நண்பர் சாஸ்வத் போன்ற கட்டிளம் காளைகள் நமது வரலாற்றுசின்னங்களின் மேல் காட்டும் அக்கறை மனதிற்கு பெரிதும் ஆறுதல் அளிக்கிறது. இன்று நம்மை அவர் தன்னுடன் எசாலம் கூட்டிச் செல்கிறார் – அப்படி அங்கே என்ன ஸ்பெஷல் ? மேலே படியுங்கள்
மார்கழி மாதத்தின் ஒரு காலைப்பொழுதில் சோழர் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஓரிடத்தைக் காண ஒரு சிறிய குழுவாக பல சரித்திரங்களைக் கண்ட முக்கிய சாலை வழியே நாங்கள் சென்றோம்.
அன்று காலை நாங்கள் சந்திக்கும்போது திரு. அரவிந்த் அவர்கள் நாங்கள் காணவிருந்த நான்கு கோவில்களைப் பற்றி விவரித்தார். சென்னையிலிருந்து ஒரே நாள் பயணத்தில், ஒன்றுக்கொன்று வெறும் 5 கி.மீ. தொலைவிற்குள் அந்த நான்கு கோவில்களும் அமைந்திருக்கின்றன. நாங்கள் செல்லவிருந்த இடங்களின் பட்டியலில் “எசாலம்” என்கிற பெயரைக் கண்டதும் எனக்குள் பெரும் பரபரப்பு. அது ஒரு முழுமையான கற்றளி (விமானத்தையும் சேர்த்து – இது சற்று அரிதாகும்), மேலும் மிகுந்த அழகுடைய வீணாதார தக்ஷிணாமூர்த்தியும் அங்குள்ளது என்பதைத் தவிர வேறென்ன எதிர்நோக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. கோவிலைப் பற்றி சொல்வதற்கு முன்பு எசாலத்தைக் காண நான் ஏன் இத்தனை பரபரப்புடன் இருந்தேன் என்று சொல்லிவிடுகிறேன்.
ஒருஆட்சியாளர் நிறுவிய கோவிலைப் பற்றி அக்கோவில் கூறும் விவரங்கள் மிகவும் குறைவேயெனக் கூறலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் அதனை கட்டிய முதலாம் ராஜேந்திரசோழரைப் பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை. தன் தந்தையைப் போல் அல்லாது “கங்கை வரை கைப்பற்றிய சோழன்” என்பதே ஒரு புதிராக உள்ளது. ஏனெனில், இக்கோவிலில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் முதலாவதே அவரது இரண்டாவது மகன் வீரராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தியதுதான். அவர் யார்? அவரது குறிக்கோள் என்ன? அவரது தூண்டுதல் யார்? – இவையனைத்தும் மிகவும் கடினமான கேள்விகளே!
இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய உதவும் இடங்களில் ஒன்று தான் ஈசாலம். பலஅற்புதமான அழகிய வெண்கலச் சிலைகளுடன் ஒரு தானசாஸனச்செப்பேடு கண்டெடுக்கப்பட்டது இங்குதான்.
இந்தச் செப்பேட்டினை மொழிபெயர்த்த டாக்டர். நாகசுவாமி அவர்கள், “ஆகஸ்டு 11, 1987ல் தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தின் அருகே உள்ள ஈசாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள ராமநாதேஸ்வர திருக்கோவிலின் புனரமைப்புப் பணிகளை நடத்தும்போது, அக்கோவிலின் உள்ளே பல வெண்கலச் சிலைகள், கோவில் பாத்திரங்கள் மற்றும் செப்பேடு ஒன்றையும் கண்டெடுத்தனர்” என்று கூறுகிறார். இந்தச் செப்பேட்டில் உள்ள விவரங்கள் முக்கியமானவை, சுவாரசியமானவை. அதன் முழுமையான விவரங்களை மேலேயுள்ள சுட்டியில் காண்க. மேலே செல்வதற்கு முன் சில முக்கிய செய்திகளை இங்கேஅறிந்து கொள்வோம். இந்த சாஸனம் ராமநாதேஸ்வரர் எனும் பெயர் கொண்ட சிவபெருமானுக்கு காணிக்கையாக புதிய தேவதானம் உருவாக்கப்பட்டதின் விவரங்களைக் கூறுகிறது. இந்தக் குறிப்பின் மூலம் நாம் இவ்விடத்தைப்பற்றி அறியும் முக்கியத் தகவல் என்னவென்றால் இது ஒரு சாதாரண கோவில் அன்று. இக்கோவில் ராஜேந்திர சோழரால் கட்டப்பட்டு அவரது குருவும், தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் முதன்மை குருக்களும் (இவர் கங்கைகொண்டசோழபுரத்தின் முதன்மை குருக்களாகவும் இருந்திருக்கக்கூடும்) ஆகிய சர்வசிவ பண்டிதருக்கு அளிக்கப்பட்டது. சோழர்களில் மிகுந்த பலம் பொருந்திய மன்னனால் கட்டப்பட்டு தனது ஆசானுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட இக்கோயில் அரசாங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக நாட்டிலுள்ள சிறந்த கைவினைஞர்கள் இங்கு வேலை செய்ய அழைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது இக்கோவிலைக் கண்டால் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
கோவிலின் முகப்பிலிருந்து பார்க்கும்போது நமக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஒரு சிறிய கோபுரம், இக்கால வடிவமைப்பில் கண்ணைப் பறிக்கும் நிறங்களில் நம்மை வரவேற்கிறது.

உள்ளே சென்றபின் தான் அழகிய சோழர் கோவிலைக் காண்கிறோம்.
நம் கண்களில் முதலில் தென்படுவது பெரிய உருண்டையான விமானமும் ( அபுதாபிக்கு வந்துவிட்டோமோ ?), அனைத்துப் பக்கங்களிலும் அழகிய வேலைப்பாடமைந்த பலிபீடமும்தான்.
சட்டங்களில்அழகிய வேலைப்பாடுகளும், ஆடும் மங்கையரும் கொண்ட கருங்கல் ஜாலி கோவிலின் முகப்பில் அமைந்துள்ளது.
மேலும் உள்ளே செல்லும் வழி இடதுபுறத்திலுள்ளது.

கோவிலின் சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

கோவிலைச் சுற்றி கோஷ்ட தேவதைகள் அமைந்துள்ளனர் – முறையே விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை
அடுத்த பகுதியில் தொடரும் …
எசாலம் செப்பேடு படங்களுக்கு நன்றி – திரு ராமன் அவர்கள்.
தமிழாக்க உதவி – திருமதி பர்வதவர்தினி