இருநூறாவது பதிவு – பலகோடி நூறாயிரம் பல்லாண்டு வாழியவே – சோழ ஓவியம்

இந்த தளம் எங்களுக்கு வாழ்க்கைப் பாதையில் மிகவும் மனநிறைவைத் தரும் பயணம். திடீரென ஏற்பட்ட ஒரு தாக்கத்தால் பலரும் தங்கள் பயணத்தை துவங்குவது உண்டு , எனினும் முதலில் ஏற்பட்ட தாக்கத்தை தொடர்ந்து நினைவில் வைத்து கவனத்தை எங்கும் எதிலும் சிதற விடாமல் செல்வது பெரும் சவால். அந்த விதத்தில் நாங்கள் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் எங்களை இந்த பணியில் ஈர்த்த , இன்றும் தூண்டுதலாக இருக்கும் அந்த முதல் தீ பொறி – அதற்கு அப்படி ஒரு பலம். இருநூறாவது பதிவிற்கு அந்த தீப் பொறியை விட வேறு நல்ல கரு உண்டோ ?

ஆம் அவர்தான் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர்.

ஆனால் எங்களை போன்றோருக்கு அவர் என்றும் அருண்மொழி வர்மர் தான் – இன்றும் எங்கள் நினைவில் நீங்காமல், ஒரு வாழும் வரலாறாக , எங்களை வழிநடத்தும் தமிழனின் வாழ்வியலில் பொன்னேட்டில் பொறிக்கப் பெற்ற மாமனிதர். தமிழனும் தமிழ் மண்ணும் தனது பெயரை கேட்டவுடன் தலை தானாக நிமிரும் சாதனைகளை நிகழ்த்திய சகாப்தம். இது வெறும் முகஸ்துதி அன்று – இன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத பல இடங்களில் இருந்து அவர் எழுப்பிய பெரிய கற்றளியான ராஜராஜேஸ்வரம் தஞ்சை பெரிய கோயில்தனை காண வரும் பலகோடிக்கணக்கான பேர்களில் பலர் அதன் பிரம்மாண்டத்தை ரசிப்பர், சிலர் அதன் அழகை ரசிப்பர், மற்றும் சிலர் அதன் கட்டட அமைப்பு,அறிவியல் , விஞ்ஞானம் என்று வாய் பிளந்து அண்ணாந்து பார்க்கும் கூட்டத்தில் இருப்பர். வேறு ஒரு கூட்டமும் உண்டு. எங்களை போல – இது எங்கள் மண் , இவர் எங்கள் அரசன் என்று எங்கோ ஒரு விட்ட குறை தொட்ட குறை – அடி மனதில் ஒரு இனம் புரியா ஆனந்தம், அருகில் அந்த மாமனிதர் இன்னும் எங்களை அன்புடன் பார்த்து மந்தகாச புன்னகை புரியும் ஒரு உணர்வு…

எங்களை வழிகாட்டும் அந்த சுடருக்கு என்றும் எங்கள் உழைப்பு அர்ப்பணம். முடிவு ஆரம்பம் என்று பிரிவு படுத்தி பார்க்காமல், இதுவரை நாங்கள் செய்துள்ள அனைத்தும் தங்களுடையது, இனி நாங்கள் செய்யப்போவதும் தங்களுக்கே அர்ப்பணம். எங்களை இந்த பணியில் ஆழ்த்தியதும் தாங்களே , உங்கள் புகழ் பாரெங்கும் பரவ நாங்கள் எங்களை இன்று மீண்டும் அர்ப்பணிக்கின்றோம்.

காலவெள்ளத்தில் நாம் பரபர வென்று பின்னோக்கி பயணிக்கிறோம். ஆயிரம் ஆண்டுகள் இரண்டு நொடிகளில் புரட்டிவிட்டோம். கி பி 1010.

(ஆம், தற்போது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன – பெரியகோயில் எடுப்பித்து – கல்வெட்டுகளில் உள்ள படி உடையார் அவர்கள் தனது ஆடிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இருபத்தி ஐந்தாம் ஆண்டின் இருநூற்றி எழுபத்தி ஐந்தாம் நாள் – விமானத்தின் மேல் உள்ள கலசத்திற்கு தங்கம் கொடுத்த செய்தி உள்ளது. ஆட்சிக்கு வரும் வரிசையில் இல்லாமல், காலத்தின் கோலத்தால் விதியின் ஆட்டத்தினால் தன்கையில் ஆட்சி வந்தாலும் பெருந்தன்மையுடன் அதை விட்டுக்கொடுத்த தியாக சிகரம் – பின்னர் அவர் தமிழுக்கும் தமிழன்னுக்கும் ஆற்ற வேண்டிய அற்புதங்களை எண்ணி மீண்டு்ம் அரியணை தேடி வந்தது கி பி 985 )

ஆலய மணிகள் கிண் கிண் என்று ஒலித்துக்கொண்டிருந்தன – அந்த மணியோசையின் பின்னணியில் பிரம்மாண்டமான வாயிற் காவலர்கள் வழி காட்ட பெருவுடையாரைக் காண உள்ளே வந்தனர் பெருமக்கள். அங்கே ஒருபக்கம் போட்டியாய் தவில், மேளம், பறை, தாரை , தப்பட்டை, நாதஸ்வரம் என்று ஒரு புயலென கிளம்பிய ஓசையில் திக்கு முக்காடி,அவை கருவறையின் கருங்கல் சு்வரில் வெளியே திரும்ப ஓட ஒரு வழியை தேட… ஒரு நிமிடம் அப்படியே அண்ணாந்து காற்றில் கலக்கும் கற்பூர வாசனையையும் பின்னந்தள்ளி வந்த சந்தன வாசனை முகரும்போது , அகில், ஜவ்வாது, சாம்பி்ராணி என்று ஒன்றோடு ஒன்று போட்டியிட….திடீரென இன்னும் ஒரு புது வாடை , மேலிருந்து வருகிறது, முல்லை – ஆமாம் அடர்த்திக்கட்டிய முல்லை மொட்டுகள் மெதுவாக மலரும்போது வெளிவரும் வாசனை. எங்கிருந்து வருகிறது, மேல் தளத்தில் அடுக்கடுக்காக பின்னிய ஜடைகளில் முல்லை மொட்டுக்கள். யார் இந்த யு்வதிகள். புலியின் பார்வையில் உறைந்து நிற்கும் மானைபோன்ற கண்களை கொண்டு தங்கள் பிடித்த ஜதிகளில் அப்படியே உறைந்து எதிரே இருக்கும் தங்கள் குருநாதரின் செய்கைக்காக காத்து நிற்கும் நாட்டிய மாதுகள். குருநாதரும் அங்கு இருக்கும் அனைவரையும் போல, காத்து நிற்கிறார் – யாருக்கு?

அனைவருமே அவரை பலமுறை பார்த்துள்ளனர், ஒளிவீசும் கவசத்தை தனது வெற்றி மார்புகளில் தரித்து, கம்பீரமாக தனது ரதத்தில் ஏறி செல்லும்போது, ராஜ உடையில் பட்டாடை உடுத்தி செங்கோலும் மணிமுடியும் ஜொலிக்க பட்டத்து யானை மீது பவனி வரும் போதும் பார்த்ததுண்டு. எனினும், இன்று அப்படி அல்ல. இன்று சாதனை ஒன்றை நிகழ்த்தி , ஒரு அதிசயத்தை நடத்தி அந்த மாவீரன் தன் கனவை நினைவாக்கும் பொன்னாள்.

ஆம், இன்று தான் பெரிய கோயிலின் குட நீராட்டு் நாள் – இது போல பாரில் எங்கும் இல்லை என்று ,சோழம் சோழம் என்று எட்டு திக்கும் இந்த குலத்தின் பெருமையை பறைசாற்றும் பொன்னாள்.

திடீரென எங்கும் அமைதி, அரசரின் அணிவகுப்பு வாசலை அடைந்து விட்டது. வாயிலின் மூலம் உள்ளே வரும் சூரிய கதிர்கள் ஒரு சில கணங்கள் மறைக்கப்படுகின்றன, பின்னர் சூரியன் உதிக்கும் ஒளி கிரணங்கள் போல அவரது மதிவதனம் , அரச சின்னங்கள் எதையும் அவர் தரிக்க வில்லை, வெள்ளை ஆடை இடுப்பில், ஒரு மேல் துண்டு , அங்கம் எங்கும் வெள்ளை விபூதி கோடுகள் – தங்க கவசத்தை விடவும் இந்த வடிவில் சிவப்பழமென ஜொலித்தார் மாமன்னர் – அப்போது..

சோழம் பூஜிக்கும் மந்திரமென பகைவர் மனதில் காலனின் நாமத்தை நினைவு படுத்தும் ஒலி.. மன்னனின் மெய்கீர்த்தி ஒலிக்க துவங்கியது….


ஸ்வஸ்திஸ்ரீ்
திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்

உடனே, மாமன்னன் புருவங்கள் நெரிந்தன, வலது கை மேலே எழும்ப துவங்கியது.. குறிப்பால் அறிந்து புகழ் பாடும் வாய் அப்படியே நின்றது, என்ன வென்று அறியும் முன்னர் மெய்காவல் படை தலைவன் கை இடைவாளுக்கும் சென்றது. எனினும் நெறித்த புருவும் முழுவதுமாக நெறியாமல், முகத்தில் மலர்ந்த புன்னகைக்கு குடை பிடித்தது. அந்த ராஜ களை சொட்டும் முகத்தில் இன்னும் ஒரு படி அழகு எப்படியோ ஏறியது.

“அவனுக்கு முன் என் புகழ் எம்மாத்திரம். நான் இப்போது இங்கு ராச ராசன் அல்ல.. அடியேன் சிவ பாத சேகரன் “

மன்னரின் இந்த மொழியை கேட்டதம், மீண்டும் மேள தாளம், மணிகள் கிண்கிணி முழங்க – எங்கும் இசை வெள்ளம். அப்போது, மேலே இருந்து நானூறு சலங்கைகள் ஒரு சேர ஜதி பிடித்தன…குருநாதரின் ‘தா’ என்ற ஓசைக்கேற்ப.

தன் கனவு பலிக்கும் பேரானந்தத்தில் பெருவுடையாரின் அடியில் நின்ற மன்னர், தொலைவில் நின்ற குஞ்சர மல்லனை, தஞ்சைப் பெரும் சிற்பியைத் தேடி அழைத்தார்.

“இன்றுமுதல் உனக்கு ராஜ ராஜ பெருந்தச்சன் என்ற பட்டம் அளிக்கிறோம், பெயரில்லா சிற்பிகளாக நீங்கள் இருப்பது போதும். – யார் அங்கே, இந்த பெயரை எனது பெயருடன் இணைத்து கல்வெட்டில் வெட்டுங்கள். – உனது உன்னத படைப்பின் புகழ் சூரியனும் சந்திரனும் உதிக்கும் வரை நிலைத்து இந்த வையகத்தில் என் பெயரும் உன் படைப்பும் ஒன்றாய் ப் பிணைந்து உன் புகழை உலகிற்கு உணர்த்தட்டும்.

கணங்களில் நீர் பெருக தஞ்சைப் பெரும் சிற்பி கை கூப்பி வணங்கினார்.

“என் கோனே , இந்த குணமல்லோ எங்களை எந்நாளும் உங்கள் அடி பணிய வைக்கிறது. இந்த பெருமிதத்தில் இந்த அற்புத ஆலயத்தில் தங்களுக்கு விசேஷமாக வைத்துள்ள ஒரு அற்புத வெளிப்பாட்டைக் காட்ட மறக்கக்கூடாது. பிரத்தேயகமாக தலை சிறந்த ஓவியர்களை கொண்டு திருச்சுற்றில் உங்களுக்கு பிடித்த ஈசனின் வீரட்டானம் ஒன்றை தீட்டச் செய்துள்ளேன்.”

ஓ , அப்படியா. இதற்காகத்தான் கடந்த சில வாரங்களாக என்னை அந்தப பக்கம் செல்லாமல் தேர்ச்சியாக இன்ப அதிர்ச்சி தர அனைவரும் சேர்ந்து சதி செய்தீரோ..

ஐயனே , பெரிய வார்த்தைகள் சொல்கிறீர்கள். முதலில் வேலைபாட்டை கொஞ்சம் பாருங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள், அங்கே வெளிச்சம் போதவில்லை, யார் அங்கே – பந்தங்களை கொண்டு வாருங்கள். கவனம், சுவரின் அருகில் செல்ல வேண்டாம். எல்லா இடங்களையும் ஓவியங்களால் நிரப்பி உள்ளோம்.

வேந்தே – தாங்கள் விமானத்தின் கோஷ்டத்தில் திருப்புற விஜய சிற்பங்களை நிறுவச்சொன்ன போதே தங்களுக்கு திரிபுராந்தக கதையின் பால் உள்ள ஆவலை புரிந்துக் கொண்டோம். அதனால் அந்த கதையை ஓவியாமாக தீட்ட முடிவெடுத்தோம்.

“அருமை, கலைஞரே.! குறிப்பால் உணரும் உங்கள் திறன் அருமை. உங்களைப் போன்றோர் என்னிடத்தில் இருப்பது நான் செய்த புண்ணியம். ஆமாம், பெரிய அன்னை செம்பியன் மாதேவி பலமுறை சுந்தரர் , சண்டேஸ்வரர் புராணங்களை சொல்லிக்கொடுத்தாலும், என் அக்கன் குந்தவை பிராட்டியார் தினமும் படித்துக்காட்டிய மகேசனின் திரி்புர தகனம் மனதில் ஏனோ நின்றுவிட்டது. கதையை எப்படி தீட்டி உள்ளீர், சிற்பம் போல தொடரும் காட்சிகள் போலவா..

மன்னா, தங்களை போல உயிர சிந்தனையும் நல்ல குணமும் பெற்ற தலைவனின் காலத்தில் பிறந்து பிறவிப் பயனை அடையும் நாங்கள் தான் புண்ணியம் செய்தவர்கள். பெரிய பிராட்டியும் குந்தவை பிராட்டியார் போன்றோர் சிறுவயதில் தங்களுக்கு இது போன்ற நல்ல கதைகளை சொல்லி வளர்த்தது வரும் சந்ததியினர் கற்று தெரிய வேண்டிய பாடம். ஓவியத்தை புது பாணியில் ஒரே காட்சியில் முழு கதையையும் விளக்கும் வண்ணம் காட்டியுள்ளோம் மன்னா.

ஒரே காட்சில் முழு கதையுமா. எப்படி முடிந்தது – குறைந்தது ஆறு முக்கிய காட்சிகள் தேவையாக இருக்குமே ?

கோனே, நாம் செய்த பாக்கியம், இது போன்ற ஓவியர்களும் நம்மிடையே உள்ளனர்.

பொறுங்கள், மதுராந்தகனும் பார்க்கட்டும். ராஜேந்திரா இங்கே வா

மன்னா. இருபது வருடங்களுக்கு முன்னர் தங்களை பார்ப்பது போலவே உள்ளது

ஆமாம், பெருந்தச்சரே. ஆனால் கோபம் மட்டும் என்னை விட இருபது மடங்கு. ராஜேந்திரா , இந்த அற்புத ஓவியத்தை பார். திரிபுராந்தகன் கதை, நினைவில் உள்ளதா உனக்கு. ஈசனின் வீரட்டாணங்களில் ஒன்று. திரிபுர அசுரர்கள் மூவர் தாரகாக்ஷ , கமலாக்ஷ மற்றும் வித்யுன்மாலி – தாரகனின் மகன்கள் , பிரம்மனிடத்தில் பெற்ற வரத்தின் பலத்தால், உலகை ஆட்டிப் படைத்தனர். பறக்கும் நகரங்கள் கொண்டு, மனிதர்களையும் தேவர்களையும் துன்புறுத்தினர். எனினும் நல்ல சிவ பக்தர்கள். தன் அடியார்களை வதை செய்ய மனமில்லாமல், அப்பன் பெருமாளை புத்த வடிவத்தில் அனுப்பி வேறு மார்க்கத்தில் எழுத்து செல்ல வைத்தார். அதன் பிறகு, தேவர்கள் அனைவரும் கொண்டு படை திரட்டி, புவியைத் தேராக கொண்டு, சூரியனையும் சந்திரனையும் சக்கரங்களாக வைத்து, நான்முகன் தேரோட்டியாக நின்று, பெருமாளே நாணாக மாறி , மேரு மலையை வளைத்து வில்லாக போர்க்களம் புகுந்தார். அப்படித்தானே பெருந்தச்சரே ?

ஆமாம் அண்ணலே. அந்த தேர் எங்கள் ஆசான் விஸ்வகர்மனால் செய்யப்பட்டது. அதோ தேரோட்டியாக நான்முகன்.

தந்தையே – தேரோட்டி முன்னால் பார்க்காமல் ஏன் திரும்பி ஈசனை பார்க்கும் வண்ணம் உள்ளது?

மகனே, இது கதை சொல்லும் ஓவியம் – முழு கதையையும் ஒரே ஓவியத்தில் ஓவியன் விளக்க எத்தனிக்கிறான்.

ஐயனே, மேலே பெருமாள் புத்த வடிவில் இருப்பதும் திரிபுர அசுரர்கள் அவனை வாங்கும் வண்ணம் வரைந்துள்ளோம். அங்கே எலியின் மீது யானைமுகனும், மயிலின் மீது முருகனும், சிம்மத்தின் மீது தேவியும், ஈசனுடன் பல பூத கணங்களும் போருக்கு செல்லும் காட்சி இங்கே

ஆமாம். அசுரர் படையும் மிகவும் கோரமாக தெரிகிறது. அந்த பந்தத்தை இன்னும் அருகில் எடுத்து வாருங்கள், ஓவியத்தில் உள்ள தனித்தன்மையை நான் கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். ராஜேந்திரா , உன்னால் முடிகிறதா பார்ப்போம்.

தந்தையே , தேவார வரிகளில் இரு விதமாக இந்த காட்சியை பாடும் பாடலை படித்த நினைவு வருகிறது – கறுத்தவன் (சினந்தவனும்) என்று ஒருமுறையும் நகைசெய்த என்றும் வருமே.

முதல் திருமுறை

மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.

முதல் திருமுறை

நடைமரு திரிபுர மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே.

பலே மகனே – அருமை. படிப்பிலும் கவனம் செலுத்தினாய் போல உள்ளதே. ஆச்சாரியர் இதற்கு இரு விளக்கங்கள் தருவார். இவ்வாறு போருக்கு செல்லும் ஈசனை விளக்கும் பாவம் – உடல் சிவக்க, கண்கள் பிதுங்க , புருவங்கள் வில்லாக வளைய – பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் இதை ரௌத்ர திருஷ்டி என்பார்கள். உனது சினேகிதி அந்த நாட்டியக்காரியிடம் கேளேன்.

அப்பா , இங்கே எதற்கு இந்த சம்பாஷனை. தெரிகிறது தெரிகிறது. சிவனின் முழு உடலுமே செவ்வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. நீங்கள் கோபப்படுவது போலவே .

மகனே, நீ கூட இப்போது கொஞ்சம் சிவந்து காணப்படுகிறாயே ? கோபமா ? நாணமா ? சரி, ஈசனின் முகத்தில் ஏதாவது வித்யாசமாக தெரிகிறதா உனக்கு.

தந்தையே – அதற்கு முன்னர் அவர் வில்லை பிடித்திருக்கும் முறையே சற்று வித்யாசமாக உள்ளதே. எதிரி எதிரில் இருக்க, வில்லை ஏன் தன்னை நோக்கி பிடித்து இருப்பது போல உள்ளது காட்சி.

மதுராந்தகா, அது தான் ஓவியனின் திறமை. கதையை பாதியிலேயே விட்டு விட்டோமே – இரு விதாமாக விளக்கம் தருவார் குருநாதர் என்று சொன்னேன் அல்லவா, ஒன்று – இவ்வாறே படை திரட்டி செல்லும் போது கூட சென்ற தேவர்களில் சிலருக்கு சற்றே தலைக் கனம் பிடித்தது. ஈசனுக்கே நம் உதவி தேவை என்று !! இன்னொரு விதமான விளக்கம் பிரம்மன் ஈசனை பார்த்து – எதற்கு இந்த அதீத விளையாட்டு. தங்களுக்கு இந்த படை, ஆயு்தங்கள் எல்லாம் தேவையா என்று கேட்க….மகேசன் அடுத்த கணம், வில்லை தன் பால் திருப்பி, ஒரு சிரிப்பு சிறக்க – எதிரில் இருந்த அசுரர் அனைவரும் எரிந்து சாம்பல் ஆயினர்.

இப்போது பார். பித்தனின் முகத்தில் புன்னகையை. ஓவியன் திறமையாக இரு பாவங்களை ஒரே முகத்தில் கொண்டு வந்துள்ளான்.

அருமை, தங்கள் விளக்கத்துடன் ஓவியத்தை பார்க்கும் பொது மெய் சிலிர்க்கிறது. சீக்கிரம் வாருங்கள்! அடுத்த ஓவியங்களை பார்ப்போம்.

படங்கள்: திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். பெரிய கோயிலை பற்றி மேலும் முழுவதுமாக தெரியவேண்டுமாயின் கண்டிப்பாக அவர்களது நூலை படியுங்கள்.அவர்களது நூலை
நன்றி ரீச் சந்திரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *