துயரத்தின் உச்சியில் இருக்கும் அன்னையா அல்லது கொலைசெய்ய வந்த பாதகியா?

நண்பர் தக்ஷின் அவர்கள் மதுரை சென்று விட்டு ஒரு அற்புத சிற்ப்பத்தின் அருமையான படத்தை பூதகி / பூதனை என்ற தலைப்புடன் முகநூலில் இட்டவுடன் மனதில் எழுந்த முதல் கேள்வி ”குட்டிக் கண்ணனை கொல்ல வந்த பொல்லாத அரக்கியா இது ?”

பூதனை பற்றி மனதளவில் நாம் வைத்திருந்த உருவம் நாம் பெரும்பாலும் கதைகளிலும் சில சிற்பங்களிலும் பார்த்ததன் விளைவு தான். இதோ இங்கே நண்பர் அர்விந்த் அவர்கள் அளித்த படம் – சோழர் கால புள்ளமங்கை சிற்பம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் சுதை உருவம் – ஒரு கொடூர அரக்கி அவளின் உடலில் இருந்து ரத்தம் அனைத்தையும் உறிந்து எடுத்தவாறு உள்ள காட்சிகளே அதிகம். எனினும் கண்ணனும் யசோதை போலும் இல்லை – அந்த பெண்மணியின் முகபாவம் ஒரு கலக்கம் கலந்த துயர நிலையில் உள்ளது.

இங்கே இருப்பதோ மிகவும் அழகு வாய்ந்த பெண்மணி. வேறு யாராக இருக்க முடியும்? சில குறிப்புகளில் இந்த சிற்பம் ஹரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி என்றும் கையில் இருப்பது இறந்த குழந்தை லோஹிதாசன் என்றும் உள்ளன. எனினும் அந்தக் கதையில் சந்திரமதி ஒரு அடிமையாக விற்கப்படுகிறாள். பின்னரே லோஹிதாசன் இறப்பு வருகிறது. இங்கே இத்தனை ஆபரணங்களுடன் சிற்பி செதுக்க வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது. மேலும் குழந்தை நன்றாக இருப்பது போலும் பால் அருந்த உதடுகளை வைத்திருப்பது போலவே உள்ளது.

இன்னும் அருகில் சென்று படம் எடுத்து ஆராய வேண்டும் என்று நண்பர்கள் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக ராமன் அவர்கள் மதுரை சென்று வேண்டிய படங்களை எடுத்து அனுப்பினார்.

சாதாரண படம் வேண்டும் என்று மட்டும் நான் கேட்கவில்லை. மிக அருகில் சென்று குழந்தையின் வலது மார்பின் படம் தேவை என்று கூறினேன். ஏன் ?

நாம் முன்னர் விஷ்ணு மார்பின் உள்ள ஸ்ரீவத்சம் என்ற மறு பற்றிய பதிவு நினைவில் உள்ளதா ? அதில் வரும் கடைசி படத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தையும் நிறைய அணிகலன் போட்டுக்கொண்டு சிரிப்பது போலவே உள்ளது. இந்த விதமான ஆரம் கண்ணன் மற்றும் சம்பந்தர் சிலைகளில் நாம் முன்னர் பார்த்துள்ளோம்.

5068
5074
5091

எதற்காக வலது மார்பின் படம் தேவை? கல்லில் சிற்பி இந்த சிலையை வடிக்கும் பொது, சில இடங்களில் சிறு உளி வைத்து செதுக்க வேண்டும், அப்படியும் சில இடங்களில் அவனால் முழுவதுமாக செதுக்க இயலவில்லை.

இடது மார்பை முழுவதுமாக செதுக்கிய அவன், வலது மார்பை செதுக்க வாகு இல்லை. இது நீங்களே பாருங்கள்.

சரி, மார்பின் மேல் உள்ள அணிகலன்களை தனியாக பார்ப்போம்.

இதுவரை கூர்ந்து கவனித்து இருந்தால் வலது மார்பில் உள்ள அந்த சிறிய புடைப்பு தெரிந்திருக்கும்

இப்போது பாருங்கள்.

இதோ நின்ற கோலத்தில் பெருமாளின் வலது மார்பில் தெரியும் முக்கோண மறு. இதனை குழந்தையின் மார்பில் இருப்பதுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

பூதனை பற்றி மேலும் படிக்க கீதா அம்மாவின் அருமையான பதிவை பாருங்கள்.

கம்சன் பூதனையை கோகுலம் சென்று அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்து அதற்கு விஷப் பால் ஊட்டும்படிக் கேட்டுக் கொண்டான்.

பூதனையோ மறுக்கின்றாள். என்னால் முடியாது என்று சொல்கின்றாள். ஏற்கெனவே அனைவரும் அவளைக் கண்டாலே ஓடி ஒளிவதையும், அவளின் உடன்பிறந்தவர்களே அவளைக் கண்டால் வராதே என்று சொல்லுவதையும் தன்னுடைய முகத்தைப் பார்ப்பதே பாவம் என அவர்கள் நினைப்பதையும், அவ்வாறே நடந்து கொள்ளுவதையும் சொல்கின்றாள் பூதனை

“பூதனை, நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும், மகத வீரர்கள் உன்னையும், ப்ரத்யோதாவையும், வெறும் கைகளால் கொன்று விடுவார்கள். வாழ்வோ, சாவோ, என்னை மீறி நீயோ, ப்ரத்யோதாவோ ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. என் கட்டளையை மீறி உங்கள் வாழ்வில் எதுவும் இல்லை.” என்றான் கம்சன். பூதனை வாயே திறக்கவில்லை. “இங்கே நிற்காதே, போ உடனே

கோகுலத்தில் அந்த மாதம் பெளர்ணமி தினத்தன்று அவர்களின் குலதெய்வம் ஆன கோபநாத் மஹாதேவருக்குத் திருவிழா வந்தது.

யசோதைக்குச்செய்தி வந்தது, மதுராவிலே யாரோ பெரிய அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கோகுலத்தின் கோபநாத் மஹாதேவருக்கு முக்கியப் பிரார்த்தனையை நிறைவேற்ற வந்து கொண்டிருக்கின்றாள் என.

செய்தி வந்த போது யமுனைக்கரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த யசோதை, உடனேயே இரு இளைஞர்களை அனுப்பி வரும் விருந்தாளியை வீட்டுக்கு அழைத்துப் போய், உபசரித்துவிட்டுப் பின்னர் யமுனைக்கரைக்கு அழைத்து வரும்படி அனுப்பி வைத்தாள் அவர்களும் சென்றார்கள்.

மேலும் படிக்க

என்ன நடந்தது ?.

பூதனை அந்தக் கிருஷ்ணன் முகத்தையே பார்த்தாள். நீல நிறம் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, சுருண்ட கூந்தல் நெற்றியில் இருந்து தொங்கிக் குழல்கற்றைகள் முகத்தையே மறைக்க, கண்கள் இரண்டும் விஷமத்தனத்தை எடுத்துக் காட்ட, முகம் முழுதும் விஷமத்தனமான சிரிப்போடு விளையாடும் அந்தக் குழந்தையைப் பார்த்தாலே எடுத்துக் கொஞ்சிக் கட்டி அணைக்கவேண்டும் போல் தாபம் மேலிட்டது பூதனைக்கு.

ஆனால் இந்தக் குழந்தையைத் தான் அவள் கொல்லவேண்டும். அதுதான் அவளுக்கு இடப்பட்டிருக்கும் வேலை. பேசாமல் வேலையையே விட்டுடலாமா என்று கூட எண்ணினாள். இந்தக் குழந்தையைக் கொல்லுவதை விடக் கம்சன் கையால் அவள் இறந்துவிடலாமோ என்று எண்ணினாள். அவள் மட்டும் இறந்தால் பரவாயில்லை, அவள் கணவன் ப்ரத்யோதாவும் இறக்க நேரிடும். பின்னர் அவளுடைய எட்டுக் குழந்தைகளின் கதி என்னாவது? கம்சனின் கடுங்கோபம் அவளுடைய மொத்தக் குடும்பத்தையும், குலத்தையும் பாதிக்குமே. ம்ம்ம்ம்., இந்தக் குழந்தையைக் கொல்லுவதுதான் தன்னுடைய கடைசிக் கடமையாக வைத்துக் கொள்ளவேண்டும். பூதனை அந்தக் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். குழந்தை அவள் பார்வையால் ஈர்க்கப் பட்டு அவளைப் பார்க்க பூதனை குழந்தையைக் கவரத் தன் கைகளால் தட்டி, வாயால் சத்தம் கொடுத்துக் குழந்தையைக் கூப்பிட்டாள் தன் பக்கம். குழந்தையும் அவளைப் பார்த்து மிக மிக மோகனமாய்ச் சிரித்தது. ஒரு கணம், ஒரே கணம் தன்னை மறந்த பூதனை பின்னர் நிதானத்துக்கு வந்தாள், தன்னிரு கைகளையும் நீட்டிக் குழந்தையைக் கூப்பிட, அவனும் வந்து அவள் கைகளில் அடைக்கலமானான்.

குழந்தையைக் கைகளில் ஏந்திய பூதனைக்குத் தன்னை அறியாமல் அந்தக் குழந்தைக்கு அமுதூட்டத் தோன்றியது. அப்போது அவள் நினைவில் வந்தது, யமுனையில் குளித்ததும், ஒருவருக்கும் தெரியாமல் தன் மார்பில் விஷம், கொடிய விஷத்தைத் தடவிக் கொண்டது. இம்மாதிரிக் கொடிய விஷத்தை மார்பில் தடவிக் கொண்டு சிறு குழந்தைகளுக்குப் பாலூட்டுவது போல் பல குழந்தைகளைத் தான் இத்தனை நாட்களாய்க் கொன்று வந்திருப்பதும், இப்போது கம்சனின் ஆணை இந்தக் குழந்தையையும் இம்மாதிரிக் கொல்லுவது என்பதே என்பது நினைவில் வர அவள் மனதில் போராட்டம். என்றாலும் அதையும் மீறித் தாய்மை உணர்வும், குழந்தையின் அழகும், இத்தனன அழகான குழந்தைக்குத் தன்னிடம் உள்ள எதைத் தான் தரக் கூடாது என்ற உணர்வும் மேலோங்கியது. குழந்தை அவள் கைகளில் மீண்டும் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தன் வயமிழந்த பூதனை தன்னை அறியாமலேயே குழந்தைக்குப் பாலூட்டத் தொடங்கினாள்.

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே

மீண்டும் ஒருமுறை சிற்பத்தை பார்த்தேன் – மேலே கூறப்படும் அனைத்து உணர்ச்சிகளும் அந்த முகத்தில் இருப்பது போலவே தெரிந்தது. அது பாதகி பூதனை அல்ல சந்தர்ப்ப வசத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு தாய் முகமே என்றும் புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *