ஒரு ஊசியைத் தேடி – சிற்பத்தின் நுணுக்கம் – பேரூர்

பேரூரில் பல அற்புத பிரம்மாண்ட சிற்பங்கள் இருந்தாலும், சென்ற பதிவில் பார்த்தது போல், சில சிறிய அளவிலான சிற்பங்களும் உள்ளன. முதல் பார்வையில் பெரிதாக ஒன்றும் இல்லை என்று கருதத் தோன்றும் சிற்பம்தான், ஆனால் திரு. பத்மவாசன் போன்றவர்கள் நமக்கு எடுத்துச் சொன்னால் தான் புரியும் அதன் அருமை!

பலரும் இந்த வழிச் சென்றும் ஒரு விநாடிக் கூட இந்த சிற்பங்களை பார்க்காமல் போகின்றனரே என்று சொல்லும் எங்களுடைய கண்களுக்குமே எடு படாத சிற்பம். நல்லதொரு பாடமாக எங்களுக்கு இது அமைய வேண்டும் என்பதனாலோ என்னவோ, விட்ட படங்களை மீண்டும் எடுக்க பட்ட பாடு!!! இனி எந்த சிற்பத்தையும் குறைவாக எடை போடக் கூடாது என்ற பாடம் மண்டையில் ஆணி அடித்தாற்போல உறைத்து விட்டது.

திரு. பத்மவாசன் அவர்கள் தான் வரைந்த ஓவியத்தை கொண்டு சிற்பத்தின் உன்னதங்களை விளக்கினார்.

முதலில் எளிதாக தெரியும் அடையாளங்களை பார்ப்போம்.

ஒரு யோகியின் தவம். ஒரு காலை மடித்துப் புரிகிறார் கடுந்தவம். ஒரு சில தடயங்களை வைத்து அது யார் என்பதை நாம் எளிதாக அறியலாம்.


தோள்களில் ஒரு வில், பின்னால் ஒரு காட்டுப் பன்றி, ஆம் இது அர்ஜுனன்தான், ஈசனின் பாசுபத அஸ்திரம் பெற அவன் கடுந்தவம் புரிந்த காட்சி.

புடைப்புச் சிற்பத்தின் மிகவும் குறுகிய அமைப்பினுள் சிற்பி வில்லை வடித்துள்ள விதம் மிகவும் அருமை. பக்க வாட்டில் நின்று பார்த்தால் தெளிவாகத் தெரியும்.

ஆனால் இதையும் விட நுணுக்கமாக, சிற்பத்தில் ஒரு உன்னத அமைப்பு உள்ளது. அர்ஜுனனின் கடுந்தவத்தை குழப்பமின்றி விளக்க சிற்பி செய்த யுக்தி. அது என்ன?கீழுள்ள படத்தைப் பாருங்கள்.

படத்தில் ஏதாவது வித்தியாசமாக தெரிகிறதா? பொதுவாக சிற்பி காட்சிகளை சிற்பத்தின் சட்டத்திற்குள் சமமாக சித்தரிப்பான். ஆனால் இங்கு ஒரு காலின் பாதம் மட்டும் சற்று சட்டத்தை விட்டு வெளியே வருமாறு உள்ளது!. ஏன்? விரல்களையும், நகங்களையும் கனக்கச்சிதமாக வடித்துள்ளானே அதன் அழகைக் காட்டவா? சற்றே கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

காலின் கட்டைவிரலுக்கு அடியில் ஏதேனும் தெரிகிறதா? இன்னும் பிடிபடவில்லையா! இதோ திரு. பத்மவாசன் தெளிவாகத் தருகிறார் பாருங்கள்…

ஆஹா! அர்ஜுனன் ஊசி முனையில்தவம் செய்யும் காட்சி!

நம் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த அழகை சரியான கோணத்தில் ரசிக்க படங்களை எடுத்து அனுப்பி உதவிய திரு ப்ரவீனுக்கு மிக்க நன்றி. விளக்க இப்படி அழகான படங்கள் இருக்க வார்த்தைகள் எதற்கு?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *