வெண்கலச் சிற்பங்களில் ஆர்வம் செலுத்த துவங்கிவிட்டோமானால், அது என்றும் தணியாத தாகமாகவே இருக்கும். அதிலும் ஒருமுறை சோழர் கால வெண்கலச் சிற்பத்தை பார்த்து விட்டாலே, கண்களை அவற்றினின்று அகற்றுவது மிகக் கடினம். ஆனால், இந்த ஆர்வத்துக்கு தீனியிடுவதும் அத்தனை எளிதல்ல. ஏனெனில்,அநேகமாக வெண்கலச் சிற்பங்கள் கோவில்களில் உற்சவ மூர்த்தியின் வீதியுலா போன்ற சமயங்களில் தான் வெளியே கொண்டு வரப்படும். அப்பொழுதும் முழுமையான ஆடை அணிகலன்கள், மலர் அலங்காரங்கள் என செய்யப்பட்டு சிற்பத்தின் அழகைக் காணவியலாத நிலையிலே தான் இருக்கும். விழாக்கள் இல்லாத பிற நாட்களிலோ பாதுகாப்பிற்காக கூண்டுகளிலே வைக்கப்படுகின்றன. ஆகவே, வெண்கலச் சிற்பங்களின் அழகைக் காணவோ, அதன் தோற்றங்கள் குறித்து ஆராயவோ, அருங்காட்சியகத்திற்கு செல்வதே மிகச் சிறந்த வழியாகும். அவ்வாறு நூற்றுக்கணக்கான வெண்கலச் சிற்பங்களை பாதுகாக்கும் பேறு பெற்றது சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும். இருப்பினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இந்த சிற்பங்கள் அனைத்தும் கண்ணாடி கூண்டுகளில் உள்ளன, மேலும் போதிய வெளிச்சமும் இருப்பதில்லை. இதையும் விட வருந்தத்தக்க விஷயம், இந்த வெண்கலச் சிற்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. இவற்றை எவ்வாறு ரசிப்பது – எதைப் பார்க்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும் போன்ற தெளிவு இல்லாமையே. அப்படி என்ன இவற்றை பற்றி படிக்க பார்க்க தனி வழி …மேலே படியுங்கள்.
இன்று, திரு பி. ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களின் மிக அற்புதமான புத்தகம் – பிரான்ஸஸ் ஆப் சவுத் இந்தியா (Bronzes of South India) – மூலமாக புகழ்பெற்ற ஒக்கூர் நடேசனின் வெண்கலச் சிற்பத்தினை பற்றி காண உள்ளோம். ஈசனின் ஆனந்த தாண்டவத்தை வெண்கலச் சிற்பத்தில் வார்க்க ஸ்தபதியால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக ஒக்கூர் நடேசனின் சிற்பம் அறிந்து கொள்ளப்படுகிறது. மேலும் இந்த வடிவமே பிற்கால சோழர் காலத்தின் நடராஜ சிலைகளுக்கும் முன்னோடியாக விளங்கியிருக்கிறது.
இந்த வெண்கல சிற்பம் செதுக்கப்பட்ட காலம் நிபுணர்களின் கணிப்பின்படி கி.பி. 9-ல் இருந்து கி.பி. 10-க்குள் இருக்கக்கூடும். இதன் காலகட்டம் ஒவ்வொருவராலும் ஒவ்வொருவிதமாக கூறப்பட்டாலும், இதுவே முதன் முதலில் ஈசனின் ஆனந்த தாண்டவத்தைக் குறிக்கும் நடன சிற்பமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சரி, இப்போது இந்த அற்புத சிற்பம் எந்தெந்த சிறப்பியல்புகளினால் ‘முதன் முதல் ஆனந்த தாண்டவ சிற்பம்’ என்று பெயர்பெற்றது என்று பார்ப்போம்.
இந்த சிற்பத்தில் தனித்துவம் பெற்ற இரு விஷயங்கள் – முதலாவது நடனமாடும் ஈசனின் உருவத்தை சுற்றி அழகுற விளங்கும் பிரபை. இரண்டாவது அழகிய தாமரை பீடம்.
ஒவ்வொன்றாக நாம் காண்பதற்கு முன்பு, ஆனந்த ரசத்தை எத்துணை அழகாக நமது சிற்பி எடுத்துக் காண்பித்துள்ளார் பாருங்கள் – 1000 ஆண்டுகாலத்திற்கு பின்பும், கண் முன் காட்சியளிக்கும் தெய்வீக புன்னகை.
மற்று மொரு சுவாரசியமான விஷயம் சிற்பத்தில் காணப்படும் நெற்றிக்கண் மற்றும் வெவ்வேறாக உள்ள காதணிகள். இடது காதில் பெரிய பத்ரகுண்டலம் உள்ளது, ஆனால் வலது காதிலோ துளை பெரிதாகவும், அணிகலனாக ஒரு சிறிய வளையம் (க்ளிப்) போன்று உள்ளது. (மேலே சொல்லப்பட்டுள்ள புத்தகத்தில் வலது காதில் உள்ள சிறிய வளையம் பற்றி கூறப்படவில்லை)
ஈசனின் சிகையலங்காரம் நாம் பல்லவ சோமாஸ்கந்தரில் பார்த்தது போன்றே உள்ளது, மேலும் ஊமத்தை மலரும் மற்றும் பிறைச் சந்திரனும் உள்ளன. உருண்டையாக முன்புறம் தோன்றுவது மண்டை ஓடாக இருக்கலாம். அதற்கு மேலே உள்ளவை இறகுகளாலாகிய ஆபரணம் (மயிலிறகுகளாக இருக்குமோ?)
கழுத்தில் அணியும் ஆபரணங்கள் இரண்டும் சாதாரணமாகவே உள்ளன. இருப்பினும் இரண்டாவது கழுத்தணியில் நடுவில் உள்ள பதக்கம் கவனத்தைக் ஈர்க்கிறது. பெரிய கழுத்தணி, ருத்திராட்ச கொட்டைகளால் ஆனது, மேலும் அபூர்வமாக விலங்கின் (புலி) பல் பதக்கமாக உள்ளது.
விரிந்திருக்கும் முடிக்கற்றைப் பற்றி விரிவாக பிறகு ( பின்னல் இல்லை இல்லை பின்னால் ) பார்ப்போம், இருப்பினும் வெண்கலச் சிற்பங்களில் நடனமாடும் சிவபெருமானின் முடிக்கற்றை விரிந்திருப்பது இதுவே முதன்முறையாகும். அவை ஆபரணங்கள் ஏதுமின்றி சாதாரணமாகவே உள்ளன. மேலும் கங்கையின் எவ்வித உருவமும் காணப்படவில்லை. வெண்கலச் சிலைக்கு பலம் சேர்க்கும் விதமாக விரிந்திருக்கும் முடிக்கற்றைகள் பிரபையில் சேர்க்கப்பட்டுள்ளது சிற்பியின் அபார புத்திக்கூர்மையை வெளிப்படுத்துகின்றது.
ஈசனின் நான்கு கரங்களும் முட்டிகளில் பிரியாமல் தோள்பட்டையிலேயே பிரிகின்றன (பல்லவர் கால வெண்கலச் சிற்பங்களின் இயல்பாக இது சொல்லப்படுகிறது. எனவே இது பிற்காலத்தை சேர்ந்தது, அதாவது சோழர்காலத்தின் ஆரம்ப காலங்களில்). தூக்கிய திருவடிகள் பிற்கால சிற்பங்களைப் போன்று மிக உயரத்திற்கு இன்னும் வரவில்லை..
காலில் உள்ள கொலுசுகள் மிக அழகாக சிறு மணிகள் கோர்க்கப்பட்டு உள்ளன. இறைவனின் ஆனந்த தாண்டவத்தின்போது அவை எழுப்பும் ரீங்காரம் காதில் இனிய சங்கீதமாய் கேட்குமோ ?
இரட் டையாக உள்ள பூணூல் (யக்ஞோபவீதம்) மற்றும் தடிமனான உத்தரீயம் (இடுப்பில் கட்டும் ஆடை) ஆகியவற்றுடன் ஆடை மிக எளிமையாக உள்ளது. உத்தரீயம் வயிற்றில் முடிபோட்டு கட்டப்பட்டுள்ளது. ஆடையில் உள்ள சித்திரம் இன்றும் கண்களுக்குத் தெரிகிறது.
மேலே உள்ள கரங்கள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் உடுக்கையும் மற்றொன்றில் அக்னியுள்ள சிறிய சட்டியும் உள்ளன – நளினமாக அந்த சட்டியை விரல்களின் நுனியில் ஏந்தியுள்ளதை எத்தனை தத்ரூபமாக செதுக்கியிருக்கிறார் அந்த சிற்பி பாருங்கள்.
கையில் சுற்றப்பட்டுள்ள பாம்புடன் அபயஹஸ்தமளிக்கிறது கீழேயுள்ள வலது கரம்,
இந்த அருமையான வெண்கலச் சிற்பத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது கீழேயுள்ள கரங்களும் மெல்லிய துடைகளும். மேலும் பாதங்களுக்கு அடியில் உள்ள முயலகன் ஒரு பெரிய நாகத்துடன் விளையாடுவது போன்ற பாவனை கொள்ளை அழகு.
இவையனைத்தையும் விட இந்த சிற்பத்தின் உண்மையான அழகு நாம் அதன் பின்புறம் சென்று பார்க்கும்போது தான் தெரிகிறது.
முடிக்கற் றைகள் எவ்வாறு பிரிந்து விரிந்திருக்கிறது என்பது மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணியை கட்டுவதற்கு உள்ள கொக்கியையும் நீங்கள் காணலாம்
இந்த வெண்கலச் சிற்பம் பழமையானது என்பதற்கு மற்றுமொரு குறிப்பு – தலைக்கு பின்புறம் சிரச்சக்கரமோ, முடிக்கற்றைகளை தாங்கும் விதமாக வளையமோ இல்லாதது தான்.
மேலும் கெளபீனம் கட்டப்பட்டிருக்கும் விதத்தைப் பாருங்கள், இருப்பினும் ஒரு சிற்றாடையும் அணிந்திருக்கிறார்.
பிர பையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் – தீப்பிழம்புகள் மிகவும் இயற்கையாக உள்ளன. பிரபையை சுற்றி இவை இருந்தாலும், அக்னி ஜ்வாலைகள் இயற்கையாக உள்ளதைப் போல் மேல் நோக்கியே உள்ளன,
ஆஹா! எத்தனை அற்புதமான உன்னத படைப்பு!!