ஆடும் கோலத்தி்ல் நடராஜர் சிலையைப் பார்க்கும் அனுபவமே தனி. அந்த அற்புத வடிவத்தை பற்றி பலரும் போற்றி எழுதியுள்ளனர். பொதுவாக அவர்கள் அந்த ஆட்டத்தின் ஆன்மீக கருத்தையும், அந்த ஆட்டம் உணர்த்தும் உட்கருத்துக்கலையை முதன்மை படுத்தி காட்டும் வண்ணமே உள்ளன. எனக்கு மிகுந்த காலமாய் ஒரு ஆசை. இந்த வடிவத்தை ஒரு கலைஞன், ஒரு படைப்பாளி எப்படி வர்ணிப்பான் என்பதை பார்க்கவேண்டும் என்று. தற்செயலாக சென்னை அருங்காட்சியாக நூல் ஒன்றில் ஒரு சிறு குறிப்பு என் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. புகழ் பெற்ற திருவாலங்காட்டு நடராஜர் சிலை அழகை கண்டு புகழ் பெற்ற பிரெஞ்சு நாட்டு சிற்பி அகுஸ்டே ரோடின் ஒரு சிறு வர்ணனை வெளியிட்டார் என்றே இருந்தது அந்த குறிப்பு. உடனே பல இடங்களில் தேடி அதை கண்டு பிடித்தேன் – ரசித்தேன்.
சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில், அதுவும் அப்போதுதான் நமது அற்புதக் கலை திறமைகளை பற்றி வெளி உலகம் உணர ஆரம்பித்த வேளையில், ஒரு புகழ் பெற்ற பிரெஞ்சு சிற்பி, ஒரு சிலையை பார்த்து லயித்து , புகழாரம் சூட்டுவது மிக அரிது. எங்கோ படித்துள்ளேன் – ஒரு வைரத்தின் பரீட்சை இன்னும் ஒரு வைரத்துடன் தேய்க்கும்போது வைரத்தின் அருமை புலப்படும் என்று – வெறும் கண்ணாடி என்றால் கீறல் விழும், வைரம் என்றால் அப்படியே இருக்கும். இன்றோ இரண்டுமே ஒன்றை ஒன்று மதிப்பை கூட்டி விடுவதை பார்க்கிறேன். ஒரு மகா சிற்பி, அதைவிட அவன் தூய உள்ளம், கலையுடன் தன் வாழ்வையே பிணைத்து சுவாசிக்கும் ஒருவராலேயே – இப்படி ஒரு ரசனையோடு படைக்க முடியும். பொதுவாக கலைஞர்கள் சற்று தலைக்கனம் பிடித்தவர்கள், அவர்களுக்கு தங்கள், தனது சகாக்கள், தனது நாட்டு படைப்பே பெரிது என்ற மனப்பான்மை விமர்சனங்களில் எப்படியாவது வந்து விடும். எனினும் இந்த வர்ணனையின் சிறப்பே அவர் கிரேக்க சிற்பம் வீனஸ் தி மெடிசி யுடன் ஒப்பிடும் நல்ல உள்ளம், மனதை பெருமிதம் கொள்ள செய்கிறது. மேலே படியுங்கள்.
திரு அகுஸ்டே ரோடின் அவர்கள் வர்ணனையில் இரண்டு நடேசர் வடிவங்களை பார்த்ததாக குறிப்பு உள்ளது. அதில் ஒன்று கீழே நீங்கள் பார்க்கும் திருவாலங்காட்டு சிற்பம். மற்றொன்று வேளாங்கண்ணி சிற்பம். அதையும் விரைவில் இங்கு இடுகிறேன். இந்த சிற்பம் சென்னை அருங்காட்சியகத்தில், கண்ணாடி பெட்டியினுள் இருப்பதாலும், அங்கே பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணமே விளக்கு போடப்பட்டிருப்பதாலும், எங்களுக்கு முக்காலி கொண்டு படம் எடுக்க உத்தரவு கிடைக்கவில்லை என்பதாலும் – படங்கள் சற்று தரம் குறைவாகவும், வெவ்வேறு கோணங்கள் – ஒலி கொண்டு எடுக்க முயற்சி செய்துள்ளோம் ( படங்கள் – நான் மற்றும் நண்பர் அர்விந்த். )
இது 1913 எழுதி , முதல் முறை 1921 ஆம் ஆண்டு எழுத்து வடிவில் வெளிவந்தது. சிறு வர்ணனை என்றாலும் ரோடின் அவர்களது அதீத ரசனையையும் ஆழ்மனதில் தோன்றும் உணர்ச்சிகளை எழுத்து வடிவில் நாம் உணரும் வண்ணம் உள்ளது.
சிவனின் தாண்டவம் – அகுஸ்டே ரோடின்
முழு நடேச வடிவத்தை பார்க்கையில்
முழு மலரென மலரும் உயிர், வாழ்வின் நில்லா ஓட்டம் , எங்கும் இருக்கும் காற்று, சூரியன், மலையில் திரண்டு ஓடும் காட்டாற்றின் வெள்ளத்தில் சுழன்று ஓடும் உணர்வு – இப்படி தெரிகிறது நமக்கு கீழை நாடுகளின் கலை!
மனிதன் அந்தக் காலத்தில் இறைமை அடைந்தான் என்றால், அப்போது நாம் படைப்பிற்கு மிகவும் அருகாமையில் இருந்தோம் என்பதல்ல காரணம் – நமது தோற்றங்கள் பொதுவாக மிகவும் மாற்றம் கண்டதில்லை – நம்மால் அப்போது எல்லா பிணைப்புகளையும் வெட்டி எரிய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, அப்படி ஒரு சுதந்திர நிலையில் சுழன்று சொர்க்கத்தை அடைந்தோம். இன்று நாம் இதைத்தான் தொலைத்துவிட்டு தேடுகிறோம்…
ஆனந்த நடனம் புரியும் சிவன் ஒரு கோணத்தில் பார்த்தால் அழகான மூன்றாம் பிறை போன்றவன்.
இன்றோ காலத்தால் வெல்ல முடியாத அழகு இந்த வெங்கலச்சிலை. என்ன ஒரு பெருமிதம் ததும்பும் கோலம். கம்பீரமான உடல் வாகு. உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒளியின் அசைவு. உற்றுப் பார்க்கும் ஒருவரால் உணரமுடியும், ஒளியின் ஓட்டம் மாறினால் நர்த்தனம் புரியும் அந்த அசையாத தசைகளின் இயக்கத்தை!
அசையாத சிலை அதே இடத்தில் நிலையாக இருந்தாலும், நெருங்கும் நிழலால் இருட்டில் மூழ்கடிக்கப் பட்டாலும் அதனுடைய வசீகரம் நிழலால் பெருகத்தான் செய்கிறது! பனிப் படலம் போல் நிழல் படர்ந்த அந்த உருவமும் அதனுடைய துல்லியமான வடிவமைப்பும் இதை ஒரு தெய்வமே வந்து உருவாக்கியதோ என்று வியக்க வைக்கிறது! எந்த ஒரு சிறுகுறையும் இன்றி அனைத்து பாகங்களும் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறே கனக் கச்சிதமாய் உள்ளது. நிலையான சிலைதான் இருந்தாலும் கைகள் அசைவது போன்றே தோற்றம் தரும். கூர்ந்து கவனித்தால், அந்த தோள்பட்டையில் உள்ள எடுப்பான எலும்பும், மார்பு எலும்புகளும், மார்பு கூட்டின் இணைப்புகளும், அவை தோள் பட்டையோடு வந்து சேரும் அமைப்பும், கால்கள் நளினமாக எழுந்து ஆடுவது போன்றே காட்சி கொடுக்கின்றன…
நடேசனை ஒரு புறத்திலிருந்து பார்த்தால்
சிவனின் இந்த வடிவம் வியக்க வைக்கும் உருவம், இரண்டு கைகளும் மார்பையும் வயிற்றையும் பிரிப்பது போல் வடிவமைத்த விதம் புகழ் பெற்ற கிரேக்க சிற்பமான வீனஸ் டா மெடிஸி வடிவத்தோடு போட்டியிட்டு மிஞ்சிவிடுவது போல்லலவா இருக்கிறது! அந்தக் காதல் தெய்வம் எப்படி தன் அழகை கைகளால் மறைக்கிறதோ அதோ போலல்லவா இந்த நடராஜரின் உருவமும் தன் கையை இயக்குகிறது!
நடராஜரின் உடலை இரண்டு பாகங்களாக பிரிக்கும் நிழல், அழகிய தொடைகளை இரண்டு பாகங்களாக நீள வாக்கில் பிரிக்கின்றது, அதில் ஒரு பாகம் இருளில் மூழ்கியும், மறுபாகம் கறுப்பு வெள்ளையிலேயே பல விதமான நிழல்படுகைகளைக் காட்டியும் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றது. இருளில் இடுப்பில் உள்ள எலும்புகள் மறைந்திருக்கின்றன. மொத்தத்தில் அதிலுள்ள ஆழம், மெல்லிய தோற்றம் அதே சமயத்தில் தோன்றும் வலிமை, இவைதான் மிகமும் முக்கியம். இவற்றின் அருமை புரியாமல் பார்த்தால் இந்த அற்புத வடிவத்தின் இயக்கமே புரியாமல் போகும் என்றே தெரிகிறது
நீண்ட கால்கள், அழகிய தசைகள் நடனத்தின் வேகத்தைக் காட்டுகிறது. அழகை பொறாமை கொண்டு மறைக்க முயலும் நிழல் அந்த அழகிய தொடைகளை, நடனத்தின் இயக்கத்தைக் காட்டும் அந்த தொடைகளை மறைப்பதிற்கு மாறாக அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. நிழலோடு படர்ந்த மெல்லிய ஒளி நர்த்தனம் புரியும் அந்தக் கால்களை ஜொலிக்க வைக்கிறது.
நிழலோடு பார்த்த சிவனை நேரில் பார்த்தால்!
இந்த வடிவம் கலைஞர்கள் வெகுவாக உபயோகப் படுத்தும் வடிவம் தான், எனினும் இது சாதாரண வடிவம் அல்ல. ஒவ்வொரு வளைவும் இயற்கையை பிரதிபலித்தாலும் அதிலும் ஒரு தொலைவு – ஒரு அமானுஷ்ய தன்மை தெரிகிறது. இந்த வடிவத்தின் உணர முடியாத ஆழம், அதில் மூழ்கியிருக்கும் வாழ்வின் சுயற்சி – பலரால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது. இந்த சிற்பத்தின் நளினத்தில் ஒரு கண்ணியம் தெரிகிறது. நளினத்தையும் தாண்டி ஒரு கச்சிதம் உள்ளது. இன்னும் பார்த்தால் அந்தக் கச்சிதத்தை தாண்டி எங்கோ செல்கிறது.
இந்த வடிவத்தில் ஒரு மேன்மை தெரிகிறது. நளினம் கலந்த மேன்மை. எனினும் நம் உள்ளுணர்வை ஆட்டுவிக்கும் வலிமை பொருந்திய மேன்மை – அதை வர்ணிக்க வார்த்தைகள் அகராதிகளில் இல்லை
தோளில் இருந்து இடுப்பு வரையும், தொடைக்கும் இடைக்கும் நடுவே செங்குத்தாக மாலை போல் தொடரும் நிழல் பார்க்க கண் கொள்ளா காட்சி.
வேறு கோணத்தில் பார்த்தால்
வேறு கோணத்தில் பார்த்தால், ஒளியும் நிழலும் மாறி மாறி இரண்டு கால்களின் மேலும் விழுந்து பிரதிபலிக்கும் வேறுபாடுகளை சிலையினுள், அதை இயக்கம் இயல்பு, – அதனால் அதற்கு வரும் வசீகர தன்மையைக் கூட்டுகிறது ! அப்படி இல்லாமல் வெறுமனே நேர் நேராக ஒளியும் நிழலும் விழுந்திருந்தால் இது ஒரு சாதாரண படைப்பாக இருந்திருக்கும்.
சிவனை உருவங்களை பொதுவாய் கோர ஸ்வரூபமாக பார்ப்போருக்கு
இவற்றை பற்றி தெரியாத பாமரன், எல்லாவற்றையும் எளிது படுத்தி, கொச்சையாக பார்த்து, இப்படி ஒரு மகத்தான கலையை விட்டு ஒதுங்கி இதைவிட மட்டமான பொருள்களில் தனது ரசனையை செலுத்துகிறான். அந்த அழகைப் பருக வேண்டுமானால் அதீத ரசனை வேண்டும், ஆழ்ந்து நுகர்ந்தால் ….
ஆழ்ந்த தியானத்தின் பின சிவனின் அழகிய முகத்தை பார்த்தால்
புடைத்திருக்கும் உதடுகள், அது வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான பொருள், கண்களுக்கும், செவ்வாயிற்கும் உள்ள பொருத்தம், இதழ்களை ஒட்டி வசீகரத்தோடு ஆச்சரியமூட்டும் நாசி – தாமரை பூத்த தடாகத்தின் மீது சாய்ந்து பரவும் மலர்க்கொத்துக்கள் நிறைந்த தாழ்ந்த மரக்கிளை போல இருக்க , கொஞ்சும் ஈர உதடுகள் – பாம்பின் வளைவுகளை போல ஜொலிக்க – புடைத்து பாதி மூடிய இமைகள், இமைகளின் மேல்முடி வரிகளுக்குள் மறைந்திருக்கும் அழகு, மிகவும் நேர்த்தியாக முகத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கபட்ட மூக்கு, அவ்வளவும் கனக் கச்சிதம். வளைந்து நெளியும் உதடுகள், ஏதோ வார்த்தைகளை உச்சரிப்பது போலவே உள்ளது . ஒரே வரி என்றாலும், வில்லை போல வளைந்த அழகான சாந்தமும் அமைதியும் ததும்பும் கண்கள், அவற்றுள் பார்ப்போரை நெகிழ வைக்கும் இரு நட்சத்திரங்கள். அதிகாலை சூரிய கிரணங்கள் போல மயக்கும் அமைதி வீசும் கண்கள், அவை தரும் சுகமான அமைதிப் பெருக்கெடுப்பு.
தாடையில் குவியும் முகத்தின் வளைவுகள், வளைந்து மேல்நோக்கிய கன்னம் ஒரு பாகத்தில் முடியும் அழகுத் தோற்றம் மற்றொரு பாகத்தில் தொடர்கிறது. இதழ்களின் அசைவு கன்ன கதுப்புகளில் முடிகிறது, காதுகளில் இருந்து கிளம்பும் வளைவுகள் இதழ்களோடும், நாசிகளோடும் முடிவடைகிறது, தாடையிலிருந்தும் மூக்கிற்கு கீழேயும் உள்ள வரிகள் கன்னக்கதுப்பில் மறைகிறது.
இன்னும் அந்த அழகிய தலையை விட்டு விலக மனம் வராமல்
நேர் சீராக தங்கள் மங்கலமான இடங்களில் அமரும் இரு கண்களும், ஒளி வீசும் பராக்கிரமம், வசீகரம்! கால வெள்ளத்தை தங்கள் இன்பத்தில் தேக்கி வைக்கின்றன. ஆஹா , அந்த கண்கள் – ஆபரணமென போற்றக் கூடிய சுத்த பொக்கிஷம். அவற்றை உள்ளடக்கும் பெட்டகம் – கண் இமைகள். வில் போன்று வளைந்த புருவம், அதற்க்கு போட்டியிடும் வளைந்து நெளியும், வசீகர இதழ்கள்.
ஒரே சமயத்தில் தன்னுள் இன்பம் பொங்கும் நினைவுகளையும், எரிமலையின் ஆவேசத்தையும் உணர்த்தும் வாய்.
உடற்கூறுகளை இயக்கத்தோடு இணைத்துக் காட்டும் ஆன்மா அந்த வெங்கலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடைபட்டுள்ளது. சாகா தன்மை அந்த இதழ்களில், எந்த நொடியும் பார்க்கத் துடிக்கும் அந்த கண்கள், எங்கே பேசிவிடுமோ ?
வாழ்வின் நாடி வாய் வழியே வந்து செல்வது போல, கூட்டிலிருந்து வெளிவரும் தேனீக்கள் போல், நாசியிலிருந்து வெளி வருகிறது – நறுமணத்தோடு கூடிய மெல்லிய சுவாசம். ..
இந்த தொலைந்து போன அழகிய வடிவம் தனக்குள்ளேயே ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் ஓரிடத்தில் அதனுடைய பொருள் பொதிந்த காட்சி உறைகிறது அது அந்த மிகவும் கவர்ந்திழுக்கும் கன்னக் கதுப்புகள் கழுத்தோடு வளைந்து இணையும் காட்சி!!
மொழிபெயர்ப்பு உதவி : கீதா அம்மா மற்றும் சதீஷ்.
வீனஸ் படம் – இணையத்தில் இருந்து.