கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு முன்னரே தமிழகத்தில் ராமாயணம் பரவலாக இருந்ததா ? கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். வால்மீகியின் ராமாயணம் கண்டிப்பாக இருக்கும், ஆனால் தமிழில் முழுவதும் இருந்திருக்குமோ? அப்படி இருந்தால் அதற்கு சிற்பத்தில் வர்ணனை உண்டோ ? இந்தக் கேள்விகளை தான் நாம் இந்த பதிவில் அலசப் போகிறோம்.
கவிச்சக்ரவர்தியின் காலத்தை பற்றி மொழி ஆர்வலர்களும், சரித்திரி ஆர்வலர்களும் பல காலமாக விவாதித்து வருகின்றனர். கம்பர், இந்தப் புனிதப் பணியை பாரம்பரியத்துக்கு எதிராக, தனது வரிகளில் எந்த ஒரு அரசனை பற்றியும் பாடாமல், தனது நண்பர் புரவலர் சடையப்ப வள்ளலை மட்டும் ஆயிரம் செய்யுளுக்கு ஒருமுறை பாடியது இன்னொரு காரணம். இவற்றைக் கொண்டு அவரது காலத்தை நிர்ணயம் செய்வது கடினமாகி விட்டது. தற்போது அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சாட்சியம் எதுவும் இல்லாமல் விரிந்து கிடக்கிறது. பொதுவாக பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்ற கருதப்படுகிறது.
கம்பரின் ராமாவதாரம், வால்மீகி்யின் வடமொழி காவியத்தின் கருவை கொண்டாலும், அவர் அதனை அதன் மொழி பெயர்ப்பாக அதை இயற்ற வில்லை. தனது தமிழ் புலமையை முழுவதுமாக பயன் படுத்தி, காவியத்தின் பல்வேறு இடங்களில் சிறு மாற்றங்களை செய்து, அப்போதைய காலத்திற்கு ஏற்ப நயத்தை மாற்றி அவர் தனது படைப்பை தனி தமிழ்க் காவியமாகவே மாற்றி விட்டார். ஆனால் நாம் இன்று பார்க்கும் அப்படிப் பட்ட ஒரு மாற்றம் அவருடையதா , அல்லது வாட்டர வழக்காக வந்த ஒன்றை அவர் மேலும் அழகு பட பாடினாரா ?
இதனை பற்றி நண்பர்களுடன் பலமுறை விவாதித்ததுண்டு – . நன்றி திரு திவாகர், திரு ஹரி்கி்ரிஷ்ணன், ஷங்கர் ( பொன்னியின் செல்வன் குழுமம் ), திரு அண்ணா கண்ணன் மற்றும் கீதா அம்மா – பல்வேறு விதங்களில் இந்த பதிவுக்கு உதவியதற்கு. நன்றி திரு அர்விந்த் ( படங்கள். )
இந்த சிற்பம், புள்ளமங்கை பிரம்ம புரீ்ஸ்வரர் ஆலயத்தில் இருப்பது, இதன் கட்டுமான முறையை கொண்டும், அதில் இருக்கும் முதலாம் பாரந்தக சோழரின் கல்வெட்டுகளை கொண்டும் இதன் காலம் 907 to 953 CE என்று நிர்ணயிக்கப் படுகிறது .
சிற்பத்தை அருகில் சென்று பார்ப்பதற்கு முன்னர், இரு காவியங்களில் இந்த நிகழ்வை கையாண்ட முறையை படிப்போம். அஹல்யையின் சாபமும் சாப-விமோ்சனும்
அஹல்யை பிரம்மனால் உலகிலேயே மிகவும் அழகு பொருந்திய மங்கையாக படைக்கப்பட்டாள். அப்போதே அவள் மீது இந்திரனுக்கு ஒரு கண். எனினும் கௌதம முனிவரை அஹல்யையை மணந்ததால். மாற்றான் மனைவி என்றாலும் இந்திரனின் சபலம் குறையவில்லை. அவளை அடைய திட்டம் தீட்டி , கௌதம முனிவரை போலவே தன்னை உருமாற்றி அவளிடம் சென்றான். வந்திருப்பவன் தன மணாளன் அல்ல என்று தெரிந்தும் அஹல்யை தனது அழகின் மீது இருந்த ஆனவத்தாலோ , தேவர்களின் அரசனே வந்திருக்கிறான் என்பதாலோ தவறு செய்கிறாள்…
சரி, இதனை வால்மீகி எவ்வாறு கூறுகிறார் என்பதை பார்ப்போம்.
tathaa shaptvaa ca vai shakram bhaaryaam api ca shaptavaan |
iha varSa sahasraaNi bahuuni nivaSisyasi || 1-48-29
vaayu bhakSaa niraahaaraa tapyantii bhasma shaayinii |
adR^ishyaa sarva bhuutaanaam aashrame asmin vaSisyasi ||
இப்படி பட்ட தவறை செய்ததனால் நீ ஆயிரம் ஆண்டுகள் உண்ண உணவின்றி, காற்றை மட்டுமே சுவாசித்துக்கொண்டு, யாராலும் பார்க்க முடியா வண்ணம், இந்த ஆசிரமத்தை சுற்றியே காற்றில் கரைந்து புழுதி போல இருப்பாயாக !!
yadaa tu etat vanam ghoram raamo dasharatha aatmajaH |
aagamiSyati durdharSaH tadaa puutaa bhaviSyas
தசரதனின் புதல்வனான ராமன், இந்த வனத்திற்குவரும்போது, உனது பாவம் போய் சாப விமோசனமும் பெறுவாயாக
tasya aatithyena dur.hvR^itte lobha moha vivarjitaa |
mat sakaashe mudaa yuktaa svam vapuH dhaarayiSyasi
ராமனை போற்றி வழி படும்போது உனது பாவம், பித்து, பேராசை அனைத்தும் விலகி, உனது சுய உருவை நீ மீண்டும் பெற்று, என்னுடன் வந்து மீண்டும் மகிழ்ச்சியான வாழ்கையை பெறுவாய், என்று சபித்தார் கௌதம முனிவர். .
இதில் நாம் கவனிக்க வேண்டியது எங்குமே கல்லாய் கிடவது என்று அவர் கூறவில்லை.
இப்போது கம்பர் இதை கையாண்ட முறையாய் பார்ப்போம்.
‘எல்லை இல் நாணம் எய்தி.
யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
‘’விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி’’ என்றான்;
கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்
தன் உடம்பு முழுவதும் சாபத்தால் கெட்டு விட்டதனால், இந்திரன் அளவில்லாத,நாணத்தை அடைந்து, தனது நிலையைப் பார்த்தவர்கள். கேட்டவர்கள், எல்லோர்க்கும்,
பரிகாசச் சிரிப்பு வந்தெய்தும்படி, தனக்கு நேர்ந்த பழியோடும் வானுலகத்திற்குச் சென்ற பின்பு, அம் முனிவன் தன் மனைவியைப் பார்த்து, விலைமகள் ( வேசியைப்) போன்ற நீயும் கல் வடிவம் போல ஆகுக என்று சபித்தான்.
‘’பிழைத்தது பொறுத்தல் என்றும்
பெரியவர் கடனே; அன்பால்.
அழல் தருங் கடவுள் அன்னாய்!
முடிவு இதற்கு அருளுக!’’ என்ன.
‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக்
கல் உருத் தவிர்தி’’ என்றான்.
அவ்வாறு விழுகின்ற அகலிகை அம் முனிவனை நோக்கி, தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்தும், புன் சிரிப்பிலிருந்தும் நெருப்பைச் சிதறறும் கடவுள் அன்னாய், உருத்திர மூர்த்தியை ஒத்த முனிவனே! சிறியோர் செய்த பிழையைப் பொறுப்பது, எக்காலத்தும் பெரியோர்களின் கடமையே ஆகும் என்று கூறுவர். இச் சாபத்திற்கு ஒரு முடிவை அருள்வீராக என்று வேண்டி நிற்க, அதற்கு
இரங்கிய அம் முனிவன், ஒலிக்கும் குளிர்ந்த பூமாலையை அணிந்த தசரதராமன் என்பான் திருவடித் தூள் உன்மேல் படியும் போது, இந்தக் கருங்கல் வடிவம் நீங்குவாய்
என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.
இந்த இடத்தில தான் நாம் இரு காவியங்களில் உள்ள வேற்றுமையை ஆராய வேண்டும். வால்மீகி அஹல்யை காற்றோடு கலந்து எவராலும் அவள் அழகை பார்த்து ரசிக்க முடியா வண்ணம் , அவளது அழகின் மேல் அவளுக்கு இருந்த ஆணவத்தை இழக்குமாறு காட்சியை எடுத்துச் செல்கிறார். . கம்பனோ உணர்ச்சிவசப்பட்டு தவறிட்ட அஹல்யையை கல்லாக மாற்றி, உணர்ச்சியற்ற நிலையில் வாடும் வண்ணம் சபிக்கப்பட்டதாக காட்சியை அமைக்கிறார்.
இது கம்பனின் கற்பனையா? இல்லை இந்த வழக்கு தமிழ் மண்ணில் அவருக்கு முன்னரே இருந்ததா? ( நன்றி திரு ஹரிக்கிர்ஷ்ணன் அவர்களது பதிவு )
சங்க காலத்து நூலானா பரிபாடலில் வரும் வரிகளில் அஹல்யையின் சாபம் இடம் பெறுகிறது.
பரிபாடல் 19 , முருகனை பற்றி வரும் பாடல்.அதில் ஒரு பகுதி
இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது. என்று உரை செய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்
சோபன நிலையது–துணி பரங்குன்றத்து
மாஅல் முருகன் மாட மருங்கு.
(Lines 50-57)
பக்தர்கள் ஓவியக் காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் ரதி மன்மதனின் ஓவியத்தை பார்த்த பின், இன்னொரு ஓவியத்தில் – இந்த பூனை இந்திரன் (இந்திரன் பூசை) , இவள் அஹல்யை (இவள் அகலிகை), சினத்தில் சென்ற கௌதமன் (இவன் சென்ற கவுதமன்) , கல்லை மாறிய அஹல்யை (சினன்உறக் கல்லுரு ஒன்றியபடி இது‘) என்று பரங்குன்றம் செல்லும் யாத்ரிகள் பேசுவது போல வருகிறது பாடல்.
இப்போது நாம், மீண்டும் சிற்பத்திற்கு வருவோம். சிறு சிற்பம் தான். புள்ளமங்கை, எனினும் அதில் நாம் மூன்று நபர்களை தெளிவாக பார்க்க முடிகிறது. லக்ஷ்மணன் , ராமன் , மற்றும் அஹல்யை.
இப்போது பதிவின் முக்கியமான தருணம். ராமனின் காலை பாருங்கள். அப்படியே கம்பனின் அற்புத வரிகளை படியுங்கள்.எத்தனை வண்ணங்கள்.. வண்ணங்களா.. இல்லை கம்பனின் எண்ண ஜாலங்களா..
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.
இதை மேலும் விவரிக்க எனக்கு தேர்ச்சி இல்லை – தேவையும் இல்லை. ராமன் கால் பட்டு உயிர்ப்பிக்கும் அஹல்யையை சிற்பத்தில் பாருங்கள்.
புள்ளமங்கை விமான சிற்பம் கண்டிப்பாக 953 CE க்கு முன்னர் செதுக்கப்பட்டது. நிச்சயமாக அது அஹல்யை கல்லாய் மாறுவதும், ராமனின் கால் ( அல்லது கால் தூசி) – சிற்பத்தில் குதிக்கால் ஊன்றி பாதம் கல்லின் மேல் படும்படி வடித்துள்ள திறமையை பாருங்கள் , அப்படி கால் பட்டு சாப விமோசனம் பெரும் அஹல்யை இரு கை கூப்பி பக்தி பரவசத்துடன் தன எழில் உருவம் பெற்று , ராமனை வணங்கும் வண்ணம் வடித்ததும் அருமை.
அது சரி கம்பன் சொல்லும் கால் வண்ணத்தை பார்த்துவிட்டோம் – அது என்ன கை வண்ணம். அதற்கும் சிற்பம் உண்டோ. விரைவில் பார்ப்போம்.