புதுக்கோட்டை மாவட்டம், இயற்கை கொஞ்சம் எழில் என சொல்லிக்கொள்ள பச்சை ஆடை போர்த்திய வயல்கள் என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. எங்கும் ஒரே செந்நிறம், அதில் ஒரு பாதை. அதுவும் செந்நிறம் தான். மலையடிப்பட்டி நோக்கி காலை பத்து மணியளவில் சென்றுக்கொண்டிருந்தோம். திடீரென பாதை முடிந்தது. அருகில் சில வீடுகள். ஒரு புளிய மரம் – மரத்தடியில் ஒரு சிறு வால் பையன்கள் கூட்டம் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தது. அருகில் வயதாலும் நோயாலும் வளைந்து தனது கைத்தடியின் உதவியுடன் ஒரு பெரியவர். சற்று தொலைவில் ஒரு சிறு குன்று, அருகில் ஒரு தடாகம். ஆஹா, இவ்வளவு தொலைவு வெறும் செம்மண்ணையே பார்த்துக்கொண்டு வந்த நமக்கு இப்படி ஒரு ரம்மியமான இடமா ? மகேந்திரர் குடைவரைகள் இருக்கும் இடங்கள் போலவே உள்ளதே என்று மனதில் ஒரு எதிர்பார்ப்பு. ஆம், இங்கே இரண்டு குடைவரைகள் உள்ளன. ஈஸ்வரன் சிவனுக்கு ஒன்று பெருமாளுக்கு ஒன்று. அந்தப் பெரியவர் தான் இந்த இரு குடைவரைகளுக்கும் காவல். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே கூட்டம் வருமாம். மற்றபடி ஈ காக்கா இல்லை. நம்மை போல யாராவது தெரியாமல் வந்தால்தான் உண்டு. ஆனால் சலிக்காமல் திறந்து காட்டினார். அவரிடம் ‘நாங்கள் நிதானமாய் பார்ப்போம் . ஒரு இரண்டு மூன்று மணி எடுக்கும் !!. என்று சொல்லிவிட்டு ‘போய் சாப்பிட்டு விட்டு வாங்க’ என்று சொல்லிக் கொஞ்சம் பணம் தந்தோம்.அப்போது அவர் பழைய கால் சட்டை இருந்தால் கொடுங்கள் என்றார். ( பதிவை பார்த்துவிட்டு அங்கு செல்லும் நண்பர்கள் ஓரிரு பழைய சட்டைகள் எடுத்துசென்று கொடுங்கள்.புண்ணியமாகப் போகும்!!)
இந்த பதிவில் காலத்தால் முந்தைய – தந்தி வர்ம பல்லவ காலத்து சிவனின் முத்தரையர் குடைவரையை பார்ப்போம் ( அப்படிதான் இருக்க வேண்டும், ஏன் என்றால் அந்த காலத்தில் இந்த பகுதியை ஆண்ட அரசர்கள் முத்தரையர்கள்).
முதலில் உள்ளே இருக்கும் சிற்பாம்சம் – நந்தி.
அப்படி என்ன இந்த நந்தியின் சிறப்பு? நல்ல சிலை தான், எனினும் பல இடங்களில் இதுபோல கலையம்சம் பொருந்திய நந்திகளை நாம் பார்க்கிறோமே. இதன் சிறப்பு அதை செதுக்கிய சிற்பி அதனை ஆயிரம் ஆண்டுகள் அதே இடத்தில இருக்கும் படி செதுக்கியதுதான். என்ன, புரியவில்லையா.
மேலே படியுங்கள்.
முதலில் படத்தை கொஞ்சம் கணினியில் திருத்தி குடைவரை முகப்பு பின்னாளைய கட்டுமானங்களை விளக்கி பார்ப்போம்.
அடுத்து, இன்னும் அருகில் செல்வோம். வெறும் மண்டபம் தான் முதலில் காட்சி தருகிறது.
ஆனால் ,உள்ளே சென்று வலது புறம் திரும்பினால் சற்று நேரம் உள்ளே உள்ள இருளுக்கு நம் கண்கள் பழகும் வரை ஒன்றுமே தெரியவில்லை. இன்னும் சிறிது நேரம் கழிந்தவுடன் , ஆஹா என்ன அபாரம்.
ஈசனுக்கு எடுப்பித்த இந்த குடைவரையில் பார்க்க நிறைய உள்ளது. இடது புறம் கருவறை காவலர்கள் காவல் காக்க, அருமையான கருவறை, எதிரில் நமது நந்தி, ஒரு பக்கம் வீரபத்ரர் , விநாயகர் மறுபக்கம் இருக்க அழகிய சப்த மாத்ரிகா வடிவங்கள், இன்னொரு பக்கம் துர்க்கை, பெருமாள் என்று ….வரும் பதிவுகளில் பார்ப்போம்.
படத்தின் வலது புறத்தில் நமது நந்தி தெரிகிறதா? மீண்டும் கணினி கொண்டு தூண்களை விளக்கிவிடுவோம்.
இப்போது புரிகிறதா. நந்தி, நந்திமேடை – அனைத்தும் ஒரே கல் – அதுவும் தாய்பாறையில் செதுக்கியது. அந்த நாளில் இருந்த திறமை, ஒரு மலைப்பாறையை இப்படி குடைய, அதுவும் துளி கூட தவறுக்கே இடம் இல்லாத இடத்தில இப்படி ஒரு கடினமான சிலையை செதுக்க முயற்சிக்கும் தைரியம், அவன் திறமையில் அவனுக்கு இருக்கும் நம்பிக்கை – நம்மை பிரமிக்க வைக்கிறது.