நண்பர்களிடையே பலமுறை இந்த கேள்வி எழும். கலை ஆர்வலன் ( நானே சொல்லிக்க வேண்டியது தான் – ரசிகன் பட்டம் தானே !!) என்ற முறையில் தமிழ்க் கலை என்றால் பல்லவர் கலை பெரிதா இல்லை சோழர் கலை பெரியதா என்பதே ( நமக்கு சேரர் கலை வெகு சிலவே கிடைக்கின்றன – அதாவது அந்தக் காலத்து , பாண்டியர் குடைவரைகள் இன்னும் நிறைய நான் பார்க்க வேண்டி உள்ளது எனினும் பார்த்த சிலவற்றை வைத்து ( வேட்டுவன் கோயில் தவிர ) அதற்குப் பின்னர் வந்த கட்டுமானக் கோயில்களில் உள்ள கலை வேலைப்பாடு என்னை பெரிதாக ஈர்த்ததில்லை. எனவே இன்றைய விவாதம் பல்லவர் vs சோழர். அதுவும் பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனிகள். இதற்காக அவர்களது கலையின் மிகவும் மேலான உதாரணங்களை கொண்டே பார்ப்போம். பல்லவர் சிற்பக்கலை அதன் சிகரத்தை தொடும் இடம் கடல் மல்லை தர்மராஜ ரதம் மேல் தல புடைப்புச் சிற்பங்கள். சோழர் செப்புத் திருமேனி என்றால் அது உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அதுவும் அவர்களது கடைசி பத்து ஆண்டுகளில் வார்க்கப்பட்ட சிலைகளே.
தர்மராஜ ரதம் மேல் தளம் ஒரு அதிசயம். ஒரே பாறையில் மேலிருந்து கீழே குடைந்து, அதில் இப்படி ஒரு அற்புத கலை நயத்தோடு , சிறிதளவும் பிழை என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் , ஆகமங்கள் முறையே தங்கள் சட்டங்களை விதிக்கும் முன்னரே, தங்கள் செழிப்பான சிந்தனையை மட்டுமே மூல தனமாக வைத்து இப்படி அற்புத சிற்பங்களை செதுக்கிய இவர்களை என்னவென்று புகழ்வது. கடினமான கருங்கல்லில் உயிர் ஓட்டம் ததும்பும் இந்த சிற்பங்களை அழகு பட வடித்த இவர்கள் மனிதர்களா என்றே சந்தேகம் வரும்.
அந்த மேல் தடத்தில் இருக்கும் புடைப்புச் சிற்பங்க்ளில் ஒரு அற்புத வடிவத்தை இன்று நாம் நண்பர் அசோக் உதவியோடு பார்க்கிறோம். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை – மேல் தடம் செல்வதே கடினம் – பலரிடம் அனுமதி பெற வேண்டும். நெரிசலான பாதை, சுவருக்கும் சிற்பத்திற்கும் இடைவெளி மிகவும் குறைவு , இதனால் புகை படம் எடுப்பது மிகவும் கடினம், அதுவும் ஒரே படத்தில் முழு உருவை பிடிப்பது அதைவிட கடினம். நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றை ஒன்று சேர்த்து அவரால் இதை செய்ய முடிந்தது. படம் பிடிக்க நாம் படும் பாட்டை பார்க்கும்போது, இதே இடத்தில தனது கற்பனை உருவை கல்லில் கொண்டு வந்த சிற்பியின் வேலைக்கு மீண்டும் தலை வணங்க வேண்டும்.பல்லவ ரிஷபாந்தகர்
இந்த சிற்பத்தின் தனித்தன்மை அதன் தலை / சிகை அலங்காரம். தலை பாட்டை மற்றும் சடை முடியை சுற்றிக் கட்டிய கொண்டை, இதுவரை நாம் வேறு எங்கும் பார்க்காதது. இதன் பிறகும் பல்லவர் படைப்புகளில் , ஏன் மல்லையிலே கூட நாம் இந்த மாதிரி மற்றொன்றை பார்க்க முடியாது – அர்ஜுன ரத சிற்பத்தை பாருங்கள்
(
அர்ஜுன ரதம் ).




இந்த சிற்பத்தில் ஒரு தனி நளினம், சிற்பம் முழுவதிலும் ஒரு உயிரோட்டம் , வளைந்து செல்லும் அருவியின் நெளிவு சுளிவு , ரத்தம் சதை கொண்டு தோல் போர்த்திய கை கால் என சொல்லிக்கொண்டே போகலாம்.


த்ரிபங்கத்தில் ஒய்யாரமாக நிற்கும் சிவன், லாவகமாக வலது கையை நந்தியின் மேல் வைத்து, தலையை ஒரு புறம் சாய்த்து , இடுப்பை மறுபக்கம் மடக்கி, ஒரு காலை இன்னொரு கால் மீது போட்டு நிற்கும் காட்சி …அப்பப்பா பிரமாதம்.
இந்த சிலைக்கு எதிர்த்து நின்று ஈடு கொடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கடினம் தான். அதனால் சோழர் செப்புத்திருமேனிகளில் மிகவும் சிறந்த ஒன்றை போட்டிக்குள் கொண்டு வருவோம். அதிஷ்ட வசமாக கோவையில் செம்மொழி மாநாடு அரங்கில் வழி தவறி, அங்கே அடுத்த நாள் திறப்பு விழாவுக்கு வேலைகள் கடந்துக் கொண்டிரந்த அருங்காட்சியக மையத்தினுள் தற்செயலாக சென்றதால் இந்த அற்புத சிலையை அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது,. கூடவே இன்னும் ஒரு பெரும் பாக்கியம் ( படங்களை கூர்ந்து பார்த்தல் அது என்ன என்று விளங்கும் ) . இந்த சிலை, தஞ்சை கலை அரங்கத்தில் இருக்கும் ,மாநாட்டிருக்கு என்று பிரத்தேயகமாக கொண்டு வரப்பட்டது. செப்புத்திருமேனிகள் வடிப்பது சுலபம் இல்லை, நாம் முன்னரே பார்த்தவாறு, அச்சை உடைத்து சிலையை வெளிகொணர்வதால் ஒவ்வொரு முறையும் அச்சு புதிதாக செய்யப்பட வேண்டும். அதுவும் அச் சிலையை வார்த்த பின்னர், அதாவது அனைத்து சிறு குறிப்புகளும் முதலில் செய்யும் மெழுகு சிலையிலே செய்து விட்டு, மெழுகில் வடித்த பிரதிமத்தின் மேல் மண் பூசி சுட்டு ஆற்றிய பின், அதனுள் உலோகத்தை ஊற்றி சிலை வார்த்த பிறகு, அதன் மேல் உளி படாமல் ( செப்பனிடாமல் அதாவது மேலும் செதுக்காமல் ) எடுக்கும் கைத்திறன் படைத்த மகா கலைஞர்கள் இருந்த காலம் அது, இப்படி அவர்கள் புகழ் படும் கைத்திறன், கலை நயம் பல்லவர் காலம் முதலே தென்னகத்தில் இருந்தாலும், உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அவர்களது காலத்தில் , குறிப்பாக 1000 முதல் 1014 வரை வார்க்கப்பட்ட சிலைகள் மிகவும் பிரசித்தி. அந்த காலத்தை சார்ந்த கல்யாணசுந்தரர் ( நாம் முன்னரே பார்த்த உன் கரம் பிடிக்கிறேன்), இன்று நாம் போட்டியில் வைக்கும் ரிஷபாந்தக முர்த்தி, பிக்ஷாடனர் மற்றும் வீனாதாரர் ( விரைவில் அவற்றையும் பார்ப்போம் ) மிகவும் அழகு.
செப்புத் திருமேனிகளின் காலத்தை நிர்ணயம் செய்வது சற்று கடினம் தான், எனினும் இன்று நாம் காணும் சிலை ஒரு அபூர்வ சிலை. தன பிறப்புச் சான்றிதழை கல்வெட்டாக கொண்ட சிலை. மண்ணில் புதையுண்டு 1950ஆம் ஆண்டு திருவெண்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலை பற்றிய கல்வெட்டுக் குறிப்பு – அதன் இருப்பிடமான ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வர (திருவெண்காடு என்பதின் வடமொழிப்பெயர்) ஆலயத்தின் சுவரில் , உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவரின் 26th இருபத்தி ஆறாம் ஆட்சி ஆண்டில் ( 1011 CE) , கோலக்கவன் என்ற ஒருவர் ( ( AR 456 of 1918 – குறிப்பு இண்டம் பெரும் நூல் South Indian Shrines – Illustrated By P. V. Jagadisa Ayyar ) பொன்னும், நகைகளும் அங்கே எடுப்பித்த சிவ ரிஷபாந்தகர் சிலைக்கு அளித்ததாக உள்ளது ( இதற்கு அடுத்த ஆண்டு கல்வெட்டுக் குறிப்பு இந்த சிவனுக்கு அம்மை சிலை செய்து வாய்த்த குறிப்பை தருகிறது )

முதல் பார்வையிலேயே பல்லவர் சிலைக்கும் சோழர் சிற்பத்திற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறது. இந்த இயங்கும் படத்தை சொடுக்கி பாருங்கள்.
இரு வடிவங்களையும் சற்று ஒப்பு நோக்குங்கள். நந்தி சிற்பம் என்ன ஆனதென்று தெரியவில்லை. சோழ கலைஞன் கூடுதலான இரு கைகளை நீக்கி விட்டு, இது சிலை என்பதனால் சற்றே கைகளை சற்று இறக்கி, அதற்க்கேற்ப த்ரிபங்க வளைவை ஏற்படுத்தி, தலையையும் சற்றே நேர் படுத்தி எழில் மிக்க ஒரு படைப்பை உருவாக்கி உள்ளான்.




இது சரியான போட்டி அல்ல, ஏனெனில் சோழ சிற்பி அச்சுக்கு மண்ணை பிசைவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பல்லவ சிற்பி கருங்கல்லில், அதுவும் ஒரே கல் ரதத்தின் மேல் தலத்தில், தனது சிந்தனையை மட்டுமே கொண்டு பிழை என்றே சொல்லுக்கே இடம் இல்லாத இடத்தில மகத்தான சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஆனால் சோழ சிற்பியும் லேசுப் பட்டவன் அல்ல, புடைப்புச் சிற்பம் ஒன்றை மனதில் கொண்டு, அதை அப்படியே முப்பரிமாண சிலையாக வடிப்பது எளிதான காரியம் அல்ல.




சரி, இந்த பல்லவர் சிற்பத்தை பார்த்து விட்டுதான் சோழர் சிற்பி வேலை செய்தான என்பதற்கு என்னஆதாரம் என்ற கேள்வி கண்டிப்பாக எழும். இதற்கு விடை இரு சிற்பங்களிலும் உள்ள உருவ ஒற்றுமை, இதற்கு முன்னர் வந்த சோழ கல் மற்றும் உலோக சிற்பங்களில் இந்த பாணியில் சிலை / சிற்பம் இல்லை. இன்னும் ஒரு முக்கிய குறிப்பும் உள்ளது. மீண்டும் ஒரு கல்வெட்டை நாடுவோம். மல்லை சுற்று வட்டாரத்தில் சோழ கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் கல்வெட்டும் உள்ளது. கடற்கரை கோயிலில் ..மாமல்லபுரம் கடற்கரை கோயில் கல்வெட்டு AR40
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_1/mamallapuram.html
உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர் ஆட்சி யாண்டு 25th இருபத்தி ஐந்தாம் ஆண்டு ( 1010 CE) கல்வெட்டு அது., அதாவது திருவெண்காடு சிலை வைப்பதற்கு சரியாக ஒரு ஆண்டிற்கு முன்னர் .