நமது பாரம்பரிய சின்னங்கள் சூறையாடப்படுவதை எதிர்த்து தொடரும் எங்கள் முயற்சியின் விளைவால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவை கண்டிப்பாக வெளிச்சத்திற்கு வரவேண்டும் – அப்படி கொண்டு வந்தால் தான் இந்த திருட்டுக்கு மட்டும் அல்ல இதைப் போல இனியும் திருட்டுகள் தொடராமல் ஒரு முற்றுப் புள்ளி வைக்க இயலும். இணையம், தொழில் நுட்பம் என்று பல துறைகளில் வல்லுனர்கள் நம்மிடையே இருந்தும் நம் குலதனங்கள் நமது கண்முன்னரே திருடப்படுவது மட்டும் அல்லாமல் பகிரங்கமாக விற்கவும்படுகின்றன.
ஒரு பக்கம் குருட்டு நம்பிக்கைகளை காட்டி எங்களை போன்ற ஆர்வலர்களை இந்த அரிய பொக்கிஷங்களை படம் எடுக்க விடாமல் செய்யும் கூட்டம் நமது ஆலயங்களில் உள்ளன. அவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு பாடமாக அமையும். படம் எடுத்தால் பவர் போய்விடும் என்று எங்களை துரத்தும் இவர்களுக்கு படம் எடுக்காவிட்டால் சாமியே போய்விடும் என்பது புரிய வேண்டும்.
இன்னொரு பக்கம் நமது அரசு, காவல் துறை. திருமேனிகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்காமல், காலை பாட்டு பாடி எழுப்பி, நீராட்டி, அலங்காரம் செய்து , உணவு படைத்து, மூன்று வேளை பூஜித்து, இரவு தாலாட்டு பாடித் தூங்க வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பு என்ற பெயரில் பாசறையில் தரையில் அடுக்கி வைத்துள்ளனர்!!! அதுவும் எந்தவித பட்டியலும் இல்லாமல் அடைத்து வைப்பது என்பது எந்த விதத்தில் நல்லது? அங்கே அவை களவு போனாலோ பழைய சிலையை அப்புறப்படுத்திவிட்டு புதிய சிலை ஒன்றை செய்து வைத்து விட்டலோ எப்படி அரசாங்கம் கண்டுபிடிக்கும்?
சரி, இந்தத் திருட்டுக்கு வருவோம். இந்தக் களவு பற்றி காவல் துறை தனது
இணைய பக்கத்தில் 2009 ஆம் ஆண்டு இவ்வாறு தகவல்களை வெளியிட்டுள்ளது என்று அறிகிறோம். இதில் என்ன சோகம் என்றால் மிகவும் முக்கியமான இந்த வழக்கில் சம்பந்தர் சிலையை கண்ணன் என்றும், சண்டிகேஸ்வரர் சிலையை முருகன் என்றும் அஸ்திர தேவர் சிலையை தீபலக்ஷ்மி என்றும் தங்கள் தலத்தில் பெயர் இட்டுள்ளனர். சென்னையில் இவை பற்றி தெரிந்த வல்லுனர்களுக்கா பஞ்சம்!!!
அதிர்ஷ்டவசமாக அங்கேயே ஒரு இணைப்பும் உள்ளது அதில் உள்ள பெயர்கள் பரவாயில்லை. எனினும் படங்கள் மிகவும் மங்கலாகவும் சிறியனவாகவும் உள்ளன. ஆனால் இவையாவது உள்ளனவே – 1970,1980களின் போது இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. பல படங்கள் எடுத்து பட்டியல் செய்து வைத்தது பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் முயற்சி என்று நம்புகிறோம்.
பல முறை கேட்டும் இந்தப் படங்களை பெரிய அளவில் எனக்கு தர அந்த நிறுவனம் இணங்க வில்லை. நான் முனைவர் பட்ட படிப்புக்கோ அல்லது ஏதோ ஒரு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஆய்வுக்காகவோ செயல்பட்டால் தான் தர முடியுமாம்! நான் எனது சொந்த படிப்பிற்கோ பட்டம் பெறவோ இவற்றை கேட்கவில்லை – கொள்ளை போன நமது கலைப் பொருட்களை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் என்று பல முறை சொல்லியும் பயன் இல்லை – இந்த இணையப் படங்கள் மட்டுமே எனக்கு.
விருதாச்சலம் அர்தனாரி ஆஸ்திரேலியா சென்ற திருட்டு பாதை என்ற பதிவின் மூலம் இந்த கும்பலின் கொள்ளைகளை பற்றி எழுதிய தினம் முதல் கடந்த இரண்டு மாதங்களாய் பல நூறு படங்களை ஆராய்ந்து இந்த உண்மைகளை உங்கள் முன்னர் வைக்கிறேன்.
கூகிள் உதவி மூலம் கபூர் அமெரிக்காவில் நடத்தி வந்த ஆர்ட் ஆப் தி பாஸ்ட் என்ற காலெரி மற்றும் அதன் மாதாந்திர பட்டியல்கள் கிடைத்தன. இன்று செப்டம்பர் 2009 கேடலாக், குறிப்பாக அதில் இருக்கும் ஒரு சிலையை பார்க்க போகிறோம்.
பட்டியலில் 14 ஆவதாக வரும் முருகன் சிலை.
அருமையாக, விதம் விதமாக படம் பிடித்து கலர் பிரிண்டிங் செய்து விளம்பரம் செய்துள்ளார்கள்.
மீண்டும் நமது காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் உள்ள சிலைகளின் படங்களை பாருங்கள். குறிப்பாக சிகப்பு நிறத்தில் நான் சுட்டிக்காட்டி இருக்கும் முருகன்.
முடித்த அளவிற்கு அந்த படத்தை பெரிதுப்படுத்தி கணினியில் சற்று சரி செய்துள்ளேன்.
அருமையான சிலை – முருகன் சிலை. சோழர் காலத்து சிலை இல்லை (சற்று அழகு கம்மி தான்!) – விஜயநகர அரசு காலம்.
இரண்டும் ஒரே சிலையா? ஒன்று எழுபதுகளில் சுத்தமல்லி கோவிலில் இருந்தபோது எடுத்த படம் – மற்றொண்டு கடல் கடந்து அமெரிக்க சென்ற பிறகு ….
செப்புச் சிலை வார்க்கும் கலை சோழர் காலத்திருக்கு பிறகு சற்று அழகு குறைந்தாலும், மெழுகை உருக்கி செய்யும் பாணி அதே தான். விஜயநகர அரசர்கள் காலத்திலும் கையால் மெழுகில் முதலில் படிமம் செய்யும் முறை தொடர்ந்தது – எனவே ஒவ்வொரு சிலைக்கும் தனித்தன்மை உண்டு. இதை மனதில் கொண்டு சிலையின் கை – குறிப்பாக கட்டை விரல் கையுடன் இணைக்கப்படும் பாணியை பாருங்கள். இரண்டு படங்களிலும் அதே போல இருப்பதை பாருங்கள்.
அதே போல இந்த சிலையின் காதணிகள் மிகவும் வினோதம். இதிலும் ரெண்டு படங்களும் ஒத்து போகின்றன. மார்பில் உள்ள பதாகம் கூட அதே அச்சு அசல்….
இந்தப் படம் கொண்டே இந்த சிலைகள் ஒன்றே என்று நாம் நிரூபணம் செய்ய இயலும். இந்த சிலை இப்போது எங்கே உள்ளது – ஏதாவது அருங்காட்சியகத்திற்கு அல்லது ஆர்வலருக்கு விற்றுவிட்டார்களோ? இல்லை அமெரிக்காவில் ஆர்ட் ஆப் தி பாஸ்ட் நிறுவனக் கிடங்கில் இன்னும் இருக்கிறதா?
இந்த திருட்டுச் சிலையின் படத்தில் இன்னும் ஒரு துப்பு மறைந்து இருக்கிறது – இல்லாத ஒன்று தான் துப்பு. சிலையின் அடியில் இருந்த அடி மேடை அகற்றப்பட்டுள்ளது. இது தற்செயலான செயல் இல்லை. வேண்டும் என்று அதன் அடி பாகம் பிரிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் பதிவுகளில் ஏன் இப்படி என்றும் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகளுடன் சந்திப்போம். இதுவரை இரண்டு சிலைகள் தான் – இன்னும் இருபத்தி ஆறு பாக்கி… !!