நண்பர்களே, இன்று நாம் மீண்டும் தாராசுரம் பயணிக்கிறோம். மீண்டும் ஒரு பெரியபுராணம் சிற்பம். இறை பக்தி , அதன் அற்புத தன்மைகளை விளக்கும் கதை. நமிநந்தி அடிகள் புராணம். முதலில் தொலைவில் இருந்து பாருங்கள்

பதினோறாம் திருமுறை
திருத்தொண்டர் திருவந்தாதி
வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத் தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால் ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான் நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே.
அழகிய ஏமப்பேறூர்த் தலைவராகிய நமிநந்தி அடிகளே, மறைவடிவாய மானை ஏந்திய கையினராகிய ஆருர்ப் பெருமானுக்கு, விளக்கு எரிக்க நெய் தாராது அமணர் மறுக்க, தெளிந்த நீராலேயே விளக்கு எரித்து, அமணர் துயருறச் செய்த பெரியவர் ஆவார்.
பேரூரில் பிறந்த நமிநந்தி அடிகளுக்கு திருவாரூர் தியாகராஜர் மீது மிகுந்த பற்று, பக்தி. ஒருமுறை ஆலயத்திற்கு சென்ற அவர், பல மணி நேரம் அங்கேயே கழித்தார். கதிரவன் மறையும் தருவாயில் விளக்குகளை ஏற்ற எண்ணெய் தேடி, அருகில் இருந்த வீட்டை பார்த்து, அங்கு இருந்தவர்களிடம் உதவி – விளக்கு ஏற்ற எண்ணெய் கேட்டார். வேற்று மதத்தை சான்ற அவர்கள் எண்ணெய் கொடுக்கு மறுத்தது மட்டும் அல்லாமல் , உங்கள் ஈசன் தான் கையிலேயே தீயை வைத்து ஆடுபவன் தானே , அவனுக்கு எதற்கு எண்ணெய், வெறும் தண்ணீரே போதுமே என்றனர்.
இதை கேட்டு மிகவும் மனம் உடைந்து மீண்டும் கோயில் மண்டபத்தில் வந்து அமர்ந்த அவருக்கு ஒரு அசரீரி குரல் கொடுத்து. தாமரை குளத்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கை ஏற்று என்று. …
அவரும் அவ்வாறே செய்ய – அதிசயம், விளக்குகள் அனைத்தும் மிக பிரகாசமாக எரிந்தன. விளக்கு எரிய எரிபொருள் தேவை இல்லை, அது எரிந்தது அவரது பக்தி மற்றும் இறை நம்பிக்கையினாலே …
சரி , சிற்பத்தை பார்ப்போம்.
இரு பாகங்களாக பிரித்து பார்க்கவேண்டும்.
முதல் பாகம், தடாகத்தில் இருந்து தன்னேர் எடுக்கும் காட்சி ( தடாகத்தில் பூக்கள், மீன்கள் மற்றும் ஒரு கொக்கு வேறு ) , அடுத்து ஆலயத்தின் விளக்குகளுக்கு மிகுந்த பக்தியுடன் நீரை ஊற்றி எரிய வைக்கும் காட்சி, மிகவும் அற்புதம்
அது சரி, விளக்கு எரிய வேறு ஒரு வஸ்துவை உபயோகித்த இன்னொரு நாயனார் கதையும் உண்டு. அடுத்த இடுகையில் அதையும் பார்ப்போம்.
படங்கள் நன்றி : பொன்னியின் செல்வன் குழும நண்பர்கள் : சதீஷ் மற்றும் சாத்மீகா