எங்கள் சோகக் கதையை கேளுங்கள் – குப்பையில் எறியப்பட்ட பேரூர் கோயில் தூண்கள்

மீண்டும் ஒரு பயனுள்ள டிசம்பர் இந்திய பயணம். நண்பர்கள் பலரின் உதவியுடன் இன்னும் பல பதிவுகள் இட மூலங்கள் கிடைத்தன. வழக்கம் போல சில கசப்பான காட்சிகள். எனினும் இதுவரை இல்லா வண்ணம் ஒரு திடுக்கிடும் காட்சி. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தூண்கள் படும் அவமானம். முன்னர் ஒரு பதிவில் ஹனுமான் முதலை வயிற்றில் இருந்து வரும் சிற்பம் பற்றி எழுதினேன்.

Hanuman escapes from a crocodile -perur

அப்போதே அந்த பழைய புகைப்படத்தில் உள்ள தூண் இருக்கும் இடம் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. இம்முறை சென்று பார்த்தபோது புரிந்தது. அதில் இருப்பது இப்போது சிதைந்த நிலையில் ஆலயத்தினுள் இருக்கும் சிறு நந்தவனத்தில் இருந்த தூண்.

உடையாத தூண் ஆலய கோபுரம் அருகில் உள்ள கடையின் கதவில் மறைந்து உள்ளது.

இந்தப் படங்கள் சென்ற டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை ( 2009) . அப்போது அந்த சிறு நந்தவனத்தில் இன்னும் பல சிதைந்த தூண்கள் இருந்தன.


இம்முறை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்றதும் ( சற்று பயத்தோடுதான் ) அங்கே சென்றோம். அங்கே இருக்கும் தூண்களை பார்க்காமல் திரும்ப முடியுமா ?

வாகனத்தை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள சிற்பக் கூடத்தில் உள்ள சிற்பிகளுக்கு வணக்கம் சொல்லி விட்டு திரும்பியது தான் தெரியும் – எதிரில் அப்படி ஒரு கோரக் காட்சி



குப்பையும் சாக்கடையும் நிரம்பி வழிய வெளியே எறியப்பட்டுள தூண்கள். அருகில் சென்று பார்த்தேன் – பயத்துடன் தேடினேன். கண்கள் பார்ப்பதை மனது ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றது – அதே ஹனுமான் தூண்.

தங்க நகையும் வைர ஆபரணங்களுமே பொக்கிஷம் என்று இருக்கும் இந்நாளில், அவற்றையே பாதுகாக்க முடியாமல் இருக்கும் நிர்வாகம், இந்த சொற்ப கல்லில் என்ன இருக்கிறது என்று குப்பையில் எரிந்து விட்டது போலும். சோகம் பொல்லாதது.. யாரிடம் போய் முறையிடுவது..


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி – மேலைக்கடம்பூர், பாகம் 1

இன்றைக்கு நாம் ஒரு மிக அரிய அற்புத சிலையை பார்க்கப்போகிறோம். கடம்பூர் என்றதுமே பலருக்கு பொன்னியின் செல்வன் நினைவுகள் மலரும். நாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னர் மேலைக்கடம்பூர் சென்றோம்.

ஒரு வார பயணத்தின் முதல் நாள் என்பதாலும், அன்றைக்கு இரவே தில்லை செல்லவேண்டும் (30 km தொலைவில்) என்பதாலும், அரக்கபரக்க சென்றோம். மழை வேறு “இதோ இப்போ வருகிறேன்” என்று பயமுறுத்திக்கொண்டே இருந்தது. கோயில் வாயில் அடையும் போதே இருட்டி விட்டது. அடுத்த நாள் பிரதோஷ பூஜைக்கு குருக்கள் தயார் ஆகிக்கொண்டிருந்தார்.

ஒரு வருடத்துக்கு முன்பா? அப்போ ஏன் இவ்வளவு தாமதம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இரு காரணங்கள். ஒன்று திரு ராஜா தீக்ஷதர் அவர்கள் அருமையான ஆங்கில பதிவு ஒன்றில் மிகவும் அருமையாக இந்த ஆலயத்தை விளக்கி இருந்தார். அவரிடத்தில் அந்தப் பதிவை தமிழில் மொழிப்பெயர்த்து நமது தளத்தில் இட கேட்டிருந்தபோது, திடீரென அவர் நம்மை விட்டு பிரிந்தார். அவர் நினைவாக விரைவில் அதனை செய்து விடுவோம். இரண்டாவது காரணம், கடம்பூர் கோயிலில் இருக்கும் சிலை. பிரதோஷத்தன்று மட்டுமே வெளியில் வரும் இந்த சிலை, அன்று நாங்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் வெளி வரவில்லை. வெளியில் இருக்கும் பெயர்ப் பலகையை மட்டுமே படம் பிடித்தோம்.

ஆனால், இணையத்தில் தேடியதில் கோயில் தர்மகர்த்தா திரு விஜய் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

கடம்பூர் கோயில்

ஆலயத்தின் ஸ்தல புராணம் பற்றிய அவரது பதிவு.

கடம்பூர் புராணம்

கடம்பூர் – அம்ரிதகடேஷ்வரார் கோயில். தற்போது இருக்கும் கற்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்து கட்டுமானம் (1075 -1120 C.E.). அதன் அற்புத வடிவம் மற்றும் சிற்பங்கள் பற்றி திரு ராஜா தீக்ஷதர் அவர்களது பதிவில் பின்னர் பார்ப்போம். நேரடியாக அந்த சிற்பம் காண செல்வோம்.

தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி

அருகில் சென்று அதன் அற்புத வடிவத்தை பார்ப்போம்.

இந்த சிலையின் தனித்தன்மைகள், உயர்ந்த மேடை, பின்னல் இருக்கும் பிரபை

திரு நாகசாமி அவர்கள் இதனைப் பற்றி கூறுகையில் , ” இந்த கோயிலில் குலோத்துங்கன் காலத்து, அற்புத உற்சவர் சிலைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் நந்தியின் முதுகில் ஆடும் காட்சி, அருகில் விநாயகர், முருகர், பிருங்கி, நந்தி, பைரவர் மற்றும் பல கணங்கள் உள்ளன. இந்த சிலை வங்க தேசத்து பால வம்சத்து வெளிப்பாடை கொண்ட சிலை. இந்த சிலை சுமார் 9th – 10th நூற்றாண்டை ஒட்டி இருக்க வேண்டும். இது குலோத்துங்கனின் ராஜ குரு கொண்டு வந்ததாக இருக்கலாம். அவர் வங்க தேசத்தில் இருந்த வந்தவர். இது தமிழ் நாட்டில் கிடைத்த மிகவும் பழமையான பால கலை சிற்பம். சிதம்பரத்துக்கும் வங்க தேசத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது “

கடம்பூர் பற்றிய திரு நாகசாமி அவர்களின் பதிவு

இந்த சிலையை பால கால புத்தர் சிலையுடன் ஒப்பிட்டு பார்ப்போம். (நியூயார்க் நகர மெட்ரோபொலிடன் அருங்காட்சியக சிலை)

மேடை மற்றும் பிரபைகள் ஒத்து போவதை நாம் காணலாம்.

மேலும் இந்த சிலை தென்னாட்டு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்பதற்கு மகேசனின் ஊர்த்வ லிங்கம் இன்னும் ஒரு சான்று. இவ்வாறு நாம் சோழர் மற்றும் பல்லவர் கால செப்புத்திருமேனிகளில் பார்ப்பதில்லை.

திரு விஜய் அவர்கள் நாம் இன்னும் நன்றாக பார்க்க, அருகில் சென்று பின்னால் இருக்கும் தகடை விலக்கியும் படம் எடுத்து உதவி உள்ளார்.

மிகவும் அழகாக காட்சி அளிக்கும் இந்த சிலை மகேசனின் அற்புத நடனத்தை பிரதிபலிக்கிறது. கைகள் தோள்பட்டையில் இணையும் பாணி மிகவும் அருமை. இதற்கு முந்தைய பல்லவர் மற்றும் சோழர் வடிவங்களில் கைகள் முட்டியில் பிரியும்.

இன்னும் நிறைய பார்க்க உள்ளது இந்த சிலையில். அவற்றை இந்தப் பதிவின் அடுத்த பகுதியில் விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சோழர் கால ஓவியங்கள் புத்தகம் -காத்திருந்தது வீண்போகவில்லை

ஏப்ரல் 9, 1931.

“காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பிரெஞ்ச் ஆர்வலர் பேராசிரியர் ஜோவூ டுப்ரீயல் (Prof. Jouveau Dubreuil) பல்லவ கால ஓவியங்களைக் கண்டுபிடித்த ஆர்வம் அடங்கும் முன்னர், எனது பாக்கியம், இதுவரை யாரும் கண்டுபிடிக்காத சோழர்களின் ஓவியங்களை தஞ்சை பெரிய கோயிலில் நான் கண்டுபிடித்தேன்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர், நான் எனது நண்பர் திரு T.V. உமாமகேஷ்வரம் பிள்ளையுடன் பெரிய கோயிலை தரிசிக்க சென்றேன். அப்போது சிறு எண்ணை விளக்கின் மங்கிய வெளிச்சத்தில், கருவறையை சுற்றி உள்ள வெளி பிரஹாரத்தின் சுவரில் சில ஓவியங்களின் சுவடுகள் தெரிந்தன.

ஆனால் நேற்று தான் ஒரு சிறு பெட்ரோமாக்ஸ் விளக்கின் பிரகாச ஒளியில் அந்த ஓவியங்களை மீண்டும் சென்று பார்த்தேன். அதன் வெளிச்சத்தில் தெரிந்த ஓவியங்களைப் பார்த்தவுடன் மனம் சற்று தளர்ந்தது – சோழர் காலத்து அற்புத ஓவியங்களின் ஒரே சான்றை கண்டுபிடிக்க எண்ணிய எனக்கு, தெரிந்தவை அவை அல்ல. ஓவியங்கள் சோழர் காலத்தை விட பல நூற்றாண்டுகள் பிந்தைய பாணியில் இருந்ததைக் கண்டு மனம் தளர்ந்தேன்.

இருந்தும், மேற்கு சுவரை அருகில் சென்று பார்வையிட்டேன், அப்போது மேல் பூச்சு உதிர்ந்த நிலையில் இருந்தது. தொட்டவுடன் பொடிப்பொடியாக விழுந்தது. ஆனால் அதன் பின்னால் இருந்த சோழர் கால அற்புத ஓவியத்தை வெளிக்காட்டியது. நெஞ்சம் படபடக்க முதல் முதலில் சோழர்களின் அற்புத ஓவியக்கலையின் ஒரே இருப்பிடத்தை கண்டுபிடித்த பெருமிதம் அடைந்தேன்.

S.K. கோவிந்தசுவாமி – தி ஹிந்து , ஏப்ரல் 11, 1931

ஹிந்து

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த பயணம் – இன்று தான் அதன் நிறைவை அடைந்துள்ளது, நிறைவு என்று சொல்வதை விட புதிய துவக்கம் என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த ஓவியங்களை இதுவரை கண்ணால் கண்டவர் சிலரே. சாமானியர்கள் இதுவரை ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்டும் வல்லுனர்களின் புகழாரத்தையும், எங்கோ இங்கும் அங்கும் மங்கிய ஒளியில் சிறு அளவில் நாளேடுகளில் வரும் படங்களை மட்டுமே பார்த்து மனதை தேற்றிக்கொண்ட காலம் மாறி, அனைவரும் கண்டு ரசிக்கும் வண்ணம் வந்துள்ளது – சோழர் கால ஓவியங்கள் நூல். தமிழ் நாடு அரசு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் ம. இராசேந்திரன் , ஓவிய ஒளிப்படக் கலைஞர் திரு ந. தியாகராசன், ஓவியர் திரு சந்துரு , திரு ராஜவேலு மற்றும் பலரின் அயராத உழைப்பினால் இந்தப் பொக்கிஷம் இன்று நம் கண்களின் முன்னே ஜொலிக்கிறது.

இந்த ஓவியங்களை பற்றிய நூல் பற்றி பல முறை நாளேடுகளில் படித்து ஆர்வத்துடன் பல காலம் காத்து நின்ற எனக்கு, நண்பர் திரு பத்ரி ( கிழக்கு பதிப்பகம்) முக நூலில் சிறு நூல் அறிமுகம் இட்டவுடன் ஆர்வம் தலைக்கு எட்டிவிட்டது. கூடவே பயம், அரசு வெளியீடு, உலகத்தரம் இருக்குமா, ஓவியங்களை சரியான முறையில் படம் எடுத்து இருப்பார்களா? தாள் நன்றாக இருக்குமா (ரூபாய் 500 தான் விலை!) – என்றெல்லாம் எண்ணம் சென்றது. இருந்தாலும் இரு நண்பர்களிடம் சொல்லி வைத்தேன். நண்பர் திரு. ராமன் அவர்கள் அனுப்பி வைத்தார். மூன்று வாரங்களுக்கு முன்னர் கையில் கிடைத்தது. பொதுவாக இந்த அளவு நூல் ஓரிரு நாட்களில் முடித்துவிடுவேன். எனினும் இந்த நூலில் ஒரு பக்கம் பார்க்க வாரங்கள் பல தேவைப்பட்டன. ஆஹா, என்ன அற்புதமான வடிவமைப்பு , அருமையான புகைப்படங்கள், அச்சிட்ட தாள் நல்ல உலகத்தரம், கூடவே பழம் வழுக்கி தேனில் விழுந்தவாறு ஒவ்வொரு புகைப்படத்துடன் அதன் கோட்டோவியம். ஓவியர் திரு மணியம் செல்வன் அவர்களை சென்ற வாரம் சந்திக்க நேர்ந்தது. அவரும் பார்த்து விட்டு பாராட்டினார். தனது தந்தை ஓவியர் திரு மணியம் அவர்கள் இதே சோழர் ஓவியங்களை வரைந்தார் என்றும், அவற்றையும் காட்டினார்.

அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு சாம்பிள். புகழ் பெற்ற தக்ஷிணாமூர்த்தி ஓவியம்.

(சிறிய அளவு கோப்பைகளை மட்டுமே இட்டுள்ளேன். நூலில் இன்னும் அருமையாக உள்ளது!)

அடுத்து, கோட்டோவியம்.

இந்த ஓவியங்களில் இன்னும் ஆராய ஆயிரம் விஷயங்கள் உள்ளன. கண்டிப்பாக பலர் இந்த நூலின் உதவியுடன் அந்த ஆராய்ச்சிகளை செய்து முனைவர் பட்டம் பெறுவார்கள். உதாரணத்திற்கு இந்த ஓவியத்தின் இடது பக்கம் சற்று கவனியுங்கள்.

படத்தில் காட்டியுள்ளேன். அஷ்ட புஜ (எட்டு கைகள்) பைரவர் உருவம் தெரிகிறதா?

நூலின் உதவி இப்போது பாருங்கள்.

பார்த்தவுடன் பைரவர் உருவம் எங்கோ பார்த்த நினைவு. உடனே தேடி பார்த்தேன். முதலில் கிடைத்தது பெரிய கோயில் முன் வாயிலில் இருக்கும் க்ஷேத்ர பாலர் சிலை.

உருவ ஒற்றுமை இருந்தாலும், திரிசூலம் மாறி இருப்பதால் இந்த சிலை இல்லை.

அடுத்து தஞ்சை கலைக்கூடம் செப்புத் திருமேனி (படங்கள் திரு ராமன் மற்றும் என் தம்பி திரு பிரசன்னா கணேசன்)

அறிவுப்பு பலகை படி 11th C CE, திருவெண்காடு

இந்த சிலை பற்றி மேலும் படிக்க Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994 – Price Rs. 386), இந்த விவரங்கள் கிடைத்தன

வேலைப்பாட்டின் அடிப்படையில் இந்த பைரவர் சிலை நாம் முன்னர் பார்த்த ரிஷபவாகன சிலையின் காலத்தை ஒட்டி உள்ளது,

ரிஷபவாகன சிலை

ஆனால் இந்த சிலையில் பல புதிய பாணிகள் உள்ளன. இதுவரை நாம் இவற்றை சந்தித்தது இல்லை.

எட்டு கரங்களுடன் பைரவர், நேராக (வளைவுகள் இல்லாமல்) – அதாவது சாம பங்க முறையில் நிற்கிறார்.
மேலும் சிகை அலங்காரம் தலைக்கு மேலே ஒரு அலங்கார வடிவில் உள்ளது. ஒரு பக்கம் அரவமும், பிறை சந்திரனும், மறு பக்கம் மலரும் உள்ளன.

இரு காதுகளிலும் பத்ர குண்டலங்கள் உள்ளன. இந்த வடிவத்தின் ரௌத்திர குணம் தெரிய, புருவங்கள் இரண்டும் நெரிந்தவாறும், பிதுங்கிய கண்களும், கோரைப் பல்லுடனும் இருக்கிறார் பைரவர். எனினும் அந்தக் காலத்து ஸ்தபதிகள் கோர / ரௌத்திர வடிவங்களையும் அழகுடன் வடித்தனர். எனவே புருவம், கண்கள் , கோரைப் பல் எல்லாம் இருந்தும் சிலை பயங்கரமாகத் தோற்றம் அளிக்காமல் சற்று அமைதியாகவே அழகாக உள்ளது.

கழுத்தில் இருக்கும் மாலை, அதில் தொங்கும் அணிகலன், அனைத்தும் நாம் முன்னர் பார்த்த ரிஷப வாகன சிவன் சிற்பத்தை ஒட்டி உள்ளது. பின்னிய இரு இழைகளாக இருக்கிறது யக்ஞோபவீதம். ஒரு பெரிய மாலை – அதில் சிறு சிறு மண்டை ஓடுகள் – முண்ட மாலை.

கைகள் விசிறி போல விரிந்து இரு பக்கமும் உள்ளன. மிகவும் அழகாக சிலையுடன் இணையும் இவை அருமை. மேல் கையில் இருக்கும் நாக வளையல் இந்த சிலையின் தனித்தன்மை. இங்கே தான் நம் பெரிய கோயில் ஓவியத்தில் வரும் பைரவர் சிலையுடன் சிறு வித்தியாசம் தெரிகிறது.

மேல் வலது கை, மேல் இடது கை மற்றும் கீழ் இடது கை தவிர (அவை முறையே உடுக்கை, மணி மற்றும் ஓடு ஏந்தி உள்ளன) மற்றவை கடக முத்திரையில் உள்ளன.

இடுப்பில் இரு அரவங்கள் உள்ளன. மிகவும் அழகாக அவற்றை அணிகலன் போல உபயோகித்துள்ள சிற்பியின் திறமை அபாரம்.

இங்கே தான் நமக்கு துப்பு கிடைக்கிறது. ஓவியத்தில் ஒரே ஒரு பாம்பு தான் உள்ளது. அப்போது இந்த சிலை அந்த ஓவியத்தில் உள்ள சிலை அல்ல!!

நீண்ட பதிவை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இந்த நூலின் அருமை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக வாங்கிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். இதை இவ்வவளவு அழகாக வெளியிட்டு சரித்திரத்தில் இடம் பிடித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment