சித்தன்னவாசல் – மடிந்த ஓவியம் – பாகம் ஒன்று

அது என்ன சித்தன்னவாசல் ஓவியம் ?

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பற்றி பதிவை வெகு நாட்களாக எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை. அங்கே அப்படி என்ன இருக்கிறது என்று நண்பர்கள் கேட்பார்கள். சரியான கேள்வி தான். திரு சுவாமிநாதன் அவர்கள் ஒருமுறை ஒரு மணிநேரம் விளக்கினர். பிறகு நண்பர் திரு இளங்கோவன் அவர்களது அருமையான பதிவும் படித்தேன்.

சித்தன்னவாசல்

எனினும் இதை பற்றி இணையத்தில் அதுவும் குறிப்பாக அங்கே உள்ள ஓவியங்கள் பற்றி இணையத்தில் எங்கும் எதுவும் இல்லையே என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.

இதன் தற்போதைய நிலைமை, கலை ஆர்வலர் சென்றாலே விரக்தி அடைந்து திரும்பும் நிலை – ஏன் தெரியுமா ? அங்கே அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்விதான் ? இதற்கு விடை அளிப்பது கடினம். அங்கே அப்படி என்ன இருந்தது என்ற கேள்விக்கு வேண்டும் என்றால் பதில் கூறலாம். கூறும் முயற்சியே இந்த பதிவு .

அங்கே ஒரு குகைக்கோயில், சில பல சமணர் படுக்கைகள், பழமையான கல்வெட்டுக்கள் என்று பல இருந்தும் என்னை மிகவும் கவர்ந்தவை அங்கே உள்ள ( இருந்த ) ஓவியங்கள். சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றி செவி வழி கூட செய்தி அறியாமல் பல தமிழரே இருக்கும் பொது இதை பற்றி வெளி உலகிற்கு தெரியாமலேயே போனது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை விட சுவையான தகவல் – இவை அனைத்தும் சமணர்களின் பங்களிப்பாகும். ஆனால் இப்போது அங்கே என்ன இருக்கிறது?

அஜந்தா ஓவியங்கள் பாணியில் மிக அற்புத ஓவியங்கள் இருந்தன . அவை எங்கே போயின ? இலங்கையில் பல இடையூறுகள் நடுவிலும் நிற்கும் சிகிரியா மாந்தர்போல இவை ஏன் நிற்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் நின்ற இவை – வெள்ளையர்கள் வெளியேறிய பின்னரே சிதைந்தன. நம் கைகளாலேயே நம் கண்களைக் குருடாக்கி கொள்வது போல நம் ஆட்களே ஓவியங்களை சிதைந்துள்ளனர்.

அப்படி என்ன ஓவியங்கள் அங்கே உள்ளன – முதலில் , தூண்களை பார்ப்போம். தூண்களின் முகப்பில் நாட்டிய மங்கையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

ஒவ்வொருவரை பார்ப்போம்.

முதல் மங்கை. என்ன தெரியவில்லையா ?இப்போது

அதுதான் இன்றைய நிலை.

சுமார் ஐம்பத்து வருடங்களுக்கு முன் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படம் மட்டுமே மிஞ்சி உள்ளது. சில கோட்டோவியங்கள்

இவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை கற்பனை செய்து நான் தீட்டிய ஓவியம்.

ஓவியம் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், ஆடல் அரசன் நடராசரின் தாண்டவத்தை நினைவுபடுத்துகின்றன. நாட்டியக் மங்கை பலவித அணிகலன்களை அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவள் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்து இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.

இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த நாட்டிய பாவனைகளையும் நாட்டியக்கலை விதிகளையும் தெரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் நல்ல சான்று பகிர்கின்றன.

சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய உபயோகப்படுத்திய வண்ணங்கள் யாவும் இயற்கை கனிப்பொருள்களே ஆகும் கருப்புக்கு கரிப்பொடியும், சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்கு இவ்வண்ண காவிக்கற்களும் நீல நிறத்திற்கு நீலக்கல்லும் பிறவண்ணங்களுக்கு இந்த வண்ணங்களின் கலப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும் அமைதியையும் பண்பட்ட கலைத்திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காணமுடிகிறது.இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை சித்தன்னவாசல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கலை உணர்வற்ற மூடர்களின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும், இன்று நாம்காணும் எஞ்சியுள்ள ஓவியங்கள் அக்கால தமிழகத்தில் ஓவியக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள காலத்தால் முற்பட்ட சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது சிந்தைக்கு விருந்தளிக்க சித்தன்னவாசல் ஓவியக்கூடம் அன்புடன் உங்களை அழைக்கின்றது. முழுவதுமாய் ரசிக்க கொஞ்சம் கற்ப்பனை இல்லை நிறைய கற்பனைத் திறன் வேண்டும்.

தென்னிந்தியாவின் ஓவிய திறமைக்கு முடி சூடும் இந்த ஓவியங்கள் இப்போது நம் அறியாமைக்குத் தீனியாகி மாண்டுவிட்டன. மாண்டவர் மீண்டும் வருவாரோ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *