இன்றைக்கு ஒரு அற்புத சிற்பம் பார்க்கிறோம் , அதனை ஒட்டிய அற்புத வரலாறு மற்றும் இந்த தளம் நாங்கள் நிறுவியதன் முழு மகிழ்ச்சி என்று பல விஷயங்கள் இந்த இடுகையை சிறப்பிக்கின்றன. ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டப அற்புத தூண்கள் நாம் முன்னர் பல பார்த்தோம், அப்போது திரு ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள், அங்கே உள்ள ஒரு முக்கியமான சிற்பத்தை பற்றி கூறினார். அப்போது அது என்னிடத்தில் இல்லை, நண்பர் அசோக் அவர்களிடம் அதை பற்றி கூறியவுடன், அதற்கு என்ன, நானே சென்று படம் எடுத்து வருகிறேன் என்று அங்கு சென்ற அற்புத படங்கள் பல எடுத்து வந்தார். இந்த அற்புத சிற்பத்தை பற்றி நான் எழுதுவதை விட பல கோயில் புராணங்களை அழகே தொகுத்து அளிக்கும் திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் எழுதினால் மிக சிறப்பாக இருக்கும் என்று அவர்களை அணுகினேன் ( நண்பர் திரு செந்தில் அவர்கள் தக்க சமயத்தில் அவர்களின் அலைபேசி என்னை தந்து உதவினார் ). திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் கேட்டதும் இந்த அருமையான இடுகையை தந்தார். படித்து பார்த்து மகிழுங்கள்.
புண்ணியம் நல்கும் புருஷோத்தமன் – *ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர்.*
”நாராயணா!” என்று நாவிக்க நாளும் நவில்வோர்க்கு நற்கதிக்குயை நல்குவான் திருமகள் நாதன்!
அந்தத் திருமாலவன் எழுந்தளியிருக்கும் திவ்விய தேசங்கள் அனைத்திலும் அன்று முதல் இன்று வரை ஈடும் இணையும் இன்றி முதன்மைத் திருக்கோயிலாய்த் திகழ்வது திருவரங்கமாகும்.கங்கையின் தூயதாய காவிரிக்கும்,கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒர் தீவு போல் அமைந்துள்ளது.
அரங்கமாநகர் ஊர்,அளவில் சிறியதே ஆனாலும் புகழ் ஆகாயம் அளாவியதாகும்.
நினைத்தாலே நெஞ்சினிக்கும் திருவரங்கம் கோயில் இங்கு எவ்வாறு தோன்றியது?
திருவரங்கம் கோயிலின் திவ்விய விமானம் தோன்றிய இடம் திருப்பாற்கடலாகும்.பிரம்ம தேவனின் தவ ஆற்றலால் அது வெளிப்பட்டது. நெடுங்காலம் அதனைப் பூசித்து வந்த பிரமன்,நித்திய பூஜை செய்யும் பொறுப்பைச் சூரிய தேவனிடம் ஒப்படைத்தான். புகழும், புனிதமும் மிக்க அந்த விமானத்தைத் தன் பொற்கிரணங்களால் நீராட்டிப் பூசை புரிந்து வந்தான் சூரியன்.சூரிய குலத்தில் தோன்றிய இட்சுவாகு என்ற முடிசூட்டு விழாவுக்கு இலங்கையில் இருந்து விபீஷணன் வந்திருந்தான்.
தன் அன்புப் பரிசாக விமானத்தை விபீஷணனுக்கு தந்தான் தசரத குமாரன். பக்தி சிரத்தையுடன் விமானத்தைத் தன் தலை மேல் தாங்கியவாறு இலங்கைக்குப் புறப்பட்டான் விபீஷணன்.இலங்கை செல்லும் வழையில் ஸ்ரீரங்கம் எதிர்ப்பட்டது.அதை அழகாகச் சுற்றி வளைத்துக்கொண்டு ஓடிய காவிரி நதியும் கண்ணைக் கவர்ந்தது.அந்தக் காவிரிக்கரையில் சற்று நேரம் இருந்து இயற்கைக் கடன்களை முடித்துக்கொண்டு இளைப்பாற விழைந்தான் விபீஷணன்.
அந்தப் புனித விமானம் தரையில் எங்கும் வைக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையடன் தான் விபீஷணனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இளைப்பாற வேண்டுமெனில் தலைச் சுமையை இறக்கியாக வேண்டும்! என்ன செய்வது,எங்கே இறக்குவது என்று விபீஷணன் திகைத்து நின்ற சமயத்தில் அவன் முன்பாக ஓர் அந்தணச் சிறுவன் வந்து நின்றான். விபீஷணனின் தலைச் சுமையைத் தான் வாங்கி வைத்துக் கொள்வதாக வாக்களித்தான்.
விபீஷணனும் தன் தலை மீதிருந்த விமானத்தை அந்தணச் சிறுவனிடம் அதி எச்சரிக்கையுடன் ஒப்படைத்தான்.ஆனால் அந்த அந்தணச் சிறுவனோ அதற்குள் தன் கைச்சுமையை நிலத்தில் வைத்து விட்டிருந்தான். பதறிபோன விபிஷணன் அதை அங்கிருந்து தூக்க முயன்றான்.
ம்ஹும். முடியவில்லை. விபீஷணன் அந்தணச் சிறுவனைத் துரத்திச் சென்று அவன் தலையில் குட்டினான்.அச்சிறுவன் பிள்ளையாராக மாறினான்! மலைக்கோட்டை உச்சிக்குச் சென்று அமர்ந்தான்.
(அரங்கநாதன் கோவில் ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் அமைய வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு விளையாட்டை ஆனைமுகன் அரங்கேற்றியதாக வரலாறு. விபீஷ்ணன் குட்டியதால் தலையில் ஏற்பட்ட வீக்கத்தை இன்னும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் தலையில் காணலாம்)
கவலையில் கலங்கிய விபீஷணன் கண்ணீர் விட்டு அழுதான்.அப்பகுதியை ஆண்ட சோழ குலத்தைச் சேர்ந்த அரசன் தர்மவர்மன் என்பவன் அவனுக்கு ஆறுதல் கூறி அவ்விமானத்தைச் சுற்றித் தான் கோயில் எழுப்புவதாகக் கூறினான். விபீஷணன் மேல் இரக்கம் கொண்ட அரங்கநாதன், அவன் வாழ்கின்ற தென்திசை இலங்கை நோக்கிப் பள்ளி கொள்வதாக பரிவுடன் பகர்ந்தான்.
திருவரங்கனின் திருமுகம் தன்னைப் பார்க்கின்ற பெரும் பேற்றினால் மனம் மகிழ்ந்த வீபீஷணன் விடைபெற்றுச் சென்றான்
ஒப்போது சிற்பத்தை பாருங்கள் – ராஜ அலங்காரத்தில் வீபீஷணன், தலையில் கரீடம், கையில் தண்டு – செங்கோல் , ஆசையுடன் விமானத்தை மிக ஜாக்ரதையாக அனைத்து எடுத்து வரும் காட்சி – அருமை.
நண்பர் திரு சிவா கேட்டுகொண்டதன் படி இதோ விமானம் படங்கள். ( இணையத்தில் இருந்து எடுத்தவை )
அற்புத சிற்பங்களை கொண்ட இந்த மண்டபத்தின் தற்போதைய நிலை ….விரைவில் பார்ப்போம்.