வாசகர்களே இன்று மீண்டும் ஒரு பெரியபுராண சிற்பம் – தாராசுரத்தில் இருந்து. நாம் இந்த சிற்பத்தின் அருகில் உள்ள சிற்பத்தை முன்னரே பார்த்தோம் – இளையான்குடி மாறர் புராணம். இன்று அதை போல இன்னும் ஒரு அற்புத நாயன்மார் கதை.
மடிந்தாலும் நேருக்கு நேர் நின்று மார்பில் வேலை வாங்கி வீர மரணம் அடைவதை பெருமையாக கொண்ட தமிழ் குடியில், வந்திருப்பது துரோகி , தனது எதிரி, தன்னை ஏமாற்றி கொல்ல வந்த கொலையாளி என்று தெரிந்தும் , அவனை மன்னித்து அவனுக்கு எந்த துயரும் இழைக்காமல் விட்டு விட்ட ஒரு அரசனின் கதை. அப்படி அவன் ஏன் செய்தான். மேலே படியுங்கள்.
முதலில் சிற்பம். தொலைவில் இருந்து. இடது புறம் கீழே பாருங்கள்.

நாம் பார்ப்பது மெய்பொருள் நாயனார் கதை சொல்லும் சிற்பம். பெரிய புராண வரிகளை கொண்டே இந்த கதை விளக்குகிறேன்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=12050&padhi=72&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.
நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மை யாரை ஒரு கூற்றில் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான்.
இவ்வாறாக இவ்வடியவர் தம் கடமைகளைச் செய்து வரும் நாளில், அவரொடு பகைத்து நின்ற ஓர் அரசன், அவரைத் தான் போரில் வெல்லக் கருதும் ஆசை மிகுதியால், போர் செய்தலை மேற்கொண்டு, பொன்னால் செய்த நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளையும், போர் செய்தற்குரிய குதிரைகளையும், காலாட் படைகளையும், பலகாலும் இழந்து தோற்றுவிட, அதனால் மானம் இழந்து போனான்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.
இவ்வாறு பலகாலும் தோல்வியடைந்த அப் பகைவன், தன்வலியினால் வெல்ல இயலாதனவாகி, மெய்ப்பொருள் நாயனாருக்கு அடியவர்மீது இருக்கும் பத்திமையை உணர்ந்து, வெண் ணீறு அணிதலாகிய அடியவர்களின் பெருமையான திரு வேடத்தை வஞ்சனையாக மேற்கொண்டு, அவ்வஞ்சனையைப் பிறர் அறியாத வாறு, காலமறிந்து வெல்லும் கருத்துடையனாக வாயினாற் சொலற்கரிய தீமையைச் செய்யக் கருதித் திருக்கோவலூரை அடைவானாயினன்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.
தன் உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு, கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு சென்றான். அவன் முத்த நாதன் எனும் பெயரினன்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=9&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.
அரண்மனை வாயில்கள் தொறும் காவல் செய்து கொண்டிருப்பவர்கள் கைகுவித்து வணங்கி விலகிநின்று நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானின் அடியார் ஒருவர், தாமே வலிய எழுந்தருளினார் என்று கூறி, உள்ளே எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்ள, இவ்வாறாய வாயில்கள் பலவற்றையும் கடந்து சென்ற பின்பு இறுதியாக உள்ள தனிவாயிலில் காவல்புரிந்து நிற்கும் தத்தன் என்பான், `உட்செல்லுதற்குரிய அமையம் தெரிந்து எழுந்தருள வேண்டும்; இதுபொழுது அரசர் துயில் கொள்கின்றார்` என்று கூறினான்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.
திருமகளைப் போல அங்கு நிற்கும் தம் மனைவியாரைப் பார்த்து, அருளுரை கேட்கும் பெருவிருப்பால், அவரை விரைவாக அந்தப்புரத்திற்குப் போகுமாறு பணித்து, இயல் பாகவன்றி வலிய எடுத்துக்கொண்ட தவவேடமுடைய முத்தநாதனை ஓர் இருக்கையின்மீது இருக்கச் செய்து, தாம் வெறுநிலத்திலிருந்து வழி பட்டவாறு, இனி அருள் செய்ய வேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டார்.
இப்போது சுட்டிக்காட்டி உள்ள வரிகளை சற்று கவனமாக படியுங்கள். ஏனெனில் சிற்பி சிற்பம் செதுக்கும் பொது எப்படி இவற்றை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான் என்பதை நாம் ரசிக்க வேண்டுமே!
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=15&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.
அவன், தன் கையில் வைத்திருந்த வஞ்சனை யாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள் ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாய னார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.
சரி, இப்போது சிற்பத்தை மீண்டும் பார்ப்போம். அருகில் சென்று
கதை மிக சுவாரசீயமாக போகிறது. முதல் பாகம் சிற்பத்தில்
போலி சிவனடியார் இடது கையில் புத்தகப் பை,வலது கையில் கத்தி, அவர் ஆசனத்தின் மேலே அமர்திருப்பது, அரசன் தரையில் அமர்திருப்பது – எப்படி சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து கவனித்து சிற்பி இந்த சிறய சிற்பத்தில் கதையை அழகாக சொல்கிறான் பாருங்கள்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.
உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட அம்முத்த நாதன் உள்ளே சென்ற பொழுதே, தன் மனத்தை அவனுடன் போக நிறுத்திய தத்தன் என்பான், ஒரு நொடிப் பொழுதில் சென்று, வாட்படையால் அவனை எறியத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், `தத்தனே! அவர் நம்மவர்` என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.
என்ன அற்புதாமான தருணம். தனது அரசனை காக்க பாய்ந்து வரும் மெயகப்பாலன் தத்தன் – சிற்பத்தில் பாருங்கள், அவனது ஆடை பறக்க, வாழை உயர்த்தி அடுத்த கணம் போலி சாமியாரின் தலை துண்டாகும் என்பதை உணர்த்தும் வண்ணம் – ஆனால் அரசனின் கரம் தடுக்கிறது
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=17&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.
இக்கொடுஞ்செயலால் வருத்தப்பட்டு நிலத்தில் வீழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரால் `தத்தா நமர்` என்றுகூறித் தடுக்கப் பெற்ற அவரை, (வேந்தரை) அடியவனாகிய தத்தன் என்பவனும் தலையால் வணங்கி, அவர்தம் தலையைத் தம் கையால் தாங்கிய வண்ணம் `அடியேன் செய்யும் பணி யாது?` என்று வினவ, `எம் தலை வனாய சிவபெருமானின் அடியவராகிய இவர் (முத்தநாதன்) செல்லும் பொழுது இடையில் எவரும் மேற்சென்று விலக்காதவாறு இவரைக் கொண்டுபோய் விடுவாயாக என்று கட்டளையிட்டார்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=20&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.
தத்தன் தான் அழைத்துக் கொண்டு சென்ற வஞ்சனையான வேடத்தையுடைய முத்தநாதனை, சினந்து எதிர்த்த வர்களை விலக்கி, குற்றம் நேராதவாறு விட்ட நற்சொல்லின் வகைமை யைக் கேட்க விரும்பி, உடலை விட்டு நீங்குதற்குரிய உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருள் நாயனார் முன்பு, அவர்தம் குறிப்பில் நிற்கும் தத்தன் போய் நின்றான்.
ஆஹா, என்ன ஒரு வர்ணனை. அந்த மன்னனுக்குத் தான் என்ன பக்தி.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1205&padhi=72&startLimit=23&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.
அம்மெய்ப்பொருள் நாயனாருக்கு உமையம்மை யாரின் கணவராகிய சிவபெருமான், அவர்தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் வெளிப் பட்டருளி, அவரை மேலான விண்ணுலகின்கண் வாழும் தேவர் களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்து, அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.
சிற்பியும் இதையே கடை காட்சியாக நமக்கு படைக்கிறான்
என் நெஞ்சை நெகிழ வைத்த கதை, அதை விளக்கும் அற்புத சிற்பம். அவற்றை உங்களுடன் பகிர்வதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.