இன்றைக்கு நாம் ஒரு மிக அரிய அற்புத சிலையை பார்க்கப்போகிறோம். கடம்பூர் என்றதுமே பலருக்கு பொன்னியின் செல்வன் நினைவுகள் மலரும். நாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னர் மேலைக்கடம்பூர் சென்றோம்.
ஒரு வார பயணத்தின் முதல் நாள் என்பதாலும், அன்றைக்கு இரவே தில்லை செல்லவேண்டும் (30 km தொலைவில்) என்பதாலும், அரக்கபரக்க சென்றோம். மழை வேறு “இதோ இப்போ வருகிறேன்” என்று பயமுறுத்திக்கொண்டே இருந்தது. கோயில் வாயில் அடையும் போதே இருட்டி விட்டது. அடுத்த நாள் பிரதோஷ பூஜைக்கு குருக்கள் தயார் ஆகிக்கொண்டிருந்தார்.
ஒரு வருடத்துக்கு முன்பா? அப்போ ஏன் இவ்வளவு தாமதம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இரு காரணங்கள். ஒன்று திரு ராஜா தீக்ஷதர் அவர்கள் அருமையான ஆங்கில பதிவு ஒன்றில் மிகவும் அருமையாக இந்த ஆலயத்தை விளக்கி இருந்தார். அவரிடத்தில் அந்தப் பதிவை தமிழில் மொழிப்பெயர்த்து நமது தளத்தில் இட கேட்டிருந்தபோது, திடீரென அவர் நம்மை விட்டு பிரிந்தார். அவர் நினைவாக விரைவில் அதனை செய்து விடுவோம். இரண்டாவது காரணம், கடம்பூர் கோயிலில் இருக்கும் சிலை. பிரதோஷத்தன்று மட்டுமே வெளியில் வரும் இந்த சிலை, அன்று நாங்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் வெளி வரவில்லை. வெளியில் இருக்கும் பெயர்ப் பலகையை மட்டுமே படம் பிடித்தோம்.
ஆனால், இணையத்தில் தேடியதில் கோயில் தர்மகர்த்தா திரு விஜய் அவர்களின் தொடர்பு கிடைத்தது.
ஆலயத்தின் ஸ்தல புராணம் பற்றிய அவரது பதிவு.
கடம்பூர் – அம்ரிதகடேஷ்வரார் கோயில். தற்போது இருக்கும் கற்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்து கட்டுமானம் (1075 -1120 C.E.). அதன் அற்புத வடிவம் மற்றும் சிற்பங்கள் பற்றி திரு ராஜா தீக்ஷதர் அவர்களது பதிவில் பின்னர் பார்ப்போம். நேரடியாக அந்த சிற்பம் காண செல்வோம்.
தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி
அருகில் சென்று அதன் அற்புத வடிவத்தை பார்ப்போம்.
இந்த சிலையின் தனித்தன்மைகள், உயர்ந்த மேடை, பின்னல் இருக்கும் பிரபை
திரு நாகசாமி அவர்கள் இதனைப் பற்றி கூறுகையில் , ” இந்த கோயிலில் குலோத்துங்கன் காலத்து, அற்புத உற்சவர் சிலைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் நந்தியின் முதுகில் ஆடும் காட்சி, அருகில் விநாயகர், முருகர், பிருங்கி, நந்தி, பைரவர் மற்றும் பல கணங்கள் உள்ளன. இந்த சிலை வங்க தேசத்து பால வம்சத்து வெளிப்பாடை கொண்ட சிலை. இந்த சிலை சுமார் 9th – 10th நூற்றாண்டை ஒட்டி இருக்க வேண்டும். இது குலோத்துங்கனின் ராஜ குரு கொண்டு வந்ததாக இருக்கலாம். அவர் வங்க தேசத்தில் இருந்த வந்தவர். இது தமிழ் நாட்டில் கிடைத்த மிகவும் பழமையான பால கலை சிற்பம். சிதம்பரத்துக்கும் வங்க தேசத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது “
கடம்பூர் பற்றிய திரு நாகசாமி அவர்களின் பதிவு
இந்த சிலையை பால கால புத்தர் சிலையுடன் ஒப்பிட்டு பார்ப்போம். (நியூயார்க் நகர மெட்ரோபொலிடன் அருங்காட்சியக சிலை)
மேடை மற்றும் பிரபைகள் ஒத்து போவதை நாம் காணலாம்.
மேலும் இந்த சிலை தென்னாட்டு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்பதற்கு மகேசனின் ஊர்த்வ லிங்கம் இன்னும் ஒரு சான்று. இவ்வாறு நாம் சோழர் மற்றும் பல்லவர் கால செப்புத்திருமேனிகளில் பார்ப்பதில்லை.
திரு விஜய் அவர்கள் நாம் இன்னும் நன்றாக பார்க்க, அருகில் சென்று பின்னால் இருக்கும் தகடை விலக்கியும் படம் எடுத்து உதவி உள்ளார்.
மிகவும் அழகாக காட்சி அளிக்கும் இந்த சிலை மகேசனின் அற்புத நடனத்தை பிரதிபலிக்கிறது. கைகள் தோள்பட்டையில் இணையும் பாணி மிகவும் அருமை. இதற்கு முந்தைய பல்லவர் மற்றும் சோழர் வடிவங்களில் கைகள் முட்டியில் பிரியும்.
இன்னும் நிறைய பார்க்க உள்ளது இந்த சிலையில். அவற்றை இந்தப் பதிவின் அடுத்த பகுதியில் விரைவில் பார்ப்போம்.