சுந்தரர் திருவையாற்றில் காவிரியை பிரிய செய்யும் காட்சி

இன்று மீண்டும் தராசுரம் – பெரியபுராணம் சிற்பம். முதலில் சிற்பம் இருக்கும் இடம் பார்க்க சதீஷ் அவர்களின் படங்கள்.

இப்போது சிற்பம். மிகச்சிறிய அளவில் உள்ள இந்த சிற்பம் எதனை குறிக்கிறது என்ற அறியாமல் பல நாட்கள் தேடினேன்.

ஒரு கோயிலின் முன் இருவர் – ஒருவர் ராஜ தோரணையில் இருகரம் கூப்பி பக்திப்பரவசத்தில் – மற்றும் ஒருவர் ஒரு கையை மடித்து ஏதோ சொல்ல – மறு கரம் உயர்த்தி – எதோ ஒரு மரத்தை இடித்து /வெட்டி கோயிலின் மேல் விழச் செய்வது போல இருந்தது.

பிறகு திரு நா . கணேசன் அவர்கள் ஒரு அருமையான ஆய்வுக்கட்டுரையை தந்தார் – சான் இரால்சுடன் மார் அவர்களது ( Marr, JR, “The Periya Puranam frieze at Taracuram: Episodes in the Lives of the Tamil Saiva Saints’ ). அப்போது தான் விளங்கியது. என்ன ஒரு அற்புத நிகழ்வு , அதை பற்றி பெரியபுராண குறிப்புகளை தேடும்போது, திரு சதீஷ், திரு திவாகர் , திரு சுப்ரமணியம் அவர்கள் உதவியுடன் இவை கிடைத்தன .

சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை நாட்டுக்குச் செல்லும் பொழுது , திருக்கண்டியூர் வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு எதிர்தோன்ற , சேரமான் பெருமாள் நாயனார் அங்குச் சென்று இறைவரைப் பணிய வேண்டுமென்று கூறுதலும் ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரியில் பெருவெள்ளம் சென்றதைக் கண்டு…


130. பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித் 3877-1
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி 3877-2
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர் 3877-3
அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் 3877-4

131. வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள் 3878-1
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக் 3878-2
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித் 3878-3
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் 3878-4

132. ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூரர் தமை நோக்கி 3879-1
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார் 3879-2
மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி 3879-3
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன 3879-4

133. ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப 3880-2
நீறு விளங்கும் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்தன்பின் 3880-3
ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார் 3880-4

134. பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில் 3881-1
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று 3881-2
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம் 3881-3
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும் 3881-4

135. மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் 3882-1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் 3882-2
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என 3882-3
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட 3882-4

136. விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன 3883-1
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப் 3883-2
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி 3883-3
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார் 3883-4

137. நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் 3884-1
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி 3884-2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து 3884-3
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் 3884-4

138. செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் 3885-1
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில் 3885-2
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று 3885-3
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்

நன்றி மதுரை திட்டம்

சிற்பத்தில் இருப்பவர்கள் சுந்தரர் மற்றும் சேரமான் பெருமாள். இடது புறம் ( நம் பார்வையில் ) இருப்பது கண்டியூர் கோயில். நடுவில் காவிரி கரை புரண்டு ஓடும் காட்சி – வெள்ளம் அலை மோதி செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ள முறை அருமை. வலது கரையில் திருவையாறு கோயில். ராஜ உடையில் இருப்பவர் சேரமான் பெருமாள் – காவிரியை நோக்கி ( வெள்ளம் கரை புரண்டு ஓடும் சத்தத்தில் அவர் பாட்டு கேட்க கையை அப்படி வைத்து கூவுகின்றாரோ ?) – இதே போன்று சிறு வயதில் பிரபல ஹாலிவுட் திரைப்படம் – ஈஸ்ட் மேன் கலரில், சிசில் டி மில்லி இயக்கம், சார்ல்டன் ஹெஸ்டன் , யுள் பிரின்னர் – பிரம்மாண்ட படைப்பு இறுதிக்காட்சி நினைவுக்கு வருகிறது – யூதர்கள் செங்கடலை கடக்கும் காட்சி.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சித்தன்னவாசல் – மடிந்த ஓவியம் – பாகம் இரண்டு

சித்தன்னவாசல் பற்றிய எந்தன் முதல் பதிவுக்கு ஆதரவு தந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி! சித்தன்னவாசலின் சோகக்கதையை கலையுள்ளம் கொண்ட யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இதோ இன்னொரு பதிவு. கடைசியாகக் காணப்படும் கோலங்கள் கலைப் பார்வைக்காக மட்டுமே என்பதனை முன்னமேயே சொல்லிவிடுவது நல்லது.

நான் இந்த அழகியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், சில தெளிவுகள்.

நீங்கள் காண்பது ஒரு மதத்தினர் சம்பந்தப்பட்டது என எண்ணாமல் வரைந்தவர் தம் கலைத் திறனைக் காண்பிக்கும் சித்திரமாகவே மனதில் கொள்ளவேண்டும். நிர்வாணம் என்பதே அலங்கோலம், அருவருப்பு, கவர்ச்சியின் உச்சகட்டம் என்பதெல்லாம் தற்போதைய கணிப்புதானே தவிர பழைய காலங்களில் அதனை அழகாகக் காட்டும்போது வெகுவாகவே ரசித்ததாகவே தெரிகிறது. நாகரீகம் உலகில் எங்கெல்லாம் வெகுவாக போற்றப்பட்டதோ அங்கெல்லாம் கூட நிர்வாணக் கலையும் வெகு அழகாக ரசிக்கப்பட்டு போற்றப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கலை வெளிப்பாடு என்பது கலைஞனின் ஆழ் உள்ளத்தில் எழுந்து அது தூய்மையான எண்ணமாக வெளிக் கொணரும்போது அங்கு அருவருப்பு என்று சொல்லுக்கே இடமில்லை. கலைஞனின் கைவண்ணம் காவியம் போலவே நம் கண்களுக்கு விருந்தாகப் படுகிறது. அந்தக் கலை ஒரு நிர்வாணமான ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அந்தக் கலைஞனின் கையிலிருந்து பெறப்படும்போது அவன் திறமையை நாம் போற்ற வேண்டும். அப்படிப்பட்ட கலைஞன் யுகத்துக்கு ஒருவனாகக் கூட தென்படலாம்.

சித்தன்னவாசலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். கலைஞனின் ஞானத்தை நாமும் போற்றலாமே.

வழக்கம் போல தொலைவில் இருந்து நாம் அருகில் செல்வோம்.

“என்னடா ஒண்ணுமே தெரியலை?” என்று உங்கள் குரல் கேட்கிறது , இன்று நீங்கள் அங்கு சென்றால் இப்படி தானே இருக்கும். சரி சற்று அருகில் செல்வோம்.

பெரிய பில்ட் அப் கொடுத்துட்டு வெட்டி சுவரை காட்டுகிறானே இவன் என்று நினைக்காதீர்கள் . இந்த அவல நிலைதான் இவளின் நிலை.

கொஞ்சம் வண்ணம் தீட்டுவோம். கையில் முதலில் தீட்டி பிறகு கணினியில் (திரு அசோக் அவர்களுக்கு நன்றி.) இப்போது ..

பாருங்களேன்.. அந்த அழகியின் ஒயிலான இடை, கவர்ச்சியால் தன்னை நோக்கி அழைக்கும் கண்கள், ஒரு பக்கம் சற்றே சாய்ந்த நிலையில் ‘என்னைப் பாராயோ’ என்பது போல அந்த அழகியின் முகம், வலது கையை மூடிய அழகு, ஒன்றைப் புகழ்ந்தால் இன்னொன்று கோபிக்குமோ என்ற நிலையில் அவள் ஒவ்வொரு உயிர்த் துடிப்பான அங்கமும் எந்த கலை ரசிகனையும் எங்கெங்கோ அழைத்துச் செல்லுகிறதே..

எனினும் இந்த அழகு ஓவியம் கலைந்த சிதைந்த நிலையை பார்க்கும் பொது நெஞ்சில் ஒரு சோகம், கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர்த் துளிகள் … இந்த அற்புத வடிவங்களை அழிய நாம் விட்டுவிட்டோமே !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

திருநீலகண்ட நாயனார் புராணம் – தாராசுரம்

நண்பர் திரு சதீஷ் அவர்களின் படங்கள் கொண்டு இன்று இன்னும் ஒரு தாராசுரம் சிற்பம். திருநீலன்கண்ட நாயனார் புராணம். சிறு சிற்பம்.

முதலில் சிற்பத்தை பார்த்துவிட்டு கதைக்கு போவோம்.

தொலைவில் இருந்து

சற்று அருகில்

இன்னும் அருகில்

சரி – இதோ சிற்பம்

மிகவும் சிறப்பாக, முக்கியமான நிகழ்வை கொண்டு கதையை விளக்கும் காட்சி – ஒரு புறம் கோயில், மறு புறம் ஒரு தடியை பிடித்துக்கொண்டு குளத்தில் இருந்து வெளி வரும் தம்பதியர்.

முழு கதையையும் படிக்க

http://ta.wikipedia.org/

திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். இவரைப் பற்றிய குறிப்பு, 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், பின்னர் 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி.

“திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை

“சொல்லைச் சிவன் திரு ஆணைதன் தூம்மொழி தோள் நசையால்
ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின் உமைகோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளொடு இளமை பெற்று இன்பம் மிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே” – திருத்தொண்டர் திருவந்தாதி

சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் இருந்தார். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர். அன்பர் பணி செய்வதும் அவ்வடியாரின் ஓர் அருஞ்செயல். தாம் ஆக்கும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது அவர்தம் வழக்கம். அவர் சிவபெருமானது எண்ணில்லாத சீர்மைகளுள் திருநீலகண்டத்தைப் பெரிதும் நயந்தார். அன்பாளர்கள் அமுது செய்தற் பொருட்டு பெருமான் நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தின் அடையாளமல்லவா திருநீல கண்டம்! ஆதலால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார். இதனால் அவருக்கு திருநீலகண்டக்குயனவார் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவருக்கு அருந்ததியைப் போன்று கற்பிற் சிறந்த அமைந்தார். அவரிடம் ஓர் பலவீனமும் இருந்தது இளமை தூர்ந்த அவர் இன்பத்துறையில் எளியராயினமையே அது. அவர் தம் புற ஒழுக்கத்தை அறிந்த மனைவியார் மானத்தால் நொந்தார். கணவனுக்கு வேண்டும் பணிகளை எல்லாம் குறைவுறச் செய்து உடனுறைவுக்கு இசையாதிருந்தார். ஒரு நாள் நாயனார் அவரது புலவியைத் தீர்ததற் பொருட்டு அருகணைத்து வேண்டும் இரப்புரைகளைக் கூறித் தீண்டுவதற்குச் சென்றார். உடனே “எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்” என அம்மாதரசி ஆணையிட்டார். அவ்வாணைக்கு நாயனார் கட்டுண்டார். மனைவியாரை அயலவர் போல் நோக்கி எம்மை எனச் சொன்னமையால் “எம் மாதரையும் தீண்டேன்” உறுதி கொண்டார்.

இளமை மிக்க நாயனாரும், மனைவியாரும் உடனுறைவின்றி வேறு வேறாக தம் மனையிலே (வீட்டிலே) வாழ்ந்தனர். தமது இவ்வொழுக்கத்தை அயலறியா வண்ணம் பேணி நடந்தனர். ஆண்டுகள் பலவும் செல்ல இளமை நீங்கி முதுமையெய்தினார். முதுமையெய்தி உடல் தளர்ந்த நிலையிலும் திருநீலகண்டத்திலும் கொண்ட பற்றுதியும் தம் உறுதி தவறாது ஒழுகினார்.

இவர் தம் செயற்கருஞ்செயலை உலகத்தவர்களுக்கு விளக்கம் செய்ய இறைவர் திருவுளம் பற்றினார். ஒரு சிவயோகியார் வேடம் பூண்டு நாயனரது மனைக்கு எழுந்தருளினார். நாயானார் அவரை எதிர்கொண்டு வணங்கி முறைபப்டி பூசனை செய்து “அடியேன் செய்யும் பணி யாது?” என இரந்து நின்றார். சிவயோக்கியார் தம்மிடமிருந்த ஓட்டினை அன்பரிடம் கொடுத்து “இத்திருவோடு ஒப்பற்றது இதனைப் பாதுகாப்பாக வைத்து நாம் வேண்டும் போது தருக” எனக் கூறிச் சென்றார். பல நாட் சென்ற பின்னர் ஓட்டினை வைத்த இடத்தில் இராத வண்ணம் மாயஞ்செய்து விட்டுச் சிவயோகியார் மீண்டும் வந்தார். வந்த சிவயோகியாரை வரவேற்று பூசனை செய்து பணிந்து நின்ற நாயனாரிடம் “யான் முன்பு உன்னிடம் தந்த ஓட்டினைத் தருக” எனக் கேட்டார். திருநீலகண்டர் வைத்த இடத்தில் எடுப்பதற்காகச் விரைந்து சென்றார். அங்கே ஓட்டினைக் காணாது திகைத்தார். அங்கு நின்றவரிடம் கேட்டும் எங்கும் தேடியும் காணதவராய் யாது செய்வதென்றறியாமல் அயர்ந்து அங்கேயே நின்றார். சிவயோகியார் “நொடிப்பொழுதில் எடுத்து வருவதாகச் சென்றீர்; யாது செய்கின்றீர்” என அழைத்தும்; அருகே வந்து கைதொழுது “சுவாமி பாதுகாப்பாக வைத்த இடத்தில் ஒட்டினைக் காணவில்லை. வேறிடந்தேடியும் அகப்படவில்லை, அந்தப் பழைய ஓட்டிற்குப் பதிலாக நல்ல புதிய ஓடு தருகிறேன். அதனை ஏற்று பிழை பொறுத்தருளுங்கள்” என இரந்து நின்றார். சிவயோகியார் “யான் தந்த மண்னோடன்றி பொன்னோடு தந்தாலும் கொள்ளேன் தந்ததையே கொண்டுவா” எனக் கூறினார். திருநீலகண்டர் “பெரியோய் தங்கள் ஓட்டைத் தரும்வழி காணேன். வேறு நல்ல ஓடு தருகிறேன் என்றாலும் ஏற்றுக் கொள்கின்றீர்கள் இல்லை” எனக் கூறி உணர்வொடுங்கி நின்றார். புண்ணியப் பொருளாக வந்த சிவயோயார் “யான் தந்த அடைக்கலப் பொருளைக் கவர்ந்துகொண்டு, பாவத்திற்குச் சிறிதும் அஞ்சாது பலபல பொய்மொழிகள் கூறுகிறாய், யாவரும் காணத் திருவோட்டை வாங்காது இவ்விடம் விட்டுப் போகேன்” என்றார். அதற்குச் “சுவாமி! தேவரீரது ஒட்டை அடியேன் கவரவில்லை. இதை எப்படித்தெரிவிப்பது? சொல்லும்” என நாயனார் கூறினார். “உன் அன்பு மைந்தனைக் கைப்பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “அப்படிச் செய்வதற்கு எனக்கு மகன் இல்லையே! என் செய்வது” எனச் சிவயோகியாரை நோக்கினார் திருநீலகண்டர். “உன் மனைவியின் கையைப் பற்றி குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “நானும் என் மனைவியும் எங்களிடையேயுள்ள ஒரு சபதத்தால் கைபிடித்துச் சத்தியம் செய்ய முடியவில்லை. நான் தனியே குளத்தில் மூழ்க்கிச் சத்தியம் செய்து தருகிறேன் வாரும்” என நாயனார் அழைத்தார். “தந்த ஓட்டைத் தராமல் இருக்கிறாய்; அதனை நீ கவரவில்லை எனின் உன் மனைவியின் கைப்பிடித்து சத்தியஞ்செய்துதரவும் தயங்குகின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பேரவையிலே இவ்வழக்கினைச் சொல்லப்போகின்றேன்; நீ அங்கு வா” என அழைத்தார் சிவயோகியார். திருநீலகண்டர் அதற்கிசைந்து அவருடன் சென்றார்.

தில்லைவாழந்தணர் சபையை அடைந்த சிவயோகியார் “இந்தக் குயவன் யான் அடைக்கலம் வைத்த ஓட்டைத் தருகிறானில்லை. அதனை அவன் கவர்ந்துகொள்ளவில்லை என்று மனைவியின் கைப்பிடித்து சத்தியம் செய்கிறானுமில்லை” என்று தம் வழக்கினைக் கூறினார். அதுகேட்ட அந்தணர்கள் திருநீலகண்டரை நோக்கி “நீர் நிகழ்ந்ததைக் கூறும்” என்றனர். “திருவுடை அந்தணர்களே இவர் தந்த திருவோட்டை மிகப்பாதுகாப்பான இடத்தில் வைத்தேன். அது மருமமாய் மறைந்து விட்டது. இதுவே நிகழ்ந்தது” எனத் திருநீலகண்டர் உள்ளதைக் கூறினார். “அப்படியாயின் இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியின் கைப் பிடித்து குளத்திலே மூழ்க்சிச் சத்தியம் செய்து கொடுத்தலே முறை” எனத் தில்லைவாழந்தணர்கள் தீர்ப்பளித்தனர். அது கேட்ட திருநீலகண்டர் தம் மனைவியைத் தான் தீண்ட இயலாத சபத்தை வெளிபடுத்த முடியாதவராய். “பொருந்திய வகையால் மூழ்கித் தருகிறேன்” எனச் சொல்லி சிவயோகியாருடன் தம் வீட்டை அடைந்தார். வீட்டில் இருந்த மனைவியாரையும் அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரக் கோயிலின் முன்னுள்ள குளத்தை அடைந்தார். திருநீலகண்டத்தின் ஆணையினைக் காத்தற்பொருட்டு மூங்கில் தடியொன்றில் ஒரு முனையைத் தாமும் மறுமுனையை மனைவியும் பிடித்த வண்ணம் குளத்தில் இறங்கினர். அப்பொழுது சிவயோகியார் “மனைவியின் கையைப் பிடித்து மூழ்குக” என வற்புறுத்தினார். அது செய்யமாட்டாத சபதத்தை அங்குள்ளோர் அனைவரும் கேட்கும் வண்ணம் வெளிப்படுத்தித் திருநீலகண்டர் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கிக் கரையேறும் திருநீலகண்டரும் மனைவியாரும் முதுமை நீங்கி இளமைக் கோலத்தில் தோன்றினார்கள். அந்த அற்புதக் கண்ட அனைவரும் சிவயோகியாரைக் காணாது மருண்டு நின்றனர். மறைந்த இறையவர் உமையம்மையாரோடு, வெள்ளையெருதின் மீது தோன்றி ‘புலனை வென்ற பெரியோர்களே! இவ்விளமையோடு என்றும் எம்மை நீங்காதிருப்பீர்களாக” என்றருளி மறைந்தருளினார். நாயனாரும் துணைவியாரும் இவ்வுலகிலே இறைபணியாற்றிச் சிவலோகமடைந்து பெறலரும் இளமை பெற்றுப் பேரின்பமுற்றனர்.

படங்கள் : திரு சதீஷ் மற்றும்
http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/index.htm


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சித்தன்னவாசல் – மடிந்த ஓவியம் – பாகம் ஒன்று

அது என்ன சித்தன்னவாசல் ஓவியம் ?

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பற்றி பதிவை வெகு நாட்களாக எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை. அங்கே அப்படி என்ன இருக்கிறது என்று நண்பர்கள் கேட்பார்கள். சரியான கேள்வி தான். திரு சுவாமிநாதன் அவர்கள் ஒருமுறை ஒரு மணிநேரம் விளக்கினர். பிறகு நண்பர் திரு இளங்கோவன் அவர்களது அருமையான பதிவும் படித்தேன்.

சித்தன்னவாசல்

எனினும் இதை பற்றி இணையத்தில் அதுவும் குறிப்பாக அங்கே உள்ள ஓவியங்கள் பற்றி இணையத்தில் எங்கும் எதுவும் இல்லையே என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.

இதன் தற்போதைய நிலைமை, கலை ஆர்வலர் சென்றாலே விரக்தி அடைந்து திரும்பும் நிலை – ஏன் தெரியுமா ? அங்கே அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்விதான் ? இதற்கு விடை அளிப்பது கடினம். அங்கே அப்படி என்ன இருந்தது என்ற கேள்விக்கு வேண்டும் என்றால் பதில் கூறலாம். கூறும் முயற்சியே இந்த பதிவு .

அங்கே ஒரு குகைக்கோயில், சில பல சமணர் படுக்கைகள், பழமையான கல்வெட்டுக்கள் என்று பல இருந்தும் என்னை மிகவும் கவர்ந்தவை அங்கே உள்ள ( இருந்த ) ஓவியங்கள். சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றி செவி வழி கூட செய்தி அறியாமல் பல தமிழரே இருக்கும் பொது இதை பற்றி வெளி உலகிற்கு தெரியாமலேயே போனது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை விட சுவையான தகவல் – இவை அனைத்தும் சமணர்களின் பங்களிப்பாகும். ஆனால் இப்போது அங்கே என்ன இருக்கிறது?

அஜந்தா ஓவியங்கள் பாணியில் மிக அற்புத ஓவியங்கள் இருந்தன . அவை எங்கே போயின ? இலங்கையில் பல இடையூறுகள் நடுவிலும் நிற்கும் சிகிரியா மாந்தர்போல இவை ஏன் நிற்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் நின்ற இவை – வெள்ளையர்கள் வெளியேறிய பின்னரே சிதைந்தன. நம் கைகளாலேயே நம் கண்களைக் குருடாக்கி கொள்வது போல நம் ஆட்களே ஓவியங்களை சிதைந்துள்ளனர்.

அப்படி என்ன ஓவியங்கள் அங்கே உள்ளன – முதலில் , தூண்களை பார்ப்போம். தூண்களின் முகப்பில் நாட்டிய மங்கையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

ஒவ்வொருவரை பார்ப்போம்.

முதல் மங்கை. என்ன தெரியவில்லையா ?இப்போது

அதுதான் இன்றைய நிலை.

சுமார் ஐம்பத்து வருடங்களுக்கு முன் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படம் மட்டுமே மிஞ்சி உள்ளது. சில கோட்டோவியங்கள்

இவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை கற்பனை செய்து நான் தீட்டிய ஓவியம்.

ஓவியம் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், ஆடல் அரசன் நடராசரின் தாண்டவத்தை நினைவுபடுத்துகின்றன. நாட்டியக் மங்கை பலவித அணிகலன்களை அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவள் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்து இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.

இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த நாட்டிய பாவனைகளையும் நாட்டியக்கலை விதிகளையும் தெரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் நல்ல சான்று பகிர்கின்றன.

சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய உபயோகப்படுத்திய வண்ணங்கள் யாவும் இயற்கை கனிப்பொருள்களே ஆகும் கருப்புக்கு கரிப்பொடியும், சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்கு இவ்வண்ண காவிக்கற்களும் நீல நிறத்திற்கு நீலக்கல்லும் பிறவண்ணங்களுக்கு இந்த வண்ணங்களின் கலப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும் அமைதியையும் பண்பட்ட கலைத்திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காணமுடிகிறது.இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை சித்தன்னவாசல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கலை உணர்வற்ற மூடர்களின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும், இன்று நாம்காணும் எஞ்சியுள்ள ஓவியங்கள் அக்கால தமிழகத்தில் ஓவியக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள காலத்தால் முற்பட்ட சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது சிந்தைக்கு விருந்தளிக்க சித்தன்னவாசல் ஓவியக்கூடம் அன்புடன் உங்களை அழைக்கின்றது. முழுவதுமாய் ரசிக்க கொஞ்சம் கற்ப்பனை இல்லை நிறைய கற்பனைத் திறன் வேண்டும்.

தென்னிந்தியாவின் ஓவிய திறமைக்கு முடி சூடும் இந்த ஓவியங்கள் இப்போது நம் அறியாமைக்குத் தீனியாகி மாண்டுவிட்டன. மாண்டவர் மீண்டும் வருவாரோ ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒளித்துநின்று அம்பு எய்தல் தருமமோ?

முன்னர் நாம் வாலி வதம் தாராசுரம் சிற்பம் பார்த்தோம். அதில் இராமன் சண்டையிடும் வாலியை நோக்கி குறி பார்க்கும் வரையிலும் பார்த்தோம். இப்போது கதையின் அடுத்த காட்சி – ஆனால் அங்கு இல்லை, கம்போடியா பாண்டிய ஸ்ரெய் சிற்பம்.

அற்புத வடிவம். இரண்டு காட்சிகள் ஒரே சிற்பத்தில். முதல் காட்சி ( வலம் இருந்து இடம் – நீங்கள் சிற்பத்தை பார்க்கும் படி ) இராமன் நாணை எய்து விட்டான் – அவனது வலது கரத்தை பாருங்கள் – நானை விட்ட பின்னர் அப்படியே படம் பிடித்தாற்போல உள்ளது .

வில்லின் கயிர் முடி வரையிலும் செதுக்கி உள்ள சிற்பியின் திறன் அபாரம்.

வாலி சுக்ரீவன் – இருவரின் முகங்கள் – சண்டையின் உக்கிரத்தை வெளி காட்டுகின்றன. அவர்கள் கால்களை கொஞ்சம் பாருங்கள் – வினோதமான வடிவமைப்பு – குரங்கின் கால்கள் – கை ( வாலியின் கை) முட்டி – மனித கை போல – சுக்ரீவனை அடிக்க உயர்ந்து உள்ளது.

அடுத்த காட்சி – வாலி தரையில் விழுந்து – தாரையின் மடியில் கிடக்கிறான். அவனது முகத்தை கொஞ்சம் பாருங்கள் – கோபக் கணைகள் – மார்பில் ராமனின் கணை – கம்பனின் வர்ணனையை இப்போது பார்ப்போம்.

இராமன் மறைந்து நின்று எய்திய அம்பினை வாலி மார்பில் வாங்கிக் கொண்டே இராமனைப் பார்த்து நியாயம் கேட்க்கிறான். (கம்பராமாயணம்)

“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர்மேல் கருணைதூண்டி ஒருவர் மேல் ஒளித்துநின்று
வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம்”

உரை: ஒரு போரில் இரு வீரர் எதிர்த்து நிற்கும்போது அவ்விரண்டு பேரையும் ஒரு சமமாக – நல்ல உறவினராகக் கொள்வது சிறந்தது. நீ அவ்வாறு கருதுவதற்கு மாறாக அவ்விருவருள் ஒருவர் மீது கருணை கொண்டு மற்றவர் மீது மறைந்து நின்று வில்லை வளைத்துக் கூரிய அம்பை மார்பில் பாய்ச்சுதல் அறமாகுமோ! இது தக்கதன்று என்று கருதப்படும் பட்சதாபமே ஆகும்.

மேலும் வாலி சொல்லுவான்:

” வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ”

உரை:இராமா! நீ செய்த இச்செயல் வீரமுடையதன்று; நூல்களில் விதித்த முறையன்று; உண்மையை சார்ந்ததும் அன்று; உனக்கு உரியதான இவ்வுலகத்துக்கு என் உடல் ஒரு சுமையும் ஆகாது; நான் உனக்கு பகையும் அல்லேன்; இங்ஙனம் இருக்கவும், நீ உன் பெருமைக் குணம் அழிந்து அன்பின்றி இச்செயலைச் செய்த விதம் எக்காரணத்தாலோ?

நியாயம் கேட்ட வாலியைப் பார்த்து இராமன் தான் ஏன் அவ்வாறு வாலியின் மீது அம்பெய்தினேன் என்பதையும், அண்ணனுக்காக உயிரையும் கொடுக்க முன்வந்த சுக்கிரீவனுக்கு சந்தேகத்தால் வாலி இழைத்த அநீதியையும், அவன் மனைவி தாரையை அபகரித்ததுவும் வாலிக்குத் தகாது என்பதனையும் எடுத்துச் சொல்வான்.

“ஈரம் ஆவதும் இற் பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றும் ஒருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கும் அரோ”

உரை: அன்புச் செயலாவதும், உயர்குடியில் பிறந்த தன் பயன் ஆவதும், வீரத்தின் பயன் ஆவதும், மற்றொருவனுக்குச் சேர்ந்த மனைவியைக் கற்புத் தவறாதபடி பாதுகாக்கும் பெருமையே அன்றோ”


“ஆதலானும் அவன் எனக்கு ஆருயிக்
காதலான் எனலானும் நிற் கட்டெனென் “

நீ இப்படியெல்லாம் செய்தாய் ஆதலாலும், இந்த சுக்கிரீவன் என் உயிர் போன்ற நண்பன் என்பதாலும் உன்னைக் கொன்றேன். என்று சொல்வான் இராமன்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடை – திரு குடவாயில் பாலசுப்ரமணியம்

திரு பாலசுப்ரமணியம் அவர்களின் – கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடை – என்ற அற்புதமான பதிவை கண்ட நாள் முதல் அதனை இணையத்தில் அனைவரும் ரசிக்க இடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. திரு சுந்தர் பரத்வாஜ் அவர்கள் மூலம் இது இன்று வெளிவருகிறது. திரு சதீஷ் பொறுமையாக முழு பதிவையும் தமிழில் மீண்டும் இந்த தளத்தில் அடித்து தந்ததற்கு நன்றி.

பல்லவப் பேரரசர்கள் தமிழகத்திற்கு விட்டுச் சென்ற கலைக் கருவூலங்கள் மிகுதியாகவுள்ள இடங்கள் வரிசையில் தலையாய இடம் பெற்று விளங்கும் ஊர் கடல் மல்லை எனப்பெறும் மகாபலிபுரமாகும். சிறுசிறு குன்றுகளைக் குடைந்து உருவாக்கிய ஐந்து இரதங்கள்,

தரையில் கிடந்த பறையை கிடந்தகோல திருமாலாகச் செதுக்கி அவருக்கென அங்கு கோயில் எடுத்து அக்கோயிலின் இருமருங்கும் இரண்டு சிவாலயங்களை இணைத்து எழுப்பிய கடற்கரைக் கோயில்,

ஊருக்கு நடுவே கம்பீரமாகத் திகழும் குன்றமொன்றில் குடைந்து எடுக்கப்பெற்ற குடைவரைக் கோயில்கள் என எவ்வாறெல்லாம் கோயில்களைத் தோற்றுவிக்க முடியுமோ அவ்வண்ணம் கடல் மல்லையைக் கலைப் பெட்டகமாக மாற்றிய பெருமை அத்யந்தகாமன் என்ற பட்டம் சூடிய இராஜசிம்ம பல்லவனுக்கே உரியதாகும்.

உலக கலை வல்லோரை தன்பால் ஈர்த்து நாளும் மயங்க வைக்கும் தனிச்சிறப்பு மல்லைக்கு உண்டு. தூங்கானை மாடம் என்றும் கஜப்பிரிஷ்டம் என்றும் கோயிற் கட்டடக் கலை வல்லோர் குறிப்பிடும் யானை உடல் வடிவில் திகழும் கோயிலொன்றை பாறையிலிருந்து செதுக்கி எடுத்து அருகிலே அதனை ஒத்த யானை உருவத்தையும் அமைத்து அதன் சிறப்பைக் காட்டும் நுட்பத்தை இங்குமட்டுமே காணலாம்.

புலிவாயில் அரங்க மேடையி அமைத்துக் காட்டி அங்கு அரம்பையர்களை ஆடச்செய்து அழகு கண்ட புலிக்குகையும் மல்லையின் தனி முத்திரையாகும்.

மாமல்லையின் குன்றத்தை (சிறுமலையை) குடைந்து எடுக்கப்பெற்ற குடைவரைக் கோயில்கள் மட்டும் அணி செய்யவில்லை. அங்கு பாறைகளின் பக்கவாட்டில் சிற்பங்கள் அணி அணியாகச் செதுக்கி ஊரையே கலைக்கூடமாக மாற்றியிருக்கிறார்கள். ஒருபுறம் விண்ணக கங்கை அக்குன்றத்தின்மேல் இறங்கி ஆறாக ஓடி பாதாள உலகம் சென்றடையும் காட்சி செதுக்கப்பெற்று காணப் பெறுகின்றது. இங்குள்ள காட்சியை பகீரத தவக்காட்சி எனக் குறிப்பர். அக்குன்றத்தின் மேல் பொழியும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கால்வாயாக ஓடி வந்து பிதுக்கம் பெற்ற இரு பாறைகளுக்கு இடையே கீழே இறங்கும். அந்த இடத்தை தேர்வு செய்து பகீரதனின் தவ ஆற்றலுக்காக வானத்து கங்கை மண்ணகத்துக்கு இறங்கும் காட்சியை செதுக்கியுள்ள அந்த மகாசிற்பியின் கற்பனை ஆற்றலுக்கு ஈடாக எதையும் கூற முடியாது.

இச்சிற்பக் காட்சிப் பகுதியை பாதுகாக்க முனைந்தவர்களுக்கு அங்கு சித்தரிக்கப்பெற்ற புராணக் காட்சியின் பின்புலம் தெரியாத்தாலும், அந்த மகா சிற்பியின் மகோன்னதம் புரியாத்தாலும் மழைநீர் வந்து இறங்கும் இட்த்தில் செங்கற்களால் தடுப்பினை ஏற்படுத்தி பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீரை திசைதிருப்பி விட்டிருக்கிறார்கள். தடுப்பு இல்லாமல் மழைநீர் இறங்கும்போது அங்கிருந்தவாறு அக்காட்சியைக் காண்போமானால் கங்கைப் பேராறு ஆர்ப்பரித்து விண்ணகத்திருந்து இறங்குவதையும், அதன் கரையில் கானகங்கள் உள்ளமையையும், வேட்டுவர்களோடு விலங்குகளையும், பறவைகளையும், வானவர்களையும், கந்தர்வர்களையும், மனிதர்களையும், கோயில்களையும் காண்பதோடு பாதாளலோகத்திருந்து நாகர்கள் நீரில் மேல் நோக்கி வருவதையும் உயிர்ப்போடு காணலாம். கலாரசிகர்களுக்கு அக்காட்சி பேரின்பம் பயப்பதாகும்.

கங்கை பேராற்றுக்கு குறுக்காக கல்தடுப்ப் செய்தது போன்று அங்கு நிகழும் மற்றொரு மகோன்னத சிற்பக் காட்சியை மண்டபம் எடுத்து மறைத்து விட்டார்கள். விஜய நகரப் பேரரசு காலத்தில் இது நிகழ்ந்தது. பக்திப் பெருக்கும்பார்வையை மறைத்ததால் இக்காட்சியின் சிறப்புக்கு ஊறு விளைந்தது. இருப்பினும் மண்டபத்துள் சிக்கியுள்ள மாண்புறு இக்காட்சியின் நுட்பச் சிறப்பை நுகர வேண்டுமாயின் கண்ணனின் வரலாற்றையும், ஆழ்வார்களின் பாசுரக் கூற்றையும் அறிந்து திளைத்து பின்பு சிற்பங்களை காண வேண்டும்.


கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியின் மக்கள் இந்திரவிழா கொண்டாடியபோது மந்திர விதிப்படி பூசனைகள் செய்யாததால் வெகுண்ட வானவர் தலைவனான இந்திரன் கோபமுற்று ஆயர்பாடி அழியுமாறு கல் மழையினைப் பெய்யச் செய்தான். ஆநிரைகளும், ஆயர்களும், ஆய்ச்சியரும் செய்வதறியாது அலறி ஓடிய போது, கண்ணபிரான் அங்கு வந்து அங்கிருந்த கோவர்த்தனம் என்னும் மலையைக் கையால் எடுத்து தலைக்குமேல் உயர்த்தி குடையாகப் பிடித்தான். அம்மலையோ கல்மாரியைத் தாங்கிக் கொண்டு ஆயர்பாடியை காத்து நின்றது. கண்ணன் வந்து கொற்றக் குடையாக கோவர்த்தன மலையை பிடித்தவுடன் அஞ்சி ஓடிய ஆயர் பாடி மக்கள் அமைதியுற்றனர். கல்மாரி கடுமையாகப் பொழிந்தாலும் கண்ணனுடைய கருணையினால் பசுக்கள் மகிழ்ச்சியுற்று பால்பொழிந்தன. கன்றினை நக்கி கனிவைக் காட்டின. ஆயர் மகளிரோ குழந்தைக்கு அமைதியாக பால்கொடுக்கத் தொடங்கினர். ஆய்ச்சியர் வெண்ணை கடந்து மோர் தூக்கிச் செல்லலாயினர். ஆயர்களோ பால் கறக்கத் தொடங்கினர். அவரவர் பணி அமைதியாக நடைபெறலாயிற்று. அன்று கண்ணன் குடை பிடிக்கவில்லை என்றால் கல்மாரியால் ஆயர்பாடியே அழிந்திருக்கும்.

பாகவதம் புகழும் இவ்வரலாற்றை திருமங்கையாழ்வார்,

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தம் ஓடின ஆநிரை தளராமல்
எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே

என்ற அழகு தமிழ் பாசுரமாகப் பாடியுள்ளார். இதே செய்தியினை பெரியாழ்வார், ” ஆயனார் கூடி அமைந்த விழாவை அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை” என்று குறிப்பிட்டுள்ளார். திருமங்கை மன்ன்னோ மீண்டும்,

கடுங்கால் மாரி கல்லே பொழிய, அல்ல
எமக்கு அன்று
கடுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச
அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி
நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாம்ம் நமோ
நாராயணமே

என்ற பாடல் வழி கல்மாரிப் பொழிந்த திறத்தையும் கண்ணன் காத்த கருணையையும் விளக்கியுள்ளார்.

ஊரின் நடுவண் திகழும் மாமல்லை குன்றத்தின் கீழ்த்திசையில் பக்கவாட்டு பாறையில் ஒரு நீண்ட சிறபத்தொகுதி காணப்பெறுகின்றது. எழிலுறு அக்காட்சிக்கு முன்பாக கற்தூண்களை நட்டு மண்டபமொன்றினை பிற்காலத்தில் எடுத்துள்ளனர். இம்மண்டபம் அச்சிற்பங்களை காப்பதற்கென எடுக்கப் பெற்றிருந்தாலும், அச்சிற்பங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன என்பதை மறைப்பதாகவே உள்ளது. விஜய நகர அரசு காலத்தில் எடுக்கப்பெற்ற இம்மண்டபத்திற்குச் சற்று தள்ளி எதிர்திசையில் நின்றவாறு நம் மனக் கண்களால் அம்மண்டபத்துத் தூண்களையும், கூரையையும் அகற்றிவிட்டு உள்ளே தெரியும் காட்சியை உற்று நோக்குவோமாயின் நெடிதுயர்ந்த கண்ணபிரான் தன் இடக்கரத்தை தலைக்கு மேல் உயர்த்தி மாமல்லை குன்றத்தை தாங்கி நிற்பது தெரியும்.
அருகே பலராமன் கைகட்டி நிற்கும் முதியவரான ஆயர் ஒருவரின் தோளில் கைவைத்து பரிவோடு அணைத்து நிற்பார். குன்றத்தை தூக்கி நிற்கும் கண்ணபிரானைச் சுற்றி ஆயர்பாடியே அங்கு காட்சியளிக்கும். பின்புலம் முழுவதும் பசுக் கூட்டங்கள், கம்பீரமான காளை ஒன்று அங்கு நிற்க கன்றுகளும், காளைகளும் சுற்றி நிற்கின்றன.

அழகிய கொம்புகளுடன் திகழும் பசு ஒன்று தன் கன்றின் முதுகில் நாக்கினால் நக்கி தாய்மை உணர்வை வெளிப்படுத்த ஆயன் ஒருவன் அதன் மடி சொறியும் பாலை பாத்திரமொன்றில் கறக்கும் காட்சி ஒருபுறம். ஆய்ச்சியர் மகள் ஒருத்தி தன் குழந்தைக்கு பாலூட்டுகின்றாள். அங்கு நிற்கும் ஆயனொருவன் குழலொன்றினைக் கையில் ஏந்தி அமுத கீதம் இசைக்கின்றான்.


ஆயர் குலப் பெண் ஒருத்தி தலையில் ஓலைப் பாயை சுருட்டி சுமந்தவாறு, தன் வலக்கரத்தில் தயிரும், வெண்ணையும் உள்ள பானைகள் கொண்ட உரியைப் பிடித்தவாறு செல்கின்றான்.

ஆயனொருவன் கைக் குழந்தையை முதுகில் சுமந்த வண்ணம் நீண்ட கோலுடன் செல்ல அவன் மனைவியோ சிறுபிள்ளை ஒருவன் கரம் பற்றியவாறு மோர்க்குடங்களை தலையில் சுமந்து செல்கிறாள்.

கோவர்த்தனகிரியை குடையாகத் தூக்கிப் பிடிக்கும் கண்ணனைச் சுற்றி ஆயர்குலப் பெண்கள் நின்றவாறு வியந்து அவனை நோக்குகின்றனர். கடுமையான கல்மாரி பெய்து கொண்டிருக்க கடுகளவும் கவலையில்லாமல் ஆயர்பாடி மக்கள் மகிழ்வோடு அவரவர் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

பசுக்களும் காளைகளும் மகிழ்வோடு திரிகின்றன. கல்மாரியை நோக்கி மலை குடையிலிருந்து வெளியே செல்ல முற்படும் ஆயன் ஒருவன் கரத்தை அவன் மனைவி பற்றி உள்ளே இழுக்கும் காட்சியும் அங்கு ஒருபுறம் இருப்பதைக் காணலாம்.

மாமல்லை குன்றத்தையே கோவர்த்தன மலையாக மாற்றிக் காட்டி இருக்கிறான் பல்லவனின் சிற்பி. இக்காட்சியின் ஒவ்வொரு பகுதியையும் உற்று நோக்கியவாறு ஆழ்வார்களின் கூற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம். தன் ஐந்து விரல்களை மேலுயர்த்தி குன்றத்தை குடை எனப் பிடித்திருக்கும் இக்காட்சியை பெரியாழ்வார் தம் பாசுரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். கண்ணபிரானின் மணி நெடுந்தோள் குடைக்காம்பாகவும், அவன் கைவிரல்கள் குடையின் உள் விட்டங்களாகவும் விளங்க அதன் மேல் மலை கவிழ்ந்து குடையாக இருப்பதிஅக் காண்கிறார். இதனை,

செப்பாருடைய திருமாலவன் தன்
செந்தாமரைக்கை விரல் ஐந்தினையும்
கம்பாக மடுத்து மணி நெடுந்தோள்
காம்பாகக் கொடுத்து கவித்த மலை

என்று பாடுகின்றார். இப்படி கண்ட பெரியாழ்வார்க்கு மேலும் ஒரு காட்சி புலப்படுகின்றது. கண்ணபிரான் விரல்களை விரித்து அம்மலையைத் தாங்கும் காட்சி ஆதிசேடன் தன் ஐந்து தலைகளை படமாக விரித்து அதன் மேல் பூமியை தாங்குவதுபோல் தோன்றிற்று. அதனை,

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன்
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன்போல்
தடங்கை விரலைந்தும் மலரவைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரைதான்

என்று “கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே” என்ற ஈற்றடி வருமாறு பாடிய பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாமல்லை சிற்பக் காட்சியில் ஆநிரைகளோடு குழந்தையைத் தோளில் சுமந்த ஆயன் ஒருவன் செல்ல அவன் பின்னே சிறுவன் ஒருவனுடன் மோர்ப் பானையை தலையில் சுமந்து தாய் ஒருத்தி செல்லுதலும், அருகே ஆயர்பாடி பெண்கள் கண்ணனைச் சூழ்ந்து நிற்பதையும் காணும் போது,

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார்
காற்றானிரப் பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி யிளங் கன்னி மார்களை
நேர்படவே கொண்டு போதி
காய்வார்க் கென்றும் உகப் பனவே செய்து
கண்டார் கழறித் திரியும்
ஆயா உன்னை யறிந்து கொண்டேன் உனக்
கஞ்சுவன் அம்மம் தரவே

என்ற பெரியாழ்வாரின் பாடல் பல்லவ சிற்பியின் உள்ளத்தை உருகச் செய்திருக்க வேண்டும் என்பது அறியலாம்.

ஆயர்பாடியின் அழகையும், குன்றமெடுத்து கல்மாரி தடுத்த கோபாலனின் தோற்றத்தையும் கண்முன் நிறுத்திய பல்லவ சிற்பி இக்காட்சி மூலம் தொண்டை மண்டலத்து மரபுவழி வந்த அம்மண்ணுக்குரிய கால்நடைகளின் உருவ அமைப்பை உலகம் உள்ளளவும் நிலையாகப் பதிவு செய்துவிட்டான். தமிழகத்தின் மண்ணுக்குரிய கால்நடை இனங்கள் மறைந்து வரும் இந்நாளில் இத்தகைய சிற்ப்ப் பதிவுகள் எதிர்கால சந்ததிகளுக்கு மரபுப் பெருமையை நிச்சயம் உணர்த்தும்.

( ஒரு பக்கம் மனித முகத்துடன் சிங்கம், கழுகு முகத்துடனும் ஒன்று )


படங்கள் – நன்றி – பிலிக்கர் நண்பர்கள், குறிப்பாக லக்ஷ்ணி பிரபால, மற்றும் பிரிட்டிஷ் நூலகம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

குங்கிலிய கலைய நாயனார் புராணம் – தாராசுரம்

இன்று மீண்டும் நண்பர் சதீஷ் உபயம் – ஒரு அற்புத வடிவம் – தாராசுரம்.

மிக சிறிய சிற்பம் என்பதால் முதலில் இதனை மார்கண்டேயர் அல்லது கண்ணப்பர் கதை என்று நினைத்தேன்.

பிறகு அடுத்து உள்ள சிற்பத்தில் கண்ணப்பர் உள்ளார் என்பதை கவனித்தேன்.

அப்போது இவர் யார். உற்று பாருங்கள்.

லிங்கம் சற்று சாய்ந்து உள்ளது. ஆஹா , இது குங்கிலிய கலைய நாயனார் புராணம் .

கதை படிக்க

http://www.geocities.com/arumuganavalar/kungilayakalayanayanaar.ஹ்த்ம்ல்

சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வறுமை மிகுதியினாலே நிலங்களை விற்றும், அடிமைகளை விற்றும், செலவழித்தார். இப்படி எல்லாம் செலவானமையால், அவருடைய மக்களும் சுற்றத்தவர்களும் வருந்தினார்கள்.

ஒருநாள் அவர்மனைவியார், அரிசி முதலியன வாங்குதற்கு ஒன்றும் இல்லாமையால் இரண்டுநாளாகப் பட்டினியிருந்து வருந்துகின்ற புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, தம்முடைய தாலியை அக்கணவர் கையிலே கொடுத்து, “இதற்கு நெல் வாங்கிக் கொண்டு வாரும்” என்றார். குங்குலியக்கலயநாயனார் அந்தத் தாலியை வாங்கிக் கொண்டு, நெல்லுக் கொள்ளும்படி போனார். போம்பொழுது வழியிலே ஒருவணிகன் குங்குலியப் பொதி கொண்டு தமக்கு எதிரே வரக்கண்டு, மனமகிழ்ந்து “சுவாமிக்குத் தூபம் இடும்படி குங்குலியத்தைப் பெற்றுக் கொண்டேன். இதினும் பார்க்க மேலாகிய பேறு உண்டோ” என்று சொல்லி, தம்முடைய கையில் இருந்த தாலியைக் கொடுத்து, அந்தக் குங்குலியப் பொதியை வாங்கிக்கொண்டு, ஆலயத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள பண்டாரத்திலே அக்குங்குலியத்தை வைத்துவிட்டு, சுவாமியைத் துதித்துக்கொண்டு அங்கே இருந்தார். அவர் அங்கே இருக்க, வீட்டிலே அவர் மனைவியாரும் மக்களும், பசியினாலே வாடி, அன்று ராத்திரியிலே இளைப்புற்று நித்திரை செய்யும் பொழுது; கருணாகரராகிய கடவுள் அவ்வீடு முழுவதிலும், பொற்குவியலும் நெற்குவியலும் அரிசிக்குவியலும் பிறவளங்களும் நிறைந்து கிடக்கும்படி அருள்செய்து, அம்மனைவியாருக்குச் சொப்பனத்தில் தோன்றி, அநுக்கிரகஞ் செய்தார். உடனே அவர் விழித்தெழுந்து, அங்கே இருக்கின்ற செல்வத்தைக் கண்டு, பரமசிவனுடைய திருவருளை வியந்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு, தம்முடைய நாயகராகிய குங்குலியக்கலயநாயனாருக்குத் திருவமுது பாகம் பண்ணப் பிரயத்தனஞ்செய்தார். கிருபாநிதியாகிய பரமசிவன் குங்குலியக் கலயநாயனாருக்குத் தோன்றி, “நீ மிகப் பசி கொண்டிருக்கின்றாய். உன்வீட்டுக்குப் போய்ப் பாலும் அன்னமும் உண்டு துன்பத்தை ஒழி” என்று திருவாய்மலர்ந்தருளினார். குங்குலியக் கலயநாயனார் அதைக் கேட்டுக் கைகூப்பி வணங்கி அவருடைய ஆஞ்ஞையை மறுத்து இருத்தற்கு அஞ்சி, அதனைச் சிரசின் மேலே வகித்து திருக்கோயிலினின்றும் நீங்கிப் போய்த் தம்முடைய வீட்டினுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அவ்வீடெங்கும் நிறைந்திருக்கின்ற நிதிக்குவைகளைக் கண்டு, மனைவியாரை நோக்கி “இந்தச் சம்பத்துக்கள் எல்லாம் எப்படி வந்தன” என்று கேட்க; அவர் “எம்பெருமானுடைய திருவருளினால் வந்தன” என்றார். அதுகேட்ட நாயனார் “ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் ஆட்கொள்ளும் பொருட்டு நமது கடவுளுடைய கருணை இருந்தபடி இப்படியோ” என்று கடவுளை வணங்கினார். மனைவியார் விரைவிலே கணவரையும் சிவனடியார்களையும் விதிப்படி தூப தீபங்களால் ஆராதனை செய்து, திருவமுது செய்வித்தார். குங்குலியக்கலயநாயனார் பரமசிவனுடைய திருவருளினாலே பெருஞ்செல்வமுடையவராகி, சிவனடியார்களைத் தயிர் நெய் பாலோடு திருவமுது செய்வித்து வந்தார்.

இப்படி நடக்குங்காலத்திலே, திருப்பனந்தாளென்னும் திருப்பதியில் வீற்றிருக்கின்ற சிவலிங்கம் சாய்ந்திருக்கின்றமையால், அதனை நிமிரப்பண்ணிக் கும்பிடுதற்கு விரும்பி, இராசாவானவர் தம்முடைய யானைகளெல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தார். இழுப்பித்தும், அது நிமிராமையால் அகோராத்திரம் தீராத கவலையுற்றிருந்தார். குங்குலியக்கலய நாயனார் அந்தச் சமாசாரத்தைக் கேள்வியுற்று சுவாமி தரிசனஞ்செய்யும்பொருட்டுத் திருப்பனந்தாளை அடைந்தார். அங்கே சிவலிங்கத்தை நிமிரப்பண்ணவேண்டுமென்கின்ற ஆசையாய் இராஜாவருத்தமுறுதலையும், சேனைகள் யானைகளோடு சிவலிங்கத்தை இழுத்துத் தங்கள் கருத்து முற்றாமையால் பூமியின்மேலே வலி குறைந்து விழுந்து இளைத்தலையும் கண்டு, மனசிலே துன்பங்கொண்டு, “அடியேனும் இளைப்பைத் தருகின்ற இந்தத் திருப்பணியைச் செய்ய வேண்டும்” என்று விரும்பி, சிவலிங்கத்திலே கட்டப்பட்ட கயிற்றைத் தம்முடைய கழுத்திலே கட்டிக்கொண்டு இழுத்தார். உடனே சிவலிங்கம் நிமிர்ந்தது. அப்படி நிமிர்ந்தது அவர் புறத்திலே கட்டி இழுத்து அக்கயிற்றினாலே அன்று; அகத்திலே கட்டியிழுத்த அன்புக்கயிற்றினாலேயாம். அது கண்டு இராஜாவும் சேனைகளும் மிகுந்த களிப்பையடைந்தார்கள். இராஜா குங்குலியக்கலயநாயனாரை நமஸ்கரித்து வியந்து ஸ்தோத்திரம் பண்ணி, சுவாமிக்கு வேண்டிய திருப்பணிகள் பலவற்றை நிறைவேற்றிக்கொண்டு தம்முடைய நகரத்துக்குப் போய்விட்டார்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

வாலி வதம் – ஒரு அற்புத வடிவம் – தாராசுரம்

இன்று திரு சதிஷ் அவர்களின் படங்கள் கொண்டு தாராசுரம் அற்புத வாலி வதம் சிற்பம் ஒன்றை பார்க்கிறோம்.

வாலி மாயாவி என்ற ஒரு அசுரனுடன் போர் செய்ய ஒரு குகையினுள் செல்கிறான். தனது தம்பியை வெளியில் காவலுக்கு இருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே செல்கிறான். வெகு காலம் அவன் வெளியில் வரவில்லை, உள்ளே இருந்து குருதி கசிவதையும், வாலி போல ஒரு குரல் ( உயிர் நீங்கும்போது வரும் குரல் போல ) கேட்டு பதறிய சுக்ரீவன், ஒரு பெரிய பாறையை உருட்டி குகையின் வாயிலை மூடிவிட்டு திரும்பினான்.

வாலி உண்மையில் அசுரனை வீழ்த்தி வெளிவரும் பொழுது, அடைக்கப்பட்டுள்ள வாயிலை கண்டு தன் தம்பி மீது மீது சந்தேகித்து – சினத்தில் அறிவை இழக்கிறான். மேலும் கிஷ்கிந்தையில் அரியணையில் சுக்ரீவனை கண்டதும் வெறி தலைக்கு ஏற – அவனை உதைத்து நாடு கடத்துகிறான்.

காட்டில் ஒளிந்து வாழ்ந்த சுக்ரீவன் – சீதையை தேடி வருகின்ற ராமனிடம் முறையிட்டு – தன்னை மீண்டும் வானர அரசனாக்கினால், தனது வானர சேனை கொண்டு சீதையை தேடவும் , ராவணனை அழிக்கவும் உதவ முன்வருகிறான்.

வாலி – தான் பெற்ற வரத்தினால் – முன்னின்று போர் செய்யும் எதிரியின் பாதி பலம் தன்னுள் சேர்வதால், ராமன் அவனை பின்னால் இருந்து அம்பை எய்து வீழ்த்தும் காட்சியே இது.

இதை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் .

http://www.tamilnation.org/literature/kamban/ramayanam/kitkantha_kandam/07.htm

வாலி வதம் – கிட்கிந்தா காண்டம் – கம்ப ராமாயணம் – உரை டாக்டர் பூவண்ணன்.

சுக்கிரீவனைப் வாலி மேலே தூக்கலும், வாலி மேல் இராமன் அம்பு எய்தலும்

‘எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி’ என்ரு, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான். 65

வாலி ‘இவனை எடுத்துத் தரை மீது மோதுவேன் என்று நினைத்துத் தன் தம்பியான சுக்கிரீவனின் இடையிலும் கழுத்திலும் இரண்டு கைகளையும் செலுத்தி மேல் எடுத்தான். அப்போது அவன் மீது இராமன் ஓர் அம்பைத் தன் வில்லில் தொடுத்து அந்த வில்லின் நாணுடன் தன் தோள் பொருத்திச் செலுத்தினன்.


கார் உண் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது – நின்றது என், செப்ப?-
நீரும், நீர் தரு நெருப்பும், வன் காற்றும், கீழ் நிவந்த
பாரும், சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி. 66

இராமனின் அந்த அம்பானது, நீரைத் தோற்றுவித்த நெருப்பும், அந்த நெருப்பைத் தோற்றுவித்த வலிய காற்றும் இவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் பூமியும் இந்த நான்கும் கொண்ட வன்மையைப் பெற்றுள்ள வாலியின் மார்பைப் பழுத்த மிக்க சுவையுடைய வாழைப் பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசியைப் போல எளிமையாகத் தைத்துச் சென்றது என்றால், அந்த அம்பின் ஆற்றலைக் குறித்துக் கூறவேண்டியது என்ன இருக்கின்றது?

சரி இப்போது சிற்பம். மிகவும் சிறிய சிற்பம் . மக்கள் பார்வையில் படுவதில்லை. சரி நாம், அதை எடுத்து காட்டுவோம்.

இப்போது தெரிகிறதா ?


இல்லையா ? இப்போது

அதன் அளவை காட்ட இந்த படம்

படங்களுக்கு நன்றி : சதீஷ் மற்றும் ( கடைசி படம் )http://www.kumbakonam.info


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தமிழகத்தில் பத்மபாணி, தட்சிணாமூர்த்தி வழிபாடு – டாக்டர் நா. கணேசன்

தமிழகத்தில் பத்மபாணி, தட்சிணாமூர்த்தி வழிபாடு
டாக்டர் நா. கணேசன், ஹ்யூஸ்டன், அமெரிக்கா

மூன்று சோழச் சக்ரவர்த்திகள் அரசவையில் கவிச்சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். அவர் கவிப்பேரரசு ஆகியபோது சோழமாராசன் வீற்றிருக்க, தமிழைக் கற்பித்த ஆசிரியர் ஐவர் யார் என்று பாடினார் – முருகன், அவன் அவதாரம் ஆன சம்பந்தர், கும்பமுனி அகத்தியன், சடையன் சிவபிரான், அவனின் (பௌத்தசமய) அவதாரம் பதுமக்கொத்தன்.

பதுமக்கொத்தன் யார்? என்று தொடங்கி அவனது இருப்பிடம் போதலகிரி யாது என்று ஆராயும் கட்டுரை இது. வடமொழியில் ஒகரக்குறில் இல்லை எனவே பொதியில் > பொதல > போதல(மலை) ஆயிற்று.

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்
என்பது இந்திய மரபு. பௌத்தத்தில் மன்னரைப் பத்மபாணி-அவலோகிதன் என்பார்கள். அதனால் திபெத்தியர் தலாய்லாமாவை அவலோகிதர் அவதாரம் என்றும் அவர் வாழிடத்துக்கு பொதலா என்றும் கொண்டனர்.

தமிழின் பௌத்தசமயத் தொடர்புகள், யுவான் சுவாங்கின் செய்தி, 2-ஆம் நூற்றாண்டு நூலான கண்டவியூகம், அதில் உள்ள தமிழ்நாட்டுக் குறிப்புகள், தட்சிணாமூர்த்தி ~ அவலோகிதன் தொடர்புகள் என்று விரிந்த குறிப்புகள். சீனர் குவான் யின் என்றும், யப்பானியர் கானன் என்றும் வழிபடும் அவலோகிதர் கிழக்காசியாவின் பெருந்தெய்வம். கருணைத் தெய்வம் ஆதலால் கிழக்கே ஆண் பெண்ணாக மாறிவிட்ட விந்தை. அவள் வசிக்கும் போதலமலை (பொதியில் / பொதிகை) அருகே உள்ள சமுத்திரம் அமைந்த சிலைகளைச் சீனர் கோவில்களில் காணலாம். வடமொழியில் பொதியில் / பொதிகை குலபர்வதம், தக்ஷிணாசலம், மலயம் என்று போற்றப்படுகிறது. பொதிகைத் தென்றல் மலயமாருதம் என்றும், பாண்டியர்களின் கொடியில் பொதிகை மலையும் இருந்தன. அதனால், மதுரை மீனாட்சியின் தந்தை மலயத்வஜ பாண்டியன்.

இச்செய்திகளை விரிவாக ஆராயவும், ஒப்புமைக்குப் பழைய சிற்பங்களின் படங்கள் காணவும் பிடிஎப் கோப்பைப் படிக்க உங்களை அழைக்கிறேன்!

தமிழகத்தில் பத்மபாணி, தட்சிணாமூர்த்தி வழிபாடு
padmakottar


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment