ஒரே நாளில் மூன்று முறை அதிர்ஷ்டம் அடிப்பது கடினம். எனது மனைவியின் பிறந்த நாளன்று், தற்செயலாக நாங்கள் தஞ்சையில் இருந்தோம் – முதல் வேலையாக பெரிய கோயில் ( நானும் அரவிந்தும் விடியல் காலையிலேயே எழுந்து புள்ளமங்கை தனியே சென்று வந்து விட்டோம்). ஒரு போன் போட்டு குடவாயில் பாலு ஐயா இருக்கிறார்களா என்று பார்த்தோம். அவரோ, இதோ வருகிறேன் என்று அடுத்த நிமிடம் பெரிய கோயிலுக்கு வந்தது மட்டும் அல்லாமால், வாங்க.. நானே சுற்றிக் காட்டுகிறேன் என்று புறப்பட்டுவிட்டார். கரும்பு கடிக்க கூலி தேவையா. வாருங்கள் ஒரு கரும்பை, சாறு பிழிந்து உங்களுடன் பகிர்கின்றேன். சிறிய புடைப்புச் சிற்பம் தான், எனினும் சோழ சிற்பியின் கைவண்ணம் குடவாயில் பாலு அவர்கள் சொல்வண்ணம் இரண்டும் சேர்ந்தால். ..
நாம் முன்னரே பெரிய கோயிலில் உள்ள தக்ஷன் தலையை கொய்தது மற்றும் காமனை எரிக்கும் படலங்களின் சிற்பங்களை பார்த்து விட்டோம்
இன்று நாம் பார்க்கும் காட்சி, அவற்றை அடுத்து வருபவை. மகேசன் மீண்டும் குடும்பஸ்தானாக ஆக சம்மதிக்க வைத்துவிட்டனர். தாக்ஷாயினி மீண்டும் உமையாக, பர்வத ராஜன் ஹிமவானின் குமாரியாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈசனே தன் கணவனாக வருவதற்கு தவமும் செய்யத் தொடங்கிவிட்டாள்.கந்தபுராணத்தில் இந்த காட்சியின் ஒரு வர்ணனை உண்டு ( சிற்பம் காலத்தால் அந்த காவியத்திற்கு முற்ப்பட்டது ).
கதை மிகவும் சுவாரசியம். பர்வத ராஜன் ஈசன் தூது அனுப்பிய ஏழு முனிவர்களின் பேச்சை ஏற்று தனது மகளை மகேசனுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டான். ஈசன் தனது திருமணத்திற்கு கிளம்பி வருகிறார். அப்போது ஹிமவானின் மனைவி, ராணி மேனை , ஒரு அம்மாவுக்கே உண்டான ஆர்வத்துடன் தன மருமகனைக் காண விரைந்து செல்கிறாள். தன அருமை மகள் கரம் பிடிப்பவன் என்ன வதன சௌந்தர்யம் பொருந்தியவனாக இருப்பன் என்று பார்க்க அவளுக்கு ஆவல்.
ஈசன் எப்படி வருகிறார் – அவர் தான் திருவிளையாடல் நாயகன் ஆயிற்றே. இன்றும் ஜானவாசம் எப்படி எல்லாம் நாம் கொண்டாடுகிறோம் . என்ன தோரணை, பள பளக்கும் பட்டாடை, உடலெங்கும் தொங்கும் தங்க ஆபரணங்கள் , சிகை அலங்காரம் என்ன நகை அலங்காரம் என்ன, குதிரை மேலே மாப்பிள்ளை வர, ஆட்டம் பாட்டம் என்று கூட வரும் கோஷ்டி அடிக்கும் லூட்டி வேறு.
இதை எல்லாம் எதிர்பார்த்து சென்ற மேனைக்கு அங்கே ஒரு பெரும் அதிர்ச்சி.
பூத கணங்கள் சூழ்ந்து , ரிஷப வாஹனத்தில், அண்ணல் யானை தோல் உடுத்தி, நாக ஆபரணம் பூண்டு, பரதேசி போல வரும் கோலம். அதுவும் நமக்காக திரும்பி படம் பிடிக்க போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.
வரவேற்க வந்த மேனைக்கும் அவள் தோழிகளுக்கும் தூக்கி வாரி போட்டது. உடனே சென்று தன கணவரிடம் முறையிட்டாள்.
ஏற்கனவே சிவன் மகா கோபக்காரன். பிரமன் தலையை. தட்சன் தலையைக் கொய்தவர். இப்படிப்பட்டவர் எப்படி வருகிறார் பாருங்கள்.. இவருக்கா நம் மகளைத் தருவது?என்னால் ஒப்புக் கொள்ளமுடியாது..
http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0239.html
மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்
நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்
குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள்.
அருகில் இருக்கும் பிரம்மன், விஷ்ணு, நாரதர் எடுத்துரைக்க – நடந்தது தக்ஷன் செய்த குற்றத்தின் வினைப்பயன். அதையும் மன்னித்து மகேசன் அவனை உயிர்ப்பித்து ( ஆட்டு தலையு்டன் ) விட்ட கதையை கூறி, உன் மகளுக்கு இவரே ஏற்ற கணவர் என்றும், ஏற்கனவே உள்ளதை கவர்ந்துவிட்டார் என்றும் கூறி சமாளித்து விட்டனர்.
முடிவில் திருமணம் சிறப்பாக நடை பெற்று அனைவரும் நலாமாக கிளை திரும்பினர். அடுத்து குமார சம்பவம் தான். …
குடவாயில் ஐயாவுக்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி எனினும் அவர் இந்த சிற்ப்பத்தை தனது நூலில் வேறு விதமாக விவரித்துள்ளார் . அதையும் விரைவில் பார்ப்போம்.