மீண்டும் நம் நண்பர் புலித்தொப்பை – கொடும்பாளூர் மூவர் கோயில்

பொதுவாக புகழ் பெற்ற கலைச் சின்னங்களை பலரும் பார்க்க வருவர். அவைகளைப் பற்றி தேடினால், பக்கம் பக்கமாக பல பதிவுகள், ஆராய்ச்சிகள், புத்தங்கங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே கூகுளார் எடுத்துப் போடுவார். அப்படி இருக்க, இன்னும் வெளி வராதவை ஏராளம். சிற்பம் என்றால் மல்லை, ஓவியம் என்றால் அஜந்தா, கோயில் என்றால் தஞ்சை, மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கம் என்று இன்று முடிவு ஆகிவிட்டது. அப்படி இல்லமால், இன்றும் தங்கள் அழகை பொத்தி மறைத்து, மறைந்து நிற்கும் பொக்கிஷங்களை நாம் வெளிக் கொண்டு வர வேண்டும். அவற்றை பார்க்கும் போதே, எனது குலம் ஒரு மகத்தான குலம், எனது நாடு ஒரு வாழும் வரலாறு என்று நாம் மார்தட்டி, ஆழ் மனதில் ஒரு பெருமிதத்தோடு, ரோமங்களில் ஒரு மயிர் கூச்சலோடு, தலை தானாக நிமிர்ந்து பார்க்கும் ஆனந்தம் இருக்கிறதே, அதுவே பரம சுகம்!

அப்படி ஒரு உணர்வு, மூவர் கோயில் செல்லும் பொழுது எங்களுக்கு ஏற்பட்டது. சுற்றிலும் அமைதி ததும்பும், பச்சை பசேல் என்ற வயல் வெளி நிறம்பிய, ரம்மியமான கிராமத்தை தாண்டிச் சென்றோம். நெடு நெடு என்று கான்க்ரீட்டும் கண்ணாடியும் தினமும் பார்த்து சலித்த எங்களுக்கு இப்படி ஒரு அற்புதமான மாறுபட்ட சூழலில், தொலைவில் ஒரு விமானம் தென்பட்டது.

அதோ மூவர் கோயில், என்னடா இது மூவர் கோவில் என்று சொல்கிறீர்கள் ஆனால் இரண்டு கோபுரம்தான் தெரியுது என்கிறீர்களா! ஆமாம், இன்றைக்கு எஞ்சியது இரண்டு தான். மூன்றாவது அடிமட்டம் மட்டுமே உள்ளது. இந்த அற்புத கோயில் கட்டிய வள்ளல், கொடும்பாளூர் அரசர் இருக்குவேளாண் பூதி விக்கிரம கேசரி, அவரும் அவரது இரு தேவியரும், காளாமுக துறவிகளுடன் சேர்ந்து நிறுவினர் என்று கிரந்த லிபியில் கல்வெட்டு உள்ளது. கொடும்பாளூர் அரசர்கள் சோழர்களுக்கு துணைபுரியும் சிற்றரசர்களாக இருந்து வந்தனர். பூதி விக்கிரம கேசரி, இரண்டாம் பராந்தகர் (ஆமாம், உடனே பொன்னியின் செல்வன் நண்பர்கள் விழித்துக் கொள்வது தெரிகிறது. நமது ராஜ ராஜரின் தந்தையார் சுந்தர சோழர் தான்) காலத்தில் அவருக்கு கீழ்படிந்த சிற்றரசராக இருந்தார்.

தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது, சற்று சிறியதாக உள்ளதே, இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று நினைக்கத் தோன்றும். பொறுமை, இது சிறு கோயில் ஆனால் ஒரு அழகிய சிற்பக் கூடம்.

ஒருவேளை இந்த வாக்கியத்தை சுட்டிக்காட்டவே, இன்று மூவர் கோயிலில் இருக்கும் பல சிற்பங்களை விட்டு விட்டு, ஒரு சிறிய, எனினும் அரிய வடிவத்தை எடுத்துக் காட்டுகிறேன். இதில் எனக்கு ஒரு தனி லாபமும் உண்டு, காரணம் இது எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் !!

முதலில், அது எங்கே இருக்கிறது என்பதை பாருங்கள், பூத ரேகையில் தென்படுகிறதா?

இன்னும் அருகில் சென்று தேடுவோமா.

என்ன இன்னும் தெரியவில்லையா? பரவாயில்லை இதோ உங்களுக்கு சற்று உதவுகிறேன்.

என்ன அழகு இந்த குட்டி பூதம், அதுவும் அதன் தொப்பை! ஆமாம், நமது புலித்தொப்பை தான்.


இன்னுமா கண்டு பிடிக்க முடியவில்லை?


இன்றைக்கு குட்டி பூதம் சற்று கோபமாகவே இருக்கிறது!

விளையாட்டில்லை, பூத ரேகை விமானத்தை சுற்றிலும் இருக்கிறது. இரண்டாவது விமானத்தில் அவ்வாறே உள்ளது. எங்கும் குட்டி பூதங்கள் தான், ஒரே சேஷ்டை, லூட்டி அடிக்கின்றன. அப்படி இருக்க, ஒரே ஒரு முறை மட்டும் வரும் இந்த புலித்தொப்பை பூதத்தின் தனித்தன்மையின் காரணம் என்ன? அதுவும் நாம் இவரை முதன் முதலில் பகீரத பிரயத்தன சிற்பத்தில் மல்லையில் பார்த்தோம், பிறகு புள்ளமங்கை, ஸ்ரீனிவாச நல்லூர், இப்போது மூவர் கோயில். இப்படி அணைத்து இடங்களில் ஒரே ஒரு முறை மட்டும் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த பூதம் யார்?

அடுத்த பதிவில் மற்ற அற்புத வடிவங்களையும் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *