இன்று ஒரு அற்புத சிற்ப வடிவம் – தாராசுரம் கோயில் சிற்பம் – தொலைவில் இருந்து முதலில் பார்ப்போம் – அடுத்த முறை நீங்கள் அங்கு செல்லும் பொது அடையாளம் கொண்டு ரசிக்கலாம் அல்லவா. படத்தை பாருங்கள் – ஆணை முகனை அல்ல , அவன் அடியில் கொஞ்சம் வலது புறம் பாருங்கள்.
நுண்ணிய சிற்பம் – இதன் அளவை அறிய அங்கே இருக்கும் வாலி வாதம் சிற்பத்தின் முன்னர் இருக்கும் பேனாவை வைத்து புரிந்துகொள்ளுங்கள் . இதில் ஒரு அற்புத கதை , நாயனார் சரித்திரம் – ஒரு கதையையே ஒரே சிற்பத்தில் வடித்துள்ளனர். இதை எனக்கு திரு குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் விளக்கினார்கள்.
கதைக்கு முன் கருத்து :
புண்ணியங்களுள்ளே சிவபுண்ணியம் சிறந்தது. சிவபுண்ணியங்களுள்ளே சிவபூசை சிறந்தது. சிவபூசையினும் சிறந்தது மாகேசுரபூசை. மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள். மாகேசுர பூசையாவது மாகேசுரர்களை விதிப்படி பூசித்து, அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாம்.
மாகேசுர பூசைசெய்யு முறைமை கூறுதும். சிவனடியார்களைத் தூரத்தே கண்டவுடனே, அவர்களுடைய சாதியையும் குணத்தையும் ஆராயாமல் விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடமே பொருள் எனக் கொண்டு, அவர்களை மனிதர் எனக் கருதாது சிவன் எனவே புத்திபண்ணி, இருக்கைவிட்டு எழுந்து, அகமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் குவித்தகைகளை உடையராய் விரைந்து எதிர்கொண்டு, அவர்களுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து உள்ளம்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினால் ஒற்றி, அவர்களை ஆசனத்திலே இருத்தி, பத்திரபுஷ்பங்களாலே பூசித்து, தூபதீபங் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்கரித்து, கைப்பு புளிப்பு தித்திப்பு துவர்ப்பு கார்ப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடையனவாய் உண்ணப்படுவது தின்னப்படுவது நக்கப்படுவது பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் பிரீதிப்படி அமுது செய்வித்து, “சரீரம் எடுத்ததனாலே பெறும் பயனை இன்றன்றோ பெற்றேன்” என்று சற்காரவசனம் சொல்லி, அவர்கள் போம்பொழுது அவர்களுக்குப் பின் பதினான்கு அடி போய் வழிவிடுக. சிவனடியார்களைச் சாதிகுணம் குறியாது சிவன் எனவே புத்தி பண்ணல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம்.
இப்போது கதை :
“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத்தொகை.
இயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்
கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே
மன்னியலே ளாண்டொன்மை யிளைசை மாறர்
வறுமையா லுணவுமிக மறந்து வைகி
யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி
யும்பர்பிரா னணையவய லுழுது வித்துஞ்
செந்நென்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச்
சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து
பன்னலரு முணவருத்தற் கெழுந்த சோதிப்
பரலோக முழுதாண்ட பான்மை யாரே.
இளையான்கடியென்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரும் குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும், சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்பு கொண்ட சிந்தையையும் உடையவராகிய மாறனார் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வருணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண்டு, அஞ்சலிசெய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, உள்ளும்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினாலொற்றி, ஆசனத்திலிருத்தி, சைவாகம விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடையனவாய், உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை அவரவர் பிரீதிப்படி திருவமுதுசெய்விப்பார்.
இப்படித் தினந்தோறும் மாகேசுரபூசை பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினாலே செல்வம் அபிவிருத்தியாக, அவர் குபேரனை ஒத்து வாழ்ந்திருந்தார்.
அப்படியிருக்குங் காலத்திலே, சிவபெருமான், அவ்விளையான்குடிமாற நாயனார் இந்தச் செய்கையைச் செல்வம் வந்தகாலத்திலன்றி வறுமை வந்த காலத்தினும் தளராது செய்யவல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர்செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, அந்நாயனாரிடத்திலே உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமை யெய்தும்படி அருள்செய்தார்.
அப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனார் மாகேசுரபூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குதலின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும், முன்போலவே தாஞ்செய்யும் திருப்பணியை விடாது செய்து வந்தார்.
அவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகல்முழுதும் போசனஞ்செய்யாமையால் பசி அதிகப்பட்டு; வீட்டுக்கதவைப் பூட்டிய பின்பு; திருக்கைலாசபதியானவர் சைவவேடங்கொண்டு எழுந்தருளிவந்து, கதவைத் தட்டி அழைக்க; நாயனார் கதவைத் திறந்து, அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், மழையினால் நனைந்த அவருடைய திருமேனியை வஸ்திரம் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங் கொடுத்து, அவருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய மனைவியாரை நோக்கி, “இந்தச் சைவர் மிக பசிகொண்டு வந்திருக்கின்றார். நமக்கு முன்னமே போசனத்துக்கு ஒன்றுமில்லை. ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்கவேண்டுமே; இதற்கு யாது செய்வோம்” என்றார்.
அதற்கு மனைவியார் “வீட்டிலே ஒரு பதார்த்தமும் இல்லை. அயலவர்க்கும் இனி உதவமாட்டார்கள். நெடுநேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கபோவதற்கு வேறிடமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாது செய்வேன்” என்று சொல்லி, பின்பு “இன்று பகற்காலத்திலே வயலில் விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளைகொண்டிருக்கின்ற நெல்லை வாரிக் கொண்டு வந்தால், இயன்றபடி அன்னஞ் சமைக்கலாம். இதுவேயன்றி, வேறொருவழியும் அறியேன்” என்று சொல்லித் துக்கித்தார்.
இந்த வார்த்தை செவிப்புலப்படுதற்குமுன், இளையான்குடிமாறநாயனார் மிக மனமகிழ்ந்து, அதற்கு உடன்பட்டு மிக மழைபொழிகின்ற மகா அந்தகாரமயமாகிய அத்தராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினாலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற்சென்று, அதிலே அதிக மழையினால் நீர்மேலே மிதக்கின்ற நென் முளைகளைக் கையினாலே கோலி வாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு சீக்கிரம் திரும்பி வந்தார்.
அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நென்முளையை வாங்கி, சேறு போம்படி நீரினாலே கழுவியூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி, “அடுப்பிலே நெருப்பு மூட்டுதற்கு விறகு இல்லையே” என்று சொல்ல, அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையிலுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார்.
மனைவியார் அவைகளை முறித்து, அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம் போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கின்ற உலையில் அதையிட்டு, சோறாக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து, “இனிக் கறிக்கு யாதுசெய்வோம்” என்றார், உடனே நாயனார் புறக்கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற்படாத சிறுபயிர்களைக் கையினாலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க; மனைவியார் அவைகளை வாங்கி ஆய்ந்து, நீரினாலே கழுவி, தமது சாமர்த்தியத்தினால் வெவ்வேறு கறியமுது செய்து முடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம் பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, “சைவரை அமுதுசெய்விப்போம்” என்று சொன்னார்.
நாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய ஐயருக்குச் சமீபத்திற்சென்று, “சுவாமீ! அமுதுசெய்ய எழுந்தருளும்” என்று சொல்லி அழைக்க; அவர் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். அதைக் கண்ட இளையான்குடிமாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி, “அன்பனே! நம்முடைய அடியார்களை அமுதுசெய்வித்த நீ உன்மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிரு” என்று திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார்.
இப்போது சிற்பம்
கல் பேசுமா ? இதோ கதையே சொல்கிறது பாருங்கள். மிகவும் உன்னிப்பாக பார்க்க வேண்டும். கதை மனதில் பதிந்ததா? சிற்பத்தை நீங்கள் பார்க்கும் வண்ணம், வலம் இருந்து இடம் – கதை நகரும்படி செதுக்கி உள்ளான் சிற்பி. மூன்றே காட்சிகள் ,
முதல் காட்சி:
மாரர் தலையில் கூடை, அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நெல்முளையை வாங்குகிறார்.
இரண்டாம் காட்சி:
அடியார் – ஒரு மனையில் அமர்ந்து , அவர்களுக்கு எதிரில் ஒரு முக்காலியில் அமுது. அதை அன்புடன் அன்னவெட்டி ( கரண்டி )கொண்டு பரிமாறும் மாரர் துணைவி. அமுதை ஒரு கையில் எடுத்து சுவைத்து – இப்போது தான் சிற்பத்தின் / சிற்பியின் மிக அருமையான கற்பனை – ஜோதி வடிவமாக ஈசன் மாறுவதை எப்படி காட்டிஉள்ளான் பாருங்கள். அடியாரின் தலையில் ஒரு சிறு நெருப்பு, அதன் அருகில் அதைவிட சற்று பெரிய தீ , அதை அடுத்து ஒரு தீ பிழம்பு .
கடை காட்சி:
பரமசிவன் பார்வதிதேவியாரோடும் காட்சி அளித்தல். அபாரம்.
இந்த அளவில் இப்படி ஒரு அற்புத கதையை சுருக்கி செதுக்கிய சோழ சிற்பியின் கலை திறன் நம்மை மலைக்க வைக்கிறது.
Source; http://bhakthimalar.blogspot.com/2007/02/blog-post_24.html
Image courtesy: http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/index.htm