அதே மாங்கனி வேறு குழப்பம் – காரைக்கால் அம்மை சரித்திரம்

கம்போடியாவில் காரைக்கால் அம்மையாருக்கு சிற்பம் என்றவுடன் பலருக்கு அவர் யார் என்றும், அவர்களது கதையை பற்றி படிக்கவும் ஆவல்.

அந்த ஆவலை தூண்டவே அந்த மடலில் அவர்களுடைய அற்புத கதையை பற்றி எழுதவில்லை. எனினும் அவர்களது வினோத உடல் அமைப்பு பலரையும் கேள்வி எழுப்ப செய்தது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, அவருடைய அற்புத பாடல்களை இங்கே இடாமல், அவர் சரித்திரத்தை விளக்கும் முறையில் நண்பர் திரு. வி. சுப்பிரமணியன் ஐயா ( எனக்கு பல முறை பக்தி இலக்கியங்களில் இருந்து சிறந்த குறிப்புகளையும் பாடல்களையும் தேடி தந்த வழி காட்டி ) அவர்கள் இயற்றி இருக்கும் அற்புத பாடலையும், அம்மையார் புகழ் விளக்கும் திருவாலங்காடு கோயில் கோபுர சிற்பம் ஒன்றையும் இணைக்கிறேன்.

கோபுர சிற்பம் – அம்மையின் வாழ்க்கையில் மூன்று முக்கிய நிகழ்வுகள். இடம் இருந்து வலம் – திருமணம், மாங்கனி, கைலாய பிரவேசம்

பசித்து வந்தவ ரிலைதனி லொருகனி
.. படைத்து வந்தவர் பிறகடி தொழவொரு
.. பழுத்த இன்கனி அவர்பெற அருளிடு .. முமைகோனே
புசித்த பின்கண வனும்வின விடஅவர்
.. பொருட்ட ருங்கனி தரஉட னுறைவது
.. பொருத்த மன்றென அவனவர் தமைவில .. கிடுவானே
நசிக்க ஒன்பது துளையுட லழகென
.. நவிற்றி என்புரு வினைஅரு ளெனமிக
.. நயக்கு மன்பர துளமகி ழுருஅளி .. சடையோனே
வசிட்ட ரும்பல முனிவர்க டொழஉறை
.. மலைத்த டந்தனி லடியிட வெருவிய
.. மனத்தர் மன்புக ழனைதொழு முனதடி .. மறவேனே.

உரை:
(தனது இல்லத்திற்குப்) பசியோடு வந்த அடியாருக்கு இலையில் (கறி இன்னும் சமைத்து
இராததால், கணவன் கொடுத்தனுப்பியிருந்த) ஒரு மாம்பழத்தை இட்டு மகிழ்ந்து, பிறகு
(கணவன் உண்ணும்போது இன்னொரு கனியையும் கேட்கத்) திருவடியைத் தொழுதபொழுது, அவருக்கு
(புனிதவதி என்ற காரைக்கால் அம்மையாருக்கு) ஒரு பழுத்த இனிய கனியை அளித்த
பார்வதி நாதனே! (அதை) உண்ட பின் (அதைப் பற்றிக்) கணவன் கேட்டபொழுது, அவன்
நம்புவதற்காக அவர் வேண்டியபொழுது இன்னொரு அரிய கனியைத் தர, அதைக் கண்டு (அவர்
தெய்வம் என எண்ணி) அவரோடு இல்லறம் நடத்துவது தகாது என்று அவரி விட்டு நீங்கிச்
சென்றான். (அதன் பிறகு) “இந்த ஒன்பது ஓட்டைகளுடைய உடலின் அழகு அழிவதாக!” என்று
சொல்லிப், “பேய் உருவத்தைத் தாராய்” என்று மிக விரும்பிக் கேட்ட பக்தருடைய
உள்ளம் மகிழ அவ்வுருவத்தை அளித்த, சடை உடையவனே! வசிஷ்டரும், பல முனிவர்களும்
தொழ (நீ) உறைகிற கயிலைமலைப் பாதையில் காலை வைத்து நடக்க அஞ்சிய மனத்தை உடையவர்,
(அதனால் தலையால் நடந்தவர்), நிலைத்த புகழ் உடைய அம்மையார் தொழுகிற உனது
திருவடியை நான் மறக்கமாட்டேன்!

காரைக்கால் அம்மையார் வரலாற்றைப் பெரிய புராணத்தில் விரிவாகக் காண்க

படைத்தல் –
உவத்தல் – மகிழ்தல்;
இன் கனி – இனிய கனி;
அரும் கனி – அரிய கனி;
உடன் உறைவது – கூடி வாழ்வது;
நசிக்க – அழிக!
நவிற்றி – சொல்லி;
என்பு – எலும்பு;
உரு – உருவம்;
நயத்தல் – விரும்புதல்;
மகிழ்தல் – விரும்புதல்; களித்தல்;
உள மகிழ் உரு அளி – உள்ளம் மகிழும் வடிவை அளிக்கிற;
மலை – இங்கே, கயிலை மலை;
தடம் – வழி; பாதை; மலை;
அடியிடுதல் – அடிவைத்து நடத்தல்;
வெருவுதல் – அஞ்சுதல்;
மன் – நிலைத்த; மிகுந்த;
அனை – அன்னை;

பதம் பிரித்து:
பசித்து வந்தவர் இலைதனில் ஒரு கனி
.. படைத்(து) உவந்தவர், பிற(கு) அடி தொழ, ஒரு
.. பழுத்த இன் கனி அவர் பெற அருளிடும் .. உமைகோனே!
புசித்த பின் கணவனும் வினவிட, அவர்
.. பொருட்(டு) அரும் கனி தர, உடன் உறைவது
.. பொருத்தம் அன்(று) என அவன் அவர்தமை விலகிடுவானே!
“நசிக்க ஒன்பது துளை உடல் அழ(கு)” என
.. நவிற்றி, “என்(பு) உருவினை அருள்” என மிக
.. நயக்கும் அன்பர(து) உள[ம்] மகிழ் உரு அளி .. சடையோனே!
வசிட்டரும் பல முனிவர்கள் தொழ உறை
.. மலைத்தடம்தனில் அடியிட வெருவிய
.. மனத்தர், மன் புகழ் அனை தொழும் உன(து) அடி .. மறவேனே!

காரைக்கால் அம்மை தொழும் உன்னை மறவேன்
——————————————————
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன .. தனதான

(விரித்த பைங்குழல் – திருப்புகழ் – சுவாமிமலை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *