கல்தோன்றி மண்தோன்றா காலத்தே … கல் வட்டம்

மனிதக் கலாசாரத்தின் பிறப்பிடம், வானத்தில் காற்றில் பறக்கும் ஒரு பட்டம் போல – பலர் இந்த பட்டதை பிடிக்க பெரும் முயற்சி செய்கின்றனர்.

சரியான ஆதாரங்கள் இல்லாதபோது, தாங்கள் எழுதியதற்கு துணையாக, தாம் சொல்லியவற்றை சரியென அவற்றை எடுத்து நிறுத்த, கடல் கொண்டமை , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தங்கள் துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஒரு சமூகத்தின் முகவரி கூட இல்லாமல் செய்யும் இயற்கை கூற்றுகள் எப்படியோ அவனது நினைவுகளை மட்டும் விட்டு விடுகின்றன. எது நிஜம் என்பதை மனிதனின் தொழில் நுட்ப வளர்ச்சிகள் – தெளிவாக கால அட்டவணை நிர்ணயம் செய்யும் யுத்திகள், ஆழ் கடலில் சென்று ஆய்வு செய்யும் இயந்திரங்கள், அரசாங்க உதவி – போன்றவை வெளி கொணரும். அப்படி ஏதாவது எனது இன்றைய பதிவை தவறு என்று காட்டினால் நானும் மகிழ்ச்சி அடைவேன்.

இது ஒரு வியாதி. தங்களது காலாச்சாரமே மிகவும் தொன்மையானது என்பதை ஒரு வெறித்தனமாக கூறுவது. அதற்காக இவர்கள் எதையும் செய்வார்கள். இது ஒரு நாட்டிருக்கோ , சமூகத்துக்கோ அல்ல – பொதுவாக பாரெங்கும் இது பரவி உள்ளது. தாங்கள் தான் மூத்தவர், மற்றவர் அனைவரும் தங்களுக்கு கீழ் நிலை என்று காட்டுவதில் இவர்களுக்கு ஒரு போதை. எனினும் சில பல சமயங்களில் உண்மை நம் கண் முன்னே இருக்கும்போது, நாம் அதை ஏற்கும் மனப்பக்குவம் கொள்ள வேண்டும். அப்படி பட்ட பதிவு தான் இது.

இப்படி அனைத்திற்கும் சாட்சியங்கள் தேடுவதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அதையும் சொல்ல வேண்டியது தான். இன்றைக்கு நமக்கு இருக்கும் அறிவுத் திறன், தொழில் நுட்பம் – இவையால் விளக்க முடியாத சில புதிர்களும் உண்டு. அப்படி ஒரு புதிரே நாம் இன்று பார்க்கும் கல் வட்டங்கள்.

கல் வட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மலையடிப்பட்டி நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு பெயர் பலகை. மிகவும் பழக்கமான வண்ணம் – பலகை. பலகை மிகவும் சிதைந்து இருந்தாலும் பலமுறை பார்த்த ஒன்று என்பதால் உடனே வாகனதை நிறுத்தினோம்.

ஆம், தொல்லியல் துறை அறிவிப்பு / எச்சரிக்கை பலகை. ஆனால் அருகில், கோயிலோ , இடிபாடுகளோ எதுவும் கண்ணுக்கு தென்படவில்லையே என்று சற்று குழம்பி நிற்கும் பொது.

அதோ பின்னால் இருக்கிறதே, ஒரு அழகிய கல் வட்டம். சுமார் 1000 இருந்து 300 BCE ஆண்டு என்று சரித்திர கூறுகள் காலம் கணிக்கும், இவை நமது முன்னோர் இறந்தவரின் ஈம பொருள்களை தாழிகளில் புதைத்து , அதனை சுற்றி அடையாளமாக இந்த கற்களை வைத்தனர் எனக் கூறப்படுகிறது.

இதில் என்ன அதிசயம் என்றால், இந்த வகை கற்கள் அருகாமையில் எங்கும் இல்லை. இந்த வட்டங்கள் இருக்கும் இடத்தை விட்டு பத்து அல்லது இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்து வரப்பட்டவை. ஏதோ ஒரு மூதாதையர் வழிபாடு முறையை ஒட்டி உள்ளது.

இந்த அழகு – அந்த வட்டம் இன்றும் நம் முன்னே இருப்பது தான்.

அதை ரசிக்கும் அதே தருணத்தில், ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், இவை வெறும் கற்கள் தான். எந்த பெரிய வேலை பாடும் அவற்றில் இல்லை. உள்ளே கிடைத்த தாழிகளில் பொருட்கள் இருந்தன – உண்மை தான். ஓட்டில் சில எழுத்துக்கள் இருந்தன என்று இன்று கூட நாளேட்டில் செய்தி வந்தது , எனினும்…..

மீண்டும், நான் முதலில் சொன்னததப் போல, கண்டிப்பாக தென்னகத்தில் இரு முறையாவது பெரிய கடல் கொண்ட சரித்திரம் உள்ளது. பெரும் பகுதி அழிந்து, அதனால் முதல் இரு சங்கங்களும் களைந்து, பாண்டிய மன்னன் மதுரையை இன்றைய தென்னிந்திய நிலப் பரப்பின் நடுவில் நிறுவினான் என்றும் வழக்கில் உள்ளது. அப்படி இருப்பினும், எஞ்சி இருப்போர் திரும்பவும் இப்படி கற்கால / உலோக கால மனிதனை போல பின் தள்ளப்படுவரோ? இது ஒரு இடம் என்று அல்ல, தமிழகம் முழுவதும் இது போல உள்ளன. தொல்லியல் துறை சுட்டியில் சென்று பாருங்கள் !!!

ASI – Megalithic

இந்த புதிர் இன்னும் பெரியது. இது போன்ற கல் வட்டங்கள் உலகத்தில் பல இடங்களில் உள்ளன !! கூகுளாரைக் கேட்டு பாருங்கள்.

எனினும், நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ( சில நண்பர்கள் இதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை ) எனினும் நமது முன்னோர்கள் இந்த கற்களை புதுக்கோட்டையில் உருட்டி வட்டமிடும்போது எகிப்து பிரமிடுகள் புவியில் ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகள் நின்றுவிட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *