பேரூரின் கலைச் சுரங்கத்தை என்று கண்ணுற்றேனே அன்று முதல் இந்தக் கலையழகை நம் கலாஇரசிகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து இரசித்து சுவைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல! பத்து வருடங்கள்! ஆனால் இத்தனைக் காலம் பொறுத்ததிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பதிவினை படித்து முடிக்கும் பொழுது அதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.
இன்று நாம் பார்க்கப் போவது அழகுப் பெட்டகமான ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் அற்புத அழகைத்தான். இதோ, சிறைக்குள் இருக்கும் இந்த உயிர்ச் சிலையைப் பாருங்கள்.
முதலில், இது ஒரு தூண் சிற்பம்! ஒரே கல்லால் ஆன தூண் சிற்பம். பேரூரின் இந்தக் கனகசபையில் மிகவும் அற்புதமான வேலைப்பாடமைந்த எட்டு தூண்கள் இங்கே வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை கி.பி 1625 முதல் கி.பி. 1659 வருடங்களில் இராஜா சிவத்திரு அழகாதிரி நாயக்கர் அவர்களால் அமைக்கப் பெற்றது.
இரும்புக் கூட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ, சிற்பக்கலையின் உச்சமாகத் தோன்றும் இந்தக் கலையின் அழகு பெரும்பாலானோர் கவனத்திற்கு வருவதேயில்லை! இதைப் படித்த பின்னாவது சில நல்ல உள்ளங்கள் இந்தச் சிறைக்கு பதில் நல்ல கண்கவரும் கண்ணாடிக் கூண்டை அமைப்பார்கள் என நம்புவோம்.
சோழர்களின் காலத்திற்குப் பின்னும், 13 – 14 ஆம் நூற்றாண்டு பாண்டியர்களின் காலத்திற்குப் பிறகும் சிற்பக் கலையின் வளர்ச்சி சற்றே குன்றியது போல்தான் இருந்தது. ஆனால் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கனகச்சபை சிற்பம், சிற்பக் கலை இன்னும் மறைந்து விட வில்லை மாறாக அந்தக் கலையில் தேர்ச்சி அடைந்து அழகில் இமயத்தையும் விஞ்சியதை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
கம்பிகளுக்குள் இல்லாமல், கம்பீரமாக நிற்கும் பிரிட்டிஷ் காப்பகத்தின் பழைய புகைப்படம் இதோ…
ஓவியர் சிற்பி அவர்கள் ஓவியமும் இதோ ( நன்றி varalaaru.com )
நம்முடைய கலை மீதான கட்டுக்கடங்காத ஆர்வத்தை அறிந்து, புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் இந்த அழகுச் சிலையின் அழகை கண்ணார பருகுவதற்காக கதவையும் திறந்து காட்டிய அந்த ஆலயத்தின் EO அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, இந்தக் கலை விருந்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இதோ, மனதைக் கொள்ளையடிக்கும் அந்த அழகுச் சிலையின் உருவம்.
இது ஒரு தனித்துவம் வாய்ந்த சிற்பம், கற்சிலையாகப் பார்த்தாலும், சிவனின் நடனமாகப் பார்த்தாலும் சாமனியர்களால் எளிதில் புரிந்துகொள்வது கடினம்தான். சிவனை நாடி அவனை அறிந்தால்தான் இந்த நடனத்தையும் புரிந்துகொண்டு இரசிக்கமுடியுமாம்! ப்ரம்மா, விஷ்ணு, கந்தன், நாரதர், பரதன் (நாட்டிய சாஸ்திரத்தை எழுதியவர்) இவர்களால்தான் நடனத்தை அறிந்து கொண்டு இரசித்து ஆனந்திக்க முடியுமாம்!
சாலுவன் குப்பத்தில் இருக்கும் கல்வெட்டு ஒன்று சிவநடனத்தின் தனிச் சிறப்பை கூறுவதோடு, நாட்டியத்தின், சங்கீதத்தின் கூறுகளை விளக்கி, சிவநடனத்தை கண்டுகளிக்க விளக்குகிறது: யதி ந விததா பரதோ யதி ந ஹரிர் நரதோ ந வ ஸ்கந்தா பொத்தம் க இவ ஸமர்த்தாஸ் ஸங்கிதம் கலகலஸ்ய (Epigraph. Ind. 10, p. 12).
நூல்: NATARAJA – THE LORD OF DANCE – Dr. Sivaramamurti
சிவநடனத்தைக் கண்டுகளிக்கும் இந்தக் கடவுளர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் இரசனைக்கு தக்கவாறும், நடனத்தை ஊக்குவிப்பதைப் போலவும், பல்வேறு இசைக் கருவிகளை உபயோகித்து நாயகனின் நாட்டியத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றனர். இதோ அதைப்பற்றி சில வரிகள், நடனத்தை நாயகன் துவக்கிய கணமே விஷ்ணு மர்தளம் என்னும் வாத்தியத்தை இசைத்து தன் தெய்வீக இசைய பரவவிட, துடிப்பாய் எழும் அந்த ஒலி வண்ணமயில்களைத் தோகைவிரித்தாடச் செய்யும் கரு மேகங்களின் இடியாய் எழுகிறது. தாமரைக் கையோன் பிரம்மாவோ வெங்கலத் தாளத்தை நாட்டியத்திற்கும் விஷ்ணுவின் தாளத்திற்கும் ஏற்றார் போல் தட்டி இசைத்து காமனை வென்ற சிவனின் நர்த்தனத்தை இடைவிடாது நடத்துகிறார்.
இங்கிருக்கும் பிரம்மாவிற்கு அப்படி என்ன சிறப்பு, தெரிகிறதா?
ஐந்து சிரங்களைக் கொண்ட பிரம்மா, சிவனுக்குரிய சின்னங்களான மானையும், மழுவையும் கொண்டுள்ளார்!!
இசைக்கலைஞர் எவ்வாறு கணநேரம் தன் பாடலை நிறுத்தி, தாளத்திற்கும், ஸ்ருதிக்கும் ஏற்றவாறு எப்படி திரும்பத்தொடர்கிறாரோ, அதே போல் இங்கு நம் ஆடலழகனும் கணநேரம் தன் நடனத்தை நிறுத்தி தன் மத்தளத்தை இசைத்து இசையை தன் வழிக்கு நேர்த்திசெய்து மீண்டும் தொடர்கிறார்.
காரைக்கால் அம்மையார் இங்கே மற்றுமொரு தனித்துவம்! இது தனிச் சிற்பம் அல்ல அதே தூணில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பமே!
என்னவொரு அற்புதமான வடிவமைப்பு! வற்றிய முலைகள், சுருங்கி மடிப்புகளைக் காட்டும் கழுத்து தசைகள், வயதான தோற்றத்தை அற்புதமாக எடுத்துக் காட்டும் இந்தச் சிலை இளம் வயதிலேயே, வயதான பேய் உருவம் கேட்டுப் பெற்ற காரைக்காலம்மையார்! (முந்தைய பதிவுகள் பார்க்கவும்)
முயலகன் மட்டும் தப்பி விடுவாரா என்ன? இதோ தன் கையில் பாம்பை பிடித்தவாறு காணப்படும் கொழு கொழு முயலகன்.
சற்றே நீளமான பதிவுதான், என்னசெய்வது இதை பாகங்களாகப் பிரித்து பதிவது தவறென்று தோன்றுவதால் வார்த்தைகளைச் சுருக்கி, வண்ணப் படங்களை பேச வைக்கிறேன்.
அழகான பிரிந்த தாடை, அழகிய வரிகளைக் கொண்ட நாசிகளை உடைய அழகிய இளமைத் ததும்பும் வதனம் கொண்ட சிவன்.
உயர்த்திய கால்கள், எவ்வளவு அழகாக கனக் கச்சிதமாக வடிக்கப் பட்டிருக்கும் மூட்டு, கைகள், கைவிரல், நகம், விரல் மூட்டுகளின் மேல் உள்ள வரிகள், நகச்சதை, என்னவொரு தத்ரூபமான படைப்பு!!
மற்றுமொரு அழகிய வடிவமைப்பு, மேல்பாகமும் அடிப்பாகமும் காட்டும் கால் பாதம், விரல்கள், பாதத்தின் மேல் தெரியும் காலணியின் வார்ப்பட்டை, வளைந்து திரும்பி அழகிய முத்திரையைக் காட்டும் கை, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல், இதை விடத் துல்லியமாக யாரால் வடிக்க இயலும்!
எண்ணற்ற வடிவங்களைத் தாங்கி இருக்கும், கைகள் வரிசையாய் விரிகின்றன…
தனித்துவம் பெற்ற எண்ணற்ற சின்னங்கள் எப்படித்தான் வடித்தனரோ! இவைகள் அனைத்திற்கும் பெயர்களும், முக்கியத்துவமும் கூடத் தெரியவில்லை, தேடிக் கண்டுபிடிப்போம்.
சிறப்பிற்கும் மேல் சிறப்பான ஒன்று!
பொதுவாக நாம் சிற்பத்தின் அளவைக்காட்ட ஏதேனும் தெரிந்த பொருளை உபயோகிப்பது வழக்கம், முக்கியமாக அளவில் மிகவும் சிறிய சிற்பங்களின் அளவை எடுத்துக்காட்ட, அதே போல் பெரிய கோவில் துவார பாலகர் சிற்பத்தின் அளவைக் காட்ட சிற்பி உபயோகித்திருக்கும் யானைக் கூட நினைவுக்கு வரலாம் உங்களுக்கு. ஆனால், இங்கு தற்செயலாகவோ, அல்லது சிற்பத்தின் பெருமையைக் கூட்டுவதற்காகவே, இயற்கையாக கிடைத்த இந்த அரிய தடயம், மனதை கொள்ளை கொண்டுவிட்டது! நீங்களேப் பாருங்கள்.
சிற்பியின் திறமையும், சிலையின் தத்ரூபமும் தான் இந்தக் கொசுவை ஏமாற்றி விட்டதோ! பாவம் படைத்தவனின் குருதியையே ருசிப் பார்க்க துளையிட முயற்சி செய்கிறது போலும்!!
இந்தப் பதிவும் இதில் உள்ள சிற்பங்களும் தங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொண்டிருக்கும், அவ்வாறு இருந்தால் இந்தக் கொள்ளை அழகை பேரூர் செல்லும் யாவரும் கண்டு மகிழ வேண்டும் என்று நினைத்தால், இந்தப் பதிவை நண்பர்களோடும், நல்ல உள்ளம் கொண்ட அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள், அப்படியாவது சில நல்ல உள்ளங்கள் சேர்ந்து இரும்புச் சிறையில் இருக்கும் இந்த அழகுச் சிலைக்கு கண்ணாடிக் கூண்டு கிடைக்க வழி பிறக்கட்டும்.