துயரத்தின் உச்சியில் இருக்கும் அன்னையா அல்லது கொலைசெய்ய வந்த பாதகியா?

நண்பர் தக்ஷின் அவர்கள் மதுரை சென்று விட்டு ஒரு அற்புத சிற்ப்பத்தின் அருமையான படத்தை பூதகி / பூதனை என்ற தலைப்புடன் முகநூலில் இட்டவுடன் மனதில் எழுந்த முதல் கேள்வி ”குட்டிக் கண்ணனை கொல்ல வந்த பொல்லாத அரக்கியா இது ?”

பூதனை பற்றி மனதளவில் நாம் வைத்திருந்த உருவம் நாம் பெரும்பாலும் கதைகளிலும் சில சிற்பங்களிலும் பார்த்ததன் விளைவு தான். இதோ இங்கே நண்பர் அர்விந்த் அவர்கள் அளித்த படம் – சோழர் கால புள்ளமங்கை சிற்பம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் சுதை உருவம் – ஒரு கொடூர அரக்கி அவளின் உடலில் இருந்து ரத்தம் அனைத்தையும் உறிந்து எடுத்தவாறு உள்ள காட்சிகளே அதிகம். எனினும் கண்ணனும் யசோதை போலும் இல்லை – அந்த பெண்மணியின் முகபாவம் ஒரு கலக்கம் கலந்த துயர நிலையில் உள்ளது.

இங்கே இருப்பதோ மிகவும் அழகு வாய்ந்த பெண்மணி. வேறு யாராக இருக்க முடியும்? சில குறிப்புகளில் இந்த சிற்பம் ஹரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி என்றும் கையில் இருப்பது இறந்த குழந்தை லோஹிதாசன் என்றும் உள்ளன. எனினும் அந்தக் கதையில் சந்திரமதி ஒரு அடிமையாக விற்கப்படுகிறாள். பின்னரே லோஹிதாசன் இறப்பு வருகிறது. இங்கே இத்தனை ஆபரணங்களுடன் சிற்பி செதுக்க வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது. மேலும் குழந்தை நன்றாக இருப்பது போலும் பால் அருந்த உதடுகளை வைத்திருப்பது போலவே உள்ளது.

இன்னும் அருகில் சென்று படம் எடுத்து ஆராய வேண்டும் என்று நண்பர்கள் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக ராமன் அவர்கள் மதுரை சென்று வேண்டிய படங்களை எடுத்து அனுப்பினார்.

சாதாரண படம் வேண்டும் என்று மட்டும் நான் கேட்கவில்லை. மிக அருகில் சென்று குழந்தையின் வலது மார்பின் படம் தேவை என்று கூறினேன். ஏன் ?

நாம் முன்னர் விஷ்ணு மார்பின் உள்ள ஸ்ரீவத்சம் என்ற மறு பற்றிய பதிவு நினைவில் உள்ளதா ? அதில் வரும் கடைசி படத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தையும் நிறைய அணிகலன் போட்டுக்கொண்டு சிரிப்பது போலவே உள்ளது. இந்த விதமான ஆரம் கண்ணன் மற்றும் சம்பந்தர் சிலைகளில் நாம் முன்னர் பார்த்துள்ளோம்.

5068
5074
5091

எதற்காக வலது மார்பின் படம் தேவை? கல்லில் சிற்பி இந்த சிலையை வடிக்கும் பொது, சில இடங்களில் சிறு உளி வைத்து செதுக்க வேண்டும், அப்படியும் சில இடங்களில் அவனால் முழுவதுமாக செதுக்க இயலவில்லை.

இடது மார்பை முழுவதுமாக செதுக்கிய அவன், வலது மார்பை செதுக்க வாகு இல்லை. இது நீங்களே பாருங்கள்.

சரி, மார்பின் மேல் உள்ள அணிகலன்களை தனியாக பார்ப்போம்.

இதுவரை கூர்ந்து கவனித்து இருந்தால் வலது மார்பில் உள்ள அந்த சிறிய புடைப்பு தெரிந்திருக்கும்

இப்போது பாருங்கள்.

இதோ நின்ற கோலத்தில் பெருமாளின் வலது மார்பில் தெரியும் முக்கோண மறு. இதனை குழந்தையின் மார்பில் இருப்பதுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

பூதனை பற்றி மேலும் படிக்க கீதா அம்மாவின் அருமையான பதிவை பாருங்கள்.

கம்சன் பூதனையை கோகுலம் சென்று அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்து அதற்கு விஷப் பால் ஊட்டும்படிக் கேட்டுக் கொண்டான்.

பூதனையோ மறுக்கின்றாள். என்னால் முடியாது என்று சொல்கின்றாள். ஏற்கெனவே அனைவரும் அவளைக் கண்டாலே ஓடி ஒளிவதையும், அவளின் உடன்பிறந்தவர்களே அவளைக் கண்டால் வராதே என்று சொல்லுவதையும் தன்னுடைய முகத்தைப் பார்ப்பதே பாவம் என அவர்கள் நினைப்பதையும், அவ்வாறே நடந்து கொள்ளுவதையும் சொல்கின்றாள் பூதனை

“பூதனை, நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும், மகத வீரர்கள் உன்னையும், ப்ரத்யோதாவையும், வெறும் கைகளால் கொன்று விடுவார்கள். வாழ்வோ, சாவோ, என்னை மீறி நீயோ, ப்ரத்யோதாவோ ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. என் கட்டளையை மீறி உங்கள் வாழ்வில் எதுவும் இல்லை.” என்றான் கம்சன். பூதனை வாயே திறக்கவில்லை. “இங்கே நிற்காதே, போ உடனே

கோகுலத்தில் அந்த மாதம் பெளர்ணமி தினத்தன்று அவர்களின் குலதெய்வம் ஆன கோபநாத் மஹாதேவருக்குத் திருவிழா வந்தது.

யசோதைக்குச்செய்தி வந்தது, மதுராவிலே யாரோ பெரிய அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கோகுலத்தின் கோபநாத் மஹாதேவருக்கு முக்கியப் பிரார்த்தனையை நிறைவேற்ற வந்து கொண்டிருக்கின்றாள் என.

செய்தி வந்த போது யமுனைக்கரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த யசோதை, உடனேயே இரு இளைஞர்களை அனுப்பி வரும் விருந்தாளியை வீட்டுக்கு அழைத்துப் போய், உபசரித்துவிட்டுப் பின்னர் யமுனைக்கரைக்கு அழைத்து வரும்படி அனுப்பி வைத்தாள் அவர்களும் சென்றார்கள்.

மேலும் படிக்க

என்ன நடந்தது ?.

பூதனை அந்தக் கிருஷ்ணன் முகத்தையே பார்த்தாள். நீல நிறம் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, சுருண்ட கூந்தல் நெற்றியில் இருந்து தொங்கிக் குழல்கற்றைகள் முகத்தையே மறைக்க, கண்கள் இரண்டும் விஷமத்தனத்தை எடுத்துக் காட்ட, முகம் முழுதும் விஷமத்தனமான சிரிப்போடு விளையாடும் அந்தக் குழந்தையைப் பார்த்தாலே எடுத்துக் கொஞ்சிக் கட்டி அணைக்கவேண்டும் போல் தாபம் மேலிட்டது பூதனைக்கு.

ஆனால் இந்தக் குழந்தையைத் தான் அவள் கொல்லவேண்டும். அதுதான் அவளுக்கு இடப்பட்டிருக்கும் வேலை. பேசாமல் வேலையையே விட்டுடலாமா என்று கூட எண்ணினாள். இந்தக் குழந்தையைக் கொல்லுவதை விடக் கம்சன் கையால் அவள் இறந்துவிடலாமோ என்று எண்ணினாள். அவள் மட்டும் இறந்தால் பரவாயில்லை, அவள் கணவன் ப்ரத்யோதாவும் இறக்க நேரிடும். பின்னர் அவளுடைய எட்டுக் குழந்தைகளின் கதி என்னாவது? கம்சனின் கடுங்கோபம் அவளுடைய மொத்தக் குடும்பத்தையும், குலத்தையும் பாதிக்குமே. ம்ம்ம்ம்., இந்தக் குழந்தையைக் கொல்லுவதுதான் தன்னுடைய கடைசிக் கடமையாக வைத்துக் கொள்ளவேண்டும். பூதனை அந்தக் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். குழந்தை அவள் பார்வையால் ஈர்க்கப் பட்டு அவளைப் பார்க்க பூதனை குழந்தையைக் கவரத் தன் கைகளால் தட்டி, வாயால் சத்தம் கொடுத்துக் குழந்தையைக் கூப்பிட்டாள் தன் பக்கம். குழந்தையும் அவளைப் பார்த்து மிக மிக மோகனமாய்ச் சிரித்தது. ஒரு கணம், ஒரே கணம் தன்னை மறந்த பூதனை பின்னர் நிதானத்துக்கு வந்தாள், தன்னிரு கைகளையும் நீட்டிக் குழந்தையைக் கூப்பிட, அவனும் வந்து அவள் கைகளில் அடைக்கலமானான்.

குழந்தையைக் கைகளில் ஏந்திய பூதனைக்குத் தன்னை அறியாமல் அந்தக் குழந்தைக்கு அமுதூட்டத் தோன்றியது. அப்போது அவள் நினைவில் வந்தது, யமுனையில் குளித்ததும், ஒருவருக்கும் தெரியாமல் தன் மார்பில் விஷம், கொடிய விஷத்தைத் தடவிக் கொண்டது. இம்மாதிரிக் கொடிய விஷத்தை மார்பில் தடவிக் கொண்டு சிறு குழந்தைகளுக்குப் பாலூட்டுவது போல் பல குழந்தைகளைத் தான் இத்தனை நாட்களாய்க் கொன்று வந்திருப்பதும், இப்போது கம்சனின் ஆணை இந்தக் குழந்தையையும் இம்மாதிரிக் கொல்லுவது என்பதே என்பது நினைவில் வர அவள் மனதில் போராட்டம். என்றாலும் அதையும் மீறித் தாய்மை உணர்வும், குழந்தையின் அழகும், இத்தனன அழகான குழந்தைக்குத் தன்னிடம் உள்ள எதைத் தான் தரக் கூடாது என்ற உணர்வும் மேலோங்கியது. குழந்தை அவள் கைகளில் மீண்டும் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தன் வயமிழந்த பூதனை தன்னை அறியாமலேயே குழந்தைக்குப் பாலூட்டத் தொடங்கினாள்.

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே

மீண்டும் ஒருமுறை சிற்பத்தை பார்த்தேன் – மேலே கூறப்படும் அனைத்து உணர்ச்சிகளும் அந்த முகத்தில் இருப்பது போலவே தெரிந்தது. அது பாதகி பூதனை அல்ல சந்தர்ப்ப வசத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு தாய் முகமே என்றும் புரிந்தது.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கல்லில் ஒரு நாடகம் அரங்கேறுகிறது – பிரதீப் சக்ரவர்த்தி

நண்பர்களே இன்று நண்பர் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்கள் நம்முடன் ஒரு அருமையான பதிவை பகிர்கிறார். சரித்திரம், முக்கியமாக கல்வெட்டுகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தும் இவரது கோயில் வாகனங்களை பற்றிய நூல் அறிமுகம் முன்னர் பார்த்தோம்.

அதை அடுத்து அவர் தஞ்சாவூர் பற்றிய ஒரு அற்புத நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார் Thanjavur A Cultural History. வரும் நாட்களில் இவரிடத்தில் இருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம். நமக்காக அவர் ஒரு விசேஷ பதிவை தருகிறார். இதோ

திருமயம் புகழ் பெற்ற யாத்திரை தலம் – மதுரை அருகில் இருக்கும் இந்தத் தலத்தை பற்றி நான் ஹிந்து பேப்பரில் விரிவாக முன்னர் எழுதி இருந்தேன். பலமுறை அந்தப் பக்கம் பயணிக்கும் போது சென்று வருவேன்.

விஜய் சிற்பங்கள் பற்றி இடும் பதிவுகளை வாசித்து விட்டு, நானும் ஒரு சிற்பி கல்லில் எப்படி பல காட்சிகளை கொண்ட நாடகத்தை இயற்றுகிறான் என்பதை, அவரைப்போலவே, இந்தப் பதிவில் விளக்க முயற்சிக்கிறேன். நாம் மூலவரை பார்ப்போம். பிரம்மாண்ட சிற்பம் பத்தடிக்கும் மேலே இருக்கும் – தாய் பாறையில் குடைந்து வடிக்கப்பட்ட இதன் காலம் சுமார் 7ஆம் நூற்றாண்டு என்றும் பெரும்பிடுகு முத்தரையர் என்ற முத்தரையர் தலைவருடைய அன்னை பெருந்தேவி என்பவர் உபயம் என்றும் தெரியவருகிறது. மேலும் வெளியில் கட்டுமானக்கோயிலின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

பெருமாள் ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டிருக்கும் காட்சி. நாபியில் இருந்து பிரம்மா தோன்றுகிறார்.

நண்பர் அசோக் அவர்களின் அற்புத உதவியுடன் ( தூண்களை மாயமாக மறைத்துவிட்டார் – copyright image)

குப்தர் காலத்து சிற்பி போல இங்கேயும் சேஷனின் உடலை சாதாரணமாக சுருட்டி இருப்பது போல காட்சி அமைத்துள்ளார்கள் – மற்ற இடங்களில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக இருக்கும் ஆதிசேஷனின் உடலை போல அல்லாமல் காட்சி ஆரம்பித்து விட்டது.

அசுரர் மீது தனது விஷத்தை துப்பும் காட்சி – விஷம் அக்னி பிழம்புகளாய் சீறிச் செல்கிறது.

அவ்வளவு பலத்துடன் விஷத்தை கக்கிய பாம்பின் தலை மிகவும் தத்ரூபமாக கொத்திவிட்டு பின்னால் அசைவதை போல சிற்பி வடித்துள்ளது மிகவும் அருமை.

காட்சி நகரும் திசையை நமக்கு உணர்த்தும் வகையில் மேலே நித்யசூரிகள் பறந்து வருகின்றனர். எம்பெருமானின் திருமுகத்திற்கு மேலே சிற்பி – இயற்கையாகவே அமைந்த கல்லின் வளைவை தனது சிற்பத்தின் ஒரு அம்சமாக உபயோகித்து, மேலே பறந்து வருபவர்களுக்கும் கீழே நடக்கும் காட்சிகளுக்கும் ஒரு இடைவெளி நிறுவ முயற்சிக்கிறானோ? பறந்து வருவோரை குறிக்க அவர்களது கால்களின் அமைப்பை, அப்படி வடிக்கும் போதும் கவனமாக, கடவுளின் முகத்திற்கு முன் கால்கள் இல்லாத படி வடித்திருப்பது அருமை.

ஒரு பக்கம் கருடனும் சித்திரகுப்தனும் உள்ளனர். சிலர் இது குடைவரையை நிறுவிய அரசனின் சிலையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அந்தப் பக்கம் பார்க்கும் போது இயற்கையாக வரும் கல்லின் வளைவை கொண்டு இரு அசுரர்களும் கொஞ்சம் தொலைவில் இருக்கின்றனர் என்று நமக்கு உணர்த்துகிறான் போல.

ஒரு பக்கம் சாயும் வண்ணம் அசுரர்களை செதுக்கி அவர்கள் சீக்கிரமே மாண்டு அழியப்போகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறான் அந்த சிற்பி.

இதே கதை பல்லவ சிற்பி வடித்த முறையும் முழு கதையையும் படிக்க

பிரம்மாவின் அருகில் மான் தலையுடன் இருப்பது யார்?

நன்றி படங்கள்: Flickr : lomaDI, Prof Swaminathan and http://senkottaisriram.blogspot.com/2008/04/thirumayam-near-pudukkoottai-tamil-nadu.html


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

விரைந்து செயல் பட்டு குறை தீர்த்த அதிகாரிக்கு நன்றி

வலைப்பூக்களில் பதிவுகளை எழுதும் பலரும் ( சினிமா , அரசியல் உட்பட ) பல மணிநேரம் செலவிட்டு தங்கள் கருத்துகளை தங்கள் வாசகர்கள் விரும்பும் ( விரும்புவார்கள் என்ற நம்பிக்கை !!!) வண்ணம் படைத்து விட்டு பின்னூட்டத்திற்கு காத்துக் கிடக்கும் காலம் இது.. வலைப்பூ எழுதுவதே நீ இந்திரன் சந்திரன் , ஆஹா ஓஹோ என்று வரும் ( வெறும் ) பின்னூட்டங்களை எதிர்பார்த்து மட்டுமே இல்லை என்றாலும், கண்டிப்பாக இன்னும் பல நல்ல படைப்புகளை ஆர்வத்துடன் அவர்கள் எழுத அவை தூண்டும். ஆனால் நம்மை போல சிற்பம், கலை, அழிந்த ஓவியம் என்று எழுதும் நமக்கு பெரும்பாலும் தீவிர ரசிகர்கள் சிலரும் நாமே முதுகில் தட்டிக்கொண்டு ஓடுவது தான் கதி. ஆனால் ஒரு பதிவுக்கு நல்ல விளைவு நேர்கையில் வரும் மன நிறைவு ஒரு நெகிழ்வு தான். அப்படி ஒரு காரியம் நடைபெற்றுள்ளது. அதுவும் நமது அழியக்கூடாத குலதனங்கள் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்று மனம் சோர்வு அடையும் பொது , அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் நம் குரலுக்கு செவி சாய்த்து நடத்திய காரியம் தான் அது.

முதல் நன்றி இந்த பதிவை படித்து விட்டு வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்., அங்கே சென்றபோது அங்கு நடந்த தப்பை உடனே படம் பிடித்து அனுப்பி வைத்த நண்பருக்கு . என்ன கொடுமை இது ?, அடுத்த நன்றி பதிவை படித்துவிட்டு அதை தனக்குத் தெரிந்த சம்பந்தப்பட்ட அதிகாரியின் பார்வைக்கு அனுப்பிய நண்பருக்கு. நமது முக்கியமான நன்றி – ஒரு வலைபூ குறிப்பை அலட்சியாமாக கருதாமல் விரைந்து செயல் பட்டு குறை தீர்த்த அந்த அதிகாரிக்கு நன்றி! நன்றி!

இதோ புத்துயிர் பெற்று நிற்கும் வாயிற் காப்போன், மற்றும் கீழே உள்ள கல்வெட்டு.

முடிவாக நன்றி – செயல் வீரர் பணி செவ்வனே முடிந்துள்ளது என்று படம் பிடித்து அனுப்பி உதவிய நண்பருக்கு.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ரிஷபாந்திகா , வீணாதாரா, அர்தனாரி சிவன் – திரு லாக்வூட் அவர்களது பல்லவ கலை நூலில் இருந்து

நமது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு இந்த தளத்தில் திரு கிஃப்ட் சிரோமனி அவர்களது
தாக்கம் பற்றி தெரிந்திருக்கும்

பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

அந்த பதிவில் நான் இவ்வாறு எழுதி இருந்தேன்

” நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

எனது பாக்கியம் சென்ற மாதம் சென்னை சென்றபோது அவரது மனைவியார் திருமதி ராணி சிரோமனி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது கணவரின் நெருங்கிய நண்பரான திரு மைக்கல் லாக்வூட் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கினார் ” எனக்கு மாமல்லபுரத்தின் ஜாலங்களை அறிமுகப் படுத்தியவர் திரு கிஃப்ட் சிரோமனி ” என்று..

அவர் தனது ஆராய்ச்சிக் குறிப்புகள், நூல்கள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள அனுமதி தந்துள்ளார். இதற்காக நாம் திரு லாக்வூட் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். இதோ அவர் தன இளமை பருவத்தில் வல்லம் குடைவரை அருகில். 1969 ஆம் ஆண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் (அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஆறு ) – நான் இன்னும் பிறக்க கூட இல்லை !

அவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள படியுங்கள்

Dr. Lockwood

அறிமுகம் கிடைத்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் பல பல்லவர் சம்மந்தமுள்ள பதிவுகளை அவருக்கு அனுப்பினேன். அவரும் பொறுமையாக படித்து தன் கருத்துகளைத் தந்தார். அப்படி ஒரு பதிவில் நாங்கள் சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி என்ற தொடருக்காக திருக்கழுக்குன்றம் சென்றபோது அங்குள்ள ஒரு சிற்பம் பற்றி எடுத்துரைத்தார்.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

பல காலம் முன்னர் நடந்த விவாதம் பற்றி தெரியாமல், வெளிச்சுற்றில் இருக்கும் இந்த சிற்பத்தை ரிஷபவாஹன சிவன் என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். இதனை பற்றி விளக்கம் தரும் வகையில் தனது பல்லவ கலை என்னும் நூலில் உள்ள குறிப்புகளை திரு லாக் வூட் எனக்கு அனுப்பி வைத்தார். கருவறையின் உள்ள சுவற்றிலும் இதே சிற்பம் இருப்பதாகவும், வெளியில் இருப்பதை விட இன்னும் நல்ல நிலைமையில் இருப்பதால் நன்றாக ஆராய முடியும் என்றும் கூறினார்

அவரது குறிப்பைப் படிக்குபோது மல்லை கடற்கரை கோயிலில் உள்ள ஒரு சிறு ஆலயத்தில் உள்ளே இருக்கும் சிற்பமும் இதே வடிவம் என்ற அவரது கருத்து தெளிவானது.

நண்பர் அசோக் அவர்களது படங்கள் கொண்டு நாம் இன்னும் நன்றாகப் பார்க்க முடிகிறது

இதைப் பார்த்தவுடன் இது சிவன், வெறும் ரிஷப வாஹன சிவன் மட்டும் இல்லை வீணாதாரா என்று சொன்னால் – அப்படியே ஒப்புக்கொண்டு இருப்பேன். ஆனால் திரு லாக்வூட் அவர்கள் இது ஒரு அர்த்தநாரி வடிவம் என்று கூறுகிறார். பல்லவ அரசன் ராஜசிம்ஹ பல்லவன் தனக்கென்று ஒரு சில சிறப்பு சிற்பங்களை வைத்துள்ளான். அவற்றை நாம் மல்லை ஓலக்கனேஸ்வர கோயில், கடற்கரை கோயில் மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் என்று எங்கோ ஓரிடத்தில் திரும்ப திரும்ப பார்க்க இயலும்.

ஓலக்கனேஸ்வர ஆலயத்தில் இந்த சிற்பம் இல்லை. கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் முன்னர் கஞ்சி கைலாயநாதர் கோயில் சென்று தேடுவோம். அங்கே ஒரு வீணாதாரா சிற்பமும் ஒரு வீணாதாரா அர்த்தனாரி வடிவங்களும் உள்ளன.

படங்களுக்கு நன்றி திரு சௌராப் மற்றும் கிருஷ்ணமுர்த்தி மாமா

நாம் முன்னரே அர்த்தனாரி வடிவத்தை பற்றிய பதிவில் எப்படி இரு பாகங்களும் வேறு படுகின்றன என்று பார்தோம்.

சிற்பிக்கு “விடை”யே விடை

இப்போது கைலாயநாதர் சிற்ப்பத்தை அருகில் சென்று பார்ப்போம்.

அர்த்தனாரி என்று தெளிவாகிய பின்னர் வீணையை பார்ப்போம்.

சுமார் எட்டாம் நூற்றாண்டில் வீணை எப்படி இருந்தது என்று நாம் அறியமுடிகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று மேலே இருக்கும் பாகம் குடம் போல இல்லாமல் , திருப்பி பொருத்தப்பட்ட குவளை போல உள்ளது. இதனை மார்புடன் அணைத்து வாத்தியத்தை வாசிக்கும் பொது கலைஞன் இசையுடன் எப்படி இணைத்து வாசித்து இருப்பான் என்று யூகிக்க முடிகிறது. இந்த விதமான வாத்தியம் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். புதுகோட்டை பைரவர் ( நன்றி காத்தி ), பாதாமி அர்த்தனாரி ( நன்றி பிகாசா ) , நேபாளத்து சரஸ்வதி ( நன்றி காலதர்ஷன )

தற்போதைய வீணை இப்படி இருக்கிறது. மேலே இருக்கும் குடம் போன்ற பகுதிக்கு சரோக்கை என்று பெயர், ஆனால் அதற்க்கு இப்போது வேலை உண்டா என்று தெரிய வில்லை.

ஆனால் அந்நாளைய வீணையை போல இந்த திருப்பி பொருத்தப்பட்ட குவளை போன்ற வீணைகள் இன்றும் இருக்கின்றனவா ? அதை மீட்டும் பொது இசையுடன் கலக்கும் உணர்ச்சிகள் …

சரி, மீண்டும் நமது சிற்ப புதிருக்கு வருவோம். இந்த சிற்பம் ஒரு வீணாதாரா அர்த்தனாரி ரிஷபவாகன சிவன் என்று சொல்கிறார் திரு லாக்வூட். அதற்கு சான்றாக இந்த இரு படங்களையும் தருகிறார்.

படம் A கைலாயநாதர் ஆலயத்தின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது. பார்ப்பதற்கு மல்லை மற்றும் திருக்கழுக்குன்றம் சிற்பம் போலவே உள்ளது.

படம் B வீணாதாரா அர்ததனாரி ஆனால் இங்கு ரிஷப வாஹனம் இல்லை அதற்கு பதில் அரியணையில் அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. இந்த சிற்பம் நான்கு புறமும் சிற்பம் கொண்ட பாறையின் ஒரு பக்கத்தில் உள்ளது. இந்த சிற்பம் மல்லை கடற்கரை கோயிலின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது.

மேலும் அவர் கூறுகையில் முன்னர் பார்த்த கைலாயநாதர் வீணாதாரா அர்த்தனாரி வடிவமும் அரியணை மீது அமர்ந்த வண்ணம் உள்ளது. இது மேற்கு புறம் வெளிச்சுவரில் உள்ளது

முடிவாக இந்த புதிரின் விடை மூன்று இடங்களில் உள்ளது. ஒன்று திருக்கழுகுன்றம் கருவறை சிற்பம் – கைத்தேர்ந்த ஓவியர் யாரையாவது வைத்து நேரில் பார்த்து வரையவைத்துப் பார்க்கலாம். மற்ற இரண்டு சிற்பங்களும் தற்போது எங்கே உள்ளன.. தேடிப்பார்க்க வேண்டும்.. படங்கள் எடுத்த ஆண்டு 1969.

பல்லவ கலைகள் நூல் 1997 ஆம் ஆண்டு மறுபதிவின் பொது திரு லாக்வூட் எழுதிய குறிப்பு

இரு சிற்பங்களும் தற்போது தொல்லியல் துறை மல்லை அருங்காட்சியகத்தில் உள்ளன !!

தற்போது இந்த இரு சிற்பங்களும் எங்கு உள்ளன என்று ஆர்வலர் தேடி படம் பிடித்து தர வேண்டுகிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment