சமீப காலங்களில் தஞ்சை பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள் பற்றிய நிறைய தகவல்கள் நாளேடுகளில் வருகின்றன. இந்த ஆயிரம் ஆண்டு ஓவியங்கள் என்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு இருபத்தி எட்டு வயது இளைஞர் , திரு S. K. கோவிந்தசுவாமி அவர்கள் , கண்டு பிடித்தார் என்பது பலரும் அறியாத ஒன்று. நல்ல வேளை, ஹிந்து நாளேடு ச்மீபத்தில் கூட இதை வெளியிட்டு அவரை சிறப்பித்து உள்ளது,
ஆனால் எண்பது ஆண்டுகள் ஆகியும், இந்த ஓவியங்கள் இன்னும் ஒரு புத்தகமாகவோ , இணையத்திலோ தென்படவில்லை. ஒரு சில முயற்சிகளும் காப்புரிமை பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றன. தஞ்சை சென்றாலும் கூட சாமானியர்களுக்கு இந்த ஓவியங்கள் பார்க்க அனுமதி இல்லை !! அப்படி இருக்க இந்தப் பதிவை, ஏற்கனவே வெளிவந்த ஒரு சில படங்களை மற்றும் கோட்டோவியங்களை கொண்டும் இடுகிறேன், எனினும் மனதில் ஒரு நெருடல் – வரைந்த ஓவியனே அதற்கு தன் பெயரை இட்டு சொந்தம் கொண்டாடவில்லை – அப்படி இருக்க நாம் யார் அவற்றின் வெறும் புகை படங்களுக்கு காப்புரிமை போட, மக்கள் பலரும் ரசிக்க இந்த பொருளாதார நோக்கங்கள் கொண்ட தடை எதற்கு?.
சோழ ஓவியனின் ஒப்பற்ற கலைத் திறனை நாம் இன்று பார்க்க, அந்த ஓவியங்களின் ஒரு சிறு பாகத்தை மட்டுமே எடுத்துக்கொள்கி்றேன் – சுந்தரர் ( இந்திரனின் வெள்ளை யானையின் மேல்) சேரமான் பெருமாளுடன் ( வெள்ளைப் புரவியின் மேல் ) கைலாயம் செல்லும் காட்சி. இதை பற்றி பல அறிஞர்கள் எழுதியுள்ளனர், ஏன் ஒரு சில முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகள் கூட செய்திருக்கிறார்கள் என்று செவி வழி செய்தி – எனினும் என்ன செய்வது – நமது பல்கலைக் கழகங்கள் இந்த ஆய்வுகளை பகிர்வதில்லை – இப்படி ஆய்வேடுகள் கிடங்கில் தூங்குவதில் யாருக்கு என்ன பயன் ?
சரி, பதிவுக்கு வருவோம் – இந்த ஓவியம் – அதிலும் ஒரு சிறு பாகத்தை மட்டுமே நாம் பார்க்க போகிறோம். சேரமான் பெருமாள் மற்றும் அவர் வெண் புரவி.
படங்கள்:
http://ngm.nationalgeographic.com/2008/01/india-ancient-art/behl-photography
மேலே செல்லும் முன்னர், ஓவியத்தில் இந்த பகுதியை மட்டும் ஏன் எடுத்தேன் என்பதற்கு விளக்கம். புரவிகளுக்கு ஒரு தனி ஈர்ப்பு சக்தி உண்டு, வலிமை பொருந்திய தசைகள், அவற்றை பிரதிபலிக்கும் மேல் தோல், நளினத்தை சொட்டும் அங்க வளைவுகள், காற்றில் பறக்கும் ரோமங்கள்…இப்படி பல. கலைஞனின் பார்வையில் இவை ஆண்டவனின் படைப்புகளில் மிகவும் அழகு ( பெண்களுக்கு அடுத்து !!) டா வின்சி புரவிகளை வரையவும் உலோகத்தில் வடிக்கவும் – தசை, நரம்பு, எலும்பு என்று அணு அணு வாக பிரித்து பார்த்து படிக்கிறார். அவரது கடைசி நிறைவேறா வேலை – இருபத்தி நான்கு அடி உயரமுள்ள வெண்கல புரவி. இதனை பற்றி சமீபத்தில் தொலைகாட்சியில் பார்த்தேன். பார்த்து விட்டு அதை பற்றி மேலும் படிக்க இணையத்தில் தேடிய பொது, அவரது பல புரவி ஓவியங்கள் கிடைத்தன. ஒவ்வொன்றாய் பார்க்கும் போது, எங்கோ இதே போல பார்த்த நினைவு வந்தது. ….எங்கு? முதலில் அவரது ஓவியங்களை பாருங்கள்
படங்கள் : இணையத்தில் இருந்து எடுத்தவை.
சரி, இப்போது பெரிய கோயில் ஓவியத்துக்கு வருவோம். அறிஞர் திரு C. சிவராமமுர்த்தி அவர்கள், ஒரு மகான். கலை உலக ஜாம்பவான். அதுவும் சோழர் கலை என்றால் அவருக்கு ஒரு தனி பிரியம். இந்த ஓவியத்தை பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள் ( நமக்கென்று அவர் இந்த வடிவத்தின் கோட்டோவியத்தையும் தீட்டி தந்துள்ளார்.)
http://www.yabaluri.org/TRIVENI/CDWEB/SomeFrescoesoftheCholasnov33.htm

புரவியின் மெது இருக்கும் ஆளின் வடிவமும் மிக அழகு. ஒரு கையில் கடிவாளத்தையும் மறுகையில் தடி என்று அவர் பிடித்திருக்கும் வண்ணம் நளினம் ததும்புகிறது அந்தக் குதிரை ST. எகிடோ சண்டை காட்சி போல தோற்ற ஒற்றுமை இருக்கிறது. இன்றைய நவீன பார்வையில் இந்த ஓவியத்தில் சில குறைபாடுகள் இப்பது போல தெரிந்தாலும், ஒன்றை மனதில் நாம் வைத்துக்கொள்ள வேண்டும், எந்த தலை சிறந்த ஓவியனும் விமர்சனத்திற்கு அப்பார்ப் பட்டவன் அல்ல, எனினும் இந்தனை ஆண்டுகளுக்கு முன்னரே, மிருகங்களை இப்படி நேர்த்தியாக வடிக்கத் தெரிந்த ஓவியனும் அவனது அற்புத திறனும் ஒரு அறிய விஷயம். இன்னும் ஒரு அத்தாட்சி அருகில் இருக்கும் யானை
( யானை அடுத்த பதிவில் பார்ப்போம் )
அவரது ஓவியத்தை சற்று சரி செய்து இங்கே இடுகிறேன். ( ஓவிய நண்பர்கள் இதனை சோழர் பாணியிலே வண்ணம் தீட்ட முயற்சி செய்யலாம்!!)
திரு C. சிவராமமுர்த்தி , சொன்ன திரு போலோ அவர்களது ஓவியம் இதோ

நடுவில் இருக்கும் வெள்ளை புரவிக்கும் நமது புரவிக்கும் உருவ ஒற்றுமை வண்ண ஒற்றுமை அபாரம். எனினும் டா வின்சி அவர்களது படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பெரிய கோயில் ஓவியத்துடன் ஒப்பிடும்போது – ஒவ்வொரு அம்சமும் – அங்கமும் – அழகாக வளையும் பின் முதுகு, பின்னங் கால்களின் சித்தரிப்பு, திரண்ட மார்பு, கம்பீரமான தலை, செதுக்கி விட்டாற்போல பிடரி , பிளிரும் முன்னங் கால்கள், கனக்கச்சிதமான இடை – நடை , மூட்டு மடிப்புகள், குளம்பு – அருமை.
பெயரில்லா சோழ சிற்பியே , உனக்கு கலைக்கு நிகர் இல்லை. உன் அற்புத கலைக்கு உலகம் தலை வணங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பின் குறிப்பு: தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளின் பொது அதிகாரிகள் இந்த அற்புத ஓவியங்கள் ஒரு தொகுப்பாக வெளியிட அடியேனின் சிறு கோரிக்கை – இந்த பதிவின் மூலம்.