தூங்காதே தம்பி தூங்காதே

நாம் அனைவரும் எப்போதாவது ஒரு முறை நம் பெற்றோர் இடம் இவ்வாறு திட்டு வாங்கி இருப்போம். அதுவும் அதிகாலையில் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் வரும் தூக்கம் ….அதன் சுகமே சுகம். ஆனால் இந்தோனேசியா பரம்பணன் கோயிலில் இந்த காட்சியை கண்டவுடன் நடு மண்டையில் நச்சென்று குட்டினாற்போல விழிப்பு வந்தது.

சரி, முதலில் கதையைப் பார்ப்போம். இராவணனின் தம்பி கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்கியும் ஆறுமாதம் விழித்தும் வாழ்ந்தான். ஏன் அவ்வாறு ? அது ஒரு சாபம் அல்ல, அவனே கேட்டு பெற்ற வரம் ( அதிலும் நம் இந்திரன் கை உண்டு ). தங்கள் அன்னையின் அறிவுரையின் பெயரில் இராவணன், கும்ப கர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீடணன் முறையே நான்முகனிடம் வரம் வேண்டி தவம் இருக்கின்றனர்

முதலில் இராவணனிடம் தோன்றும் நான்முகன் என்ன வேண்டும் என்று வினவ , சாகா வரம் கேட்கிறான் ராவணன். அது இயலாது என்று பிரம்மன் உரைக்க, தேவர், அசுரர், கடவுள் , மிருகம் , பாம்பு என்று மனிதனை தவிர ( தனது சக்தியின் மேல் அவனது ஆணவத்தால் ) வேறு எவராலும் அழியா வரம் பெற்றான்.

இதை கண்ட தேவேந்திரன் , ராவணனை விட பல மடங்கு பெரியவனான ( உருவத்தில் ) கும்ப கர்ணனும் இது போல எதாவது வரம் பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி, சரஸ்வதியிடம் கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க பிரார்த்தனை செய்கிறான்.

அப்போது என்ன நடந்தது :

சரி சினிமா பாணியில்

“பக்தா , உம் பக்தியை மெச்சினோம் – என்ன வரம் வேண்டும் கேள்!” என்றார்.

அப்போது சரஸ்வதி கும்ப கர்ணனின் நாவில் விளையாடுகிறாள். ‘நித்தியத்துவம்’ என்பதற்குப் பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான்.

நித்தியத்துவம் என்றால் அழியாத வாழ்வு என்பது பொருள். நித்திரைத்துவம் என்றால் நன்கு தூங்க வேண்டும் என்பது பொருள்.

பிரம்மனும் “அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்துச் சென்று விட்டார்.

அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்குப் பதில் அசைக்கமுடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன்.

அதன் பின்னர், வாழ்நாள் முழுவதும் தூங்கினால் எவ்வாறு என்று மன்றாடி ஆறு மாதம் உறக்கம், ஆறு மாதம் விழிப்பு, எனினும் இடையில் எழுந்தால் மரணம் என்று அந்த வரம் மாற்றப்பட்டது.

சரி, இப்போது சிற்பத்திற்கு வருவோம். ராமயணத்தின் தாக்கம் – அதிலும் கும்பகர்ணனை படை கொண்டு எழுப்பும் காட்சி, இந்தோனேசியா பரம்பணன் கோயிலில்.

ராமனிடம் தோற்று நிராயுதபாணியாய் நின்ற ராவணனை ” இன்று போய் நாளை வா “என்று
ராமன் அனுப்ப,அவமானம் தாங்க முடியாத ராவணன், தன் வலிமையும், சக்தியும்
இன்று ஒருநாள் யுத்தத்திலேயே குறைந்து விட்டதையும் உணர்ந்தவனாய்,
தன்னுடைய கிரீடமும், தேரும் சுக்குநூறாகப் போய்விட்டதையும் கண்டவனாய்,
வேறு வழியில்லாமல், ராமன் சொன்ன வார்த்தைகளினால் தலை கவிழ்ந்து
திரும்பிகிறான்.

அவமானத்தில் தம்பியை நித்திரையில் இருந்து எழுப்பினால் மரணம் என்று தெரிந்தும் முயல்கிறான் ராவணன் .

அரக்கர்களில் சிலர் சென்று கும்பகர்ணனை எழுப்ப ஆரம்பிக்கின்றனர். ஒரு பெரிய மலை போல் படுத்திருந்த கும்பகர்ணனின் திறந்த வாயானது, அந்த மலையின் குகை போல் தோன்றியதாம். கும்பகர்ணனின் மூச்சுக் காற்று அனைவரையும் வெளியிலும், உள்ளேயும் மாறி, மாறி இழுக்க, சமாளித்த அரக்கர்கள் அவனை எழுப்பும் ஆயத்தங்களைச் செய்தனர்.
தூக்கத்தில் இருந்து எழுந்ததும் கும்பகர்ணன் சாப்பிடப்பல்வகை மிருகங்கள், அவற்றின் மாமிசங்கள், குடம் குடமாய்க் கள், ரத்தம், பல்வேறு விதமான உணவு வகைகள் போன்றவை தயார் நிலையில் இருந்தன. பின்னர் அவன் உடலில் வாசனைத் திரவியங்கள்
பூசி, கொம்புகளையும், எக்காளங்களையும், சங்குகளினாலும் பெரும் சப்தங்கள் எழுப்பிப் முயற்சி செய்தனர். இதை சிற்பத்தில் பாருங்கள்.

குதிரை வீர்கள் பலர் அவன் மீது ஏறி முயல்கின்றனர். சிற்பத்தில் ஒரு குதிரையும் அதன் மேல் உள்ள வீரனும் சோர்ந்து செல்வதும், மற்றோர் குதிரை வீரன் அந்த பணியை தொடர்வதும் பாருங்கள். அது போதாதென்று பலர் ஈட்டி, வாள் கொண்டு அவனை குத்தி எழுப்புகின்றனர். ஒரு யானை வேறு காதருகில் கத்தி முயல்கிறது.

இதை பார்க்கும்போது என் அன்னை இவ்வளவு தொல்லை பட வில்லை என்னை எழுப்ப
என்றும் தோன்றுகிறது.

Image courtesy: http://oldsite.library.upenn.edu/etext/sasia/aiis/architecture/prambanan/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *