தமிழக கோயில்களில் உள்ள சிலைகளை முறைப்படி படம் எடுத்து வைப்பதன் முக்கியத்துவத்தை நிரூபிக்க இதனை விட ஒரு பெரிய உதாரணம் தேவை இல்லை.
1916 ஆண்டு வெளிவந்த நூல் என்றவுடன் ஏனோ தானோ என்று தான் இருக்கும் என்று எண்ணி வேக வேகமாகப் பக்கங்களை புரட்டினேன் – செப்புத் திருமேனிகள் படம் கண்ணில் பட்டது. எங்கேயோ பார்த்த நினைவு.
South-indian images of gods and goddesses (1916)
இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
பக்கம் 109 (129 in the pdf) உள்ள படம் தான் எனது ஆர்வத்தை தூண்டியது.
சோமஸ்கந்தர் சிலை – உலோகம் – சிவன்கூடல் என்ற குறிப்பு மட்டுமே இருக்கிறது.
பொதுவாக சோமஸ்கந்தர் வடிவம் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பது போலவே இருக்கும் – இந்த சிலையில் வெவ்வேறாக வார்த்து இருப்பது கவனிக்கத்தக்க அரிய விஷயம். இப்படி உலோகத்தில் செய்வது கடினம் – இரண்டு பீடங்களை ஒரே அளவில் வார்க்க வேண்டும் – அதில் உள்ள கோடுகள் உட்பட அனைத்தும் ஒரே சீராக இருக்கவேண்டும்.
இதுவே நமக்கு தரும் முக்கிய துப்பு/குறிப்பு. தற்போது சிங்கை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிலை மட்டுமே இது போல இருக்கிறது. இந்த சிலையை அருங்காட்சியகம் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்ற விவரங்கள் இல்லை.
இரு சிலைகளையும் ஒப்பிட்டு பார்ப்போமா?
இரண்டு சிலைகளும் ஒன்றே என்பது தெளிவாக தெரிகிறது. அக்கம் பக்கம் கேட்டு பார்த்தால் இந்தக் கோயிலில் இப்போது ஒரு சிலை கூட இல்லை. இந்தக் கோயில் பற்றி வேறு எந்த நூலிலும் தகவல்கள் இல்லை. இந்த நூலிலும் வேறு எந்த சிலை படமும் இல்லை.
இவற்றைக் கொண்டு அதிகாரிகள் மேலே துப்பு துலக்கினால் பல உண்மைகள் வெளி வரும்!! இந்த திருட்டு உறுதி செய்யப்பட்டால் இந்த சிலை திருட்டு கும்பல் 2000 ஆண்டுக்கு முன்னரே இந்த செயல்களை செய்தார்கள் என்பதும், இன்னும் பல கோயில் சிலைகளை திருடி விற்ற செயல்கள் அம்பலம் ஆகும்.