நாம் முன்பு ஸ்ரீரங்கம் நாயக்கர் கால சேஷறைய மண்டபம் அற்புத தூண்களை பார்த்தோம். சில்பி அவர்களை கவர்ந்து உயிர் ஓவியம் தீட்டச் செய்த பெருமை ..அங்கே மேலும் சில அற்புத வடிவங்கள் இருப்பதால் நண்பர் திரு அசோக் அவர்களை அங்கு செல்ல தூண்டினேன். அவரும் அவ்வாறே அங்கு சென்று பல அற்புத தூண்களை படம் பிடித்து வந்தார். அவற்றை பார்க்கும் முன்னர், அங்கே சிதைந்த சில தூண்களின் படங்கள் நெஞ்சை உருக்கின.
கம்பீரமாக தனது வீரத்தை பிரதிபலிக்கும் குதிரை – இப்போது முடமாக உள்ளது.குதிரை வீரனின் ஈட்டியோ பாதியில் உடைந்து விட்டது – கல்லில் ஈட்டியை இதனை அழகாகச் செதுக்கிய சிற்பி அதன் இந்த நிலையை கண்டான் என்றால் !! அதன் அடியில் ஒய்யாராமாக நிற்கும் அழகு சுந்தரியின் இடது கை துண்டிக்கப்பட்டுள்ளது. வலது புறம் சிற்பங்கள் அனைத்தும் காணவில்லை.
இவை எப்போது இப்படி சிதைந்தன என்று ஒரு உள்மனதில் உறுத்தல் இருந்தது. சரி இணையத்தில் சற்று தேடியதில் 1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கால புகை படம் கிடைத்தது. அப்போதும் இந்த தூண்கள் சிதைந்தமையால் கொஞ்சம் மன நிம்மதி கிடைத்தது. மற்ற கோயில்களை போல இவை சமீபத்தில் நமது மேற்ப்பார்வை இல்லாமையால் நடந்த சிதைவுகள் அல்ல என்று சற்று மனதை தேற்றியவுடன் அடுத்த காட்சிகள் என்னை பதற வைத்தன.
அக்கால மன்னர்கள் கலைகள் வளர கொடை கொடுத்து கலை பெட்டகங்களாக எழுப்பித்த இந்த அருமையான சேஷறைய மண்டபத்தின் இப்போதைய பணி – இரு சக்கர மிதிவண்டிகள் நிறுத்தும் இடம் !! விறகு சேமிக்கும் கிடங்கு!!. தசாவதாரம் மிதி வண்டி நிலையம் ..
நுணுக்கமான வேலைபாடுகளை உடைய அருமையான தூண்கள் இவற்றால் இடி பட்டு தினம்தோறும் சிதைகின்றன. இங்கே ஒரு சிற்பத்திற்கு முகம் இல்லை, அங்கே ஒரு கை இல்லை. மிதி வண்டிக்கு முட்டு கொடுக்க இந்த கலை பெட்டகங்கள் தானா கிடைத்தது ? தமிழனின் அற்புத கலை இப்படி மெல்ல சித்திரவதை பட்டா சாக வேண்டும்.
இங்கே உள்ள மற்ற பல தூண்களும் சற்று சிதைந்த நிலையிலே உள்ளன. இந்த அற்புத கலை தூண்கள் மற்றும் அவற்றில் செதுக்க பட்டிருக்கும் சிற்பங்களின் அருமை ஒரு முறை பார்த்தாலே புரியுமே, அந்த கலை சொட்டும் சிற்பங்களின் அழகு அருகில் செல்வோரை சுண்டி இழுக்குமே , அந்த கல்லில் காவியம் நம்மை தொலைவில் இருந்தே நெகிழ்விக்குமே – அப்படி இருந்தும் இவர்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை – இவர்கள் இருகண்ணிருந்தும் குருடர்கள்.
வைணவ பாரம்பரியத்தில் கோயில் என்றாலே அது ஸ்ரீரங்க விண்ணகரம் தான், அப்படி இருந்தும் அங்கே இப்படி ஒரு அவல நிலையில் இருக்கும் அற்புத கலை தூண்களை பாதுகாக்க முடியவில்லையே . சரி இவற்றை செப்பனிட முடியுமா ? உடைந்த பாகங்கள் கிடைத்தால் முடியும். பல்லவர் காலத்திலேயே கை உடைந்த ஜல சயன பெருமாள் ( மல்லை கடற் கறை கோயில் ) சிற்பத்தை அற்புதமாக கை கொடுத்த ( செதுக்கிய ) சிற்பியின் திறனை ஆசார்ய தண்டின் அவர்களின் அவனிசுந்தரிகதா என்னும் நூலில் குறிப்பு உள்ளது!
இந்த இடுகையை பார்க்கும் நல்ல நெஞ்சங்கள் இக்கோவிலுக்கான கொடையை பாரதி சொன்னது போல் , “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர், வாய் சொல் அருளீர்,