பி இந்த வடிவத்தை செதுக்கும் போது எதிர்க்கொண்ட சவால்கள் என்னவாக இருந்திருக்கும், அதனை அவன் எப்படி சமாளித்தான் என்பதை காட்டவே இந்த பதிவு.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அங்க அமைப்புகளின் வித்தியாசங்கள் பல. அவற்றை இங்கு பட்டியலிடாமல், சிற்பி எவ்வாறு இவற்றை ஒரு உருவத்துள் கொண்டு வர முயற்சிக்கிறான் என்று பார்ப்போம். ஆண் பெண் இருவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும், ஒரே உருவமாகத் தெரிய வேண்டும், எனினும் இரு பாகங்களும் ஆண் எது பெண் எது என்றும் தெளிவாகத் தெரிய வேண்டும். அழகாகவும் இருக்க வேண்டும். இந்தக் கேள்விகளையும் அவன் கண்டுபிடித்த விடையையும் நான்கு சிற்பங்களின் மூலம் பார்ப்போம். ( சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை – அவற்றிற்கென தனி இடுகை வேண்டும், எனினும் தலைப்புக்கு என்ன தேவையோ அதை மட்டும் இன்று பார்ப்போம்)
முதல் சிற்பத்தை பார்ப்போம் – முற்கால பல்லவர் வடிவம் ( முதல் வடிவம் அல்ல, எனினும் நமது பதிவின் கால அட்டவணையில் மூத்தது). மல்லை தர்மராஜ ரதம் அர்த்தனாரி சிற்பம்.
எளிதில் சிற்பத்தை ரசிக்க ஒற்றி எடுத்த கோட்டோவியம்.
முற்கால பல்லவர் சிற்பம் என்பதற்கு சான்றுகள், மிகவும் குறைந்த அளவு ஆபரணங்கள் மற்றும் எளிமையான வடிவம். எனினும் பல்லவ சிற்பத்திற்கே உடைய உயிரோட்டம் இதில் இல்லை, அதே மல்லையில் உள்ள மற்ற சிற்பங்களில் உள்ள தன்மை இதில் ஏன் இல்லை. ஒருவேளை இந்த வடிவத்தை முதல் முதலில் சிற்பி வடித்ததால் இப்படியோ என்று தோன்றுகிறது. பல முறை சோதனை செய்து பார்த்து வடிக்க இது களிமண் பொம்மை இல்லையே. கருங்கல் அதுவும் நிலத்தில் இருந்த சிறு குன்றை குடைந்து வடித்த வடிவத்தின் வெளிச் சுவரில் வரும் புடைப்புச் சிற்பம். எனினும் பல்லவர் சிற்பம் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம், பலரிடத்தில் அவர்கள் சிற்பக்கலை சோழர்களின் கலையை விட மேலானது என்று நான் வாதாடியதும் உண்டு. எனினும் இந்த சிற்பம் என்னை கவரவில்லை – ரோட்டில் லாரி ஏறி கிடக்கும் தேரை போல ஒரு வெறுமை – கண்டிப்பாக இது அவனது முதல் முயற்சி என்றுதான் தோன்றுகிறது. இரண்டு பாகங்களுக்கும் வேற்றுமைகள் ஒன்றும் பெரிதாக இல்லை, வெளிப்படையாக ஒன்றே ஒன்றுதான் தெரிகின்றது – மார்பகங்கள். கால்கள் இரண்டும் வித்தியாசம் பெரிதாக எதுவும் இன்றி ஒரே போல் இருப்பது வருத்தமே.
சரி, சிற்பி இதற்கு என்ன செய்தான். அதே சிற்பி என்று சொல்லவில்லை, சிற்பக் கலை பயில்வோர் இந்தச் சிலைவடிவதை எவ்வாறு அழகூட்டுவது என்று ரூம் போட்டு யோசித்தால் ….என்ன நடந்திருக்கும்.
அடுத்த உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். வாசகர் கவனிக்க. சிற்பங்களை அட்டவணை போட்டு காலம் என்னவென்று நாங்கள் ஆராயவில்லை. பொதுவாக எப்படி இந்த உருவம் காலப்போக்கில் வளர்ச்சி பெறுகிறது என்று பார்ப்பதற்கே இந்த உதாரணங்கள்
மீண்டும் ஒற்றி எடுத்த ஓவியம்.
இங்கே சிற்பி, ஆண் பெண் வேற்றுமையை இன்னும் பிரதானமாக எடுத்துக்காட்ட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளான். பெண்ணின் இடுப்பை அழகாக வளைத்து திருபங்கத்திற்கு எடுத்துச்செல்ல எத்தனித்துள்ளான். ஆனால் ஒரு பக்கம் இழுத்தால் மறு பக்கம் விளைவு – அதை சரி செய்ய ஆணின் காலை சற்று மடித்து – சவாலே சமாளி !! கைகளில் சிறு வேற்றுமைகளை காணலாம். பெண்ணின் கையை நளினமாகவும், ஆணின் கையை கம்பீரமாகவும் ( இடுப்பில் வைத்து ), ஆடைகளிலும் சற்று வேறுபாட்டை காட்டுகிறான் – அம்மைக்கு புடவை, ஐயனுக்கு அரை டிரௌசர் !!
இன்னும் வளர்ச்சி – பிற்கால சோழர் சிற்பம் சென்று, பூர்த்தி பெற்ற அம்மை அப்பன் – உமை ஒரு பாகன் சிற்பத்தை பார்ப்போம். .
மீண்டும் ஓவியம்.

பெண் பாகம் முழுமையாக திருபங்கத்தில் வந்துவிட்டது, அதனை சரிகட்ட ஆணின் கால் முழுமையாக மடித்து விட்டான் சிற்பி. எனினும் ஆணின் மேல் பாகம், வெகுவாக ஒரு பக்கம் சாய்ந்துள்ளது – பார்ப்பதற்கு சிற்பம் அழகாக இருந்தாலும், ஒருபக்கம் இழுத்துக்கொண்டு இருப்பது போல இருக்குமே. என்ன செய்வது என்று யோசிக்கிறான் சிற்பி. எதன் மேலாவது சாய்வது போல காட்டினால் என்ன? கடினமான வினா! விடை என்ன ?? ஆஹா “விடை”யே விடை. ஒய்யாரமாக சாய்ந்து நிற்க அவரது கையை வாகனமான விடை மீது இறங்க விட்டு சிற்பத்தை முடித்துவிட்டான். அழகிய ஆபரணங்கள் மற்றும் அணிகளை வடித்தான். அற்புத அர்த்தனாரி வடிவம், விடை வாகன் வந்துவிட்டான். அர்த்தனாரி என்றால் இனி இந்த வடிவமே என்று எங்கும் திகழும் வண்ணம் பரவியது அவன் திறன்.
அப்படியா. இந்த விடை அங்கு வருவதற்கு இது ஒரு காரணமோ. சரி இதை சோதிக்க எளிபண்டா குடவரை செல்வோம்.

அற்புத அர்த்தனாரி வடிவம், கொள்ளை அழகு, ஆண் பெண் இருவரும் பிணைந்து நிற்கும் வடிவம். ஆஹா, அதோ இங்கேயும் நமது விடை தன் தலையை ஐயனுக்கு தந்துள்ளதே
அணிகலன், ஆபரணம் வேறுபட்டாலும் வடிவம் ஒன்றே!!
சரி, இதற்க்கு வேறு சான்று உண்டா. எப்படி சோதிப்பது. பொதுவாக அர்த்தனாரி உருவங்கள் சிவன் வலது புறம், உமை இடது புறம் என இருப்பது வழக்கம். எனினும் இதற்கும் ஒரு சிற்பம் விதி விலக்கு ( ஏன் – ஆராய வேண்டும்) – இங்கு இடம் மாறி இருக்கும் அம்மை அப்பன் பாதிகள். பாருங்கள்.
சரி, இடம் மாறி உள்ளார்கள், அதற்கும் நமது இடுகைக்கும் உள்ள தொடர்பு என்ன ? பின்னால் இருக்கும் உருவத்தை பாருங்கள் …
விடையும் இடம் மாறி, இடது புறம் நோக்கி இருப்பது – ஆண் பாதிக்கு முட்டுக்கொடுக்கவே என்பதை ஊர்ஜிதை செய்கிறது.
இது ஒரு கருத்தே. இதை இன்னும் ஆராய வேண்டும். இந்த வடிவம் கல்லில் செய்தது, பின்னர் உலோகத்திலும் வடித்தனர். கல்லில் வடித்த போது வளைத்து செதுக்கும் போது கல்லின் எடை போன்றவையை நினைவில் கொள்ள வேண்டும். அப்படி என்றால் உலோகத்தில் வார்க்கும் போது என்ன ஆகும். அதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
படங்களுக்கு நன்றி : அமெரிக்கன் இன்ஸ்டிடுட் ஒப் ஆசியான் ஸ்டடீஸ்.