முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.
நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.
சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.
அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.
அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல
அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.
அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )
எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.
அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.
விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.
அடுத்து குழந்தை முருகன்.
முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.
அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.
அடுத்து உமை.
ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.
ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.
குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆம், அதே நம் ஓவியத்திலும்.
இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.
அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.