மகாபலிபுரம், முற்றுப்பெறாத கவிதைகள் – திரு சு . சுவாமிநாதன் , படங்கள் – திரு அசோக் கிருஷ்ணசுவாமி

சுட சுட வருகிறது இந்த பதிவு . இதை விமர்சனம் என்று கண்டிப்பாக சொல்ல இயலாது. இது எனக்கு மல்லையின் அதிசயங்களை ரசனையுடன் கற்றுக்கொடுத்த ஒரு ஆசிரியரின் உழைப்பு , கருங்கல்லில் காவியங்கலாகிய இவற்றை பற்றிய விழிப்புணர்வு பலரை சென்று அடையவண்டும் என்று அயராது உழைக்கும் அவரது உயரிய எண்ணமே என்னையும் அந்த பாதையில் ஒரு சிறு காலடிகளை எடுத்து வைக்க தூண்டியது. அவர் மட்டும் அல்ல, நண்பர், புகை பட நிபுணர், கணினிக் கலை வித்தகர் அசோக் அவர்களது உழைப்பும் சேர்ந்து வெளிவரும் நூலின் அறிமுகம் இது.

ஒற்றைக் காலில் நின்று, கைகளை தலைக்கு மேல் தூக்கி கூப்பியவண்ணம் தவமிருக்கும் அந்த மனிதனின் நோக்கம் என்னவாக இருந்தாலும் சரி, கலைகளை ஆராயும் கலைஞனையும், வரலாற்று ஆராய்ச்சியாளனையும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து தேடல் மனம் கொண்டு ஒவ்வொரு இடமாக பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளையும் நிச்சயமாக கவர்ந்திழுத்திடுவான்.

தங்கள் உழைப்பு , இல்லை இல்லை தவத்தின் பயனே இந்த புத்தகம் என்பதை நமக்கு உணர்த்தவோ என்னவோ அந்த சிற்பத்தை அட்டைப் படமாகக் ஆசிரயர் தேர்ந்தெடுத்துள்ளார். . அட்டைப்படம் எப்படியோ அப்படியே அவர்கள் உருவாக்கிய இந்த நூல் மாமல்லபுரத்தின் கற்சிற்பங்களுக்கு உயிர் கொடுத்து நம் உணர்வோடு உறவாடவைக்கிறது. எவ்வளவோ படைப்புகள் மல்லையப் பற்றி வந்துவிட்டன, இன்னும் வந்து கொண்டேயிருக்கும், ஆனால் இந்த நூல் அங்கிருக்கும் அதிசயத்தை அப்படியே பிழிந்து சாறாக மனதில் ஏற்றுகிறது. இந்த நூலைப் பிரித்து பார்த்த உடனே நீங்கள் மல்லையின் அதிசயங்களுக்கிடையே பயணிக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களோடு முனைவர் திரு. சுவாமிநாதன் அவர்களின் ரத்தினச் சுருக்கமான விளக்கங்கள் திரு. அசோக் அவர்களின் புகைப்படங்களோடு மவுனமாய் அவற்றை விவரித்துக் கொண்டிருக்கும்.

நமது வரவேற்பரையில் இப்படியொரு நூல் இருக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய அவா! எத்தனையோ நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் இருந்தாலும் அவற்றை படித்து விட்டு மல்லை சென்று ஒவ்வொரு சிற்பங்களையும் இவற்றின் சிறப்பு இன்னது தானென்று அறிந்து அவற்றை இரசித்து விட்டு வருபவரின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்தக் குறையைப் போக்க வந்ததே இந்த நூல். திரு நரசையா அவர்கள் சிறப்பான முன்னுரையில் இதுவரை மல்லை புதிர்களை ஆராய்ந்த பலரை நாம் மறக்காமல் நினைவு கோர வைக்கிறார். இது மல்லை செல்லும் ஒவ்வொருவருக்கும் நல்லத் துணையாக இருக்கும் அல்லது சென்று வந்த பின் மனதில் பார்த்து இரசித்த அதிசயங்களைப் பற்றி மேலும் அறிந்து கொண்டு அசை போட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல, பல்லவக் கலைச் சிற்பங்களில் மனதை பறி கொடுத்த எம் போன்ற இரசிகர்களுக்கு இந்த நூல் முழங்கையில் வடியும் மலைத்தேன்! மல்லைக் கற்களின் கலைச்செல்வங்களை இந்த நூலில் கண்டதும் நம் காதில் தானாகவே கேட்கும் அலை ஓசையும், உப்புக் காற்றின் ஈரமான ஸ்பரிசங்களும் தவிர்க்க முடியாதவை.

இந்த நூலைப் பார்த்ததும் ஏதோ வண்ண வாழ்த்து அட்டைகளின் அணிவகுப்பு என்று நினைத்து விடாதீர்கள்! மல்லையின் படைப்புகளை விளக்கும் இதை ஒரு ஆய்வு நூல் என்றும் கொள்ளலாம். ஆனால் மற்ற ஆய்வு நூல்களைப் போலன்றி கண்ணால் பார்க்கும் அனைத்தையும் மனதிற்கு எளிதில் புரிய வைக்கும் ஓர் வண்ணக் களஞ்சியம். ஒரு பக்கத்தில் விவரத்தை படித்துவிட்டு பரப்புடன் நூலின் பின்னால் இருக்கும் படங்களை தேடும் பனி இல்லை. முனைவர் மிகவும் சாமர்த்தியமாக பல்லவக் கலைகளை மிகவும் எளிமையாய் விளக்க, அசோக்கின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பின்னிப் பிணைந்து கற்சிலையின் உருவத்தை உங்களின் மனதிற்கு உணர்வுகள் மூலம் எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு புகைப்படமும் அதோடு இணைந்த சிறு விளக்கமும் உங்களது கவனத்தை ஈர்க்கத் தவறாது! பல்லவர்களின் பரந்த நிலப்பரப்பில் அவர்கள் படைத்த ஒவ்வொரு ஆரம்பகாலச் சிற்பங்களோடு, அவர்களின் திறம் தேர்ச்சியடைந்து வார்த்தெடுத்த மல்லையின் சிற்பங்களை உலகுக்கு காட்டும் முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த பதிப்பாளர்களுக்கு நன்றி உடையவர்களாகிறோம்.

ஒவ்வொரு பக்கத்தை படி(பார்)க்கும் பொழுதும் ஆசிரியரின் மகிழ்ச்சி ததும்பும் மனதையும், அந்த உணர்ச்சியால் விரிந்த விழிகளும் நம்மை மேலும் உற்சாகமூட்டும் இந்த நூல் நிச்சயம் நம் கண்களுக்கும் மனதிற்கும் நல்ல விருந்து. பாதிப் புத்தகத்தில் இருக்கும் பொழுதே மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்கத் தூண்டும் ஆனால் அதற்குப் பின்னர்தான் அதிசயம் காத்திருக்கிறது என்பது எப்படி படிப்போருக்கு புரியும்! முதன் முறையாக மனதைக் கொள்ளை கொள்ளும் தர்மராச இரத்ததின் மேல் கட்டு சிற்பங்கள் முழுமையாக அசோக் அவர்களின் படைப்பாற்றலாலும், அவரது கருவிகளாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடனும் நம் கண்களுக்குள் புகுந்து மனதில் காதலை தோற்றுவிக்கின்றன. அதே போல் கோவர்த்தன கிரி சிற்பங்களும் பிற்காலத் தூண்கள் மறைந்து முழுமையாக மனதை இலயிக்க வைக்கின்றன. அது மட்டுமல்ல அதற்கு மேல் ஒரு படி சென்று ஆரம்பத்தில் சொன்ன தவத்தைக் காட்டும் சிற்பங்கள் இரண்டு பக்கங்களாக விரிந்து ஒவ்வொரு சிற்பத்தையும் சிறப்புரக் காட்டி அப்பப்பா சொல்லவே வார்த்தையில்லை! ஆனால் ஒன்று உறுதி இந்த நூலைப் பிரித்தால் உங்களால் படி(பார்)ப்பதை நிச்சயம் நிறுத்தமுடியாது அப்படியொரு பொருள் பொதிந்த பொக்கிஷம் இது.

அத்யந்தகாமனுக்கு ஒரு அற்புதமான அர்ப்பணிப்பு

விரைவில் கடைகளில் வந்து வெற்றி நடை போட எங்கள் அன்பு கலந்த வாழ்துக்கள்

மேலும் விவரம் பெற

ARKEY GRAPHICS
[email protected]
( இந்த நூல் ஆங்கிலத்தில் வந்துள்ளது. விரைவில் தமிழ் மற்றும் இதர மொழிகளிலும் வரவேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கிறோம் )

இணையத்தில் உங்கள் பிரதியை வாங்க

இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *