கிரேக்க சோழ கலை கலவை.

சோழ செப்புத்திருமேனிகளில் ஒரு வசீகரத் தன்மை இருக்கிறது. அதை புகைப்படங்களில் கொண்டு வருவது மிகவும் கடினம். உதாரணத்திற்க்கு சென்னை அருங்காட்சியகம் இருப்பில் இருக்கும் பதிமூன்றாம் நூற்றாண்டு சோழ முருகர் வடிவத்தை பாருங்கள்.

ஓவியர் பிரசாத் அரிய மனிதர்.செப்புத்திருமேனியின் அழகை ஓவியத்தில் கொண்டு வரும் தெய்வீக திறம் படைத்தவர்.

பொதுவாக த்ரிபங்க அமைப்பை பற்றி பல கட்டுரை படித்துள்ளேன். ஆனால் இந்த மூன்று வளைவுகள் என்பது மட்டும் தான இந்த அழகின் காரணமா ? இல்லை அவற்றை தாண்டியும் ஏதாவது உள்ளதா ? எப்படிஅந்த கலைஞன் இந்த தந்திரத்தைத் தெரிந்துக்கொண்டான்?

இன்று புகழ் பெற்ற கிரேக்க சிற்பங்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி நாம் பார்க்கப் போகிறோம். அவர்கள் எப்படியெல்லாம் சிற்பங்களின் அழகைக் கூட்ட பல யுக்திகளைக் கையாண்டனர், தவிர அவர்கள் உபயோகித்த முறைகளுக்கும் சோழ சிற்பியின் கலைக்கும் ஏதாவது பொதுத் தன்மை உள்ளதா என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிப்போம். இந்த பதிவு உருவாக இந்த காணொளி கோப்பு மிகவும் உதவியாக இருந்தது.

கிரேக்க சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி

பலமுறை இந்த கேள்வி எங்கள் மனதில் உதிக்கும். நண்பர் அர்விந்த் அவர்களுடன் அர்தனாரி வடிவத்தை பற்றி விவாதிக்கும் போதும் வந்தது. என்ன கேள்வி – சிற்பி ஏன் ஒரு காலை சற்றே மடித்தவாறு அமைத்தான் என்பதே அந்த கேள்வி. அப்போது எங்கள் கருத்து ஆண் பெண் என்ற இருவரின் உருவங்களின் அமைப்பை சரி கட்டவே அந்த அம்சம் என்பதில் முடிவாகும் .

அர்த்தனாரி வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது

ஆனால் இன்று இந்த கிரேக்க சிற்பம் பற்றிய காணொளியை கண்ட பின்னர் வேறு ஒரு விதமாக யோசிக்க வைத்தது. இந்த சோழ முருகர் வடிவம் அர்த்தநாரி போல அல்லவே, அப்போதும் எதற்கு அந்த காலின் மடித்து வடிக்கும் கலையையும், சிறபக்கலைஞனும் ஏன் வளர்த்துக்கொண்டே போகிறான் என யோசித்ததில் ஒஉர் உண்மை புலப்பட்டது. அதாவது கலைஞன் எனப்படுபவன் தனது படைப்புகளில் இருந்தும், தான் பார்ப்பதிலும் மட்டும் அல்லாமால், தனக்கு முன்னும் இருந்த வல்லுனர்களின் படைப்புகளில் இருந்து அவன் கற்றுக்கொள்கிறான். அவனல்லவோ கலைஞன்.. கிரேக்க சிற்பம் பாரெங்கும் புகழ் பெற்றது. கூகிள் மற்றும் விக்கி உதவியுடன் கிரேக்க சிற்பம் எப்படி பாரிணாம வளர்ச்சி கண்டது என்பதையும், அதை படிப்பது நாம் நமது சோழ செப்புத் திருமேனிகளை இன்னும் புரிந்துக்கொண்டு ரசிக்க எப்படி உதவுகின்றது என்பதை பார்ப்போம்.

கௌரோஸ்


கௌரோஸ் – சுமார் -800 BCE – 480 BCE, கிரேக்க அழகான ஆண் இளையர் சிற்பங்களை குறிக்கும்
இந்தக் காலத்திய சிற்பங்களில் நாம் பார்க்க வேண்டியவை

* உடல் முழுவதும் ஒரே நேரான கோணத்தில் இருக்கும், தலை நேராக, பார்வையும் நேரே பார்க்கும் வண்ணம் இருக்கும், இடுப்பு சின்னதாக, கைத்தசைகள் சதுரமாகவும் அதிகம் மேலே தூக்கி இராது. உடம்பும் அதே போல எந்த விதமான வளைவும் இல்லாமல் – விறைப்பாக இருக்கும்.

* சில சிலைகளில், ஒரு கால் முன்னால் வைக்கும் படி இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு இடுப்பின் வளைவை காண முடியாது.
* கைகளும் அதே போல நேரே தொங்கியபடியோ, அல்லது ஒரு கை மடக்கப்பட்டோ இருந்தாலும்,சிற்பம் பொதுவாக உயி்ரற்று இருக்கும்.

க்ரிடிஒஸ் பையன்


இதை அடுத்து பளிங்கு சிலை – க்ரிடிஒஸ் பையன் சிற்பத்தை பார்ப்போம்.

இங்கே சிற்பி மனித உடலின் செயல் பாட்டை முழுவதுமாக படித்து, அதை கல்லில் வடித்துள்ளான். உடலின் முழு எடையையும் ஒரு காலில் தாங்கி ( இடது கால் ), வலது கால் சற்றே முட்டியில் மடிந்து உள்ளது. இதற்கு கிரேக்க மொழியில் ‘கண்டற்றபோஸ்டோ’ என்று பெயர். இந்த முறையில் ஒரு மனிதன் நிற்கும் பொது , உடலின் மற்ற பாகங்களில் சிறு மாற்றங்கள் தோன்றும். இடை சற்றே இடது புறம் செல்லும், முதுகு தண்டு ஆங்கில எழுத்து “s” போல வளையும்.

கண்டற்றபோஸ்டோ’

இந்த மாற்றங்களின் விளைவால் இதுவரை வெறுமனே உயிரற்று நிற்கும் மனிதன் சிலை போல இருந்த வடிவம் உயிரோட்டம் பெற்றுவிடுகிறது.

டோரிபோரோஸ்

டோரிபோரோஸ் – ஈட்டி ஏந்தியவன் சிற்பம் கிரேக்க சிற்பங்களில் மிகவும் புகழ் பெற்றது. செப்பு சிலையாக இருந்திருக்க வேண்டிய இந்த வடிவத்தின் காலம் சுமார் 450-40 BC.

கிரேக்க சிற்பியான திரு போல்ய்க்ளிடோஸ் என்பவர், மனித உடலின் அங்க குறிப்புகளையும் அதன் ஆற்றலையும் முழுவதுமாக படித்து, இந்த சிற்பத்தை வடித்துள்ளார். இந்த வடிவத்தில் பலம் மிக்க ஆண்மகன் ஒரு கையில் வேல் ஒன்றினை எறியும் வண்ணம் – அந்த தருணத்தின் உயி்ரோட்டதை அப்படியே கல்லில் சிறை பிடித்துள்ளார்.

“S” தோற்றம்

அதே போல அந்த “S” தோற்றமும் கிரேக்க சிற்பத்தின் நளினத்தை மிகவும் கூட்டியது . இதில் நாம் முன்னர் பார்த்த ‘கண்டற்றபோஸ்டோ’ பாணியை விட உடல் இன்னும் தனது நடுதிசையில் இருந்து விலகி, வளைந்து நிற்கும் வண்ணம் இருக்கும். இதனால் இது ‘கண்டற்றபோஸ்டோ’ பாணியை விட உயர்ந்த காலத்தால் முற்பட்ட பாணி என்று கருதப்படுகிறது.

வீனஸ் டி மிலோ அல்லது அப்ரோடைடி மிலோஸ் சிற்பம் இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு

சரி, இவை அனைத்தையும் பார்த்துப் படித்து புரிந்த பிறகு நம் சிலையை மீண்டும் பார்ப்போம். கிரேக்க சிற்பிகள் உபயோகித்த யுக்திகளை நமது சிற்பிகளும் உபயோகித்தார்களா? தேடலின் போது பல நல்ல தளங்களும் கிரேக்க சிற்பத்தின் படங்களும் அதனை ஒட்டிய விளக்க படங்களும் கிடைத்தன. அதே போல சோழ சிற்பத்தையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

http://figdrawing.blogspot.com/2008/10/standing-pose-rhythm-and-contrapposto.html
http://employees.oneonta.edu/farberas/arth/ARTH209/Doyphoros.html


என்ன அதிசயம். அப்படியே ஒன்றை ஒன்று ஒட்டி இருக்கின்றனவே.சோழர் சிலையின் பின் அழகு இன்னும் அற்புதம். நாம் கிரேக்க சிற்பங்க்ளில் பார்த்த ‘கண்டற்றபோஸ்டோ’ எப்படி `s’ வடிவத்தோடு சேர்ந்து சிலையில் வந்துள்ளது என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.இந்த பதிவுக்கு உங்கள் கருத்தை இடுங்கள். கேட்க மிகவும் ஆவலாக உள்ளது. கிரேக்க சோழ கலைகள் ஒன்றுடன் ஒன்று கலந்த கலவையாக உணரப்படும்போது உருவாகும் ஆச்சரியத்தை என்னவென்பது…

படங்கள் உதவி : விக்கி மற்றும் இணையம். சோழர் சிலை மற்றும் ஓவியம் – ஓவியர் பிரசாத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *