நாம் இதுவரையில் கல்லில் சோமஸ்கந்தர் வடிவத்தின் பரிணாம வளர்ச்சியை பற்றி பார்த்தோம். இதுவரையில் நாம் பார்த்த அனைத்து சிற்பங்களும் பல்லவ சிற்பங்களே. இன்று நாம் ஒரு செப்புத் திருமேனியை பார்க்கப்போகிறோம். பொதுவாக செப்புத் திருமேனி என்றவுடன் நாம் சோழர் காலம் என்றே நினைப்போம். எனினும் அவர்களுக்கு முன்னரே பல்லவர் காலத்தில் பல அற்புத செப்புத் திருமேனிகள் வடிக்கப்பட்டன. இன்றைக்கு அவற்றில் ஒன்றான சோமஸ்கந்தர் செப்புத் திருமேனியை பார்ப்போம்.
இந்த சிற்பம் அதன் அமைப்பு, அணிகலன் , வாகு போன்ற பலவற்றை கொண்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் என்று அடையாளம் கொள்ளப்படுகிறது. அதன் அளவை முதலில் மனதில் கொள்ள வேண்டும். சோழர் கால சோமஸ்கந்தர் வடிவங்களில் பாதி உயரமே உள்ளது இந்த சிற்பம். அளவு மட்டும் அல்ல, அதில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் சற்று வித்தியாசமாக உள்ளது. இவற்றைக் கொண்டே இது சோழர் காலத்துக்கு முந்தைய சிற்பம் என்று கருதப்படு்கிறது. முருகர் வடிவம் தொலைந்துபோய் விட்டது.
அப்படி என்ன வித்தியாசம் இந்த அமர்ந்திருக்கும் கோலத்தில்?. படங்களை பாருங்கள்.
சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் ஈசன், சற்று பின்னால் சாய்ந்து அமர்த்தப்பட்டவாறு இருப்பது தெரிகிறதா. இது அவரது கம்பீர தோற்றத்தை இன்னும் அதிகரிக்கிறது.
அம்மை அப்பனின் உருவத்திலும் , முக ஜாடையிலும் கூட வித்தியாசங்கள் உண்டு. ஈசனின் முகம் வட்டமாக உள்ளது – அதில் கண் , மூக்கு மற்றும் வாயை கைகளால் சிற்பி அமைத்தது போல உள்ளது. தலையில் ஜடா மகுடம் , மற்றும் கழுத்தில் இரு சிறிய சங்கிளிகளிகள் மற்றும் ஹாரம் என ஜொலிக்கும் அவரது யக்நோபவீதம் தங்க கம்பிகளால் ஆனது போல உள்ளது. அதில் அவரது இடது மார்பின் மேல் ஒரு முடிச்சு மிகவும் அழகாக உள்ளது.
முகம் வட்டமாக , தலையில் முக்கோண வடிவில் கரண்ட மகுடம் ஜொலிக்க, லக்ஷணமான முகத்தொட்ட்ரத்துடன் அமர்ந்திருக்கும் உமை அழகு.
மகேசனின் பல கைகள் இணைக்கப் படுகிற பாணியும் ஒரு வழிகாட்டி. மேல் கைகள் பிரிவதும் – பிரியும் கோணமும் நாம் பார்க்க வேண்டும்.
கைகளில் அவர்கள் தங்கள் ஆயுதங்களை பிடித்திருக்கும் முறையும், கை முத்திரைகளையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
சிவன்
அணிகலன்களில் மிகவும் அழகான நாக கேயுர வகை இருப்பது அழகு.
உமை
கால் மற்றும் கைகள் மிகவும் நேர்த்தியாக நளினம் ததும்பும் வண்ணம் உள்ளன. இவையும் காலத்தை எடுத்துக்காட்டும் .
அங்க அணிகலன்கள், ஈசனின் இடுப்புப் பட்டையில் நாம் பிற்காலத்திய சிற்பங்களில் வரும் சிங்க முகம் இல்லாததை நினைவில் வைக்க வேண்டும் . இடுப்பை வடித்துள்ள வண்ணம் மிக அருமை.
ஈசனின் சிரத்தின் பின் நாம் கல் சிற்பங்களில் பெரிதாக பார்த்த சிரஸ்சக்கரம் இங்கே சற்று அளவில் சிறியதாகி உள்ளது. ஆறு சடைகளாக பிரியும் பின்னல் அருமை.
ஈசனின் மார்பை பாருங்கள். ஒட்டி வைத்தார் போல உள்ளதே.
இவை அனைத்தையும் ஒன்று சேர்ந்து – நாம் அடுத்து பார்க்கும் சோழர் கால சுமார் 10th C மற்றும் 12 C செப்புத் திருமேனி்களுடன் வரும் பதிவுகளில் ஒப்பு நோக்கி எவ்வாறு இந்த படிமம் காலத்தால் அவற்றிற்கு முந்தையது என்பதை பார்ப்போம்.
Ref: Bronzes of South India – Sri. K. R. Srinivasan