தெய்வக் குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு

சென்ற வருடம் தற்செயலாக மேலைக்கடம்பூர் பற்றிய ஒரு அற்புத பதிவை இணையத்தில் பார்த்தேன். திரு ராஜா தீட்சிதர் அவர்களின் பல பதிவுகளை முன்னரே படித்திருந்தாலும், இந்தப் பதிவில் அவர் விளக்கங்கள் கொடுத்த முறை – கோயிற் கலை பற்றி மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கொடுத்திருந்தார். உடனே அவரிடத்தில் தொடர்பு கொண்டு அந்த பதிவை இங்கே மொழி பெயர்த்து போடலாமா? அல்லது மேலும் பயனுள்ள பல பதிவுகளை நம்முடன் பகிரமுடியுமா என்று கேட்டு அவரும் சரி என்று சொன்ன​போது – துரதிருஷ்டவசமாக விதி விளையாடி அவர் நம்மை விட்டு போய்விட்டார்.

எனினும் இன்று நமக்கு ஒரு பாக்கியம் – அவரது பிரதான சிஷ்யை – மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க்
அவர்கள் நம்முடன் அவரது அனுபவங்களை தொடர் பதிவுகளாக பகிர ஒத்துக்கொண்டு, முதல் பதிவை தருகிறார்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னை ஈர்த்த இரு விஷயங்கள் – அழகு மற்றும் மர்மம். அதுவும் நான் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து எங்கோ உலகின் இன்னொரு இடத்தில் என்னும்​போது ஆர்வம் இரட்டிப்பாகக் கூடும். அது போன்ற காலத்தின் ஒரு கோலமே என்னை இந்தியா கொண்டு சேர்த்தது. அது ஒரு பெரிய கதை !

அப்படியே தொடர்ந்த எனது பயணம் ஒருநாள் என்னையும், நண்பர் திரு. ராஜா தீட்சிதர் அவர்களது புதல்வர்கள் திரு. கந்தன், திரு. ஜெயகுமார் மற்றும் திரு. ஷங்கர் அவர்களையும், ஒரு புராதன ஆலயத்தின் குளத்தங்கரையில் கொண்டு சேர்த்தது . மிகவும் அமைதியான சிறு கிராமம், வீதிகளில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகே சிலர் தங்கள் வே​லைகளில் மூழ்கி இருந்தனர். ஆலயத்தில் உழவாரப்பணி நடந்துக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக, அதன் பாரம்பரிய அழகு சற்றும் குறையாமல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கல்லும் கதை சொல்லும். அதவும் பண்டைய தமிழ் கோயில் என்றால் அதன் கற்கள் ஒரு பெரும் கதையை பிரதிபலிக்கும். கோயில் உருவான கதை, அதன் கட்டுமான முறை, எத்தனை தளங்கள் கொண்டது, அதன் கருவறை இருக்கும் அமைப்பு, எந்தக் காலத்தில் கட்டப்பட்டது , யார் கட்டியது , தற்போது இருப்பது முதலில் இருந்த கோயிலா இல்லை இடையில் அது விஸ்தரிக்கப்பட்டதா, செங்கல் கட்டுமானமா கற்கோயிலாக மாறியதா, இது போன்ற ஆய்வுகள் ஒருபக்கம் இருக்க, அங்கே இருக்கும் சிலைகளும் கதை சொல்லுகின்றன. கோஷ்டத்தில் இருக்கும் மூர்த்திகளை கொண்டு ஆய்வுகள் செய்ய இயலுமா, சிற்பங்களின் அணிகலன், அமைப்பு கொண்டு கால நிர்ணயம், அங்கே இருக்கும் கல்வெட்டுகளில் வரும் எழுத்துகளை கொண்டு ஆய்வுகள், அவை சொல்லும் வரலாறு, அந்த நாளைய ஆட்சிமுறை, இவை போதாதென்று அந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு, என்ன தெய்வ லீலை நடந்ததை குறிக்க எழுந்த கோயில் அது, பாடல் பெற்ற ஸ்தலமா, பரிகார ஸ்தலமா. இவை அனைத்தையும் ஒன்று சேர பார்க்கும்​ பொழுது முதலில் மூச்சு முட்டினாலும், அவை அனைத்தும் ஒன்று கூடி ஆலயம் என்று புனித அமைப்பின் முழு ஸ்வரூபத்தையும் நமக்கு தெரிய வைக்கின்றன.

இந்தப் பதிவை துவங்கும்​போது சிறு பதிவு என்று தான் நினைத்தேன். ஆனால் அதை எழுத ஆரம்பித்தவுடன் மேலும் மேலும் கிளைக்கதைகள் என்று விரிந்துக் கொண்டே போனது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முயற்சி செய்வதற்கு பதில், ஒரு தொடர் பதிவாக இயற்றலாம் என்று எண்ணி முதல் பாதியாக இதை எழுதுகிறேன் – திருவட்டதுரை சிவன் கோயில் பற்றிய தொடரே அது.

இந்த அருமையான கோயிலின் இறைவன் ஆரட்டதுரை நாதர். பலருக்கும் தெரியாத இந்த கோயிலில் பல அருமையான சோழர் காலத்து சிற்பங்கள் உள்ளன.

பெண்ணடத்திற்கு மிக அருகில் – திட்டக்குடி சாலையில் வெள்ளாற்றங்கரையில் இருக்கும் இந்த ஆலயம், அதன் அமைப்பு மற்றும் சிற்பங்களை கொண்டு ராஜராஜனுக்கு முந்தைய காலத்து சோழ திருப்பணி என்று கருதலாம். ஆதிசேஷனும், சப்த ரிஷிகளும் இங்கு சிவனை வழிபட்டதாக ஸ்தல புராணம் சொல்கிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி இன்னும் ஒரு கதை இருக்கிறது. அது திருஞானசம்பந்தர் இங்கு வந்த​போது சிவனே ஊர் மக்களின் கனவில் வந்து சோர்ந்து வரும் அவருக்கு ஒரு பல்லக்கும், குடையும் கொடுக்கும் படி கூறிய கதை. சம்பந்தரும் இந்தக் கோயிலின் இறைவனை பற்றி பல பதிகங்கள் பாடியுள்ளார்.

இந்தக் கதை மூன்று முறை இந்த கோயில் சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது, முதல் முறை செப்பனிடப்பட்டுள்ள கோபுரத்தில்.

இரண்டாம் தளத்தில் வலது புறத்தில் சுதை உருவம். பல்லக்கின் வெளியில் சம்பந்தர், மேலே குடை, மேலே தளத்துடன் வரவேற்கப்படும் காட்சி.

அதே போல விமானத்தின் இரண்டாம் தளத்திலும் இதே காட்சி உள்ளது.

இன்னும் ஒரு இடத்தில தலைக்கு மேலே மகர தோரணங்களின் நடுவில் மிகச் சிறிய அளவில் புடைப்புச் சிற்பம் உள்ளது.

இதுவே ஆதி முதல் வடிவம் என்று நாம் கருதலாம். பல்லக்கை திடகாத்திரமான இருவர் தூக்கிக் கொண்டு சம்பந்தரையும் அவர் தந்தையாரையும் அணுகி வருகிறார்கள். பல்லக்கின் அடியில் தெரியும் ஒரு சிறிய உருவம் மேலே இருக்கும் குடையை தூக்கிப் பிடித்திருக்கும் பாணி இன்றும் நம் கோயில் உற்சவங்களில் கு​டைகளை தூக்கிப் பிடிப்போரின் பாணியில் இருக்கிறது. குழந்தைக்கு பல்லக்கை பார்த்தவுடன் ஆனந்தம், தந்தையாருக்​கோ பெருமிதம். இந்தக் காட்சிக்கு மேலே ஆனந்த தாண்டவத்தில் ஈசன், அருகில் சிவகாமி அம்மை, அனைவருக்கும் அருள்பாலித்து நிற்கின்றனர். இந்த சிறிய அளவு சிற்பத்திலும், முகத்தில் மட்டும் அல்லாமல் அவர்களது ஒவ்வொரு அசைவிலும் அமைப்பிலும் உணர்ச்சிகளை சிற்பி வெளிப்படுத்துகிறான். ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் பரிசை பெரும் அவர்களின் உபகாரஸ்மிருதி – அதிலும் ஒரு சிறு குழந்தையின் கள்ளம் கபடமற்ற அந்த ஆனந்த உணர்ச்சி , அதே தந்தையின் முதிர்ந்த கோட்பாடு… ஆஹா அருமை. பல்லக்கின் அமைப்பும் வடிவமும் நாம் இதுவரை பார்த்தவை போன்று இல்லாமல் சமமான இருக்கை போலவே உள்ளது.

மற்ற இரு இடங்களிலும் உள்ள பல்லக்கு தற்கால அமைப்பை ஒட்டி உள்ளது. அதிலும் சம்பந்தர் அதன் மேல் ஏறி அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. குடை பல்லக்கின் மேலே முடுக்கி விட்டது போல உள்ளது. கூடு போல இருக்கும் இந்த பல்லக்கின் அமைப்பை பார்க்கும் பொது – மேலே கு​டைக்கு வேலையே இல்லையே என்று தோன்றுகிறது. மற்ற இரு சுதை வடிவங்களும் பிற்காலத்தில் செய்தவையாக இருக்க வேண்டும். ஆனால் எதற்காக முன்னர் இருந்த வடிவத்தை மாற்றி செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனக்கு ஒரே ஒரு குறைதான். விமானத்தையும் கோபுரத்தையும் செப்பனிடும்​போது பாரம்பரிய சுதை​யை உபயோகிக்காமல் சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள். சரியாக பராமரித்தால் சுதை பல நூற்றாண்டுகள் நிற்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *