உலகில் பலவற்றை நாம் வென்றாலும் காலத்தை வெல்வதென்பது கடினம். அப்படி காலத்தை வென்று அழியாப் புகழ் பெறுவது என்பது அதனை விட கடினம். அப்படி காலத்தை தனது கை வண்ணத்தாலும் , செயல் வண்ணத்தாலும் , வென்று ஒவ்வொரு தமிழனையும் ஆயிரம் ஆண்டுகள் சென்றும் அவனது பெயரை கேட்டவுடன் ஒரு தனி மதிப்பை தானே பெரும் வல்லமை – நமது் ராஜ ராஜ சோழருக்கு உள்ள தனிச் சிறப்பு. ஒவ்வொரு முறை அவர் எடுப்பித்த பெரிய கற்றளியான தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை பார்க்கும் போதும், அமரர் கல்கியின் அற்புத வர்ணனையுடன் பொன்னியின் செல்வனை ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்களுடன் அருண்மொழியை மனக்கண்ணில் சித்தரித்த ஆயிரம் ஆயிரம் ரசிகர்களின் தணியா தாகம் அவரது நிஜ உருவத்தை காட்டும் ஓவியம் அல்லது சிற்பம் பார்க்கவேண்டும் என்பதே. பல முறை இந்த ஆவலை தணிக்க வந்த விடைகள் – பெரிய கோயில் ஓவியம் , சாராபாய் அருங்காட்சியகத்தில் இப்போதும் உள்ள அழகான செப்புத் திருமேனி, ஆனாலும் என்ன, தெள்ளத் தெளிவாக இதுதான் உடையார் ராஜ ராஜ சோழர் என்று சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்க முடியவில்லையே.. அப்படி இருக்கையில், ஒரு தேடலில் இந்த ஆய்வுக் கட்டுரை என் கண்ணில் பட்டது The Problem of Portraiture in South India, Circa 970-1000 A.D.,Author(s): Padma Kaimal
அதில் ஒரு சிறு குறிப்பு இருந்தது. திருவிசாலூர் ஆலயத்தில் உள்ள சிற்பம் மற்றும் அங்கே உள்ள கல்வெட்டு பற்றி . அதை பார்க்கும் முன்னர் ஒரு முறை ராஜ ராஜரின் மெய் கீர்த்தி தனை மீண்டும் ஒரு முறை கண்ணால் காண்போம்
ராஜ ராஜா சோழர் மற்றும் அவரது பட்ட மகிஷி லோகமாதேவி அவர்களின் சிற்பம் கல்வெட்டு குறிப்புடன் என்று இருந்தது
உடனே ஒருபுறம், அந்த சிற்பபத்தின் நல்ல படத்தை கண்டு பிடிக்க நண்பர்களை நாடினேன், மற்றொரு புறம் அந்த முழு கல்வெட்டின் பிரதியை தேடினேன் .
”
சிவயோகநாத ஆலயம் திருவிசாலூர் – கல்வெட்டு , அதற்கு மேலே உள்ள சிற்பத்தில் உள்ள இரு உருவங்கள் – உடையார் ராஜ ராஜர் மற்றும் அவர்தம் பட்டமஹிஷி லோகமாதேவி , அவர்கள் இந்த ஆலயத்தில் செய்த பூஜை மற்றும் கொடுத்த கொடை 458 காசு பொன்.”
கும்பகோணம் அருகில் இருக்கும் கோயில் இது, நண்பர் திரு லக்ஷ்மி நாராயணன் உடனே சென்று படம் பிடித்து தருகிறேன் என்று ஒரே வாரத்தில் படத்தை எடுத்துத் தந்தார். (நலிந்து கிடக்கும் பல கோயில்களின் படங்கள் அவரது தளத்தில் காணலாம், http://picasaweb.google.com/slnvasu)
படம், பொறுமையாக வருகிறது, அதற்கு முன்னர் சில வரிகள். திருவிசாலூர் ஆலயத்தின் காலம் முதலாம் ஆதித்யர் வரை செல்கிறது. கல்வெட்டில் கண்ட கொடை விஷயம் – ஹிரண்ய கர்ப்பம் ( பொன்னால் செய்த பசுவின் உள்புகுந்து வெளி வருவது – இனி பிறப்பே வேண்டாம் என்பதை வேண்டும் – பிறவா வரம் பெற செய்யும் யாகம் ) பற்றிய குறிப்புகள், ராஜ ராஜ சோழர், லோகமாதேவி அனைத்தும் இருந்தாலும் ( இந்த கல்வெட்டின் பிரதி திருவலஞ்சுழி ஆலயத்திலும் இருக்கிறது – குறிப்புக்கு நன்றி நண்பர் அர்விந்த் ). இது உடையாரின் கடைசி ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு. அதாவது 29 ஆம் ஆட்சி யாண்டு ( 1014).
முழு விவரம் இங்கே
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_23/aditya_2_karikala.html
No.42 (Page No 20)
(A. R. No. 42 of. 1907)
The inscription registers an agreement given by the mahasabha of vemgarrur alias Solamattanda-chaturvedimangalam a Brahmadeya in Manni-nadu, to the temple of Tiruvisalur-Mahadeva. A sum of 458 kasu was endowment to the temple and deposited with the assembly by queen Dantisaktivitankiyar alias lokamahadeviyar on the occasion of the performance of tulabhara by the king and of hiranyagarbha by herself in the temple. As interest on this amount they undertook to measure out annually 229 kalam of paddy at the rate of 1 tuni and 1 padakku on every kasu per year, and with this paddy the ur-variyam and kudumbu committees of the year were to meet the daily requirements of akkaradalai offering to the god, of which the details are given as follows:
Items required Equivalent in paddy
Rice – 2 nali … … One kurini and 2 nali
Tupparuppu(dol)—1 nali … …. 5 nali
Cow’s milk – 4 nali …. ….. ….. 1 padakku
Ghee –1 ulakku … …. ….. 1 kuruni
Sugar – 12 ½ palam … …. …. 1 kuruni and 2 nali
Plantain fruits –20 (?) …. …. ….. 6 nali
Arecanut … 10}
Betel leaves … 40} …. ….. …. 2 nali and 1 nali
Earthen pot …. …., …. 1 nali, 1 uri and 2 ¾ sevidu
Firewood …. …. ….. 1 nali
Remuneration to person preparing the offering … 1 nali
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த சிற்பம் இதோ.
அருகில் சென்று பார்ப்போம்.
இந்த ஆலயத்தில் நிறைய சிற்பங்கள் இல்லை. இதை தவிர இன்னும் இரண்டு புடைப்புச் சிற்பம் தான். மற்றவை எல்லாம் சிலைகள். அப்படி இருக்க, இவர்கள் சாமானியர் அல்ல, பொதுவாக பெரிய கொடை அளிக்கும் முக்கியமான சிலருக்கே இந்த வகை சிற்பங்கள் நிறுவப்படும்.
நிற்கும் ஆண், வயதில் சற்று முதிர்ந்து காணப்படுகிறார். (பொதுவாக மற்ற சோழ அரச சிற்பங்கள் அரசர்களை அமர்ந்த நிலையில் தான் காட்டுகின்றன ). அருகில் இருக்கும் அம்மையார், சற்று வயதில் சிறி்யவராக இருந்தாலும் யௌவன வயது யுவதி என்று சொல்ல முடியாது. ஆண் எந்த வித ஆபரணம் அணியவில்லை – தலையில் கிரீடம் இல்லை – அணிகலன் இல்லாத வெறும் சடை குடுமி, இரு காதுகள் நீண்டு இருந்தாலும் (முன்னர் கனத்த குண்டலங்கள் அணிந்தமையால் இருக்குமோ?) இப்போது வெறுமனே உள்ளன, இடுப்பில் வெட்டி போல ஒன்று, காலில் வீரக்கழல் இல்லை. அம்மையார் இதற்கு சற்று மாறாக கழுத்தில் ஹாரம், தலையில் சுட்டி என்று சில ஆபரணங்கள் அணிந்து , நல்ல சீலை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இருவருமே பக்திப் பரவசத்தில் கை கூப்பி நிற்கும் காட்சி அருமை.
இங்கே தான் நாம் சற்று யோசிக்க வேண்டும். அப்படி பெரிய கொடை கொடுக்கும் நபர், ஏன் இப்படி நகை ஒன்றுமே அணியாமல் இருக்க வேண்டும். கல்வெட்டின் படி 29 ஆம் ஆட்சி யாண்டு . உடையார் ராஜ ராஜா சோழர் சிவபாத சேகரன் என்று தன்னை அழைக்க தொடங்கி விட்டார். தீட்சை பெற்று சிவனடியார் ஆகவே மாறிவிட்டார் என்றும் ஒரு வாதம் உண்டு.
அவர்கள் பூஜிக்கும் சிவன்
சிவலிங்கம், அழகே பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. லிங்கத்தின் முன்னர் அபிஷேகம் செய்யும் சங்கு. அப்படி என்றால் இருவரும் தாங்களே அபிஷேகம் செய்து பூ அலங்காரம் செய்து வணங்கி நிற்கின்றனர் என்று கொள்ளலாம்.
இவற்றைக் கொண்டு பார்த்தால் இது மாமன்னர் ராஜ ராஜர் மற்றும் பட்டமகிஷி தந்தி சக்தி விடங்கி லோகமாதேவி என்று கருத முடிகிறது.
வாசகர்களுக்கு ஒரு குறிப்பு. பொன்னியின் செல்வனின் வந்தது போல – ராஜ ராஜரின் மைந்தன் ராஜேந்திரனின் அன்னை வனவன் மாதேவி ( வானதி ) வேறு – இந்த லோகமாதேவி வேறு. இதை கல்வெட்டுகளில் வானவன்மாதேவி திருவயிறு் உதித்த ராஜேந்திரன் என்று வருவதை கொண்டு அறியலாம்.
மேலும் ஆராய இந்த சிற்பத்தினை தீவிர ஆராய்ச்சியாளர்கள் கையில் விட்டு விடுகிறேன்.