சரியான பாட்டுக்கு மன்னர் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கிறார் !
எவ்வளவு பொன் ?
ஆயிரம் பொன் ?
ஒண்ணா ரெண்டா ! ஆயிரம் பொன் ! சொக்கா !!
தமிழர் எவருக்குமே தருமியாக நாகேஷ் அவர்களின் இந்த வசனத்தை மறக்க வாய்ப்பேயில்லை. ஆனால் இன்று நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா ? ஒரு மன்னன் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் அளிக்கும் நிகழ்ச்சி மெய்யாக நடந்திருக்குமா. அந்த நாளைய தங்கத்தின் விலையை மனதில் வைத்திருந்தாலும் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் என்பது இந்தக் காலத்து சினிமா ஸ்டார்களுக்கும் கிரிக்கட் வீரர்களுக்கும் கிடைக்கும் சம்பளத்தை காட்டிலும் மிகப் பெரிதாக இருந்திருக்கும். ஆயிரம் ஆண்டுக்கு முன் நமது நாட்டின் செழுமை , வளங்கள் அனைத்தையும் மனதில் கொண்டாலும் இது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது.
தமிழர் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்க வேண்டிய திரு ராஜ ராஜ சோழர் காலத்தில் தான் முதன் முதலில் தங்க நாணயங்கள் அச்சிடப்பட்டன. அதுவரையிலும் ரோமானிய தங்க காசுகள் தான் புழக்கத்தில் இருந்தன. அப்படி இருக்கையில் அந்த அற்புத ஆட்சியில் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் வழங்கும் செல்வம் இருந்ததா ?
நம்மில் பலருக்கும் இந்த ஐயம் வந்திருக்கும். அதனால் நாணயஇயல் நிபுணர் திரு ராமன் அவர்களை சந்திக்கும் போது அவரிடத்தில் கேட்டு தெளிவு பெற்றேன். ஆனால் முதல் கேள்வி அந்த தங்க காசு பார்க்க கிடைக்குமா ? எந்த காசு ? ராஜ ராஜா சோழர் காலத்து தங்க காசு?
அதை எடுத்து வர சென்ற பொது மேஜையில் சிறு கிழி ஒன்று இருப்பதை பார்த்தேன். சிறிய அளவு என்றாலும் அழகிய வடிவம், கச்சிதமான மூடி என்று மிகவும் அழகாக இருந்தது.
அது தான் பொற்கிழி என்றார் திரு ராமன்.
ஆஹா. அந்நாளில் இதில் தான் காசுகளை போட்டு தருவார்களோ ? மிகவும் சிறியதாக உள்ளதே. இதில் எத்தனை காசுகளை போடமுடியும் என்ற கேள்விகள் எழுந்தன.
காசை எடுத்து கையில் தந்தார்.

தங்கக் காசு, சோழர் கால தங்கக் காசு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அச்சிட்ட காசு. உடலில் மயிர் கூச்சலிட உள்ளங்கையில் பக்தியுடன் வாங்கியது தான் தெரியும் – எவ்வளவு சிறியது , கையில் எடையே தெரியவில்லை – அவ்வளவு மெல்லிய தகடு போல இருந்தது.
கண்ணையும் மனதையும் பிரித்த அந்த பொற்காசு , ஐயத்தையும் தீர்த்தது, இப்படி இருப்பின் ஆயிரம் பொன் என்ன, பத்தாயிரம் பொன் கூட தாராளமாக பரிசளிக்கலாம் !!