ஒன்பது ஆண்டுகளுக்கு முன் – பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்ற பொது அங்கு இருக்கும் சிற்பங்களை கண்டு நான் அசந்து போனேன்! கண்முன்னே இருப்பது என்ன என்று திணறி நின்றேன். சிற்பக் கலையில் ஆர்வம் பெருக, எனது தேடல் பேரூர் சிற்பங்களின் மேல் இருந்த மதிப்பை பன்மடங்கு பெருக்கியது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவற்றை படம் பிடிக்க செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. அவற்றை படம் எடுக்க அனுமதி இல்லை. நாளேட்டில் வந்த சிறு சிறு படங்களையே பதிவு செய்ய முடிந்தது. எனினும், ஒவ்வொரு தோல்வியும், மீண்டும் அடுத்த முறை அங்கு சென்று அதிகாரிகளிடம் முறையிடும் வேகத்தை கூட்டியது. இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.
2008 ஆம் ஆண்டு, சிங்கையில் அன்னலக்ஷ்மி நிறுவனம் ஒரு விழா எடுத்தது. வேண்ட வெறுப்பாக மனைவி மகனுடன் ஒரு சனிக்கிழமை அங்கு சென்றேன். எங்கே எப்படி வெளியே நழுவலாம் என்று எத்தனிக்கும் போது, ஒரு கோடியில் – தொலைவில் – மிகவும் அழகான விநாயகர் ஓவியங்கள் தென்பட்டன. இது போல
http://www.hindu.com/mp/2007/06/09/images/2007060951460301.jpg
என்னையும் அறியாமல் அருகே சென்றேன். அருமையான ஓவியங்கள், மிக நுண்ணிய வேலைபாடு, படங்களின் அடியில் ஒரு கையெழுத்து – பத்மவாசன். ஆஹா , என் அதிர்ஷ்டம் என்று நினைக்கையில், அருகில் ஒரு சிறு அறிவிப்பு பலகை தென்பட்டது. அதில் ஓவியர் அங்கு இருப்பதாகவும், உடனே நம் முகங்களை வரைந்து தருவார் என்றும் அறிவித்தது. சுற்றி பார்த்தேன், அடுத்த கடையில் ஓவியர் எங்கே என்று கேட்க, அதோ என்று கையை காட்டினார். மிகவும் எளிமையான குர்தா அணிந்து சாந்தமாக சிரித்த முகத்துடன் – திரு. பத்மவாசன் அங்கே நின்று நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்.
அருகில் சென்று, என்னை நானே அறிமுகம் செய்துக்கொண்டேன். பொன்னியின் செல்வன், கல்கி, ஓவியர் சிகரம் சில்பி என்று நடை களைகட்டியது. சில்பியின் சிஷ்யன் என்ற முறையில் அவரைப் பற்றிய பல அரிய தகவல்களை கூறினார். நடராஜர் சிலை உருவத்தை வரையும் போது, காகிதம் குறைவாக இருக்க, இன்னொரு காகிதத்தை எடுத்து ஒட்டி தொடர்ந்தார் எனவும். இன்னொரு காகிதத்தில் அதே நடேசனின் பின் வடிவத்தை வரைந்தாராம் சில்பி. இரு காகிதங்களும் இதனால் ஒரே அளவில் இல்லாமல் போயின. பல வருடங்களுக்கு பின், திரு. பத்மவாசன் அவர்கள் ஒரு புத்தகத்திற்காக அவரது கணினியில் ஒரே அளவாக பெரிது படுத்தி, இரு ஓவியங்களையும் ஒன்றின் மேல் மற்றொன்றை வைத்து பார்த்தால் கணக்கட்சிதமாக பொருந்தின என்று அவர் அந்த அற்புத ஓவியரின் சிறப்பை விளக்கினார்.
பிரியும் போது தனது முகவரியையும் தொலைப்பேசி என்னையும் ஒரு சிறு காகிதத்தில் பென்சிலில் எழுதிக் கொடுத்தார். ( இன்றும் வைத்துள்ளேன் !!)
டிசம்பர் 2009. மீண்டும் பேரூர் நோக்கிப் படை எடுத்தோம். எப்படியாவது படம் எடுக்க அனுமதி பெற வேண்டும் என்ற வெறியோடு – தெரிந்த நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டேன். நண்பர்கள் பலர் முயன்றும், ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் ஆலயத்தின் அறநிலைத்துறை அதிகாரி மனது வைத்தால் தான் ஒரே வழி என்று சொன்னார்கள். எவ்வளவோ பண்ணிட்டோம், இதையும் பண்ணிவிடுவோம் என்று அவரது அலுவலகம் முன் சென்று நின்றோம். ஒரு ஒரு மணி நேரம் காத்திருந்த பின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். சிறு வயது அதிகாரி, எதிர்பார்த்ததை விட டிப் டாப்பாக உடை அணிந்து மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். சின்ன அலுவலகம், எனினும் நான்கு கணினிகள் சுற்றிலும், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. முதலில் மறுத்தார், ஆலய பாம்ப்லெட் கொடுத்தார், அதில் இருக்கும் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். எனினும் நான் ஏற்கவில்லை, எனது மடிக் கணினியை திறந்து, செய்து வரும் பணிகளையும், பட சேகரங்களையும் விளக்கினேன். ஒரு மணி நேரம் போனது, கல்லும் கரையும், என்பது போல அதிகாரியும் எங்கள் பணியின் பொருளை உணர்ந்து அனுமதி தந்தார். கட கட என்று வேளையில் இறங்கினோம். அப்போது மின்சாரம் போனது…எனினும் அடுத்த நாளும் சென்று படம் எடுத்து முடித்தோம். எல்லாவற்றையும் எடுத்து விட்டோம் என்ற மிதப்போடும் வெகு நாள் இலக்கு நிறைவேறிய மன நிறைவுடன் திரும்பினோம்.
அடுத்த வாரம், சென்னையில், திரு. பத்மவாசன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தேன். படங்களை எல்லாம் நிதானமாக பார்த்தார். கண்களில் சிறு பிள்ளை கடையில் கமர்கட் பாட்டிலை பார்ப்பது போல, அனைத்தையும் வரைந்து விட வேண்டும் என்று நினைத்தார் போல.பேரூர் படங்களை பார்த்தவுடன் – விடு விடு என எழுந்து உள்ளே சென்றார் – சிறிது நேரத்தில் பல ஓவியங்களை கொண்டு வந்தார். தான் பேரூர் சென்ற போது வரைந்த ஓவியங்கள் என்றும் படம் எடுத்து போடுங்கள் என்றும் சொன்னார். கரும்பு கடிக்க கூலியா. முதலில் கண்ணில் பட்டது மூலவர் – வண்ணம் தீட்டிய ஓவியம்.
அசந்து போனேன். இப்படி அந்த தாமர வண்ணம் அதன் பொலிவு – எப்படித்தான் கொண்டு வந்தாரோ?
அடுத்து சில தூண் சிற்பங்களின் ஓவியங்களை படம் பிடிக்கும் பொது, இது ஒரு சிறப்பான சிற்பம் என்றார். இதை நான் பேரூரில் பார்த்த பொழுது ஒன்னும் பெரிதாக இல்லை என்று படம் கூட எடுக்க வில்லையே என்றவுடன், அதன் சிறப்பை விளக்கினர். தலையில் குட்டிக்கொண்டு திரும்ப படம் எடுக்க வேண்டுமே என்று திண்டாடிய பொழுத, நண்பர் பிரவீன் அவர்கள் உதவினார். நேற்று இதற்காகவே பேரூர் சென்று அதிகாரியை பார்த்து, தொலைபேசியில் அழைத்து சிலை இருக்கும் இடம் கேட்டு, படம் எடுத்து அனுப்பினார்.
அப்படி இந்த தூண் சிற்பத்தில் என்ன விசேஷம். ஏதோ முனிவர் தவம் செய்வது போலத் தானே உள்ளது
தொடரும். ….