கை உடைய மொழி பெயர்த்த சதீஷுக்கு முதல் நன்றி
தஞ்சை பெரிய கோவிலின் 1000-மாவது ஆண்டை முன்னிட்டு அன்றாட செய்திகளில் தஞ்சை சமீபகாலமாக தொடர்ந்து இடம் பெறுவது நாம் யாவரும் அறிந்ததே. அதே நேரத்தில் சரபாய் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு வெங்கலச் சிலையையும் தஞ்சைக்கே மீட்டு வரவேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன என்பதையும் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே செய்யப் பட்டுள்ள ஆய்வுகளை படிக்க முயல்கையில் பல்வேறு செய்திகள் நமது ஆர்வத்தை தூண்டி, வெங்கலச் சிலைகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை நமக்கு அளிக்கின்றன.
கிடைத்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன: சற்றே நீளமான பதிவுதான் ஆனால் நிச்சயம் சுவையாக இருக்கும் என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன்.

( புகைப்படத்திற்கு நன்றி: திரு. குடவோயில் பாலசுப்ரமணியம் அவர்களின் நூலான இராஜராஜேச்சுவரத்தின் பின் அட்டைப்படம்)
இது ராஜராஜசோழரா என்று அறிந்து கொள்ள வேண்டுமா? 1014-ஆம் ஆண்டு தஞ்சை ஆலயத்தின் மேற்குப் பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_2/no_36_to_40_on_1st_niche_west_enclosure_1st_2nd_inscription.html
எண். 38. மேற்குப் பகுதியில் உள்ள முதல் மாடத்தின் மூன்றாவது கல்வெட்டு:
ஏழு உருவங்களைப் பற்றி விளக்கும் இந்தக் கல்வெட்டு இராஜராஜத் தேவரின் 29ஆம் ஆண்டுக்கு முன்னர் இராஜராஜேச்சுவர் ஆலயத்தின் நிர்வாகியால் வெட்டப்பட்டது, இவரைப் பற்றிய தகவல்களும், அவரால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களின் எண்ணிக்கை (பத்தி 23 – 50) மற்றும் இரண்டு நகரத்தை சார்ந்த மக்களின் நன்கொடைகளைப் பற்றிய தகவல்களும் (பத்தி 51 & 59) கல்வெட்டு எண் 26-ல் காணக்கிடைக்கின்றன. இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் உருவங்கள்: நம்பி ஆரூரனார் (பத்தி 2, 23, 55, 59), நங்கைப் பரவையார் (5, 25, 57, 66), திருநாவுக்கரையர் (8, 29, 53), திருஞானசம்பந்தடிகள் (11, 36, 51), பெரிய பெருமாள்(14, 44), அவரது துணைவியார் ஓலோகமாதேவி (17, 47), சந்திரசேகரர்[7] (20). இதில் பெரிய பெருமாள் மற்றும் அவரது துணைவியார் ஓலோகமாதேவி உருவங்கள் இராஜராஜ சோழ மன்னரும் அவரது துணைவியாரும் ஆலயத்தைக் கட்ட அருள் செய்த சிவபெருமானான சந்திரசேகரரை வணங்குவதைப் போல் இருக்கின்றது என்பது கருத்து.
மொழிபெயர்ப்பு:
1. ஸ்வஸ்திஸ்ரீ! இராஜராஜத்தேவரின் ஆண்டு 29 – ல் பொய்கை நாட்டுத் தலைவனும் ஆலய நிர்வாகியுமான ஆதித்தன் சூரியன் தென்னவன் மூவேந்தவேளனால் ஸ்ரீஇராஜராஜேச்சுவரர் ஆலயத்தில் பின்வரும் தாமிர சிற்பங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. சிலைகளின் அளவுகள் ஆலயத்தின் முழத்திலும், ஆபரணங்கள் தக்ஷின மேரு விடங்கன் அளவையிலும், தங்கம் ஆடவல்லான் அளவையிலும் அளந்து ஆலயத்திற்கு அளிக்கப்பட்டன என்பது கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது: –
…………………
14. இரண்டு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஒரு முழம் நான்கரை விரல் அளவு உயரம் கொண்டது.
15. ஐந்து விரல் இரண்டு தோரை அளவு கொண்ட ஒரு தாமரைப் பீடம்.
16. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
17. இரண்டு திருக்கரங்கள் கொண்ட ஓலோகமாதேவியாரின் செப்புத் திருமேனி ஒன்று, இருபத்திரண்டு விரல் இரண்டு தோரை உயரம் கொண்டது.
18. ஐந்து விரல் உயரம் கொண்ட தாமரைப் பீடம் ஒன்று (மேற்சொன்ன சிற்பத்திற்கு)
19. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
20. நான்கு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் தேவாரத் தேவரான சந்திரசேகரதேவரின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஐந்து விரல் மற்றும் இரண்டு தோரை உயரம் கொண்டது.
21. செப்பு பீடம் ஒன்று இரண்டு விரல் நான்கு தோரை சதுரம் மற்றும் ஒரு விரல் உயரம் கொண்டது. இதோடு இணைந்த தாமரைப் பீடம் ஒன்று ஒன்றரை விரல் உயரம் கொண்டது.
22. இருபத்தியொரு விரல் சுற்றளவு கொண்ட சிலையின் செப்புத் தோரணக்கால் ஒன்று.>>>>>>>>
நம்முடைய கவனம் இப்பொழுது பதிந்திருப்பது மேற்குறிப்பிட்ட அளவுகளில்: அதுவும் ஒரு முழம், நான்கரை விரல் அளவில். ஒரு முழம் என்பது தோராயமாக 15 அங்குலம், நான்கரை விரல் என்பது அரை முழம், அப்படியெனில் மொத்த அளவு 22.5 அங்குலங்கள் அதாவது 57 செ.மீ. ஆனால், இந்த அளவைகள் இடத்திற்கு இடம், ஆலயத்திற்கு ஆலயம் வேறுபடும், ஒரே அளவு அல்ல! சில காலத்திற்கு முன் ஒரு ஸ்தபதியிடம் இருந்து தெரிந்து கொண்டது: அளவைகள் ஒரு இடத்தில் விளையும் நெல் மணிகளின் அளவை வைத்துக் கூட தேர்வு செய்யப்படுமாம்! அதோடு மட்டுமல்ல ஆட்சியாளர், அவரது பிறப்பு மற்றும் பல காரணிகள் முன்னிட்டும் கூட இந்த அளைவைகள் வேறுபடுமாம். அப்படி தேர்வு செய்யப்பட்ட அளவுகளைக் கொண்டே ஒரு இடத்தின் ஆலயங்கள், ஆலயத்தில் உள்ள தெய்வங்கள் மற்ற சிற்பங்கள் முடிவுசெய்யப்படும். இது மனிதனின் மரபணுவைப் போன்றது. ஆய்வாளர்கள் நிச்சயம் தஞ்சைப் பெரியக்கோவிலின் மூல அளவையை கண்டுபிடித்தால் இந்த முழச் சிக்கல் சுலபமாக தீர்ந்து விடும்!
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து ரூ-386 க்கு வாங்கப்பட்ட ,Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994) என்ற நூலை வைத்துத்தான் நாம் வெங்கலச்சிலைகளைப் பற்றிய தேடலை மேலும் தொடரப்போகிறோம்.

படத்தில் தோன்றுவதை விடப் பெரியது இந்த நூல், கொடுக்கும் பணத்திற்கு மேல் கிடைக்கும் விருந்து.

சற்றே கருமையாகத் தோன்றும் பக்கங்கள் முழுதும் வெங்கலச் சிலைகளின் விளக்கங்கள், வெள்ளை நிறப் பக்கங்கள் முழுவதும் படத்தொகுப்பு. ஒவ்வொரு பக்கமும் சுவாரசியம் நிறைந்தது. சரி சரி நாம் தேடும் திருமேனி இருக்கிறதா இல்லையா என்று கேட்பது புரிகிறது! நாம் தேடும் சிற்பமும் இங்கிருக்கிறது. இதோ…

இந்தச் சிலை பற்றி கூறப்பட்டுள்ள விபரங்கள் (மொழிபெயர்ப்பு):
சோழ மன்னரின் உருவத்தைக் காட்டும் 74 செ.மீ. உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை பத்மாசனத்தின் மீது ஸமபங்க ஆஸநம் கொண்டு கூப்பிய கைகளுடன் உள்ளது – மகுடமும், சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சையும் நல்ல வடிவமைப்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை மட்டுமின்றி தோளணிகள், கழுத்தணிகள் உட்பட ஏனைய ஆபரணங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளன. நேர்த்தியாகவும் துல்லியமான வடிவமைப்பையும் உடைய முகம் சதுரமாகத் தெரிகிறது. உருவத்திற்கு பொருத்தமான அடக்கத்தைக் காட்டும் அபிநயம். வழக்கமான வளையம் போன்ற கழுத்தணி காணப்படவில்லை ஆனால் பொருத்தமான இரண்டு கழுத்தணிகள். மென்மையான சன்னவீரம் (வெற்றி மாலை) அந்தக் காலக்கட்ட ஸ்தபதிகளின் பாணியில் உள்ளது.
உடலமைப்பு என்னவோ சற்று பொருத்தமாக இல்லை. மார்பகத்திற்கு பொருத்தமானதாக இல்லாவிட்டாலும் கைகள் வீரத்தைக் காட்டுவனவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நீட்டிக் கொண்டிருக்கும் மார்புக் காம்புகளும், கையணிகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கையணிகளில் மணிகள் பொருத்தப்பட்டு தனித்துவமாகத் தெரிகின்றன. இது போன்ற வெங்கலச் சிலைகள் இந்தக் காலக்கட்டத்தில் காண்பது அரிது. அதுமட்டுமல்ல இந்த சிலையில் உள்ள வடிவமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகவும் இதற்கு பிற்காலச் சிற்பங்களில் கூட காணக் கிடைக்காததாகவும் தோன்றுகிறது. தோள்பட்டையின் மேல் இருக்கும் அணிகள் பக்கவாட்டில் மட்டும் இருப்பது மிகவும் சுவாரசியம். அதோடு மட்டுமல்லாமல் கைகளுக்கு இடையே மலர் போன்ற ஒன்றை வடிவமைத்திருப்பது மிகுந்த கலைத்திறனைக் காட்டுகிறது.

சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சைகளின் வடிவமைப்பு மிகவும் அபாரம்! அதில் இருந்து தொங்கும் தோரணங்களும், குஞ்சங்களும் கலை நேர்த்தியை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கீழாடையின் (கோவணம் போன்ற) (கரை)ஓரங்களின் வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. இடுப்புக் கச்சையின் வடிவமைப்பு மிகவும் நவீனமாகத் தெரிகிறது. கால்களின் வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தியாக இல்லை, முட்டிகள் மட்டுமல்ல கால் தசைகளின் வரியமைப்புகளும் இயற்கையாக இல்லை. பாதசாரங்கள் (கொலுசு) இல்லாமல் இடக்காலில் மட்டும் காணப்படும் கழல் (சிலம்பு போன்ற ஒன்று) முக்கியமாக குறித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற கழல்கள் கொண்ட சிற்பங்கள் சிதம்பர ஆலயத்தில் மேற்குப்புற மற்றும் கிழக்கு கோபுரத்திலும் காணப்படுகிறது. வேறு வகையான கழல்கள் சுந்தரபெருமாள் கோவில் சிற்பங்களிலும், கங்கைகொண்ட சோழபுரச் சிற்பங்களிலும் காணப்படுகிறது. ஆனால் பிந்தைய காலச் சிற்பங்களில் இது போன்ற கழல்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி பிற்காலச் சிற்பங்களில் இரண்டு கால்களிலும் கழல்கள் காணப்படுகின்றன, ஒரு காலக் கட்டத்தில் இவையில்லாத சிற்பங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.
தாமரைப்பீடம் எளிமையானதாகவும், நுண்ணிய வேலைப்பாடமைந்த தாகவும் இருக்கிறது. இதழ்கள் மிகப் பெரியதாகவும், அதனுடைய வரிகள் மங்கலானதாகவும், இதழ் நுனிகள் தெளிவின்றியும் தெரிகிறது. மொத்தமாகப் பார்த்தால் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைத்த சிற்பமிது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தச் சிற்பம் பனிரெண்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது, நிச்சயமாக பதிமூன்றாம் நூற்றாண்டும் அல்ல (JISOA Vol VI P22) 12 -13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்தும் அல்ல (The Art of India and Pakisthan,p 74).
ஒவ்வொரு ஆய்வாளரும் வடிவமைப்பைக் கொண்டு கணக்கிடும் காலம் வேறு வேறாக இருந்தாலும், சிலை தனியே, பீடம் தனியே, தாமரைப் பீடம் தனியே சொல்லும் அளவுகள் மாறாது. தற்சமயம் கேள்விக்குறியாக இருப்பது கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் முழ, விரல் அளவைகளை எவ்வாறு இன்றைய கால அளவுகளில் மாற்றூவது என்பதுதான்! இந்த நூலில் குறிப்பிட்டிருக்கும் 74 செ.மீ. அளவு சிலையின் அளவு மட்டுமா அல்லது பீடத்தையும் சேர்த்தா? யாராவது சரபாய் அருங்காட்சியத்திற்கு சென்று அளந்து சொன்னால்தான் உண்டு!.
பார்க்கப் போனால் மேற்சொன்னத் தகவல்களோடு இந்தப் பதிவினை முடித்திருக்க வேண்டும். ஆனால் அவன் திருவருள் என்னவோ, திருமதி. லிஸ்பெத் பங்கஜ பென்னிக் அவர்களோடு உரையாடிய போது கிடைத்த திருவிசலூரின் அதி அற்புதமான சிற்பம் மேலும் தொடரவைக்கிறது நம்மை. இவர்தான் காலஞ்சென்ற திரு. இராஜா தீக்ஷிதரின் பதிவுகளை நிர்வகிக்கிறார், அதிலிருந்து கிடைத்த செல்வம் இது.
1930 –ல் திரு. T.G. ஆராவமுதன் எழுதிய தென்னிந்திய சிற்பங்கள்
South Indian Portraits – தென்னிந்திய சிற்பங்கள் ) எனும் கட்டுரையில் இருந்து:
மிகவும் சுவாரசியமான சிற்பம் ஒன்று அந்தக் கட்டுரையில் கிடைத்தது, அதுவும் அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சை பெரியக் கோவிலிலேயே இருந்த ஒன்று. பார்த்தவுடனேயே அறிந்துகொள்வீர்கள் இது முற்றிலும் புதிதான சிற்பம் என்று, அதோடு மட்டுமின்றி இதைப் பற்றி எந்த ஒருக் கட்டுரையிலோ அல்லது எந்த ஒரு அருங்காட்சியகத்திலோ பார்க்காத ஒன்று என்றும் அறிந்து கொள்வீர்கள். காலில் அணிந்திருக்கும் கழல்களை பார்க்கும் அளவுக்கு படம் தெளிவாக இல்லை ஆனால் இரண்டு கால்களிலும் கழல்கள் இருப்பதைப் போன்று தோன்றுகிறது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் இரசிகர்கள் யாரேனும் பார்த்திருந்தால் அல்லது பார்த்தால் நமக்கும் தெளிவு படுத்தலாம். (மேலும் ஒரு வெங்கலச் சிற்பம் தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது, அதனை இதற்குப் பின் காண்போம்)

(மொழி பெயர்ப்பு)
தஞ்சைப் ப்ரகதீஷ்வரர் ஆலயத்தைக் கட்டிய மாமன்னன் முதலாம் இராஜராஜனின் கடைசிக் காலக் கட்டத்தில் (985-1013 கி.பி.) ஆலயத்தின் 37ஆவது நிர்வாகி இராஜராஜருக்கும் அவரது அரசியார் ஓலோகமாதேவியாருக்கும் பல்வேறு படையெடுப்புகளின் செல்வங்களை நிவந்தனமாக விடப்பட்ட ஆலயத்தினுள் சிலைகள் எடுப்பித்ததாக தெரிகிறது. இதைக் குறிக்கும் கல்வெட்டில் உள்ள செய்தியை தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. கல்வெட்டில், இரண்டு திருமேனிகள் அதில் மன்னனின் சிலை ஒரு முழம் நான்கரை விரல்கள் முடி முதல் அடிவரை, அரசியின் சிலை இருபத்திரண்டு விரல்கள் இரண்டு தோரை உயரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையணிகள் மற்றும் காதணிகள் ஆகியவை சிற்பங்களின் ஆபரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி தூங்காவிளக்கு கடவுளைப் போன்றே மன்னனின் சிலைக்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஆலயத்தில் இருக்கும் எந்த ஒரு சிலையும் அரசியின் சிலை போன்று இல்லை, அந்தச் சிலை எங்கோ மாயமாக மறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. . மன்னவனின் சிற்பம் போன்றதொன்று ஆலயத்தில் இருக்கிறது ஆனால் அது கல்வெட்டோடு ஒப்பிடும் பொழுது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சிலையைப் பற்றி அறிந்த தகவல்கள் இதோ. ப்ரகதீஷ்வரர் ஆலயத்தில் உள்ள சிற்பத்தில் உள்ள பெயர் “இராஜராஜேந்திர சோழா, பெரிய கோவிலின் ராஜா” என்று பீடத்தில் பிற்கால எழுத்தினால் பொறிக்கப்பட்டுள்ளது. மன்னவன் கூப்பியக் கரங்களுடன் வணங்கும் கோலத்தில் இருக்கிறார். கலை வேலைப்பாடை பார்த்தால் திருமலையில் உள்ள கிருஷ்ண தேவராயரின் சிலையை விட தாழ்ந்ததாகத்தான் தெரிகிறது. உற்சவத்தின் பொழுது சிலைகளை எடுத்துச் செல்லும் பொழுது இந்த சிலைக்கு மரியாதைக் கொடுத்து எடுத்துச் செல்வதாகவும், இந்தச் சிலை உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலம் செல்வதாகவும் தெரிகிறது. சிலையில் உள்ள பெயரைப் பார்த்தால் ஆலயத்தை நிர்மாணித்தவரும் அதன் நலத்தில் அக்கறைக் கொண்டவருமான முதலாம இராஜராஜரைக் குறிப்பதாகத்தான் இருக்கிறது. உற்சவத்தின் போது நடைபெறும் முறைகளைப் பார்த்தால் இந்தச் சிலை பிற்காலத்தில் மன்னவனின் நினைவாக உருவாக்கப் பட்டதாகத்தான் இருக்க வேண்டும். முதல் பார்வையிலேயே தெரிந்து விடும் இந்தச் சிலை இராஜராஜரால் ஆலயத்திற்கு கொடுக்கப்பட்ட மற்ற சிலைகளைக் காட்டிலும் தரத்தில் குறைவு என்று, அதிலும் இதன் வார்ப்பு முறை தெள்ளத் தெளிவாக இதன் மங்கிய தரத்தைக் காட்டுகிறது. வார்த்தைகளின்றிப் பேசும் மற்ற சிற்பங்களைக் காணும்பொழுது இது ஒரு உணர்ச்சியற்ற மரக்கட்டை போல் தோற்றமளிக்கிறது. மேலும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள அளவுகள் நிச்சயமாய் இந்த இராஜராஜச் சிற்பத்துடன் பொருந்தவில்லை. பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகத் தெரிகின்றன, எதுவாகினும் இது இராஜராஜன் காலத்தியது அல்ல. எல்லாவற்றிலும் இருந்து, இராஜராஜரின் விருப்பத்திற்கிணங்க ஆலயத்தின் நிர்வாகி இரண்டு சிலைகளை விழாக் காலங்களில் உற்சவ மூர்த்திகளோடு ஊர்வலம் எடுத்துச் செல்ல நிர்மாணித்திருப்பார் என்பது ஊகம். ஒருவேலை, அந்தச் சிலைகள் காணாமல் போய்விட்ட பின் இந்தச் சிலைகளை உருவாக்கியிருக்கலாம், அந்தக் காலக் கட்டத்தில் இந்தப் பகுதியினரிடையே இந்தக் கலையின் வளர்ச்சி தேய்ந்திருக்கலாம். ஒருவேளை அந்த உண்மைச் சிற்பங்கள் இருந்திருந்தால் அதனுடைய தனித்தன்மையான கலை நமக்குத் தெரிந்திருக்கக் கூடும், அதன் காலத்தினால் மட்டுமல்ல அந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்த வெங்கலச் சிற்பங்கள் தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த கலை நுட்பத்தில் உருவாக்கப் பட்டன என்பதாலும்!
இந்த வெங்கலச் சிற்பங்கள் இப்பொழுது எங்கே?
இந்தச் சிற்பத்தை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, சதீஷ்-ன் தஞ்சை அருங்காட்சியகத்தின் புகப்படத் தொகுப்பில் கிடைத்த வெங்கலச் சிற்பம் இது!
காலில் அணிந்திருக்கும் வீரக்கழலை வைத்து இது நிச்சயம் ஒரு மன்னராகத்தான் இருக்கக் கூடும் என்று அறிகின்றோம்.
உடலமைப்பில் நேர்த்தி இருந்தாலும் முக வடிவமைப்பு தேர்ச்சி பெறவில்லை. மணிமுடியின் வடிவமைப்பு இதனை பிற்காலச் சிற்பங்களோடு ஒப்பிடுகிறது. இந்தச் சிலைக்கான பெயர் பலகை அப்பொழுது வைக்கப்படவில்லை, இப்பொழுது இருக்கின்றதா என இதைப் படிக்கும் யாரேனும் பார்த்துக் கூறினால் நன்றுசரி, யார் இந்த ராஜரீக உருவம்?
இதுவரை இந்தப் பதிவை ஆழ்ந்து படித்தவரால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் பார்த்தமாத்திரத்தில், இதுவரை பார்த்த சிலைகளின் பொதுவானதொரு அமைப்பு கூப்பிய கைகள் என்று! ஆனால் ஒரு வேறுபாடு, முதல் சிற்பத்தில் இரண்டு கைகளுக்கிடையே ஒரு மலர் இருந்தது. இது எதைக் குறிக்கின்றது? திரு. P.R ஸ்ரீனிவாசன் அவர்கள் நூலிலிருந்து வெங்கலச் சிற்பங்களுக்கான சில விளக்கங்களைப் பார்ப்போம்.
இதே பாணியில் 12-ஆம் நூற்றாண்டை சார்ந்த சண்டிகேஸ்வர சிற்பங்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஈடன் கல்லூரியில் (புத்தகத்தில் உள்ளது) உள்ள கீழுள்ள சிற்பத்தைப் பார்ப்போம்

மேலும் ஒரு தலைசிறந்த படைப்பான பொல்லுனுவாரா (இலங்கை) சண்டிகேஸ்வர சிற்பமும் இதே 12-ஆம் நூற்றாண்டை சார்ந்ததுதான்.
உருவமைப்பு, கூப்பிய கைகள் மற்றும் அதற்கிடையே மலர்கள் ஆகியவை பொதுவாக இருந்தாலும், காலில் கழல்கள் காணப்படவில்லை.

மேலும் ஒரு சுவாரசியமான சிற்பம், தென் ஆற்காடு மாவட்டம் கடலூர் கந்தரக்கோட்டையைச் சார்ந்த மன்னரின் உருவம், அதே நூலில் இருந்து.
இதன் காலம் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. வளர்புரத்தின் ராமரை ஒத்த மணிமகுடம், கழுத்தணிகள் மற்றும் கையணிகள் இந்தக் காலக்கட்ட சிற்பங்களுக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இடுப்புக் கச்சை நெருக்கமான மடிப்புகளுடன், தெளிவான ஓரங்களுடனும் வடிக்கப்பட்டுள்ளன. உத்தரீயம் முன்புறம் அழகான முடிச்சுடனும், தொங்கணிகளுடனும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு முன் பார்த்த சிற்பங்களில் இல்லாதவாறு அஞ்சலி செலுத்தும் கைகளுக்கிடையே உள்ள மணி மாலை மிகவும் கவனிக்கத்தக்கது. முழங்கைக்குப் பின் வளைந்த கைகளும், நல்ல மொத்தமான கழலும் இந்த சிற்பத்தின் பாணி தனித்தன்மை வாய்ந்தது என்பதைக் காட்டுகிறது. முதலாம் இராஜேந்திரர் காலத்தின் பெரும்பாலான சிற்பங்களில் இந்த கழல் பொதுவான ஒன்றாக இருந்தது. இந்த சிற்பத்தின் உருவமைப்பு, விஷ்ணுவின் உருவத்தை ஒத்ததாக இருக்கின்றது அதோடு அழாகான இயற்கையான கால்கள் போன்ற வடிவமைப்பு கலைத்திறனை எடுத்துக் காட்டுகிறது.
ஏற்கனவே பார்த்தது போல் இந்த பத்மாசனத்திலும் இதழ்கள் தெளிவாகத் தெரிகிறது ஆனால் அதன் நுனிகளில் முக்கியத்துவம் தெரியவில்லை. இரண்டு வளையங்கள் கொண்ட சதுரமான பத்ராசனத்தின் மீது இந்த தாமரைப் பீடம் அமைந்துள்ளது.
மேற்சொன்ன தகவல்களிலிருந்து இது ஒரு சிறந்த வெங்கலச் சிற்பம் என்று அறிந்து கொள்ளலாம். திரு. T.G. ஆராவமுதன் இது ஏதேனும் ஓர் சிற்றரசராக இருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் ஆய்வாளர்கள், இது கண்டெடுக்க்ப்பட்ட இடத்தில் உள்ள ஆலயத்தைக் கட்டிய சோழ மன்னன் மதுராந்தகனின் உருவமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இருந்தாலும் அவர்களால் இது எந்த மன்னனின் உருவம் ஒன்று நிச்சயமாக கூறமுடியவில்லை. மதுராந்தகன் என்ற பெயர் சோழர்களில் முதலாம் பராந்தகர், சுந்தர சோழன், முதலாம் இராஜேந்திரர், வீரராஜேந்திரனின் மகன் மதுராந்தகன் என பலருக்கு இருந்திருக்கிறது. இதன் கலைத்தன்மையை வைத்துப் பார்த்தால், முதல் இரண்டு மன்னர்களுடையதாய் நிச்சயம் இருக்காது. முதலாம் இராஜராஜரைப் போலவே அவரது வழிவந்தோரும் உற்சவ மூர்த்திகளுடன் செல்லவும், ஆலயத்தில் அதைக் கட்டிய மன்னன் உருவம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிலையை நிர்மாணித்திருக்கலாம். அதோடு இராஜராஜர் காலச் சிற்பத்தை விட இதில் கலை நுட்பத்தின் முன்னேற்றம் தெரிகிறது. ஆகவே இது முதலாம் இராஜேந்திரருக்காக அவரது வம்சத்தில் வந்தவர் யாரேனும் இதனை நிர்மாணித்திருக்கலாம். காலக் கணக்கின் படி, முதலாம் இராஜேந்திரரின் பாணியில் கலை வளர்ந்த காலம் 1075 (கி.பி.) வரை, தொண்டைமண்டலத்தை ஆண்டுவந்த வீரராஜேந்திரன் 1065 (கி.பி.) ஆண்டில் இதை ஆலயத்தைக் கட்டிய இராஜேந்திரரின் நினைவாக நிர்மாணித்திருக்கலாம். இதனது முடிவை தெரிந்து கொள்ளவேண்டும் எனில், இந்த சிற்பத்தையும், கிராமங்களிடம் திருப்புக் கொடுக்கப்பட்ட மற்ற சிற்பங்களையும் பற்றிய கள ஆய்வு மேற்கொண்டால்தான் முடியும்.
இந்த வெங்கலச் சிற்பத்தின் இருப்பிடமும் தெரியவில்லை!
நீளமான இந்தப் பதிவை உடைப்பதற்காண குரல் ஓங்கி ஒலிக்கிறது மனதினுள், நிறுத்துவதற்கு முன் மேலும் ஒரு அதிசுவாரசியமான சிற்பத்தை பார்த்துவிடுவோம். மேல் பார்த்த அதே நூலில் இருந்து மேலும் ஒரு சோழ மன்னன், மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம்

ஒரு அடி உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம். முன்னர் இது காளகஸ்தி சிவாலயத்தில் இருந்தது, ஆனால் தற்சமயம் ஏதோ ஒரு தனியார் வசம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை! அதிர்ஷ்டவசமாக இதன் பீடத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டாய்வாளர் திரு. G. வெண்கோப ராவ் இது 13ஆம் நூற்றாண்டை சார்ந்த எழுத்துக்கள் என்று கண்டறிந்திருக்கிறார், இதனை திரு. T.G. ஆராவமுதனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டு பாகங்களாக பொறிக்கப்பட்டுள்ள தகவலில், முதல் பாகத்தில் “குலோத்துங்க சோழ தேவர்” எனவும் இரண்டாவது பாகத்தில் “உடைய நம்பி” நிவந்தனமாக கொடுத்ததாகவும் உள்ளது. இதில் உள்ள எழுத்துக்களால் காலத்தைக் கண்டறியும் வேலை சுலபமாகிறது, அதோடு இதன் பாணியும் கலை நுட்பமும் காலத்தை கண்டறிய மிகவும் ஏதுவாக இருக்கும்.
முனைவர். சாஸ்திரி இந்த சிலையப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ” ……இந்த உருவத்தில் பல ஆபரணங்கள் உள்ளன, அதோடு இதன் முகம் இளமையும், உற்சாகமும், புத்துணர்ச்சியையும் காட்டுவதாக உள்ளது. இது மிக முக்கியமானதொரு சிலை, சோழ வம்சத்தின் கலைக்கு ஆதாரமாய் விளங்கும் வெங்கலச் சிற்பம் ஒருவேளை இது மட்டுமாகத்தான் இருக்கும்”
ஆனால் காலத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார் “…..இந்த உருவம் மன்னன் அரியணையில் ஏறும் பொழுது உருவாக்கப் பட்டதாக இருக்கலாம்.”…..இதன் காலம் அனேகமாக 1180 ஆக இருக்கக் கூடும்,” ஒரு வேளை இது முந்தைய காலத்தைச் சார்ந்ததாக இருக்கக் கூடும் என்று எண்ணியவாறு அவர் இதை கூறியிருக்கலாம்!
அழகான இந்தச் சிலையின் அம்சங்கள்: முன்னால் சுருள் சுருளாகக் காணப்படும் முடி, திருஞானசம்பந்தரின் ஒத்த வடிவம், மொத்தமான கழுத்தணிகள், மணிகள் பதித்த தோளணிகள், அழகான ஆனால் அதிக நுண்ணிய வேலைப்பாடில்லாத கையணிகள், அழகான இடுப்புக் கச்சை மற்றும் சிறிய கீழாடை, மூன்று வளையங்களைக் கொண்ட கழல்கள்.
இதனுடைய பீடங்கள் அழகானதாகவும், தாமரைப் பீடம் வழக்கமான பாணியிலும் உள்ளது. மொத்தத்தில் இந்தச் சிலையின் வடிவம் அழகாய் மனதில் வடிக்கப்பட்டு, துல்லியமாய் வார்க்கப்பட்டதாய் உள்ளது. இதன் முகத்தில் உள்ள வசீகரம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், மந்திரப் புன்னகை யாவும் இதன் சிறப்பு. இதன் காலக்கட்டம் 13ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாக இருக்கக் கூடும்.
ஆய்வாளர்கள் நாம் படித்து தெரிந்து கொள்ள ஏராளமானவற்றை கொடுத்திருக்கின்றனர், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன ஆனால் இவையெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. என்னைப் போலவே, இந்த நீண்ட பதிவு உங்களுக்கும் சுவாரசியமாகவும், பொருள் பொதிந்ததாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
தற்போது எங்கு உள்ளன என்ற குறிப்புகள் இல்லாத இந்த சிற்பங்களில் சிலவற்றையாவது நம்மால் மீண்டும் என்றாவது காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை தற்காலிகமாக முடித்துக் கொள்வோம்!