தேவிக்கு யமனின் பரிசு

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் மீண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான மல்லைக்கு பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத படைப்பு இந்தச் சிற்பம். நாம் முன்னரே பார்த்தது தான் , ஆனால் வேறு ஒரு கண்ணோட்டத்தில். ( இந்தக்கால கட்டுடல் அந்தக்காலத்தில் )

ஆம்!. மகிஷாசுரமர்தினி சிற்பம் தான். இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க மூன்று நான்கு பதிவுகள் தேவை. எனவே இதோ முதல் பதிவு. தேவியை பார்ப்போமா…

‘சித்திரம் பேசுதடி. சிந்தை மயங்குதடி’ என்பது போல பேசாமலேயே நம்மை மயக்கும் சிற்பம் இது. தனது கை இல்லை கல் வண்ணத்தால் நம்மை கிறங்க வைக்கிறான் சிற்பி. அவற்றை பார்க்கும் முன்னர் முதலில் கதையை பார்ப்போம்.

வழக்கம் போல ஒரு அசுரன். மகிஷன். வரம் கேட்டு கடுந்தவம் புரிந்து பிரம்மனை வரவழைத்து அழியா வரம் கேட்கிறான். பிறப்பு என்றால் இறப்பும் நியதி. அதனால் சாகாவரம் தர இயலாது என்று நான்முகன் மறுக்க, தனது வரத்தை சற்று மாற்றிக் கொள்கிறான் மகிஷன். தனது வலிமையின் மீது இருந்த ஆணவத்தால், தன்னை எந்த ஆணாலும் எதிர்க்க முடியாது என்று இருக்க, மிகவும் புத்திசாலித்தனம் என்று நினைத்து தான் மடித்தால் ஒரு பெண்ணின் கையாலேயே மடிய வேண்டும் என்று வரம் கேட்கிறான். நான்முகனும் அவ்வாறே கொடுத்து விட, தவத்தின் பலத்தாலும் தனது அசுர குணத்தாலும் உலகை வென்று அடுத்து தேவலோகத்தின் மேல் படை எடுக்கிறான் மகிஷன். அவனது செயலை முறியடிக்க அனைத்து தெய்வங்களும் ஒன்று கூடி ஒரு தேவியை உருவாக்கி அவளுக்கு தங்கள் சக்திகளை கொடுக்கிறார்கள். எவ்வாறு… ( நன்றி கீதா அம்மா ) தேவி மகாத்தியத்தில் இருந்து வரிகளை எடுத்து அதற்க்கு தமிழில் விளக்கங்களும் தந்தார்.

ஷூலம்ஷூலாத் விநிஷ்க்ருஷ்ய ததெள தஸ்யை பிநாகத்ருக்

பிநாகபாணியான ஈசன் தனது சூலத்திலிருந்து ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அவளுக்குக் கொடுத்தார்.

சக்ரஞ் ச தத்தவான் க்ருஷ்ண: ஸமுத்பாத்ய ஸ்வசக்ரத:
கரிய திருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி அளித்தார்.

சங்கஞ் ச வருண: சக்திம் ததெள தஸ்யை ஹுதாஸன:

வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுதத்தையும் கொடுத்தனர்.

மாருதோ தத்தவாம்ச்சாபம் பாணபூர்ணே ததேஷுதீ

வாயு பகவான் வில்லையும் அம்பையும் பாணங்கள் நிறைந்த அம்பறாத்தூணியையும் அளித்தார்.

வஜ்ர-மிந்த்ர: ஸமுத்பாத்ய குலிசா-தமராதிப:

இந்திரன் தனது குலிசத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வஜ்ராயுதத்தையும் யானையாகிய ஐராவதத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட மணியையும் கொடுத்தான்.

குலிசம் இங்கே இடி என்ற பொருளில் வரும் என எடுத்துக் கொள்ளலாம்

ததெள தஸ்யை ஸஹஸ்ராக்ஷோ கண்டா-மைராவதாத் கஜாத்

காலதண்டாத்-யமோ தண்டம் பாசஞ் சாம்புபதிர்ததெள

யமன் காலதண்டத்தில் இருந்து தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர்.

ப்ரஜாபதிச் சாக்ஷமாலாம் ததெள் ப்ரஹ்மா கமண்டலும்

பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.

ஸமஸ்த-ரோம-கூபேஷு நிஜரச்மீன் திவாகர:

அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படியான கிரணங்களைச் சூரியன் அளித்தான்.
காலச்ச தத்தவான் கட்கம் தஸ்யாச் சர்ம ச நிர்மலம்!

காலன் கத்தியையும் நிர்மலமான கேடயத்தையும் அளித்தான்.

சரி, சிற்பத்திற்கு வருவோம். போருக்கு செல்லும் தேவியின் அழகோ அழகு. எட்டு கைகளுடன், சிங்கத்தின் மீது அமர்ந்து, ஒரு கம்பீரத்துடன் பார்க்கும் அந்த முகம்

நாணை வில்லில் ஏற்றி நிற்கும் பாணி, வில்லை பிடித்திருக்கும் கரத்தை பாருங்கள். கட்டை விரல் வில்லின் மீது படர, மற்ற விரல்கள் பலத்துடன் பற்றி இருக்கும் காட்சி, வில்லை வளைத்து இழுத்து கயிற்றை பிடித்திருக்கும் கரமோ இன்னும் அற்புதம். அதற்க்கு ஏற்றார்போல உடலை சற்று விறைப்பாக செதுக்கி இருப்பது .. உயிரோட்டம்

அடுத்து நம் கண்ணுக்கு சட்டென படுவது – தண்டம். யமனின் கால தண்டம். இது தண்டமோ அல்லது (G)கதையோ என்ற கேள்வி வராமல் இருக்க, சற்று படத்தை உற்று பார்ப்போம்.


கைப்பிடி கதை போல இருந்தாலும், உருண்டையாகவே இருக்கிறது. மேலும் தண்டத்தின் மேல் பாகம் நன்கு உருண்டு உள்ளதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. தண்டம் சிங்கத்தின் பிடரி பக்கம் முடிவதாலும், அதை அடுத்து சிங்கத்தின் பிடரி ரோமங்களின் வேலைப்பாடு இருப்பதால், சிதைந்த கூரிய கத்தி அல்ல என்று நாம் தெளிவாகவே சொல்லலாம்.

மேலும் மற்ற கரங்களில் உள்ள ஆயுதங்கள் என்ன என்னவென்பதை படங்களை கொண்டு பட்டியலுடன் ஒப்பிட்டு கூறுங்கள் பார்க்கலாம்.

ஆமாம், ஈசனிடம் பெற்ற சூலம் எங்கே?. ஒருவேளை வில்லையும் நாணையும் பிடிக்க இரு கரங்கள் தேவைப்பட்டதால் சிற்பி சூலத்தை விட்டு விட்டாரோ?

சிற்பத்தின் அழகை ரசிக்க இன்னும் ஒரு படம். படைப்பு சிற்பம், அதிலும் இப்படிப்பட்ட சிற்பத்தை வடித்த சிற்பி, தேவியை சிங்கத்தின் மீது சவாரி செய்வது போல காட்ட வேண்டும். இங்கே பாருங்கள், வலது கால் எப்படி முழுமையாக வெளியில் நீட்டி செதுக்கி உள்ளான் என்று.

இப்போது நீங்கள் மனதில் இந்த சிற்பத்தை ஒரு தனி படைப்பாக பார்க்காமல், ஒரு குடைவரையின் ஒரு பக்க சுவர் ( மறு பக்கம் இருப்பது நாம் முன்னர் பார்த்த சேஷ சயன பெருமாள் ),

ஒரு மலையினுள் குடைந்த அதிசயம் இது. புரிகிறதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *